Tuesday, November 29, 2011

பெண்ணுரிமைக்காகப் போராடிய பெரியார்


பெண்ணுரிமைக்காகப் போராடிய பெரியார்
தினத்தந்தி தலையங்கம்
(தினத்தந்தியில் இன்று வெளியான தலையங்கம் வருமாறு)
தாய்க்குலம் ஜெ போடுகிறது
ஒரு காலத்தில் பெண் அடிமைத்தனம் என்பது, சமுதாயத்தில் புரையோடிப்போய் இருந்தது. பெண் என்பவள் பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரமாகவும், சமையல் செய்துதரும் சமையல் கருவியாகவும் மட்டுமே கருதப்பட்டாள். வீட்டில் உள்ள நல்லது, கெட்டது எதிலும், வீட்டு நிர்வாகத்திலும், எந்த ஒரு முடிவும் எடுக்க உரிமை இல்லாத நிலையில், முடங்கிப் போய் இருந்தாள். ஆனால் காலப்போக்கில் கடந்த 2 அல்லது 3 தலைமுறைகளுக்கு முன்னால் உள்ள பெரியவர்களின் முற்போக்கு சிந்தனை, பல குடும்பங்களில் இந்த நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. பெண்கள் விடுதலைக்காக மகாகவி பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் கவிதைகள் சமுதாயத்தில் புதிய விதைகளை விதைக்கத் தொடங்கின. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் ஆவேச கருத்துகள்தான் பெண் விடுதலை, பெண் சமத்துவம் குறித்து, சமுதாயத்தை உலுக்கிவிட்டது. தந்தை பெரியார் என்றாலே, ஏதோ கடவுள் இல்லை என்ற நாத்திக கருத்தை சொன்னவர் என்று மட்டுமே, இன்னும் சமுதாயத்தில் ஒரு சிலரிடம் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் சமுதாயத்தை சீர்திருத்த, அவர் கூறிய பல புரட்சி கருத்துக்களை இன்றைய தலைமுறை கண்டிப்பாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
பெண் ஏன் அடிமையானாள்? என்று அவர் கோபக்கனல் கொண்டு வெளியிட்ட கருத்துகள்தான், பெண் சமத்துவத்தை நோக்கி, எல்லோருடைய எண்ணங்களையும் வேகமாக கொண்டு செல்ல வைத்து, அதற்கு செயல்வடிவம் கொடுத்தது. அந்த வகையில் பெரியாரைப் பொறுத்தவரையில், எந்த கருத்து என்றாலும் சரி, வெட்டு ஒன்று, துண்டு இரண்டுதான். உண்மையான சமத்துவத்துக்கு மதிப்புக் கொடுப்போமானால், உண்மையான அன்பு இருக்குமானால், பிள்ளையை சுமந்து பெறும் வேலை ஒன்றைத் தவிர, மற்ற காரியங்கள் ஆண்-பெண் இருபாலருக்கும் ஒன்றுபோலவே இருக்கும் என்பது உறுதி என்று நச்சென ஒரு கருத்தைக் கூறினார். அதன் தாக்கம், இப்போது ஆணுக்கு இணையாக எல்லா வேலைகளிலும் பெண்கள் நுழைந்துவிட்டனர். போர் முனைக்கும், வானவெளியில் பறப்பதற்குமே பெண்கள் போய்விட்ட பிறகு, இனி எந்த வேலைக்கு அவர்களால் போக முடியாது?
குடும்பங்களின் நிதி நிலைமையும், பெண்கள் வேலைக்குப் போகத் தொடங்கிய பிறகு சீரடையத் தொடங்கிவிட்டது. உள்நாட்டில் எல்லா வேலைகளிலும் கால்பதித்த, படித்த பெண்கள், இப்போது வெளிநாடு களிலும் வேலைக்குப் போகத் தொடங்கி விட்டனர். படிக்காத பெண்கள் கூட பல தொழிற்சாலைகளில் இப்போது தொழிலாளர்களாகவும், விவசாய வேலைக்கும் அதிக அளிவில் செல்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், படித்த பெண்கள் வெளிநாடுகளில் டாக்டர்களாகவும், என்ஜீனியர்களாகவும் வேலைக்கு சென்றால், படிக்காத பெண்களும் தங்கள் குடும்பங்கள் வளமாக வேண்டும் என்பதற்காக, வெளிநாடுகளில் வீட்டு வேலைக்காகவும், தாதிகளாக பணிபுரியவும் செல்கிறார்கள். ஆனால் வேலைக்கு போகிற இடங்களில், பேசிக்கூட்டிக் கொண்டு போனது ஒன்று, ஆனால் அங்கு நடந்தது ஒன்று என்ற நிலையில், குறைவான சம்பளம், சரியான ஓய்வு இல்லாமல், கடுமையான வேலைப்பளு, சித்திரவதை, அடி-உதை மற்றும் வெளியே சொல்ல முடியாத பல கொடுமைகளால் அவதிப்பட்டு, இனி இங்கிருந்ததுபோதும், ஊருக்குப் போய்விடுவோம் என்றால், அதுவும் முடியாத நிலையால் துடிக்க வேண்டிய நிலை. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, மத்திய அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, குறைந்தபட்சம் 30 வயது ஆகியிருக்க வேண்டும். அவர்களை வேலைக்கு அமர்த்தும் உரிமையாளரின் அடையாளச் சான்றிதழ் மற்றும் வேலைக்கான ஒப்பந்த நகல், 2500 டாலர் டெபாசிட் ஆகியவற்றை அந்த நாட்டில்  உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இதுதவிர, அந்த பெண் இந்திய தூதரகத்துடன் அவசரத்துக்கு தொடர்பு கொள்ள மொபைல் போன் என்று பல நிபந்தனைகள் இப்போது விதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 17 நாடுகளுக்கு இந்த நிபந்தனைகள் பொருந்தும். இனி வெளிநாடுகளில் வீட்டு வேலைக்குச் செல்ல இந்திய பெண்கள் பயப்பட வேண்டியதில்லை. வெளிநாட்டு விவகாரத்துறை மந்திரி வயலார் ரவிக்கு ஒரு பெரிய ஜெ போடும் தாய்க்குலம் மற்றொரு வேண்டுகோளையும் விடுக்கிறது. வேலைக்கு ஆள் எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பும்போதே, பல நிறுவனங்கள் ஏமாற்றி விடுகின்றன. இதை தடுக்கவும், உறுதியான புது நடவடிக்கைகள் வேண்டும் என்கிறார்கள்.
- (நன்றி: தினத்தந்தி 28.11.2011)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...