Monday, October 3, 2011

நெய்வேலி - திராவிடர் கழக சாதனை ஓட்டத்தில் ஒரு மைல் கல் மறைக்கப்பட்ட தமிழர் தலைவரின் சாதனைக் களம்

நெய்வேலி - திராவிடர் கழக சாதனை ஓட்டத்தில் ஒரு மைல் கல் மறைக்கப்பட்ட தமிழர் தலைவரின் சாதனைக் களம்

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்து அவரின் தமிழ்ச் சமுதாயத் தொண்டு, சமூக நீதிப் போராட்டங்களை ஊட கங்கள் மறைத்து இருட்டடிப்புச் செய்து வந்தன.

அதே திருப்பணியைத்தான் ஆதிக்க சக்திகளின் கைப்பாவையான ஊடகங்கள் அன்னை மணியம்மை யார் காலத்தும் செய்தன.

இன்றும் அதே கேவலமான செயலைத்தான் ஆசிரியர் தமிழர் தலைவர் இடத்தும் செய்கின்றன. இன்னும் ஊடகங்களில் பார்ப்பனீயச் செல்வாக்கு அற்றுப் போய்விட வில்லை; இற்றுப் போய்விடவில்லை. அது மட்டுமல்ல. பத்திரிகைகள் எந்தச் செய்திக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கின்றன எனத் தமிழர் தலைவர் 30-9-1989 இல் நெய் வேலியில் பேசியது இது:

சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது. இந்தச் செய்திகளுக்கெல்லாம் நம்முடைய செய்தியாளர்கள் முன்னுரிமை கொடுப்பதில்லை. அவர்களுக்கெல் லாம் எந்த நடிகைக்கு எந்தக் குழந்தை பிறந்தது, ஒற்றைக் குழந்தையா, இரட்டைக்குழந்தையா அல்லது எந்த நடிகை கர்ப்பமுற்று இருக்கிறாள்? என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டி ருக்கிறார்கள்.

(தமிழர் தலைவர் சொல்வது உண்மைதானே? அய்ஸ்வர்யா ராய் கர்ப்பமுற்றிருப்பதைப் பற்றி எவ்வளவு அக்கறையோடு செய்தி வெளியிட் டார்கள். பிரபுதேவா - நயன்தாரா காதல் -நயன்தாரா குருவாயூர் கோயி லில் வழிபட்டது - ஆரிய சமாஜத்தில் சேர்ந்து இந்துவாக மாறியது - எவ்வளவு முக்கியம் பாருங்கள்.)

அதைவிடத் தமிழகத்தினுடைய வளம்; தமிழர்களுடைய நலன் இதைப் பற்றியெல்லாம் அவர்கள் கொஞ்சம் அதிகமாகக் கவலைப்படவேண்டும். இதைத் தான் நாங்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு சுட்டிக் காட்டுகிறோம். ஆகவே அவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படவேண்டும் (விடுதலை 5-10-1989).

தந்தை பெரியாருக்குப் பின் அம்மா மணியம்மையாருக்குப் பின் - தமிழர் தலைவர் அவர்கள் அய்யா வின், அம்மாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது கால் பதித்து சமூக நீதிக்குத் தமிழ்ச் சமுதாயத்துக்கு ஊறு நேரும்போதெல்லாம் குரல் கொடுக்க, போராட்டத் தடி ஏந்திடத் தவறிய தில்லை.

ஆனால் - இந்த ஊடகங்களுக் குத் திராவிடர் கழகம் என்றால் திகட்டுகிறது. சமூக நீதிச் சிந்தனை என்றால் கழகம் செய்வதெல்லாம் கசக்கிறது. ஆனால் அவாள் எனில் ஊதி, ஊதிப் பெரிதாக்கிக் காட்டு வார்கள். நம்மவரின் மலையளவுச் சாதனையைக் கடுகிலும் சிறிதாகக் காட்டும் கள்ளத்தனத்திற்குப் பஞ்ச மில்லை. அது மட்டுமா? இன்றைய தலை முறை இளையதலைமுறை கிரிக் கெட்டிலும், சினிமாவிலும் செலுத்தும் ஆர்வத்தைத் தங்களுக்குக் கிடைத்த இந்த வாழ்வின் மூலாதாரத்தை, சிருஷ்டி கர்த்தாவைச் சிறிதேனும் நினைத்துச் சிந்திப்பதில்லை.

