Thursday, September 15, 2011

அண்ணா பிறந்த நாளில் மறுபரிசீலனை தேவை!

அண்ணா பிறந்த நாளில் மறுபரிசீலனை தேவை!


நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் தலை மாணாக்கர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழா-

வெளிச்சம் போட்டு விழாக் கொண்டாடுவதால் மட்டும் பயனில்லை. அண்ணா வாழுகிறார், மறையவில்லை என்பது அவரது படங்களிலோ, பதாகைகளிலோ அல்ல.

மாறாக, அவரது கொள்கைள், லட்சியங்கள் மூலம்தான் நிரந்தரப்படுத்த முடியும்.

அண்ணா சுட்டிக் காட்டிய ஆரிய மாயை உள்ளிட்ட கொள்கை லட்சியங்களை கிரகணமாகப் பற்றிக் கொள்ளச் செய்தால், அதை விடக் கொடுமை அண்ணாவுக்கு வேறில்லை.

1967இல் அண்ணாவின் ஆட்சியில் சுயமரியாதைத் திருமணச் சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம், இந்திக்கு இடமில்லாத இருமொழிக் கொள்கை - இவற்றின் அடிப்படைத்  தத்துவம் என்ன?

ஒரு பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழர்களை - திராவிடர்களை - அடிமைப்படுத்தப்பட்ட மக்களை மீட்டெடுப்பது என்பதுதானே!

தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., பேராசிரியர் கா.சு. பிள்ளை, நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் முதல் புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன்,டாக்டர் மு.வ. என்றழைக்கப்பட்ட மு. வரதராசனார் வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் இங்கு பச்சையப்பன் கல்லூரியில் கூடி மட்டுமல்ல;

அதற்குப் பிறகு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும்கூடி,  தமிழ்ப் புத்தாண்டு என்பது தை முதல் நாள் முதலே என்று அறிவித்ததை ஏற்று,  திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம் போலவே சட்டத்தின் மூலம் தமிழ்ப் புத்தாண்டு தை முதல்  நாள் என முதல் சட்டம் 2008இல் கொணர்ந்து தி.மு.க. ஆட்சியில் அதன் முதல்வர் கலைஞர் சட்டம் இயற்றினார். அண்ணா பெயரில் கட்சி வைத்து, அண்ணாவை வழி காட்டியாக்கிய எம்.ஜி.ஆர். அரசு என்று கூறும் இன்றைய அரசு அதை ரத்து செய்தது ஒரு பச்சை பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு மட்டுமல்ல; பகுத்தறிவுக்கு ஒவ்வாததும் ஆகும். அண்ணா படம் அல்ல; பாடமாக வேண்டும்!

60 ஆண்டுகளில் ஒரு ஆண்டுகூட தமிழ்ப் பெயர் இல்லை. 60 ஆண்டு பிறந்த கதையோ ஆபாசம்! அருவருப்பு!!

எனவே அண்ணா பிறந்த நாளில் தமிழ்நாடு முதல்வருக்கு நமது வேண்டுகோள் - அருள்கூர்ந்து இதை மறுபரிசீலனை செய்து தமிழ்ப்புத்தாண்டு சட்டத்தை மீண்டும் உயிரூட்டுவதுதான் அண்ணாவுக்குச் செய்யும் உண்மை மரியாதையாகும். வாழ்க அண்ணா!

 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...