Tuesday, October 18, 2011

மனிதர்களுக்கு எத்தனை உணர்வுகள் உள்ளன?


மனிதர்களுக்கு எத்தனை உணர்வுகள் உள்ளன?

மனிதர்களுக்குக் குறைந்தது ஒன்பது உணர்வுகள் உள்ளன.

பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது, மெய்யால் உணர்வது என்ற அய்ந்து உணர்வுகளைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். முதலில் இவற் றைப் பட்டியலிட்ட அரிஸ்டாட்டில் அறிவுக் கூர்மையானவர் என்றாலும், பல நேரங் களில் தவறான முடிவுகளைக் கூறியுள்ளார். எடுத்துக்காட்டாக, நாம் நமது இதயத்தால் சிந்திக்கிறோம் என்று அவர் கூறியதையும்,  இறந்து போன எருதுகளின் உடல்களி லிருந்து தேனீக்கள் உருவாகின்றன என்று கூறியதையும், ஈக்களுக்கு நான்கு கால்கள் மட்டுமே உண்டு என்று கூறியதையும் குறிப்பிடலாம்.

மேற்கூறிய அய்ந்து உணர்வுகளைத் தவிர்த்து, மேலும்  நான்கு உணர்வுகள் இருப்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

1. வெப்பநிலை உணர்வு என்னும்  வெப்பம் இருப்பதையோ இல்லாமல் இருப்பதையோ உணரும் நமது தோலின் ஆற்றல்.

2. சமநிலைத் தன்மை உணர்வு என்னும் சமநிலைத் தன்மையை உணரும் நமது ஆற்றல். உள்காதுகளின் குழிகளில் நிரம்பி உள்ள திரவங்களைக் கொண்டு இது தீர்மானிக்கப்படுகிறது.

3. வலியை அறியும் உணர்வு என்னும் தோல், மூட்டு, உடல் உறுப்பிகளில் ஏற்படும் வலியை உணரும் ஆற்றல். வியப்பளிக்கும் வகையில், இதில் மூளை சேரவில்லை. மூளையில் வலியை உணரும் அமைப்பு இல்லை என்பதே இதன் காரணம். தலைவலி மூளையில் இருந்து வருவது போல தோன்றினாலும், மூளையின் உட்பக்த்தில் இருந்து வருவதில்லை.

4. உடலுணர்வு என்னும் நமது உடலைப் பற்றிய உணர்வு. நமது உடலுறுப்புகள் எங்கே இருக்கின்றன என்பதை நாம் காணமுடியாதபோதோ, உணரமுடியாத போதோ நம்மை அறியாமலேயே அறிந்திருக்கும் ஆற்றலாகும் இது. எடுத்துக்காட்டாக, கண்களை மூடிக் கொண்டு உங்கள் காலை காற்றில் ஆட்டுங்கள். அப்போதும்  உங்கள் உடலுடன் தொடர்புடைய கால் எங்கேயிருக் கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

இந்த ஒன்பதுக்கும் மேற்பட்ட உணர்வுகள் இருக்கின்றனவா என்பது பற்றி ஒவ்வொரு சுயமரியாதை கொண்ட நரம்புமண்டல ஆய்வாளரும் தங்களின் சொந்தக் கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.

21 உணர்வுகள் வரை இருப்பதாகவும் சிலர் வாதிடுவர். பசியும், தாகமும் உணர்வுகளில்லையா? ஆழம் பற்றிய உணர்வோ, பொருள் பற்றிய உணர்வோ அல்லது மொழி பற்றிய உணர்வோ உணர்வல்லவா? இசையை வண்ணத்தில் காணச் செய்யும்படி உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று  மோதி இணைந்து, ஒரு புலன் உணர்ச்சியை மற்றொரு புலனால் உணரும் உணர்வு என்னும் முடிவற்ற, மேலும் மேலும் அறியும் ஆவலைத் தூண்டுவது உணர்வு  இல்லையா?

உடலில் மின்தூண்டல் ஏற்படும் உணர்வு அல்லது வர இருக்கும் ஆபத்தை உணர்ந்து உங்கள் மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்பது ஓர் உணர்வல்லவா?

நமக்கு இல்லாமல் விலங்குகள் மட்டுமே பெற்றுள்ள சில உணர்வுகளும் இருக்கின்றன. மின்னாற்றல் உள்ள பகுதிகளை உணர்ந்து கொள்ளும் மின்னாற்றலை யறியும் உணர்வை திமிங்கிலங்கள் பெற்றுள்ளன. காந்த மண்டலத்தைக் கண்டு கொள்ளும் காந்த ஆற்றலை அறியும் உணர்வு கொண்ட பறவைகளும், பூச்சி இனங்களும் இவ் வுணர்வைத் தாங்கள் பயணம் செய்யப் பயன்படுத்திக் கொள்கின்றன. எதிரொலியை அறியும் உணர்வும், பின்பக்க அழுத்தத்தை அறியும் உணர்வும் மீன்களால் பயன்படுத்தப் படுகின்றன. இரவில் உணவு தேடவோ அல்லது வேட்டையாடவோ ஆந்தைகள், மான்கள் போன்றவற்றிற்கு உதவும் (இன்ஃப்ரா ரெட்) புறஊதாக் கதிர் பார்வையும் ஓர் உணர்வுதான்.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’
பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...