இந்தியக் கடற்படைக்கு தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது
மதுரை உயர்நீதிமன்றத்தின் சிறப்பான தீர்ப்பு
மாநில அரசு, மத்திய அரசை வற்புறுத்தட்டும்!
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும், சிங்களவர்களாலும் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முக்கிய தீர்ப்பினை வழங்கியுள்ளது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியக் கடற்படைக்கு உண்டு என்பதை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இலங்கை கடற்படையாலும், சிங்களவர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மிகவும் சர்வ சாதாரணமாக நிகழும் அன்றாட சம்பவங்களாகி வருவது நமது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்.
இலங்கையுடன் சம்பிரதாயப் பேச்சுகள்
மத்திய அரசு கண்டிப்பான குரலில் ராஜபக்சே அரசுடன் பேசாது, ஏதோ சம்பிரதாய நடைமுறைபோல் தனது அதிகாரிகளையும், எப்போதாவது ஒருமுறை வெளியுறவுத்துறை அமைச்சரை விட்டும் பேச வைப்பதனால் எந்த உருப்படியான பயனும் விளைந்துவிடவில்லை இதுவரை!
நமது மீனவர்களின் வாழ்வாதாரமே கடலில் சென்று மீன் பிடிப்பதுதானே! அப்படி நாகை, மல்லிப்பட்டணம், தேவிப்பட்டணம், மண்டபம், கோடியக்கரை, ராமேசுவரம் போன்ற பல பகுதிகளிலிருந்து மீன் பிடிக்கச் சென்றால், அவர்களை இலங்கைக் கடற்படையினரும், சிங்களரும், அடித்தல், துன்புறுத்தல், சிறைபிடித்துச் செல்லுதல் போன்ற அக்கிரமமான செயல்களை அனுதினமும் கட்டவிழ்த்து விடுவது வாடிக்கையாகி விட்டது! தொடர்கதையாகவே தொடருகிறது!
நமது மீனவச் சகோதரர்கள் படும் துன்பத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.
கச்சத் தீவைத்தாரை வார்த்ததால் வந்த விளைவு!
கச்சத் தீவினை நமது மத்திய அரசு 1976-இல் இலங்கைக்குத் தாரை வார்த்தது மிகப் பெரிய அரசியல் தவறு; அரசியல் சட்டவிரோத நடவடிக்கை என்பதை நாம் முதன் முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுபோட்டு அது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே நிலுவையிலே இருக்கிறது!
எங்கள் கடல் எல்லையைத் தாண்டி உள்ளே வந்து தமிழக மீனவர்கள், மீன்பிடிக்கிறார்கள் என்று குறை கூறி இலங்கைக் கடற்படை அதிகாரிகளும், அரசும் இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்திட முனைகின்றனர்!
நீரில் கோடு போட்டு எல்லையை வகுக்க முடியுமா?
நிலத்தினைப் பொறுத்தவரை எல்லைக்குள் இருப்பது எப்போதும் சாத்தியம்; ஆனால் நீரைப் பொறுத்து மீன் பிடிக்கையில், கடலில் ஒரு காற்று திடீரென வீசினால், படகுகள், மீன்பிடிப்போர் அங்கே தள்ளப்படுவது சாதாரணம் ஆகும். நீரில் கோடு போட்டு எல்லையை வகுக்க முடியுமா?
இதை உடனே ஏதோ பெருங்குற்றம் போல் கூறி, தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறித்து, பட்டினி போட்டுக் கொல்ல முயற்சிப்பது மிகவும் மனிதாபிமான மற்ற செயல் அல்லவா?
மதுரை - உயர்நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்பு
இதுபற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்குஒன்று போடப்பட்டதில், நேற்று (14.10.2011) இடைக்கால ஆணை வழங்கிய நீதிஅரசர்கள் ஜஸ்டீஸ் கே.என். பாஷா, ஜஸ்டீஸ் வேணுகோபால் ஆகியோர் நமது இந்திய கடற்படை தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது, போதிய பாதுகாப்பு அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருப்பது, மிகவும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்!
நமது கடற்படையின் ரோந்து என்பது மீனவர்களை, அவர்கள் தொழில் தங்கு தடையின்றி நடைபெறும் வகையில் பாதுகாப்பு அளித்து உதவிடுவது என்பதையும் இணைத்ததே என்று கூறி, மத்திய அரசின் மகத்தான கடமைகளில் ஒன்று இது என்று விளக்கும் வகையில், இடைக்கால ஆணை பிறப்பித்திருப்பது மிக மிகச் சரியான நல்ல தீர்ப்பு ஆகும்!
இதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, அமைப்புகளை அழைத்து, இதனை நீர்மேல் எழுத்தாக்கி விடாமல், பாறையில் செதுக்கப்பட்ட கல்வெட்டாகக் கருதி நடைமுறைப்படுத்திட முன்வர ஆவன செய்ய வேண்டும்.
கடிதம் எழுதுவது பற்றி...
மாநில அரசு, வெறுமனே கடிதம் எழுதுகிறது என்று முதல்வராக கலைஞர் இருந்தபோது சொன்ன ஊடகத்தினர், அரசியல்வாதிகள் இப்போதும் அதே பாணி தானே தொடர்கிறது என்று எழுதிடாமல், பேசாமல், மவுனம் சாதிப்பது ஏனோ, மாநில அரசும் இந்தத் தீர்ப்பின் பரிந்துரையை செயல்படுத்திட பிரதமர், வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சுகளுக்கு எழுதியும், நேரில் வற்புறுத்திடவும் வேண்டியது அவசர அவசியமாகும்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
தலைவர்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment