Friday, September 16, 2011

சர்க்கார் (அரசு) விடுமுறை நாள்கள்

சர்க்கார் (அரசு) விடுமுறை நாள்கள் 

 


இரு நூறு ஆண்டுகளாக நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். நம்முடைய அடிமைத்தளையை எந்த மதமும் அறுக்க வில்லை. பார்த்துக் கொண்டுதான் இருந்தன, எப்படி? உன்னுடைய தலை விதி, நீ அடிமையாக இருக்கும்படி நேரிட்டது என்று கூறுவதுபோல் இருந்தது. மதம் ஏற்படுத்திய அந்தத் தலை விதியை, நாட்டின் நலிவை தலைவர்கள், தங்கள் உழைப்பால் மண்டையில் அடித்து நொறுக் கினார்கள். தலை நொறுங்கவே - தளை அறு பட்டது. அடிமைநிலை மாறிற்று.

சுதந்திரம் கிடைத்தது. ஆனால், ஓயா, உழைப்பின் பயனாகவும், பல உத்தமர்களின் தியாகத்தினாலும் பெற்ற சுதந்திரத்தை ஏற்று நடத்திய மறக்க முடியாத ஒரு சரித்திர நிகழ்ச்சியை, மதக் கோட்பாட்டின்படி நாள் கோள் பார்த்தே நடத்தினர் என்றால் - அதிலும் ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டின்படி நல்ல நாள் பார்த்து சுதந்திர அரசாங்கத்தைத் தொடங்கினர் என்றால், மதக் கலப்பற்ற அரசியலையே இவர்கள் நடத்துகிறார்கள் என்று எப்படிக் கூற முடியும்? மதமா நமக்குச் சுதந்திரத்தை வாங்கித் தந்தது? மக்களின் உழைப்பன்றோ இன்று நாம் சுதந்திரமாக வாழ் வதற்கு அடிகோலித் தந்தது.

இதனை மறந்து மதங்களின் பெயரால் ஏற்படுத் தப்பட்ட ஆவணி அவிட்டத்தையும், கிருஷ்ண ஜெயந்தி யையும், விநாயக சதுர்த் தியையும், மஹாய அமா வாசையையும், ஆயுத பூசை யையும், பக்ரீத்தையும், மொகரத்தையும், தீபாவளியையும், வைகுந்த ஏகாதேசியையும், சிவராத்திரியையும் அரசின் விடு முறை நாள்களாகக் கொண்டாடலாமா?

மத சம்பந்தமான நாள்களை அரசு விடுமுறை நாள்களாக்கிக் கொண்டாடுவது, இருநூறு ஆண்டுகளாக நாங்கள் அடிமைப்பகுதியில் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த மதமே! எமது அரசியல் விடுதலைக்கு உதவி புரியாத மதமே! சமுதாய ஒற்றுமையைக் குலைத்து எங்களுக் கிடையே ஒட்ட முடியாத பிளவை உண்டாக்கிய மதமே இருக்கின்ற சிறி தளவு ஒற்றுமையையும், அரசியலில் நுழைந்து குலைத்து விடாதே!

அரசியலை விட்டுச் சற்று விலகியிருப்பதே நீ எங்களுக்குச் செய்யும் பேருதவியாகும் என்று கூறி அதனை அரசியலோடு பிணைக்காமலும் அரசி யலின் பெயரால் அதற்கு விடுமுறை நாள்களை ஏற்படுத்தி மீண்டும் அரசியல் நெருக்கடிகளை உண்டாக்கி, அரிதில் பெற்ற விடுதலையை இழக்காமல் இருப்பதையுமே மத அடிப் படையின்மீது எழுப்பப்படாத இன்றைய அரசாங்கம் தன்னுடைய கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றோம்.

அறிஞர் அண்ணா
திராவிட நாடு இதழ் -  (23.5.1948)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...