Monday, October 24, 2011

சென்றிடுவீர் எட்டுத் திக்கும்!


சென்றிடுவீர் எட்டுத் திக்கும்!


2012 - விடுதலை யின் ஆசிரியராக நமது தலைவர் பொறுப்பேற்ற 50 ஆம் ஆண்டு.

உலக வரலாற்றில் ஓர் ஏட்டுக்கு, இதழுக்கு 50 ஆண்டு காலம் ஆசிரியராக இருந்த சாதனைக்கு உரியவர் நமது ஆசிரியர்.

கொள்கைத் தடத்தில் இது ஒரு மகத்தான பயணம் - இயக்கப் பாதையில் மிக முக்கியமான மைல் கல்! தமிழக வரலாற்றில் ஓர் அரிமா நோக்கு!

நாம் என்ன செய்யலாம்? கொள்கைப் பிரச்சாரத் திசையில் அதிரடியாக நாம் எந்தத் திட்டத்தை மேற்கொள்ளலாம்?

அறிவியல் சாதனங்கள் அடிமுட்டாள்தனமான பிரச்சாரச் சாக்கடையைக் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன.

விஞ்ஞான  சாதனத்தைக் கொண்டு அஞ்ஞானத்தைப் பரப்புவதில் மூர்க்கத்தனம் கொண்டு திமிருகிறார்கள்.

கிழக்குச் சூரியன் முகம் காட்டுவதற்கு முன்னமேயே இந்த அழுக்கு மூட்டைகள் கண் விழித்து விடுகின்றன.

இன்றைக்கு எந்தக் கலரில் சட்டைப் போட வேண்டும்? எந்த நிற மோதிரக்கல்லை அணிய வேண்டும்? என்று மனிதனின் முயற்சியை மூடத்தனமாக மோதி முதுகில் மண் காட்ட வைக்கிறார்கள்.

சீரியல் என்ற பெயரால் பெண்களை சீக்காளிகளாக ஆக்குகிறார்கள். குடும்பங்களில் குழப்ப நச்சு விதைகளைத் துவுகிறார்கள். உலகமயப் பொருளாதார நச்சுக் காற்றை நுகர்வு என்னும் குப்பியில் அடைத்து நம் மக்களை விழுங்கச் செய்கின்றனர்.
அதிவேக உணவு (Fast food)  என்று அறிமுகப்படுத்தி  நம் இளைஞர்களை லபக்  லபக் என்று விழுங்கச் செய்து வாலிப வயதை வயோதிகத்தின் பள்ளத்தாக்கில் உதைத்துத் தள்ளுகிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் சினிமா கலாச்சாரம் நம் மக்களின் மூளைப் பரப்பில் கீழ்த்தரமான இச்சைகளைக் குஞ்சு பொரிக்கச் செய்கின்றனர்.

சினிமா கதாநாயகர்களை நாட்டின் நாயகர்களாக ஆக்கும் நாலாந்தர வேலையை லாவகமாக செய்கின்றன கலைத் துறைகள்.

இவர்கள் யார்? இவர்கள் நம் இன மக்களுக்காக என்ன செய்தார்கள்? மொழிப் போரில் இவர்கள் பொறித்த முத்திரைகள் என்ன? 

சமூகநீதிப் போரின் பக்கம் சாய்ந்து படுத்ததுண்டா? வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக்காக வார்த்தை அளவிலாவது குரல் கொடுத்ததுண்டா?

தந்தை பெரியார் முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக ஊட்டி வளர்த்த உன்னதப் பணிகளுக்கு ஊசி முனை அளவுக்காவது தங்கள் பங்களிப்பை அளித்ததுண்டா?

நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? விழுந்து பிடுங்காமலாவது இருந்துள்ளனரே! மூட நம்பிக்கையைப் பரப்பும் சிருஷ்டிகளாகத்தானே இவர்கள் இருந்து வருகின்றனர்?

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரை வைத்துக் கொண்டு கட்சியின் கொடியை திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் வைத்தல்லவா கட்சியைத் தொடங்குகின்றனர்? இதில் திராவிட கழகம் என்ற சொற்கள் வேறு.

நம் மக்களை என்னவென்று நினைக்கிறார்கள்? அண்ணா பெயரை, உருவத்தை, கட்சியிலும், கொடியிலும் வைத்துக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் அதிகார பூர்வமான ஏட்டில் இன்றைய ராசி பலன்களை வெளியிட்டு வருகிறார்களே - இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!

ஒரே ஒரு தொண்டர் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்ததுண்டா?

திராவிட இயக்கம் அரசியலில் நுழைந்ததால் ஏற்பட்ட கண்டுமுதல் இதுதானா?

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று மாண்புமிகு கலைஞர் அவர்கள் மானமிகு உணர்வுடன் கொண்டு வந்த சட்டத்தை அண்ணா பெயரில் புழங்கும் கட்சி- ஆட்சி ரத்து செய்யும் துணிவு பெற்றது எப்படி?

