Saturday, September 3, 2011

தமிழ்ப் புத்தாண்டு


கவிஞர் மனோ.இளங்கோ
காரைக்குடி
புதுவெள்ளம், புதுநெல்லு, புதுப்பானை, புத்தாடை, புதுப்பொண்ணு, புதுமாப் பிள்ளை, புதுக்கவிதை என புதுப்புது நிகழ்வுகள் பொருள்களுக்கு மதிப்பு அதிகம். மேற்கூறியவைகளில் ஐயம் கொள்ள வழியில்லை. புதிதுதான் புதுமைதான் என களிப்படைகிறோம். புத்தாண்டை ஏற்றுக்கொள்வதில் தயக் கமோ மயக்கமோ தேவையில்லை என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
திருவள்ளுவராண்டு தைத்திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாகத் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதிவினைக் கருவாய்க் கொண்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பூமி சுயமாய்ச் சுழல்வதுடன் சூரிய னையும் சுற்றுவதால் ஏற்படக்கூடிய விளை வுகளைத் தமிழர்கள் வானவியல் அறி வோடு பொழுதுகளை இனம்பிரித்தனர். பெரும்பொழுது, சிறுபொழுது என பிரிக்கப்பட்டு, பெரும்பொழுது வகையில் இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், கார்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக்காலம் என்பனவாகும். சிறுபொழுது வகையில் காலைப்பொழுது, நண்பகற்பொழுது, எற்படுபொழுது, மாலைப் பொழுது, யாமப் பொழுது, வைகறைப்பொழுது என்பனவாகவும் பகுக்கப்பட்டன.
பெரும்பொழுது வகையில் முதல் பருவம் இளவேனிற்காலம், சிறுபொழுது வகையில் முதல் பொழுது காலைப் பொழுது ஆகிய இரு நிலைகளுமே வாழ்வியல் தத்துவத்தில் மனித இனம் மற்றும் பிற உயிரினங்களின் புத்துணர்ச் சிக்குச் சாட்சிகளாகும்.
பூமி சுழல்வதுடன் சூரியனை சுற்றுகிற இயற்கை பாங்கில் தென்திசையிலிருந்து வடதிசையை நோக்கி மெல்ல நகரத் தொடங்குகிற நாள் நமது தமிழகத்திற்கு எதுவென ஆராய்வோமானால் பின்வரும் வானியல் உண்மைகள் தீர்வு வரும். பூமி நிலநடுக்கோடு, வடகோடு, தென்கோடு ஆகியவைகளால் பிரிக்கப் பட்டுள்ளது அதில் நமது தமிழகம் சரியாக நிலநடுக்கோட்டின் வடக்கேயும், தெற் கேயும் உள்ள இடைவெளியில் நிலநடுக் கோட்டை உள்ளடக்கிய பகுதியில்; உள்ளது. குளிர்காலத்தின் விளிம்பு மார்கழி 30. இளவேனிற் காலத்தின் துவக்கம் தை முதல் நாள். விஞ்ஞானக் கூற்றுப்படி சூரியன் நிலத்தின் தென் கோடு போய்ச் சேர்ந்து நின்று வடகோடு நோக்கிப் புறப்படும் பெயர்ச்சியில் இது நாள் வரை சூரியனின் கதிர்வீச்சு ஆங்கில மாதக் கணக்கின்படி ஜனவரி 14ஆம் நாளிலி ருந்து குறைவான கால அளவிலிருந்து மாறி, அதிக கால அளவு எடுத்துக் கொண்டு நகர்கிறது. அந்த நாள் நம் தமிழ்த்திங்கள் கணக் கீட்டின்படி தை மாதம் முதல் நாளாகும்.
அறுவடை முடிந்து விளை பொருட்கள் வீடு வந்து சேர்ந்தன. இயல், இசை, நாடகம் அரங்கேற இளவேனிற்காலம் துவங்கியது. குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம் ஆகிய ஏழ்வகை இசைகளும் சூரியன், சந்திரன், அறிவன், காரி, வெள்ளி, செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களோடு தொடர்பாகவே பண்களாக பிரிக்கப்பட்டன.
காவல் காத்தல், சுண்ணம் இடித்தல், நாற்று நடுதல், அறுவடை செய்தல் ஆகிய காலங்களில் இசைபட வாழ்ந்த தமிழர்கள் அகம், புறம் என்னும் இரு வாழ்வியலிலும் புதுணர்ச்சிமிக்கவர் களாக மாறத் தொடங்கி தைத்திருநாளை சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக மிகச்சிறப்பாகக் கொண்டாடினர்.
ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி ஆகிய கிழமைகளும் ஒன்பது  கோள்கள் இரண்டு நிழல் கோள்களைத் தவிர ஏனைய ஏழுவகைக் கோள்களை மையமாக வைத்து தமிழர்களால் நொடி, பொழுது, கிழமைகள் வகுக்கப்பட்டன. இதில் முதல் கோளான சூரியன் தமிழரது வாழ்வியலில் பெற்ற இன்பத்திற்கு ஈடாக அனைத்தையும் படையலாக்கி தை முதல் நாளை கொண் டாடினர் என்பதும், அத்தகைய ஒரு நாள் கதிரவன் தெற்குத் திசையில் சாய்ந்து வடதிசை நோக்கி நகரும் இளவேனிற் பருவத்தின் முதல் நாளாகும். அதுவே தைத்திங்கள் முதல் நாள்.
