Monday, September 19, 2011

காவல்-வளையத்தில்-காவிகள்

காவல்-வளையத்தில்-காவிகள்



இந்தியாவில் காவி நிறத்திற்கு ஒரு மரியாதையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதனால்தான் பிச்சை எடுப்பதில் காவி உடுத்திய பிச்சைக்காரர்களுக்குத் தவறாமல் தட்டில் காசு விழுகிறது. ஆயுளின் பெரும்பகுதியை ஒழுங்கற்ற வாழ்வு வாழ்ந்துவிட்டு, சத்தமில்லாமல் காவி உடுத்தி ஒரு கோவிலின் முன்பு அமர்ந்தால் எஞ்சிய காலத்தை இன்பமாய்க் களித்துவிடலாம். இந்த உண்மையை, சராசரி சம்சாரியே அறிந்து வைத்திருக்கும்போது, கொஞ்சம் சூழ்ச்சி மூளை கொண்ட சாமியார்கள் அறியாமல் இருப்பார்களா?

பாரம்பரியப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டுள்ள சாமியார்களானாலும், திடீர்ச் சாமியார்களானாலும், கார்ப்பொரேட் சாமியார்களானாலும் எல்லோருக்கும் காவி உடை தமது குற்றங்களை மறைத்துக்கொள்ளப் பயன்படுகிறது. ஆனால், இப்போதெல்லாம் அந்தக் காவிகளைக் களைந்து ஊடகங்கள் உண்மையை உலகுக்குச் சொல்லிவிடுகின்றன. தமது சுய விளம்பரப் புகழுக்கு எந்த ஊடகங்களை அவர்கள் நம்பினார்களோ, அதுவே அவர்களின் சுயரூபங்களையும் வெளி உலகிற்குக் கொண்டுவந்தும்விடுகின்றன.

தற்போது இந்திய அளவில் ஊடக வெளிச்சம் பெற்ற மூன்று சாமியார்கள் இப்படி மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாமவர் நம்ம காஞ்சிபுரத்து ஜெயேந்திரர். இவர் மீது நடைபெறும் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கு இப்போது புது உரு எடுத்திருக்கிறது. இந்தக் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கொஞ்சநாள் கம்பி எண்ணி, பின்னர் நீதிமன்றப் படிகளை எண்ணி வருவது அவரது பக்த கோடிகள் உட்பட அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில் இந்த விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சுந்தர்ராஜன் என்பவர் அண்மையில் மனு தாக்கல் செய்தார். அதில், ஜெயந்திரர், அவரது பெண் உதவியாளர், 2 இடைத் தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசிக் கொள்ளும் உரையாடல் அடங்கிய சி.டி. வெளியாகி உள்ளது. இதை ஒரு தமிழ்த் தொலைக்காட்சியும் ஒளிபரப்பிவிட்டது. அந்த சி.டி.யில் சங்கரராமன் கொலை மற்றும் பணம் பட்டுவாடா குறித்தும் பேசுவதாகவும், இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுதலையாக ஏதோ பேரம் நடந்துள்ளதாகவும் தெரிகிறதாம்.
அதில் பேசும் பெண் குரலுக்குச் சொந்தக்காரர் கௌரி என்ற  ஜெயேந்திரரின் உதவியாளர் என்று அந்தத் தொலைக்காட்சி கூறியது. இந்த சி.டி. உண்மையானதா, உண்மை என்றால் பேசியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதுவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்க புதுச்சேரி தலைமை நீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இது தொடர்பாக ஊழல் கண்காணிப்புப் பதிவாளர் 8 வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட் டுள்ளது. தனக்குக் கிடைத்த இந்த ஆடியோவில் நீதித் துறை தொடர்பானவர்களின் பெயரும் இருந்தது, அது உண்மையானால் நீதித்துறைக்குப் பெரும் களங்கம் ஏற்படும். மாறாக, இந்த ஆடியோ பொய்யாகத் தயாரிக்கப்பட்டு இருந்தால் அதுவும் நீதித் துறையின் பெயரைக் கெடுக்கும். எனவே, இது குறித்து தொலைபேசித் துறையையும் தொடர்ச்சியாக நீதிமன்றத்தையும் நாடியதாக வழக்குத் தொடர்ந்த சுந்தர்ராஜன் (ஜூனியர் விகடன் 31.8.2011) கூறுகிறார். இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயேந்திரர் இந்தப் புகாரினை மறுத்துள்ள நிலையில் சங்கரராமன் கொலையில் உள்ள மர்மங்களை வெளி உலகிற்குக் கொண்டு வந்த நக்கீரன்(ஆக 27-_30) விசாரணையில் மேலும் சில அதிர்ச்சிகள் வெளிவந்துள்ளன:-

