Friday, January 13, 2012

முத்துக் கோத்தாற் போன்ற மூன்று நாள் விழாக்கள்!

தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழா - தமிழர் புத்தாண்டு பொங்கல். உலகம் எங்கும் நடைபெறும் அறுவடைத் திருவிழாவுக்கு நிகரானது.

இடையில் பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பின் காரணமாக இதனை சங்கராந்தி என்று பெயர் சூட்டி, வழக்கமான மூடநம்பிக்கைகள் சகதிகளை இதற்குள் திணித்து உருக்குலைத்தனர்.

திராவிடர் இயக்கத்தின் காரணமாக பொங்கல் விழா தமிழர்களின் விழாவே என்ற உண்மையை எடுத்துக் கூறி, தமிழ் நாட்டில் பொங்கல் விழாவுக்குப் புத்துணர்ச்சி - மறுமலர்ச்சி ஊட்டப்பட்டது. திருவத்திபுரம் போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட பொங்கல் விழா வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.

பொங்கல் விழாவின் சிறப்பையும், பண்பாட்டையும் மக்களிடம் எடுத்துக் கூறவே - தீபாவளி போன்ற ஆரிய மூடப் பண்டிகைகளின் மதிப்பு மக்கள் மத்தியிலே மங்கத் தொடங்கின.

தீஞ்ச பயல் தீபாவளி, காஞ்சபயல் கார்த்திகை மகராசன் பொங்கல் என்று பாமர மக்கள்கூட மதிக்கும் அளவுக்கு மகிழும் அளவுக்குச் சிறப்புப் பெற்றது.

தமிழர்களின் ஆண்டுத் தொடக்கமும் தை முதல் நாள் என்ற நிலையில், பொங்கல் விழா மேலும் புதிய வரலாற்று மகுடத்தைச் சூட்டிக் கொண்டது!

தமிழ் ஆண்டுகள் என்று சொல்லி - நாரதன் என்னும் ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த அறுபது குழந்தைகள் - அவை பிரபவ தொடங்கி அட்சய என்ற பெயர்களைக் கொண்டவை - இவைதான் தமிழ் ஆண்டுகள் என்று பார்ப்பனர்கள் இன்றைக்கு வரை பிரச்சாரம் செய்வது  -வக்காலத்து வாங்குவது - தமிழர்களின் சீரழிவுக்கும், தன்மானமற்ற தன்மைக்கும், அறியாமைக்கும் தலை சிறந்த எடுத்துக்காட்டுகள் அல்லவா!

பக்தி என்று வந்துவிட்டால் மாட்டு மூத்திரத் தையும், சாணியையும் கரைத்துக் கொடுத்தாலும் குடிக்கத் தயார் என்ற புத்தி கெட்ட பிறகு பார்ப்பனர்கள் எதைத்தான் செய்யத் தயங்குவார்கள்?

நீண்டகாலமாகத் தமிழ் அறிஞர்கள், திராவிடர் இயக்கத் தலைவர்கள் கூறிவந்த கருத்தின் அடிப்படையிலும், மானமிகு கலைஞர் அவர்களுக்குரிய இயல்பான தமிழ்ப் பண்பாட்டு உணர்வாலும், அவர் முதல் அமைச்சராக வந்த நிலையில், தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் எனும் சட்டத்தை நிறைவேற்றினார்.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பன சக்திகள், அண்ணாவின் பெயரையும் திராவிட என்ற இனச் சுட்டுப் பெயரையும் பயன்படுத்திக் கொண்டு ஊடுருவிய ஒரு ஆட்சியின் துணை கொண்டு, மீண்டும் சித்திரைதான் தமிழ் ஆண்டின் தொடக்கம் என்று சட்டம் இயற்றப்பட்டது என்றால், 

இதுபற்றித் தமிழர்கள் சிந்திக்க வேண்டாமா? உணர்வு பெற வேண்டாமா? இதுபோன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் கோட்டை விடும் தன்மையைத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டால், தமிழ், தமிழர் பண்பாட்டுத் தளத்தில் மேலும் மேலும் தமிழர்கள் உரிமைகளை இழக்க நேரிடும் என்ற எண்ணம் பல்கிப் பெருத்த தமிழ்நாட்டின் தலைவர்களுக்கு வராமல் போனது ஏன்? தமிழ்த் தேசியம் பேசும் நாக்குகள் அறுந்து விழுந்தது ஏன்?

கலைஞர் எதிர்ப்பு என்ற ஒற்றை வரியில் அனைத்தையும் பறி கொடுக்கத் தயாராகி விட்டார்களா? தமிழர்கள் இவர்களை அடையாளம் காண்பார்கள்.

சென்னையில் பல ஆண்டு காலமாகத் தமிழர்ப் புத்தாண்டுப் பொங்கல் விழாவையொட்டி சங்கமம் களை கட்டி நின்றது. தவிர்க்க முடியாத ஒரு சூழலில் அது தடைபட்டுள்ளது என்றாலும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இவ்வாண்டு மூன்று நாட்களிலும் (தை 1,2,3) திராவிடர் கழகத்தின் தலைமை இடமான பெரியார் திடலில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் விழா கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்கள்.

தமிழர்களின் கலைகளான கரகாட்டம், பொய்க்கால் குதிரை, நையாண்டி மேளம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், இசை நிகழ்ச்சிகள் இவற்றோடு  தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அறுசுவை உணவுச் சிறப்பு கடைகள் உட்பட - புதிய சிந்தனை - புதிய தேடல்களுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திடல் மக்கள் கடலாகும் வண்ணம் தமிழர்களே, பெரியார் திடலில் குடும்பம் குடும்பமாகப் பிள்ளைகளுடன் வாரீர்! வாரீர்!! செவியுண(ர்)வு சுவை உண(ர்)வுகளை மாந்திட வாரீர்! வாரீர்!! என்று கனிவுடன், தமிழ் உணர்வுடன் அழைக்கின்றோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...