அது மட்டுமல்ல. அவர்களுக்குத் திராவிடர் கழகமென்றால் எதிர்மறைச் சிந்தனைகள்தான் நிறைந்திருக்கும். கோணல், குறுக்குப் புத்தியோடு கண்ணை விரித்துப் பாராது இறுக்கிப் பார்க்கும் இழியுணர்வுதான்.

இந்தப் பீடிகை, நீண்ட முன்னுரை, நீண்ட கொட்டி முழக்கும் வார்த்தை மணியோசை எதற்கு?

திராவிடர் கழகம் உங்கள் திரையிட்ட கோணல் பார்வையில் படுவது போல அழிவுச் சக்தி அல்ல; சமுதாயச் சிந்தனை மட்டுமல்ல - ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வு மட்டுமல்ல. வஞ்சிக்கப்பட்ட தமிழ கம் - வடவரின் ஆதிக்கத்தில் நசுக்கப் பட்ட தமிழகம் உயர வழி காட்டியது கழகம்.

பொருளாதாரச் சிந்தனையில், பொருளாதார முன்னேற்றத்தில் எந்த அரசியல் இயக்கத்தையும் விட முன் நிற்பது. இன்னும் சொல்லப் போனால் முதல் முதலாகப் பொருளாதார அடிப்படையில் தமிழக நலன் குறித்துச் சிந்திக்கும் இயக்கம் திராவிட இயக்கம்.

தமிழகத்தின் பெருமையைப் பறை சாற்றுவது, ஆந்திரா, கருநாடகா, புதுச் சேரிக்கு அன்றாடம் ஒளி வீச மின்சாரம் தருவது நெய்வேலி அனல் மின் நிலையம்.

ஆந்திரா- பாலாற்றில் குறுக்கே அணை கட்டி நீரைத் தடுக்க முயற்சித்த போதும், கருநாடகம் காவிரி நீருக்குத் தடை போட்டபோதும், முல்லைப் பெரியாறு அணையின் மட்டத்தை உயர்த்தத் தடைக் கற்களைத்தான் பரப்பியபோதும் நெய்வேலி மின்சாரம் நெடுந்தொலைவு அங்கெல்லாம் ஏன் செல்லவேண்டும் என்று கேட்டுப் போராடக் கூடச் செய்யாத இனம் தமிழினம் - குணம் தமிழர் களுடையது.

அந்த நெய்வேலி குறித்துப் பொருளா தாரச் சிந்தனையோடு - தமிழர் நலன் - தமிழ்நாட்டின் நலன் கருதிக் குரல் எழுப்பிச் சுவர், சுவராய் எழுதிப் போராடிப் பலன் பெற்றுத் தந்த ஒரே இயக்கம் திராவிடர் கழகம்.

இந்தத் திராவிடர் இயக்கத்தின் சாதனை இளைய தலைமுறைக்கு, எதிர் காலச் சந்ததிக்கு மட்டுமல்ல - எல்லாத் தமிழர்களும் தெரிந்து கொள்ளப் பதிவு செய்து வைக்கவேண்டியது நமது கடமை.

