Friday, December 23, 2011

மற்ற நிதி நிறுவனங்கள் மூடப்பட்டன; மக்கள் ஏமாற்றப்பட்டனர் திராவிடன் நலநிதி வளரக்காரணம் நம்பகத்தன்மை -சேவை அறிஞர்கள் - பயனாளிகள் புகழாரம்!




சென்னை, டிச. 24-மற்ற நிதி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் திராவிடன் நலநிதி நிறுவனம் சிறந்து ஓங்கி வளர்ந்து வருவதற்கு காரணம். உண்மையான உழைப்பு, ஏழைகளுக்கு உதவுதல், கட்டுப்பாடுகள்தான் காரணம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களும், விழாவில் பேசிய அறிஞர் பெருமக்களும், பயனாளிகளும் கூறினர்.

திராவிடன் நலநிதி நிறுவனத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நேற்று (23.12.2011) மாலை 5.50 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தொடங் கியது.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து பேசினார். திராவிடன் நலநிதி நிறுவன நிருவாக அதிகாரி  டி.அருள்செல்வன் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற துணைபுரிந்தார்.

விழா நிகழ்ச்சியில் திராவிடன் நலநிதியால் பயன்பெற்றவர்கள் சார்பில் சவுந்தரராஜன், துரைக்கண்ணு ஆகியோர் நன்றி தெரிவித்து பாராட்டி திராவிடன் நலநிதி நிறுவனம் எவ்வளவு சிறப்பாக ஏழை மக்களுக்கு உதவுகிறது என்பதை விளக்கினார். நிகழ்ச்சியில் பேசியோர் உரை வருமாறு:

தமிழர் தலைவர்
திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்ட தாவது:

திராவிடன் நல நிதி நிறுவனம் எத்தனையோ சோதனைகளைத் தாண்டி இன்றைக்கு வளர்ந்து கொண்டு வருகிறது மட்டுமல்ல, நிலைத்தும் நிற்கிறது.

திராவிடன் நல நிதிக்கு ஆரம்பத்தில் வித்தூன்றியவர் மறைந்த ஜஸ்டிஸ் வேணுகோபால் அவர்கள். அதேபோல மறைந்த தஞ்சை கா.மா. குப்புசாமி போன்றவர்கள். இந்த நிதி நிறுவனம் சிறப்பாக நடைபெற ஆரம்பத்தில் நான் ஒரு யோசனையைக் கூறினேன். மற்ற எந்த நிறுவனத் திலும் கேள்வி கேட்க முடியாது. அப்படி ரிசர்வ் பேங்க் சட்டம் உள்ளது.

ஆனால் நம்முடைய நிதி நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜெனரல்பாடிகூட்டத்தில் யார் வேண்டுமானா லும் கேள்வி கேட்கட்டும். நிதிநிறுவனத்தை நடத்துகின்ற நாமும் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அப்படி நடைபெற்றால் திராவிடன் நல நிதியில் ஷேர் ஹோல்டராக இருக்கின்ற பொது மக்களுக்கும் தெளிவாக விளங்கும். அவர்கள் கேட்கின்ற கேள்விகளில் குறைபாடு ஏதாவது இருந்தால் அதை நாம் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொன்னேன்.

அதன்படி ஆண்டுதோறும் திராவிடன் நல நிதி பொது நலமன்ற கூட்டமாக திறந்த புத்தகம் போல நடைபெறுகிறது. மற்ற நிதிநிறுவனங்களில் சட்டரீதியாக இப்படி கேள்வி கேட்க முடியாது.

நமது ஆடிட்டர் சுரேந்தர் அவர்கள், சட்டப்படி தொடங்கிவிட்டோம். சட்டப்படி நடக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.