வாழ்வியலின் அடிப்படையில் சித்திரை, வைகாசி மாதங்கள் ஓய்வுக்குரிய மாதங் களாகவே கருதப்படுகின்றன. பள்ளிக் குழந்தைகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் விடுமுறைப்பருவம் வழக்கத்திலிருப்பதைக் காணும் பொழுது இயல்முறையில் அப்பருவம் சற்று இளைப்பாறுவதற்கான காலமாக உள்ளது.
தைத்திங்கள் விழா என்பது மதச்சார் பற்ற இன பேதமற்ற, சாதி வேறுபாடற்ற பொதுவான இயற்கை முதல்வனுக்குச் செடி கொடிகள், உயிரினங்கள் சார்பாக வும், தமக்காவும் தமிழ் இனம் எடுக்கும் விழாவாகக் கருதப்படுவதால் இங்கு நாம் பிறமொழியாளர்களின் அடிப்படையிலோ, மதஅடிப்படையிலோ, அன்னிய நாடுகளின் ஆண்டு தொடக்க நாள் அடிப்படையிலோ சிந்திக்காமல் யாவரும் கொண்டாடும் பொதுவிழாவாகவும் அதே நேரம் தமிழ ருக்குரிய புத்தாண்டாகவும் வேண்டு மென்று உலகப் பொதுமறை தந்த திரு வள்ளுவராண்டை மையமாக வைத்து 1921 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பச்சை யப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறை மலை அடிகள் தலைமையில் திரு.வி.க.கா. சுப்பிரமணியன், சச்சினாந்தம், ந.மு.வேங் கடசாமி,சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்களால் தமிழருக்கான ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
தமிழருக்கான பன்னிரு மாதங்கள் சுறவம், கும்பம், மீனம், மேசம், விடை, கடகம், மடங்கல், கன்னி, துலாம், நளி, சிலை ஆகியவை பன்னிரு ஓரைகளான சுறா, மீன், ஆடு, காளை, இருவர், நண்டு, அரிமா, கன்னி, நிறைகோல், தேள், வில் ஆகிய குணாதிசய அடிப்படையிலேயே ஏற்றுக்கொண்டு வடமொழிச் சொற்களை மட்டுமே தமிழ்ப்படுத்தியது. 27க்கான குணங்களும், 9 கோள்களுக்கான அறிவியல் கணக்கீடும் தமிழன் வகுத்தது என்பதும், மறுக்க முடியாத உண்மை யாகும்.
இக்கட்டுரைக்கு அதன் பிரிவு தேவையற்றவையாகக் கருத்தில் கொண்டு சுறவம், கும்பம், மீனம் ஆகிய ஓரை களுக்கான மாதங்கள்  இளவேனிற்காலத் திற்குரியன. சுறவம், கும்பம், மீனம் ஆகியவை நீரையும் நீர் சார்ந்தவையும் குறிப்பிடுவன. நதிக்கரை நாகரிகம் என வரலாறு தமிழர்களின் வாழ்க்கையை பதிவு செய்கிறது. அதை ஐவகை நிலங்களும் ஏற்றுக்கொண்டன.
பொருளாதார ரீதியாக விளை பொருட்களை வீடு கொண்டு வந்து சேர்ப்பதும், வணிகம் செய்து வாங்குவதும், ஏனைய தொழில்கள் வளர ஏதுவான காலமாக இருப்பதும் வாழ்வியல் இயல் பிலும் விஞ்ஞானப் பூர்வச்சான்றிலும் தை மாதம் முதல் நாளே என்று கருதி 1935 ஆம் ஆண்டு அகில இந்திய தமிழர் மாநாட்டில் சோமசுந்தர பாரதியார் தலைமையில் தந்தை பெரியார், உமாமகேசுவரனார், கா.சுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க மறைமலையடிகளார், ப.ராஜன், ஆற்காடு ராமசாமி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்பட பலர் கலந்துகொண்டு பழந்தமிழ்ப் பேராசிரியர் கா.நமச்சிவாயனார், கருத் திற்கிணங்க தமிழர் திருநாளாக தை முதல் நாளை பரிந்துரை செய்தனர். தீர்மானமும் இயற்றப்பட்டது.
18.11.1935 நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திற்கு முழு சட்ட அங்கீ காரமாக, தமிழை செம்மொழியாக்கி ஆட்சி  மொழியாக்கவும் பாடுபட்ட, பாடுபடுகிற தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஜனவரி திங்கள் 10 ஆம் நாள் சென்னை சங்கம் கலைத்திருவிழாவில் அறிவித்தார். நெஞ்சமெல்லாம் இனிக்குமந்த  செய்தியை தமிழக ஆளுநர் அவர்களால் அரசின் கொள்கை முடிவென அறிவிக்கச்செய்து 29.1.08 தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்து, அரசியல் மாற்று கருத்துக் கொண்ட தலைவர்களாலும் பாராட்டப் பட்டு, ஆன்மிகச் சிந்தனையில் வேறுபட்ட சிவசேனா போன்ற பல்வேறு அமைப்பு களின் பாராட்டைப் பெற்று, தமிழ்ப் புத் தாண்டு என தைத்திங்கள் முதல் நாளை நடைமுறைப்படுத்தினார்.
வரலாற்றில் இது பொன்னெழுத் துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று எனச் சொல்லி இக்கட்டுரையின் மூலமாக தமிழக முதல்வருக்கு தமிழினம் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளது. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக சிறப்புடனும் பெருமையுடனும் கொண்டாடுவோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...