Friday, November 18, 2011

மக்களைத் தண்டிப்பதா?


எதிர்க்கட்சியாக இருந்தபோது தொட்ட தற்கெல்லாம் போராட்டம் நடத்துவதை வழக்கமாகக்கொண்டு இருந்தது  - இன்றைய ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க.

கடந்த தி.மு.க. ஆட்சியில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பால் விலையை உயர்த்திய போது விட்டேனா பார்! என்று விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவிக் குதித்து கண்டனக் கணைகளை அள்ளி வீசியது அ.இ.அ.தி.மு.க.,

குப்ப சமுத்திரத்தில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து கிடந்தால் திமுக ஆட்சி அகற்றாதது ஏன் என்கிற அளவுக்குக்கூட ஆர்ப்பாட்டம் நடத்திக் காட்டிய பெருமை அ.இ.அ.தி.மு.க.வுக்கு உண்டு! உண்டு!!

அதே அ.இ.அ.தி.மு.க. இப்பொழுது ஆளும் பொறுப்புக்கு வந்துள்ளது.

என்னென்ன காரணங்களைக் காட்டி தி.மு.க. ஆட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடினார்களோ அவற்றைவிட பல மடங்கு காரணங்கள் இப்பொழுதைய ஆளும் கட்சியைக் கண்டிப்பதற்கான வாய்ப்பினை முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா உருவாக்கிக் கொடுத்து விட்டாரே!

ஒரு லிட்டர் பால் விலை ரூ.17.75-லிருந்து ரூபாய் 24-க்கு உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரணப் பேருந்துக் கட்டணம் நகர்ப் புறத்தில் கிலோ மீட்டர் ஒன்றுக்கு 42 காசாகவும் விரைவு மற்றும் செமி டீலக்ஸ் பேருந்து கட்டணம் புறநகருக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 56 காசாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரிக்கு அரசு பேருந்தில் செல்ல வேண்டுமானால் தற்போதைய கட்டணத்தைவிட ரூ.115 திடீர் உயர்வு - அதாவது கன்னியா குமரிக்குச் செல்ல ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இது இரயில் பயணத்தை விட மிக அதிகமாகும். இது ஒரு கண்மூடித்தனமான விலை யேற்றமே! மின் கட்டணமும் உயர்த்தப்படும் என்று சொல்லப்படுகிறது.

இவையெல்லாம் மக்களைக் கடுமையாகத் தண்டிக்கப் போதுமான முடிவாகும்.

சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தை அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு பொது மக்கள் அளித்ததற்கு இது தண்டனையா என்ற கேள்வி எழுந்து நிற்கிறது.

உள்ளாட்சித் தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். இதனைத் தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறதோ தமிழக அரசு என்று கருத வேண்டியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இத்தகைய அறிவிப்பினை இவ்வரசு வெளியிடாததற்குக் காரணம் அரசியல் உள்நோக்கமாகவே இருக்க முடியும். மக்களை ஏமாற்றும் யுக்தியும்கூட இதில் இருக்க வில்லையா?

பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள முதல் அமைச்சர், இப்படி திடீரென்று விண்ணை முட்டும் அளவுக்கு அத்தியாவசிய அம்சங்கள் மீது, தேவைகளின்மீது விலையை ஏற்றுவது மக்கள் நல அரசு என்பதற்கான அறிகுறிகள் அல்ல!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்த விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொது மக்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள் என்பதில் அய்யமில்லை.

ஆட்சிப் பொறுப்பு ஏற்ற ஆறு மாதங்களில் இந்த ஆட்சி ஈட்டி இருக்கும் கெட்ட பெயரும், அதிருப்தியும் இதற்கு முன் எப்பொழுதும் கண்டிராத ஒன்றாகும். இடித்துச் சொன்னால் அதனை ஏற்றுக் கொள்வதுதான் நல்லது.

மறுபரிசீலனை செய்யட்டும் முதல் அமைச்சர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...