நெய்வேலி என்றவுடன் சிலருக்குப் பழுப்பு நிலக்கரி மட்டும்தான் நினைவுக்கு வரும். சிலருக்கு வாரியார் படித்த பாடம் நினைவுக்கு வரும். ஆனால் அனைவர் நினைவுக்கும் வரவேண்டியது திராவிடர் கழகம் பெற்றுத் தந்த உரிமையான ஈட்டுத் தொகை - அதற்கெனச் சளைக்காது அல்லும் பகலும் தமிழர் தலைவர் போராடிய போர்க்களம்   மறந்து போய்விடக்கூடாது - மறக்கடிக்கப் பட்டுவிடக்கூடாது. அதற்கு முன் நெய்வேலி நிலக்கரி வெளிவந்தது எப்படி? நெய்வேலி அனல் மின் நிலையம் பிறந்தது எப்படி? தமிழகம் கனிம வள வரைபடத்தில் இடம் பெற்றது எவ்வாறு என்ற வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உருவானது முதலே தொடக்கம் முதலாய் சர்வேயராய்ப் பணியாற்றி அதன் வளர்ச்சியைக் கண்ணுற்று வந்த 90 வயதுப் பெரியவர் க.திருநாவுக்கரசு முதலியார் நெய்வேலியின் தோற்றம் குறித்த அரிய தகவல்களைத் தெரிவித்த வாழும் சான்றாக விளங்குகிறார்.

இறை நம்பிக்கை உடையவர் என்ற போதிலும் நெய்வேலி தி.க.வினர் குறிப்பாக, நெய்வேலி ஜெயராமன், நெய்வேலி ஞானசேகரன் ஆகியோர் பால் மிகுந்த பரிவும் பற்றும் உடையவர். நெய்வேலியில் தி.க.வினர் கூட்டம் என்றால் கேட்கா மலேயே தாமே முன்வந்து தாராளமாக நன்கொடையினை வாரி வழங்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

1942 இல் மந்தாரகுப்பம் ஜம்புலிங்க முதலியார் நீதிக் கட்சிப் பிரமுகர்களில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் சிறப்புடன் விளங்கியவர். ஊராட்சிப் பதவிகள் வகித்த செல்வந்தர். ஏழை எளியவர்கள் பால் பரிவுடையவர்.

மந்தாரக் குப்பத்தில் 700 ஏக்கர் புறம் போக்கு நிலம் எவ்விதப் பயன்பாடும் இல்லாமல் இருப்பதைப் பார்த்தவர் தண்ணீர் வசதியிருந்தால் ஏழைகள் பயிர் செய்து பிழைக்கலாமே என்ற எண்ணத்தில் பெரிய ஆழ்துளைக் கிணறு தோண்டிய போது கரித்துண்டுகள் வரவே இந்திய அளவையியல் துறையில் கிருஷ்ணன் என்பவருக்குத் தகவல் கொடுத்தார். அவர் நிலப் பொறியியலாளரை அனுப்பி அதனை ஆய்வு செய்யச் சொன்னார். அங்குக் கிடைத்த கரியை ஜெர்மன் நாட்டு ரூர்க் கிக்கு அனுப்பினர்.

ரூர்க்கியிலிருந்து ஆய்வு செய்து அது முதிர்ச்சி பெறாத நிலக்கரி அதாவது பழுப்பு நிலக்கரி எனவும் பாய்லருக்குப் பயன் படுத்தி மின்சாரம் எடுக்கலாம் எனவும் அறிவித்தனர்.

தன்பாத்திலிருந்து எச்.கே. கோஷ் எனும் வங்காளி ஆய்வாளரை அரசு நிய மித்து ஆய்வு செய்யச் சொல்லியது. அவர் 1943-1947 இல் ராமசாமி நாயுடு என்ப வரின் பெரிய வீட்டில் தங்கி அங்கேயே அலுவலகம் அமைத்து ஆய்வு மேற் கொண்டார்.