திராவிடன் நலநிதி நிறுவனம் மக்கள் நிறுவனம். மக்களுடைய நிறுவனம். பெரியார் நூலக வாசகர் வட்ட முன்னாள் தலைவர் மாணிக்க.சண்முகன் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்போல கேள்வி கேட்பார்கள். ஒரு பத்து நிதி நிறுவனங்களின் சட்ட விதிமுறைகளைப் படித்துவிட்டு கேள்வி கேட்பார்கள். அவருக்கு ஏற்படுகின்ற சந்தேகங் களை கேட்பார்கள். இதற்கு பதில் பங்குதாரர்களாக இருக்கின்றவர்களும் பதில் சொல்லுவார்கள். திராவிடன் நலநிதியில் பொதுமக்களின் உறுப் பினர்களாக இருக்கின்றவர்களும் பதில் சொல்லு வார்கள்.

இன்றைக்கு இந்த நிதி நிறுவனம் வளர்ந் தோங்கியிருக்கிறது. 14,554 ஷேர் ஹோல்டர்கள் இருக்கிறார்கள். இந்த நிதி நிறுவனத்தின் மூலதனம் இன்றைக்கு இரட்டிப்பான நிலையில் டெபாசிட் செய்யப்பட்டு ரிசர்வில் நிலையாக வைக்கப்பட்டி ருக்கிறது. வடமாநிலங்களில் இது மாதிரி நிதி நிறுவனங்கள் எல்லாம் இல்லை என்று சொன் னார்கள். தென்னாட்டில் அதுவும் இங்குதான் நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. அதிலும் திராவிடன் நலநிதி முதன்மையானதாக விளங்குகிறது. நடுவில் ரிசர்வ் வங்கி, மத்திய அரசு விதிக்கும் நிபந்த னைகளால் சங்கடங்கள் உருவாயின.

மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ இது போன்ற நிபந்தனைகளை, சட்ட திருத்தங்களை கொண்டு வருவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்து நிதி நிறுவனங்களின் கருத்துகளை கேட்டு தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். அதை விடுத்து திடீர், திடீரென்று ரிசர்வ் வங்கி நிபந்தனைகளை உருவாக்கும். நிதி நிறுவனங்களை நடத்த முடியாத அளவிற்கு செய்யும். நான்கூட ஏன் இதற்கு இவ்வளவு சிரமப்பட வேண்டும்? இதை நடத்தாமல் விட்டு விடலாமே என்று கூட கூறியது உண்டு.

இன்றைக்கு அப்படிப்பட்ட நெருக்கடிகளை எல்லாம் தாண்டி திராவிடன் நலநிதி நிமிர்ந்து நிற்கிறது. கடன் வாங்கும் பொழுதே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். அய்யா அவர்களிடம் நெருக்கமானவர்கள் கடன் கேட்டால் அய்யா அவர்கள் நான் கடன் கொடுப்பதும் இல்லை. கடன் வாங்குவதும் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். வேண்டுமானால் டொனேசனாக ஏதாவது தந்துவிடுகிறேன் என்று சொல்லிவிடுவார்கள்.

அது மட்டுமல்ல. அய்யா அவர்களுக்கு என்ன எண்ணம் என்றால் கடனை கொடுக்க முடியாமல் போகும் பொழுது நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்பது மட்டுமல்ல. என்னை ஏமாந்தவனாக ஆக்கக் கூடாது என்றும் சொல்லுவார்கள்.

பொதுவாக நகரத்தாரிடம் சில பேர் கடன் கேட்பார்கள். முதலில் நகரத்து செட்டியார்கள் இப்பொழுது கடன் கொடுக்கும் சூழ்நிலை இல்லை என்று சொல்லுவார்கள்.

பிறகு வட்டி கொஞ்சம் கூட ஆகுமே என்று சொல்லுவார்கள். என்ன வட்டியாக இருந்தாலும் பரவாயில்லை என்று யாராவது கேட்டால் நகரத்தார் அவர்களுக்கு கடன் கொடுக்க மாட்டார்கள். முதலில் ஓரிரு மாத வட்டி கொடுத்துவிட்டு பிறகு வாங்கிய கடனைத் தரமாட்டான் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இன்னொரு கடன் கேட்கிறவர் வட்டி கொஞ்சம் கூட அதிகமாக இருக்குதுங்க. கொஞ்சம் வட்டியை குறைத்து கொடுத்தால் பணத்தைத் திரும்ப ஒழுங்காகக் கட்டிவிடுகிறேன் என்று சொல்லுகிறார் பாருங்கள். இப்படி சொல்லுகிறவர்களுக்குத் தான் அவர்கள் கடன் கொடுப்பார்கள். கடனை நாணயமாகத் திருப்பிக் கட்ட வேண்டும் என்ப தற்காகத்தான் குறைத்துக் கேட்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட ஆட்களுக்குத்தான் கடன் கொடுப்பார்கள்.

நீதிபதி வேணுகோபால் அவர்கள் இந்த நலநிதிக்கு திராவிடன் நலநிதி என்றே பெயர் இருக்கட்டும் என்று சொன்னார். நமது அடையாள மும் இதில் இருக்கிறது. பெரியார் திடலில் இருப்பது மேலும் நமக்கு சிறப்பு, நல்ல பெயர் இருக்கும் என்று சொன்னார்.
நம்மிடம் நகைகளை அடகு வைத்தால் திருப்பிக்கொள்கிறார்கள். ஆனால் மார்வாடியிடம் நகைகளை அடகு வைத்தால் மீட்டமுடியாமல் கடனில் நகை மூழ்கியே போய்விடுகிறதை எல்லாம் பார்க்கிறோம்.

எளிய முறையில் தொடங்கப்பட்ட திராவிடன் நலநிதி இன்றைக்கு மேலோங்கி சிறப்பாக வளர்ந்து வருகிறது. நாம் ஒரு கூட்டுக்குழு மனப் பான்மையோடு இருந்து பணியாற்றுவதால் இந்த நிறுவனம் வளருகிறது. நாங்கள் டைரக்டர்களாக இருந்தாலும், பணியாளர்களும், நாங்களும் வேறுபாடுகள் இல்லாமல் கூட்டுப்பணியாளர்களாகத்தான் பணி யாற்றுகின்றோம்.

பல ஊர்களில் இருந்து பெரியாரின் டிரஸ்ட் போர்டு மீட்டிங்கிற்கு வருகிறவர்களுக்குக் கூட நாங்கள் பயணச்செலவு, தங்கும் செலவு எதுவும் தருவதில்லை. எல்லாம் அவரவர்களுடைய செலவில் தான் வந்து விட்டுச் செல்கிறார்கள். டிரஸ்ட் போர்டு மீட்டிங்கிற்கு வருகிறவர்களுக்கு ஒரு சிறுகாசுகூட பெறுவதில்லை. நான் சமீபத்தில் தியாகராயர் நகர் பகுதியில் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு ஒரு போர்டை பார்த்தேன். எனக்கு வியப்பாக இருந்தது. டெபாசிட் இழந்தவர்கள் சங்கம் என்று அந்த போர்டு இருந்தது.

எந்தத் தவறும்


நாங்கள் இன்றைக்கு இருக்கிறோம் எதிர் காலத்தில் மற்றவர்கள் இருக்கலாம். இன்றைக்கு இருப்பது போல எதிர்காலத்திலும் எந்தத் தவறும் நடக்காத அளவுக்கு இந்த அமைப்பு அமைக்கப் பட்டிருக்கிறது.

இந்த நிதி நிறுவனத்திற்கு என்றும் உங்களுடைய அன்பும், ஆதரவும் இருக்கவேண்டும். கடன் பெற்றவர்கள் திரும்பத் தரவேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

இவ்வாறு பேசிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், லியோ முத்து அவர்கள் முன்னணி கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறவர். அவர் 1996-97இல் திராவிடன் நலநிதியில் கடன் பெற்று பயன் அடைந்ததற்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தை பொதுக்கூட்டத்தில் லியோமுத்து அவர்களின் விருப்பப்படியே படித்துக்காட்டினார்.