இதற்காகவா தந்தை பெரியார் திராவிட இயக்கத்தை உண்டாக்கினார்? அண்ணா அவர்கள் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கியது எதற்காக? அண்ணா பெயரையும், திராவிட என்ற இனக் கலாச்சாரப் பெயரையும் கட்சியில் வைத்துக் கொண்டு, அவற்றுக்கு மாறாக இப்படி நடக்கிறீர்களே - இது குற்றமல்லவா? அண்ணாவைக் கொச்சைப்படுத்துவது இல்லையா? என்று ஒரே ஒரு பத்திரிகையாளர் முதலமைச்சரைப் பார்த்துக் கேட்டதுண்டா? ஒரே ஒரு இதழாவது இந்தத் திசையில் கவலையோடு வினாக் கணை தொடுத்ததுண்டா?

இந்தச் சீர்கெட்ட தமிழ் மண்ணை மடைமாற்றம் செய்வது எப்படி? புது ரத்தம் பாய்ச்சி போர்க்குணம் பெறச் செய்வது எப்படி? தன்மானக் கொந்தளிப்பைக் கொண்டு வரச் செய்வது எப்படி? விடுதலையின் ஆசிரியராக நமது தலைவர் 50 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் நம்மை நாமே திறனாய்வு செய்து கொள்ள வேண்டாமா?  இன்னும் வேகமாக வேலைகளை முடுக்குவது  குறித்து முனைப்புக் காட்ட வேண்டாமா?

பகுத்தறிவு முற்போக்குத் திசையில் நடைபோடும் ஒரே ஒரு நாளேடு விடுதலை அல்லவா? முற்போக்கு பேசும் தீக்கதிர்  ஏடு கூட  தீபாவளி மலர் வெளியிடும் அக்கிரமம் இந்த நாட்டில்.

தலையில் அடித்துக் கொள்வதா?

இந்த நிலையில் விடுதலையின் வாசகர்கள் எண்ணிக்கையை விரிவுபடுத்த வேண்டும்; சந்தாதாரர்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

தமிழன் வீடு என்பதற்கு அடையாளம்  விடுதலை என்றாரே மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார். 
அதை நிரூபிக்கச் செய்ய வேண்டும். அதற்கான நம் முயற்சிதான், நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியராக ஆனதன் பொன்விழா (50 ஆண்டு)வை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் களத்தில் இறங்கிவிட்டோம்.

நமது உணர்வுகள் நமக்கு இறக்கைகளாகட்டும் - பறந்து திரிந்து பணியை முடிக்க! நமது கால்கள் பம்பரங்களாக ஆகட்டும், சுற்றிச் சுழன்று இலக்கின் முகட்டினை எட்டுவதற்கு!

50 ஆயிரம் கூடுதல் சந்தாக்களைத் திரட்டித் தாருங்கள். ஓராண்டு காலத்தில் தமிழின மக்களின், வாலிபர்களின் சிந்தனை விளைச்சல் எத்தனை போகம் என்பதை கண்முன்னே காணமுடியும்.

தந்தை பெரியார் காண விரும்பிய முற்போக்குச் சமூகத்தின் கம்பீரத்தைக் காணமுடியும்!

சமூகத்தின் சீரழிவா?
அரசியலில் வீழ்ச்சியா?
பண்பாட்டுத் தளத்தில் தலை குனிவா?
மூடநம்பிக்கையின்
பார்த்தீனியமா?
நுகர்வுக் கலாச்சாரத்தின்
நுகத்தடியில் சமூகமா?

இத்தியாதி இத்தியாதி நோய்களை விரட்டும் ஒரே மருந்து - மூலிகை - தந்தை பெரியார் அவர்கள் தந்த சுயமரியாதைச் சூரணம்.

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ அவைகளை எல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்.

(குடிஅரசு, 18.12.1932)

உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களிடம் தோன்றிவிட்டால் அதுவே அரசியலையும், தேசியத்தையும் மற்றும் மத இயலையும் தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும்.

(குடிஅரசு 17.2.1929)

என்றுரைத்தார் சுயமரியாதைச் சூரியன் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

இவ்விரண்டையும் தரவல்லது தந்தை பெரியார் மொழியில் கூற வேண்டுமானால் விடுதலை என்னும் போர்க்கருவி! சென்றிடுவீர் எட்டுத் திக்கும்

சந்தா மாலைகளைத் தொடுத்து மலையாகவே குவிப்பீர்! குவிப்பீர்!!

- கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
குறிப்பு: கருஞ்சட்டைத் தோழர்கள் களப் பணியில் இறங்கி விட்டார்களா? அவர்கள் எந்த உணர்ச்சியோடு இருக்கிறார்கள்? அவர்களின் திட்டங்கள் என்ன?

கடந்த இரு நாள்களாகக் கழகப் பொதுச் செயலாளர்களும், தலைமை நிலைய செயலாளரும், துணைப் பொதுச்செயலாளர்களும் கழகத் தோழர் கள் மத்தியில் கண்ட உணர்ச்சி, கண்ட காட்சி எத்தகையவை என்பதுபற்றி நாளை பேசுவோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...