Sunday, October 16, 2011

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை'


கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள்,  தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொள்ளத் தகுதி பெற்றவர்களாக நம் மக்களை ஆக்குவதற்கு எதுவுமே செய்யவில்லை;  ஒப்பிட்டுக் காண்கை யில், உண்மையிலான மக்களின் முன் னேற்றம் பிற்காலத்தில்தான் தொடங் கியது. சமூக அரசியல் சீர்திருத்தங்கள் எவற்றையும் நாட்டில் மேற்கொள்ளும் முன்னர் முதலாவதாக தங்களது அதிகாரத்தை இந்தியவில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியவர்களாக ஆங்கிலேயர்கள் இருந்தனர். அத னால் இந்தியாவில் சமூக அரசியல் சீர்திருத்தங்களை ஆங்கிலேயர்கள் மேற்கொண்டது அறுபது அல்லது எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இருக்க முடியாது. பலப்பல இனங் களையும், சமூகங்களையும் கொண்ட இந்நாட்டு மக்களின் வாழ்க்கையில் இந்த சமூக, அரசியல் சீர்திருத்தங்கள் ஒன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. என்றாலும், ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவின் வரலாற்றினை சரியான வெளிச்சத்தில் நாம் படித்துப் பார்த்தால்,  இந்த நாட்டில் இன்று நாம் காணக்கூடிய அனைத்து வகையான வளர்ச்சி, முன்னேற்றம், செயல்பாடுகளின் தோற்றம் நேரடி யாகவோ மறைமுகமாகவோ இக் குறுகிய காலத்தில் ஆங்கிலேய அரசு மேற்கொண்ட பணிகளில் காணக் கிடக்கிறது என்ற முடிவுக்கே நம்மால் வரமுடியும். அத்தகைய பணியின் முக்கிய மாபெரும் விளைவுகளில் ஒன்று, இந்த மாகாணத்தில் பார்ப்பனர் அல்லாத பல்வேறுபட்ட சமூகங்களின் சுயமரியாதை உணர்வின் வெளிப் பாடாக நடத்தப்படும் இந்த மாநாடு என்றும் கூறலாம். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டில் புதிய கருத்துகள், கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய பின்னரும்,  தங்களைப் பிணித்திருந்த பழைய விலங்குகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, தங்களது ஆண்மையையும், சுதந்திரத் தையும், தனித்தன்மையையும் உறுதிப் படுத்திக் கொள்வதற்கு இந்த சமூ கங்கள் மிக நீண்டதொரு காலத்தை எடுத்துக் கொண்டன.
பார்ப்பனரல்லாத மக்களின் விழிப்புணர்வு
இந்திய நாட்டின் இயற்கை வளங்களை மேம்படுத்த அயர்வின்றி நாள் முழுவதும் உழைத்துக் கொண்டும், தங்களுக்கு நேரும் துன்பங்களை எல்லாம்  அமைதி யாக ஏற்றுக் கொண்டும் வாழ்ந்து, பாரம் பரியமான கல்வி அறிவு பெற்ற பிரிவு மக்களிடமே தலைமையையும், அனைத்து வசதிகளையும், இன்பங்களையும் ஏன் விட்டு விடக் கூடாது என்ற கேள்வி கேட் கப்படுகிறது. ஆங்கிலேய அரசிடமிருந்து ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப் பற்றுவதற்கான வன்முறை இயக்கங்கள் தொடங்கப்படாமல் இருந்திருந்தால்,  ஒரு வேளை இப்போது ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு பார்ப்பனர் அல்லாத மக் களுக்கு ஏற்படாமல் போயிருக்கக்கூடும். என்றாலும்,  கதிரவனின் ஒளிக்கதிர் களைப் போன்ற கல்வி அறிவொளியை ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்தி யதையடுத்து, இத்தகைய விழிப்புணர்வு இப்போதில்லாவிட்டாலும், பின்னர் என்றாவது ஒரு நாள் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு நிச்சயமாக ஏற்பட்டிருக்கவே செய்யும்.  ஆனால், ஹோம் ரூல் இயக்க மும், அது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைப் போராட்டமும்  இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயலை விரைவு படுத்தின என்றே கூறலாம்.
நாம் ஏன் ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்க்கிறோம்?
இன்று பார்ப்பனர் அல்லாத மக்க ளாகிய நாம் மட்டும் பொதுவாக ஹோம் ரூல் இயக்கத்தை ஏன் எதிர்க்கிறோம்? நாமே தீவிரமான சீர்திருத்தவாதிகள் என்பதால், தொடர்ந்து வரிசையாக அளிக்கப்படும் சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்களின் மூலம் ஹோம் ரூல் என்னும் இலக்கை எட்ட முடியும் என்ற கருத்தைக் கொண்டவர்கள் நாம். ஆங்கி லேய அரசியல் வல்லுநர்கள் இந்த இலக்கை  நாம் மேற்கொள்வதற்கு நம்மை ஊக்குவித்து ஆதரித்தனர்.  நம்பிக்கை யுடன், பொறுமை காத்தால், நிச்சயமாக அந்த இலக்கை நம்மால் அடைய முடியும். இந்த மாகாணத்தைப் பொறுத்தவரை இப்போதே ஹோம் ரூல் அளிக்கப்பட்டால், ஆங்கிலேயர்கள் இந்நாட்டுக்கு வருவ தற்கு முன்னர் பார்ப்பனர் அல்லாத மக்கள் என்ன நிலையில் இருந்தார்களோ, முன்னேற்றம் அற்ற அதே பின் தங்கிய நிலையில், சுதந்திரமாக செயல்பட முடியா தவர்களாக, எப்போதும் மற்றவர்களைச் சார்ந்தே இருக்கக்கூடியவர்களாக, அடிமை நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டு விடுவார்கள்.  வருணாசிரம தர்ம இயக் கமும்,  அத்துடன் இணைந்த மனுதர்மத் தின் அடிப்படையிலான தேசிய கல்வி இயக்கமும்  முன்னிலைப்படுத்தப்படும் ஒரு ஆட்சியில்  பார்ப்பனர்கள் உயர் அதிகாரம் பெற்றிருந்த பழைய காலத்துக்கு நம் நாடு தள்ளப்பட்டுவிடும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். பார்ப்பனர்களின் புதிய மத, சமூக, அரசியல் செயல் திட்டங்களின் கவர்ச்சிக்கும், பகட்டுக்கும் இடையிலும் அவர்களது உண்மையான நோக்கமான, இந்த பார்ப்பனர் அல்லாத சமூகங்களைப் பலவீனப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளையும் செயல்களையும் மேற்கொண்டால்,  அந்த சமூகங்கள் ஒரு பெரும் சக்தியாக விளங் குவதை முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம் என்ற பார்ப்பனர்களின் நோக்கத்தைப் பற்றி தெளிவாகக்  காண இயன்றவர்களாக பார்ப்பனர் அல்லாத சமூகங்களின் தலைவர்கள் இருந்தனர்.
என்றாலும் அவர்கள் இந்த முடிவுக்கு வருவதற்குக் காரணமாக இருந்தவை இவை மட்டுமல்ல.  தனது பணியை ஒழுங் குடனும், மதிப்புடனும் செய்யும்  மிதவாதி கள் கொண்ட ஓர் அமைப்பாக காங் கிரஸ் பழைய நாட்களில் இருந்தது என்பது உண்மைதான்.  தங்களது கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் அமைதியான எதிர்ப்பு தெரிவிக்கும் அச்சுறுத்தல் அப்போது இல்லை.  அதன் செயல்பாடுகளில் முற் றிலும் சட்டதிட்டங்களின்படி செயல்படும் ஓர் அமைப்பாக அது இருந்தது. காலம் சென்ற தாதாபாய் நவ்ரோஜி ( அவரது மறைவு ஒரு பேரழிவு என்று இம்மாநாடு வருத்தம் தெரிவித்தது) சர் பெரோஷ் மேத்தா, கோகலே ஆகிய அனைவரும் காங்கிரசின் செயல்பாடுகளையும், வழி முறைகளையும் நேர்மையானவைகளாக வைத்திருந்தனர்.  பிரதிநிதிகள் கொண்ட ஓர் அமைப்பு அது என்று கூற இயலாவிட்டாலும்,  அதன் விவாதங்கள் அனைத்துப் பிரிவு மக்களாலும் ஆர்வத்துடன்  கவனித்து வரப்பட்டது. அதன் செயல்திட்டங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களும் கூட அவற்றைக் கூர்ந்து கவனித்தனர் என்று கருத்து கூறுவதும் பொருத்தமாகவே இருக்கும். ஆனால் காங்கிரசோ, கற்றறிந்த பிரிவு மக்கள் ஆர்வம் கொண்டுள்ள விஷயங்கள் பற்றி விவாதிப்பதிலேயே முக்கிய கவனத்தைச் செலுத்தி வந்தது. வெகுஜன மக்களைப் பாதிக்கும் விஷயங்கள் மிகச் சிறிய அளவு கவனத்தை மட்டுமே பெற்றன. சமூக நிலை பற்றிய விஷயங்கள்  முற்றிலுமாக அதன் செயல்திட்டத்தில் இருக்கவே இல்லை என்றும் கூறலாம். எவ்வாறா யினும், இந்தியா சுதந்திர நாடாக ஆகும்போது, பொது மக்கள், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள், கல்வியறிவும் விழிப்புணர்வும் பெற்ற, முன்னேற்ற மடைந்த மற்ற சமூக மக்களுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்லப் படவேண்டும். இந்த மாபெரும் சமூக அரசியல் பிரச்சினை பற்றி காங்கிரஸ் கட்சி இதுகாறும் மிகக் குறைந்த அளவு கவனத்தையே செலுத்தி வந்துள்ளது.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...