கோ.சாமிதுரை

திராவிடன் நலநிதி தலைவர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை தனது வரவேற்புரையில் கூறியதாவது:

திராவிடன் நல நிதி நிறுவனம் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியை இன்றைக்கு மகிழ்ச்சியுடன் நாங்கள் கொண்டாடுகின்றோம்.

பல நிதி நிறுவனங்களை மூடிவிட்டு பல பேர் போய்விட்டார்கள். அப்படிப்பட்ட நிதிநிறு வனங்களை நடத்திய பல பேர் சிறைச்சாலையிலே இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தை நடத்த தொடக்கத்தில் டைரக்டர்கள் ஷேர் ஹோல்டராக அய்ந்தாயிரம் போட்டோம். அடுத்ததாக 25 ஆயிரம் போட்டோம். நிதிநிறுவனத்தை இன்னும் சிறப்பாக வளர்க்க டைரக்டர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு லட்சம் போட்டோம். மக்களையும் ஷேர் ஹோல்டராக ஆக்கி இன்றைக்கு சாதார ணமாக ஒரு கோடி ரூபாய் டெபாசிட்டில் நிலையாக எப்பொழுதுமே இருந்து கொண்டி ருக்கின்ற நிலையில் வைத்திருக்கிறோம்.

ரிசர்வ் பேங்கும், மத்திய அரசும் பல நிபந்தனைகளை, விதிமுறைகளை எங்களைப் போன்ற நிதி நிறுவனங்களுக்கு கெடுபிடி விதித்தாலும் அதை எல்லாம் தாண்டி திராவிடன் நலநிதியை வளர்த்திருக்கிறோம்.

இன்றைக்கு நாங்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனந்தமாக இருக்கிறோம். இந்த திராவிடன் நலநிதி நிறுவனம் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும்படியாக நடத்தி வருகிறோம்.

திராவிடன் நலநிதி இயக்குநர்களுக்கு காலணா கூட லாபம் கிடையாது. மாதாந்திர போர்டு மீட்டிங் நடத்துவதற்கு சிட்டிங் ஃபீஸ் என்று ஆயிரம் ரூபாய் மட்டும் டைரக்டர்களுக்கு தருகிறோம். அப்படித்தரவேண்டும் என்பது ரிசர்வ் பேங்க் வைத்திருக்கின்ற நிபந்தனை. சட்டப்படி இதை நாங்கள் நன்றாக நடத்தி வருகின்றோம்.

எந்தவித கவலையும் திராவிடன் நலநிதிக்கு இல்லை.

-இவ்வாறு தமது உரையில் குறிப்பிட்டார்.

ஏ.நமச்சிவாயம்
இந்தியன் வங்கியின் முன்னாள் செயல் இயக்குநர் ஏ.நமச்சிவாயம் தமது உரையில் கூறியதாவது: தந்தை பெரியார் அவர்களிடம் 1962 முதல் எனக்குத் தொடர்பு உண்டு. அப்பொழுது வாரம் ஒரு முறை பெரியாரை வந்து சந்தித்து விட்டுப் போவேன். இப்பொழுது அவ்வளவாக வரமுடியாத சூழ்நிலை.  அய்யா அவர்களுக்கு ஆசிரியர் வீரமணி அவர்களிடம் ஆலோசனைப் படி ஜெர்மென் அச்சுமெசின் வாங்கக் கடன் கொடுத்தோம். பணத்தை விரைந்து அடைக்க ஆசிரியர் அவர்களும், நாங்களும் சேர்ந்து ஒரு தந்திரம் செய்தோம்.

