
தற்போதுள்ள எண்ணிக்கை இப்போதுள்ள அளவில் அதிகரித்து வருமானால் 2030 ஆம் ஆண்டில் 1 கோடி பேரைக் கொல்லும் மிகப் பெரிய கொலையாளியாக புகையிலையும், புகை பிடிப்பது தொடர்பான நோய்களும் விளங்கும் என்று கருதப்படுகிறது.
உலகில் 130 கோடி மக்கள் புகை பிடிப்பவர்களாக உள்ளனர். அவர்களில் பாதி, அதாவது 65 கோடி மக்கள் இறுதியில் புகையிலையினால் கொல்லப்படுவார்கள்.
வளரும் நாடுகள் இந்த விஷயத்தில் அதிகமாக பாதிக்கப்படும். புகைபிடிப்பவர்களில் 84 விழுக்காட்டினர் நடுத்தர, குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் தற்போது வாழ்கின்றனர். 1970ஆம் ஆண்டிலிருந்து இந்நாடுகளில் புகைபிடிப்பது படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இதற்கு நேர் மாறாக, அமெரிக்காவில் இருக்கும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை 1950 இல் 55 விழுக்காடாக இருந்தது 1990 இல் 28 விழுக்காடாக குறைந்திருந்தது.
வயது வந்தவர்களில் பாதி பேர் புகை பிடிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில், 1990 மற்றும் 1997 ஆண்டுகளுக்கிடையே புகையிலைப் பயன்பாடு 24 விழுக்காடு அதிகரித்துள்ளது.
வளரும் நாடுகளில் புகை பிடிப்பதனால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகளைப் போலவே, பொருளாதார விளைவுகளும் பேரழிவை அளிப்பவையாகவே இருக்கும். நைஜீரியா, வியட்நாம், பங்களாதேசம் போன்ற நாடுகளில் ஏழை மக்கள் தாங்கள் உணவுக்குச் செலவிடுவதைப் போன்று மூன்று மடங்கு அதிகமாக புகையிலைக்காகச் செலவிடுகின்றனர்.
1940ஆம் ஆண்டுவரை, இங்கிலாந்து நாட்டில் 1964இல் அரசர் மருத்துவக் கல்லூரியின் அறிக்கை வெளியிடப்படும் வரையிலும் கூட, நோயுடன் புகையிலையைத் தொடர்புபடுத்தி நவீன அறிவியல் பார்க்கவில்லை. அந்த அறிக்கையில் தெரிவித்திருந்த புற்று நோயுடன் புகைபிடிப்பதற்கு உள்ள தொடர்பினை அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டது. அதற்கும் ஏழு ஆண்டுகள் கழிந்த பிறகுதான் சிகரெட்டு பெட்டிகளின் மீது எச்சரிக்கைச் செய்தி தோன்றியது.
புகையிலையினால்தான் புற்று நோய் வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் மலைபோல் வளர்ந்து வந்த போதிலும், இங்கிலாந்தில் நான்கு பேரில் ஒருவர் (130 லட்சம் பேர்) தொடர்ந்து புகைபிடிக்கின்றனர்; அவர்களில் 70 விழுக்காட்டினர் புகைபிடிப்பதை விட்டுவிட முயல்கின்றனர்.
2004இல் பூடான் மன்னராட்சி பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதித்தது மட்டுமன்றி, புகையிலை விற்பதற்கும் தடை விதித்தது. உலகிலேயே இவ்வாறு செய்த முதல் நாடு இதுதான்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment