Friday, December 23, 2011

எவரையும் மயக்கவல்ல பத்திரிகையாளர் மறைந்த கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ் - (2)


பள்ளியில் இருந்தபொழுது  தொழி லாளர் கட்சியின் ஆதரவாளராக இருந்த அவர் ஒரு மாதிரித் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டதுடன், ஆல்டர்மாஸ்டனில் இருந்து புறப்பட்ட சிஎன்டி பேரணியிலும் சேர்ந்து கொண்டார். தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பாடங்களை ஆக்ஸ்பர்ட் பல்கலைக் கழகத்தின் பாலியோல் கல்லூரியில் படித்த இவர், 1968 தேர்தலுக்காக ஒத்திகை பார்த்ததாக இதை அவர் கூறினார். ஆனால் அவர் ஒரு இரட்டை வாழ்க்கை மேற்கொண்டார்.  பகல் நேரத்தில்  பால்கேன் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு மெகபோனில் கார் தொழி லாளிகளிடம் சொற்பொழிவாற்றுவார். இரவில் ஆக்ஸ்போர்ட்  யூனியனில் பேசுவார் அல்லது விடுதி வார்டனுடன் உணவருந்துவார். சமூகத்தில் படிப்படி யாக முன்னேற வேண்டும் என்ற குறிக்கோள் அற்றவர் ஆயினும், முக்கியமான மக் களுடன் நெருக்கமாக இருக்க அவர் விரும்பினார்.
அவரது பாலியல் வாழ்க்கையும் இரட்டை வேடம் கொண்டதாக இருந்தது. தன்பால் உணர்வுக்காக ஒரு முறை பள்ளியிலிருந்தே அவர் நீக்கப்பட இருந் தார். எதிர்கால இரண்டு டோரி அமைச் சர்களுடன் தான் உறங்கியதாகவும் அவர் பெருமையடித்துக் கொண்டார். உடல் நலம் கெட்டு அவரது தோற்றம் மோசமாக ஆன நிலையில், அவர் எதிர்பால் உணர்வாள ராக மாறினார்.

தனது வாழ்க்கையை இரட்டை வாழ்க்கை என்று கூறிக்கொண்ட அவர் மூன்றாம் தர பட்டம் ஒன்றுடன் கல்லூரியை விட்டு வெளியே வந்தார். தனது படிப்பைப் பற்றி அதிகம் கவலைப்பட இயலாத படி அவர் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். தனது ஆக்ஸ்பர்டு நண்பர் ஜேம்ஸ் பென்டான் மூலம் நியூஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில் அவர் பணியில் சேர்ந்தார். வேறு பல பத்திரிகைகளுக்கு எழுதுவதன் மூலம் அவர் தனது வருவாயைப் பெருக்கிக் கொண்டார்.நியூ ஸ்டேட்ஸ்மேனில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது அவருக்கு சூறாவளியைப் போன்ற பெரும் துன்பம் தரும் அனுபவம் ஒன்று நேர்ந்தது. பாதிரியாரான தனது காதலனுடன் அவரது அன்புக்குரிய தாய் ஏதென்சில் தற்கொலை செய்து கொண்டதுதான் அந்த நிகழ்ச்சி. தன் தாய் யாரிடமும் கூறாத, தான் கிழக்கு அய்ரோப்பிய யூத குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற  செய் தியைப் பல ஆண்டுகளுக்குப் பின் ஹிச்சன்ஸ் அறிந்து கொண்டார். உடனே ஹிச்சன்ஸ் தனது தாய்வழியில் தன்னை ஒரு யூதர் என்று அறிவித்துக் கொண் டார்.

1970களின் பிற்பகுதியில் அவர் இங்கிலாந்தின் தேசிய செய்தித் துறையில் நன்கு அறிந்தவராக ஆன பிறகு பார்களிலும், உணவு விடுதிகளிலும் கலந்து கொண்டதுடன், பென்டான், மார்டின் அமிஸ், ஜூலியன் பார்னஸ், க்ளைவ் ஜேம்ஸ் மற்றும் பலருடன் இலக்கியத் தொடர்பு கொண்டிருந்தார். அவரது 21 ஆம் வயதில்  மாணவர் விசாவில் சென்ற அவரை அமெரிக்கா பெரும் அளவில் கவர்ந்தது. வேலை அனுமதி ஒன்று பெற அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. பின்னர் 1981 இல் வேலை தருவதாக அரைகுறையாக நேஷன் (Nation) பத்திரிகை உறுதி அளித்ததை அடுத்து மறுபடியும் அவர் அமெரிக்கா சென்றார். அதுதான் பத்திரிகையாளர், எழுத்தாளராக அவரது தொழில் வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்தது. தங்களின் எழுத்திலும், பேச்சிலும் இலக்கியம் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை இணைத்து அழகுபடுத்து பவர்களை விரும்பும் ஒரு பலவீனம் அமெ ரிக்கர்களுக்கு எப்போதுமே இருந்தது.