தந்தை பெரியார் அவர்களிடமிருந்து நாம் பல செய்திகளை கற்றுக்கொள்ள வேண்டும். அதை நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள் இன்றைக்கு மிகச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகின்றார்.

நானும் ஒரு நிதி நிறுவனத்தை 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறேன். உங்களுடைய அளவுக்கு நடத்துவது எங்களுக்கு சிரமம்தான். காரணம் அந்த அளவுக்கு ரிசர்வ் வங்கி நெருக்கடி கொடுத்துக் கொண்டு வருகிறது.

அவர்களுடைய எண்ணமே இதுபோன்ற நிறுவனங்களை நடத்தக்கூடாது. எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்பதுதான். அவ்வளவு நிபந்தனைகளை அடிக்கடி விதிக்கிறார்கள். ஒருமுறை விடுதலையில் கடைசி பக்கம் டைரக்டர் கோபாலகிருஷ்ணன் அவர்களின் சித்தி என்ற திரைப்படத்தின் விளம்பரத்தை பணத்திற்காக போட்டுவிட்டோம். அய்யா அவர்கள் என்னை அழைத்தார். இது உன்னுடைய வேலையா? என்று கேட்டார். அய்யா இனிமேல் இது மாதிரி வராது என்று சொல்லிவிட்டோம்.

திராவிடன் நலநிதி ஏழை-எளிய மக்களுக்குப் பயன்பட வாழ்த்துகிறேன்.

-இவ்வாறு பேசினார்.

ஏ.கே.ராஜன்
நீதியரசர் ஏ.கே.ராஜன் தனது உரையில் கூறியதாவது:

திராவிடன் நலநிதி என்ற இந்தப் பெயரைக் கேட்டால் நமது உள்ளத்தில் ஒரு உத்வேகம் வருகிறது.  நமது முன்னாள் நீதிபதி பரஞ்சோதி அவர்கள் 1992இல் திராவிடன் நலநிதியில் லோன் வாங்கித் தருகிறேன். அதைப்பயன்படுத்தி நீங்கள் ஒரு வீடு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அந்த    வாய்ப்பைத் தவறவிட்டதை இன்றைக்கு உணருகின்றேன்.

திராவிடன் நல நிதி நிறுவனம் நம்முடைய நிதி நிறுவனம். சில வருடங்களுக்கு முன்பு பல நிதி நிறுவனங்கள் காணாமலே போய்விட்டது. அவர்கள் எல்லாம் தங்களுடைய சுயநலத்திற்கு நிதி நிறுவனங்களைப் பயன்படுத்திவிட்டார்கள். மக்களை ஏமாற்றிவிட்டார்கள். 1997இல் டெபாசிட் செய்பவர்களுக்காக தமிழக அரசின் சார்பாக ஒரு சட்டத்தை உருவாக்க நான் காரணமாக இருந்தேன். ரிசர்வ் வங்கி இது செல்லாது என்று தெரிவித்தது. ஒரு சட்டம் செல்லுமா? செல்லாதா? என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதினேன்.

பிறகு அந்த சட்டத்தை எழுதி தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பினேன். அவர் ஒப்புக்கொண்டால் ஏற்கட்டும். இல்லாவிட்டால் பரவாயில்லை என்று நான் கைப்பட எழுதினேன்.

அதைப் படித்துப் பார்த்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் கையெழுத்து போட்டு ஒப்புதல் தந்தார். முதலமைச்சர் கலைஞரும் உடனே கையெழுத்திட்டு ஒப்புதல் தந்தார். பிறகு குடிஅரசு தலைவருடைய ஒப்புதல் பெறப்பட்டது. டெபாசிட் வாங்க மறுத்த காலம் எல்லாம் ஒன்று இருந்தது.