அப்போது ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுத் திரும்பிய க.திருநாவுக்கரசு சர்வேயராக நியமிக்கப் பெற்றார். 1948 இல் 100 இடங்களில் ஆழ் துளைக் கிணறு தோண்டி நிலக்கரி இருப்பதை உறுதி செய்து அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

அப்போது தொழில் துறைச் செய லாளராக இருந்தவர் லோபோ பிரபு. அவ ரிடம் அறிக்கை கொடுத்தனர். அப்போது தலைமைச் செயலாளராக இருந்தவர் டி.எம்.எஸ். மணி என்பவர். பார்ப்பனராக இருந்தாலும் அவருடைய பெருமுயற்சி நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தோன்ற, ஆற்றிய பணி மறுப்பதற்கில்லை. பார்ப்பனரான படியால் ஏராளமான பார்ப்பனர்களை நியமனம் செய்தார் என்பதையும் குறிப் பிட்டுத்தான் ஆகவேண்டும்.

அண்ணாமலை அரசர் ராஜாசர் அண்ணாமலை, அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா விற்குத் தலைமை அமைச்சர் நேருவை அழைப்பது வழக்கம். அப்போதெல்லாம் நேருவைச் சந்தித்த தலைமைச் செயலாளர் டி.எம்.எஸ்.மணி ரு டிககஉயைட ஆக நேருவை நெய்வேலியைப் பார்வை யிட அழைத்தபோது நேருவும் வந்து பார்வையிட்டிருக்கிறார்.

அப்போது நேருவிடம் டி.எம்.எஸ். மணி வயலில் உழுகிற உழவர்களைக் காட்டி, இப்போது நாலு இஞ்ச் துணி தான் இங்கேயுள்ள உழவர்கள் அணிந்தி ருக்கிறார்கள் (அதாவது கோவணம்), நீங்கள் மனது வைத்தால் நூறு முழம் துணி அணிவார்கள் என்று சொல்லி யிருக்கிறார். 1954-இல் லோபோபிரபு விடம் இறுதி அறிக்கை கொடுக்க அவர் அதை இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.
1957 மே மாதம் 20 ஆம் நாள் சுரங்கத்தைத் தொடங்கி வைக்கத் தலைமை அமைச்சர் நேரு, தம் அருமை மகள் இந்திராவுடன் வந்திருக்கிறார்.

1958 ஜெர்மன் இயந்திரம் கொண்டு தோண்டிய போது 60 அடி ஆழத்தில் நிலக்கரி இருப்பது ஊர்ஜிதமாயிற்று. 1961 வரை தோண்டும் வேலைதான். மண்தான் கிடைத்தது.

1961 இல்தான் நிலக்கரியை எட்டினர். 100 சதுர மைலுக்கு நிலக்கரி இருப்பது தெரிந்தது. தாண்டவன் குப்பம் என்னும் இடத்தில் - 970 சதுர பரப்பில் நிலக்கரி தோண்டும் பணி முதன் முதலில் தொடங்கியது. 1949 இல் ஓமந்தூராரின் முயற்சியும் 1962 இல் காமராசர் முயற்சியின் பயனாக 3.5 மெகாவாட்  மின்சார உற் பத்தி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனால் தொடங்கி வைக்கப் பட்டது.
1968 இல் 150 மெகாவாட் என மின் உற்பத்தி உயர்ந்து இன்று 650 மெகாவாட் உற்பத்தியை எட்டியுள்ளது. தொடக்கம் முதல் நெய்வேலி மண்ணில் அலைந்து திரிந்து சர்வேயராகப் பணியாற்றிய திருநாவுக்கரசு அவர்கள் 1981 இல் ஓய்வு பெற்ற போதும், மேலும் அவருடைய பணியை நிறுவனம் பயன்படுத்திக் கொண்டது.

இந்நிலையில் திராவிடர் கழகத்தின் பணி என்ன? திராவிடர் கழகம் ஆற்றிய அருந்தொண்டு யாது? ஒவ்வொரு தமிழரும் அறிந்து கொள்ள வேண்டிய துடன் திராவிடர் கழகப் பணியைக் குறிப்பாகத் தமிழர் தலைவரின் பணியைப் பாராட்ட வேண்டும். வரலாற் றில் பதிவு செய்தல் வேண்டும்.
- இன்னும் வரும்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...