நேஷன் பத்திரிகையின் வாஷிங்டன் செய்தியாளராக ஹிச்சன்ஸ் ஆனார். 1982 Vanity Fair   பத்திரிகைக்குக் கட்டுரை எழுதுபவராகவும்,  Atlantic Monthly  பத்திரிகையின் இலக்கியக் கட்டுரை யாளராகவும், New York Review of books என்ற விமர்சனப் பத்திரிகைக்கு தொடர்ந்து விமர்சனம் எழுதுபவராகவும், எண்ணற்ற தொலைக் காட்சி நிகழ்ச்சி களில் தலைமைப் பேச்சாளராகவும் விளங்கினார். 11 நூல்களை எழுதிய அவர், 6 நூல்களுக்கு இணை ஆசிரியராக இருந்ததுடன், அய்ந்து கட்டுரைத் தொகுப்புகளையும் வெளி யிட்டார்.  ஆர்வெல், தாமஸ் ஜெபர்சன், தாமஸ் பெயின் ஆகியோர் பற்றி அவர் எழுதிய நூல்கள் சிறந்தவையாக இருந்த போதும், பரவலாக அறியப்படவில்லை. கருத்துகள் என்னும் நிலத்தை உழுபவர் களின் சிறிய உலகம்  (The small world of those who till the field of ideas) என்ற நூலை எழுதி  புகழ் பெற்ற  சூசான் சோன்டாக்கை விடக் கூடுதலான அனைத்துலக புகழை ஹிச்சன்சுக்கு 2007-இல் வெளியான  அவரது  கடவுள் பெரியவர் அல்ல; மதம் எவ்வாறு அனைத்தையும் நச்சாக்குகிறது?  (God is not great: How religion poisons everything)  என்ற நூல் பெற்றுத் தந்தது. மதத்தைக் கேலி செய்யும் இந்த நூல் நம்பிக்கையாளர்களின் முன்னணிப் பகைவர் வரிசையில் ரிச்சர்டு டாக்கின்சின்  (Richard Dawkins)   பக்கத்தில்   ஹிச் சின்சையும் வைத்தது.

நியூயார்க்கின் புதிய பள்ளியில் ஒரு பேராசிரியராக இருந்ததும், கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக் கழகத்தின் விசிட்டிங் பேராசிரியராக இருந்ததும்  அவருக்கு பெரு மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் அவர் பொது மேடையில் பேசும் பேச்சாளராகவும், விவாத மேடைகளில் பங்கேற்பவராகவும் புகழ் பெற்றார். எதையும் விவாதமாக்குவதை அவர் மிகவும் விரும்பினார். பொது மேடைகளிலும், தனிப்பட்டு மற்றவர்களுடன் பேசுவதிலும் அவர் பேசும் முறையில் அதிக வேறுபாடு எதுவும் இருக்கவில்லை. இங்கிலாந்தை விட அதிக அளவில் பேச்சுக் கலாச்சாரம் நிரம்பிய அமெரிக்காவில் இவருக்கு பெரும் அளவு வாய்ப்பு இருந்தது.

இடதுசாரிகளுடன் அவரது உறவு இறுதியாக முடிவுக்கு வந்தபோது, போப் தான் ஒரு கத்தோலிக்கர் அல்ல என்று அறிவித்ததைப் போல பலரும் உணர்ந்தனர். ஈராக்கில் புஷ் தொடுத்த போருக்கு ஆதரவளித்த ஹிச்சன்ஸ் தனது ஆதரவை விலக்கிக் கொள்ளவே இல்லை. 2004 அதிபர் தேர்தலில் அவர் புஷ்ஷூக்கு வாக்களித்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது. சிலர் அவரது மனநிலை சரி யில்லையோ என்று கூட அய்யப்பட்டனர். ஆனால், ஹிச்சன்ஸ் பல வழிகளிலும் பாரம்பரியத்தை மதிப்பவராக இருந்தாரே தவிர, நேரடியான இடதுசாரியாக இருக்கவில்லை.  1979 இங்கிலாந்து பொதுத் தேர்தலில் அவர் வாக்களிக்க வில்லை. தான் தாச்சரை ஆதரிப்பதை ரகசியமாக ஒப்புக் கொண்ட அவர்,  மெத்தனமாக இருப்பதும், விரைவாக செயலாற்றாமல் இருப்பதும் முடிவுக்கு வரும் என்று தான் நம்பியதாகக் கூறினார். ஹிச்சன்சின் நண்பரான சல்மான் ருஷ்டியைக் கொல்ல வேண்டும் என்று 1989 இல் அயோதுல்லா கோமானி ஆணை (குயவறய)  பிறப்பித்த போது, இடதுசாரி களின் தவறான நம்பிக்கையை வெளிப்படுத் துவதே முக்கியமானது என்று அவர்  கருதினார். காலம் தாழ்ந்தாலும், அவர் முதல் வளைகுடா போரை ஆதரித்ததுடன், போஸ்னியாவில் நாடோ தலையிட வேண்டும் என்று கோரினார். சதாம் ஹூசைனின் ஈராக் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கோரும் மனுக்களில் கையெழுத்திட அவர் மறுத்துவிட்டார்.

தான் மாறிவிட்டதை அவர் மறுக்க வில்லை. உண்மையைக் கூறுவதானால், ஒரு மாதிரி முதுமையை அவர் அடைந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.  ஆனால்  தான் முழுமையாக மாறிவிட வில்லை என்று அவர் மறுத்துக் கூறினார். மக்களின் சமூக உரிமைகள், சுதந்தி ரத்தைத் தொடர்ந்து ஆதரிப்பவராகவே அவர் இருந்தார். நீர்ப்பலகை (றுயவநசடியசன) சோதனையை மேற்கொள் ளத் தானாக முன்வந்த அவர், பின்னர் அது கொடுமை யான சித்திரவதை என்று கூறினார். புஷ்ஷின் உள்நாட்டில் உளவு பார்க்கும் திட்டத்தை எதிர்த்த வழக்கில் அவரும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டார். அனைத்து மதங்களின் மீதான தனது வெறுப்பை அவர் எப்போ துமே கைவிடவில்லை.

மற்ற விஷயங்களில் மாறுதல் ஏதும் நிகழவில்லை. பழைய நண்பர்களுடனான சண்டை சச்சரவுகள் நிறைந்ததாகவே ஹிச்சன்சின் வாழ்க்கை இருந்தது.  ஹிச்சன்ஸ் தனிப்பட்ட முறையில் தெரி வித்த கம்யூனிச ஆதரவு நையாண்டி ஒன்றை மற்றொரு பத்திரிகையாளரான அவரது வலதுசாரி சகோதரர், வெளிப் படுத்தினார். இதற்காக அவருடன் பல ஆண்டு காலம் ஹிச்சன்ஸ் பேசாமல் இருந்தார். ஆனால் அமீசுடனான அவரது நட்பு எந்த விதத் தடுமாற்றமும் இல்லாமல் தொடர்ந்தது. எனக்கு எல்லாமே அவர் தான் என்று ஹிச்சன்ஸ் கூறுவார். ஹிச்சன்சைப் பற்றி,  எந்தப் பொருளைப் பற்றிய விவாத மாக  இருந்தாலும் சரி, சீசர் அல்லது டெமாஸ்தனிசுக்கு எதிராகவும் கூட ஹிச்சன்சை நான் ஆதரிப்பேன் என்று கூறி அவரது விவாத ஆற்றலை வெளிப் படுத்துவார்.

மது அருந்துவதும், புகை பிடிப்பதும் அவருக்கு மிகவும் பிரியமான செயல்களா கும். தினமும் மது அருந்தும் அவர் ஓயாமல் புகை பிடித்துக் கொண்டே இருப்பார். என்றாலும் அவரது மதுப் பழக்கம் அவரது நகைச்சுவை உணர்வைக் குறைக்கவோ, அவரது வாதங்களை குழப்பமடையவோ செய்ததில்லை. நமது சமகாலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய பேச்சாளர்களில் ஹிச்சன்சும் ஒருவர் என்று பத்திரிகையாளர் லின் பார்பர் கூறுவார். மது அருந்தியிருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி, எவரை வேண்டு மானாலும் அவரால் தனது பேச்சால் மயக்க முடியும். அதே போல தனது அலட்சியத்தால் எவரது மனத்தையும் அவரால் காயப் படுத்தவும் முடியும் என்று நியூயார்க்கின் இயான் பார்க்கர் கூறுகிறார்.

அவரது ஹிச்-22 நூலின் விளம்பரத் துக்காக அவர் 2010 இல் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அவரது உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதே நோய்தான் அவரது தந்தையையும் அவரது மூத்த வயதில் கொன்றது. தனது நோயைப் பற்றியும் கூட கேலியாகவும், சுயஇரக்கமின்றியும் அவர் பேசுவார். என்றாலும் தொடர்ந்து அவர் எழுதிக் கொண்டு இருந்ததுடன், விவா தங்களில் கலந்து கொண்டும், தொலைக் காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டும் இருந்தார். டோரன்டோவில் 2700 பார்வை யாளர்கள் முன்னிலையில் கத்தோலிக்கராக மதம் மாறிய டோனி பிளேருடன் இருவரின் சம்மதத்துடன் நடைபெற்ற விவாதத்தில் ஹிச்சன்ஸ் மிக எளிதாக வெற்றி பெற்றார்.

நோய்வாய்ப்பட்டுள்ள நிலையி லும் தான் ஒரு போதும் மதத்தைத் தழுவிவிட மாட்டேன் என்று அவர் முன்னதாகவே அறிவித்தார்.

(நன்றி: தி ஹிந்து 19.12.2011 தமிழில்: த.க.பாலகிருட்டினன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...