நாம் விதிகளைப் பின்பற்ற வேண்டும். மதுரையில் ஒரு வங்கியில் கிராமுக்கு ரூ.2000 தருகிறார்கள் கடன் என்றவுடன் அங்கே குமிகிறார்கள். இங்கேயும் அது போலத் தருகிறார்கள் என்று கருதுகிறேன். திராவிடன் நலநிதியில் நானும் பணம் செலுத்தியிருக்கிறேன். தொடர்ந்து நல்ல நிலையில் வளரவேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

-இவ்வாறு கூறினார்.

எஸ்.ராஜரத்தினம்
வரி இயல் நிதித்துறை அறிஞர் ராஜரத்தினம் தனது உரையில் கூறியதாவது:

ஜஸ்டிஸ் வேணுகோபால் அவர்கள் எங்கே சென்றாலும் என்னை அழைத்துச் செல்வது வழக்கம். ஒரு முறை புரசைவாக்கத்தில் ஜனோ பாகா சரசுவதி நிதி நிகழ்ச்சிக்குச் சென் றிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் வரச்சொல்லி விட்டார்.

இங்கே ஒரு ஆபீசர் ராஜரத்தினம் வந்திருக் கிறார். அவர் பேசுவார் என்று சொல்லிவிட்டார். அங்குள்ளவர்களிடம் நிதிநிலைமைபற்றிப் பேசினேன்.

தேனாம்பேட்டையில் ஒரு வீடு வாங்க குறைந்த வட்டியுள்ள எல்.அய்.சியை அணுகினேன். அய்ந்து வருடத்திற்குள் கட்டப்பட்ட வீடாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். தேடித் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. தேனாம்பேட்டையில் கே.பி.சுந்தராம்பாள் இருந்த வீடு என்று சொன்னார்கள். அய்ம்பதாயிரம் ரூபாய் விலை என்று சொன்னார்கள்.         அப்பொழுது  வங்கிகளை நான் அணுகிய பொழுது கேட்காத கேள்வியை எல்லாம் கேட்டார்

வங்கி அதிகாரி. என்னை அழைத்துச் சென்ற வருக்கே வருத்தம்.

இன்னொருவர் என் காதுபடவே சொல்கிறார் இவர் வைத்திருப்பதோ இருபதாயிரம் ஏன் அய்ம்பதாயிரம் ரூபாய் திரட்டி வீடு வாங்க முயற்சிக்கிறார் என்றே பேசினார். எப்படியோ எனது மனைவி மூலம் மற்றும் வீட்டு வெள்ளிச் சாமான்கள் மூலம் பணம் திரட்டி 50 ஆயிரம் ரூபாய் வீட்டை அன்றைக்கு கஷ்டப்பட்டு வாங்கினேன். இன்றைக்கு அதனுடைய மதிப்பு வேறு. இதே ராதா மன்றம் இதற்கு முன்பு எப்படி இருந்தது. இன்றைக்கு எப்படி மாறியிருக்கிறது.

திராவிடன் நலநிதி உதவியால்தான் இவ்வளவு பெரிய ராதா மன்றம் கட்டப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடு, கெடுபிடி அதிகமாகத்தான் இருக் கிறது. நானே வாடிக்கையாளர்களுக்கு டிவிடன்ட் கொடுக்கக் கூடாது என்று சொல்லுவேன். இப்படி இருப்பதால்தான் போட்ட மூலதனம் இரண்டு மடங்காக இன்றைக்கு உயர்ந்திருக்கிறது. இன்றைக்கு திராவிடன் நலநிதி ஸ்ட்ராங்காக இருக்கிறது. இதற்கு அடித்தளம் நன்றாகப் போடப்பட்டிருக்கிறது.

-இவ்வாறு பேசினார்.

செந்தாமரைக்கண்ணன்
சிறப்பு விருந்தினர் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் எஸ்.செந்தாமரைக்கண்ணன் ஆற்றிய உரை வருமாறு:

திராவிடன் நலநிதி 25 ஆம் ஆண்டு விழாவுக்கும், வருமான வரிக்காரனாகிய எனக்கும் என்ன சம்பந்தம்? ஏன் ஆசிரியர் அவர்கள் இந்த விழாவுக்கு என்னை அழைத்தார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

திராவிடன் நலநிதி இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறது. நாங்களும் இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறோம். பெனிஃபிட் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறது. நாங்களும் இந்த ஆண்டு 5 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரியாகத் திரட்டி மக்களுக்குப் பயன்படும்படி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். ஆகவே இந்த திராவிடன் நலநிதி வெள்ளி விழாவிற்கும் வருமான வரித்துறைக்கும் சம்பந்தம் இருக்கிறது.

சென்னையில் பலநிதி நிறுவனங்கள் மூடப் பட்டுவிட்டன. அவர்களிடம் ஒழுக்கம் இல்லை. தங்களுடைய நலனுக்காக அந்த நிதி நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

திராவிடன் நல நிதி 25 ஆண்டுகள் என்ன, 250 ஆண்டுகள், 2500 ஆண்டுகள் வரை வளரும். நடக்கும். நான் கேட்டேன். திராவிடன் நலநிதி என்றால் பார்ப்பனர் அல்லாதாருக்கு மட்டும்தான் கடன் கொடுப்பீர்களா என்று கேட்டேன். இல்லை. எல்லோருக்கும் கொடுப்போம் என்று சொன்னார்கள்.

பிராமணர்கள் யாராவது திராவிடன் நலநிதியில் பணம் போட்டிருக்கிறார்களா? என்று கேட்டேன் போட்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். பார்ப்பனர்கள் யாராவது கடன் வாங்கியிருக் கிறார்களா?  என்று கேட்டேன். அதற்கு இல்லை என்று பதில் சொன்னார்கள்.

இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். பிராம ணர்கள் இந்த நிதி நிறுவனத்தை நம்புகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். இதில் போட்ட பணம் நிச்சயம் திரும்பி வரும் என்று நான் அய்தாராபாத்தில் இருந்தபொழுது என்னிடம் பலர் கடன் வாங்கினார்கள். அவர்கள் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டார்கள்.

பிறகு நான் சென்னைக்கு வந்தேன். இங்கும் என்னிடம் சிலர் கடன் வாங்கினார்கள். ஒருவர் கூட வாங்கிய பணத்தைத் திருப்பித்தரவே இல்லை. கல்விக்கடன் வாங்குகிறார்கள். பலர்திருப்பித் தருவதில்லை. வேலுர் மாவட்டத்தில் 8 ஆயிரம் பேர் கல்விக்கடன் வாங்கினார்கள். அதில் 4 ஆயிரம் பேர் வேலைக்குச் சென்றுவிட்டார்கள்.

வேலைக்குப் போனவர்கள் வாங்கிய கல்விக்கடனைத் திருப் பித்தந்தார்களா? வெறும் எட்டு பேர் சிங்கிள் டிஜிட் தான் திருப்பித் தந்திருக்கிறார்கள். மீதி 3992 பேர் திருப்பித்தரவில்லை. எனது வீட்டிற்கு அருகில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி இருக்கிறார். ஓய்வு பெற்று விட்டீர்களே எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

நலநிதிகளில் பணம் கட்டாதவர்களிடம் வங்கி சார்பாக சென்று பணம் வசூல் செய்து கொடுக்கிறேன். அந்த கமிஷன் கிடைக்கிறது. வாழுகிறேன் என்று சொன்னார். நாம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதுதான் நம் வாழ்வாதாரத்தை உயர்த்தும். கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று சொல்லுவார்கள். இப்பொழுது கடன் கொடுத்தவன்தான் கலங்கி நிற்க வேண்டிய நிலையில் இருக்கின்றான்.

திராவிடன் நலநிதி பல்லாண்டுகள் சிறப்பாக வளர வேண்டும்.

-இவ்வாறு பேசினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...