சங்கர மடத் தரப்பு நீதியை விலை கொடுத்து வாங்க முயல்வது உண்மைதானா? என நாம் முயன்றபோது, பல அதிர்ச்சி அனுபவங்களைச் சந்திக்க நேர்ந்தது.

புதுவை கோர்ட்டிற்கு ஜெயேந்திரர் தரப்பில் வந்த கௌரி காமாட்சி என்பவர், நம்மைத் தேடி வந்து சந்தித்து என்னை ஜெயேந்திரருக்கு நெருக்கமான பெண் என்று இனி எழுதாதிங்க. சங்கடமா இருக்கு. நான் திருப்பூரில் இருக்கும் சங்கரமட கல்வி நிலையத்தை நிருவாகம் பண்றேன் என்பதோடு, நமது செல்போன் எண்ணையும் வாங்கி அடிக்கடி வழக்கின் போக்கு எப்படி என விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில் உங்கள் ரோல் என்ன என கேட்ட நம்மிடம் யாரிடமும் சொல்லாதீங்க. வழக்கைப் பெரியவருக்குச் சாதகமா முடிக்கத்தான் நான் பாடுபடுறேன். பாம்பே புரோக்கர் மூலம் ஜட்ஜின் வீட்டில் உள்ளவர்களை அணுகினேன். ஏகப்பட்ட கோடிகளைக் கேட்கறா. குறைச்சுக்கோங்கன்னு கேட்டும் அவா இறங்கி வராம பிடிவாதம் பிடிக்கிறா. பேசாம ஜட்ஜை விஜிலென்ஸில் பிடிச்சிக் கொடுத்திடலாமான்னு இருக்கு. அதுபத்திதான் யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன் என்றார் பட்டவர்த்தனமாய்.

அடுத்து புதுவைக்கு நேராக வந்தவர் சங்கரராமன் வழக்கின் அரசு சிறப்பு வக்கீலான தேவதாஸைச் சந்திக்க உதவுவீங்களா? என்றார் நம்மிடம். முயற்சி செய்வதாகச் சொன்ன நாம் அரசு வழக்குரைஞர் தேவதாஸிடம் இதுகுறித்துச் சொல்ல, கௌரியின் திட்டத்தை அறிவதற்காக அவரும் சம்மதித்தார். கௌரி காமாட்சியின் காரில் ஏறி, புதுவை கடற்கரையோர ரெசார்ட் ஒன்றிற்குப் போக அங்கு அரசு வழக்குரைஞர் தேவதாஸும் வந்தார்.

அவரிடம் கௌரி என்ன சார், உங்களுக்கு எங்க மடத்திலிருந்து கொடுத்தனுப்பும் பணமெல்லாம் வந்துக்கிட்டு இருக்கில்ல என்று கேட்க...
இதைக்கேட்டு டென்ஷனான அரசு வழக்குரைஞர் யார்ட்ட இப்படியெல்லாம் பேசறீங்க? முதல்ல இங்க இருந்து கிளம்புங்க என கோபப்பட்டார். பின்னர் கொஞ்சம் ஒதுங்கிப்போய், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவரை அவர் தொடர்பு கொண்டு யார் அந்தப் பொம்பளை? இப்படி பணம் கிடைச்சிதான்னு கேட்குது? என ஏகத்துக்கும் எகிறினார். அடுத்த பத்து நிமிடத்தில் கௌரியின் செல்போனுக்கு வந்த ஜெயேந்திரர், கௌரியைக் கண்டமேனிக்குத் திட்டித் தீர்த்தார்.
 
இதன்பின் கௌரி இந்த அரசு வக்கீல் கோபப்பட்டதால், உன்னால் கேஸ் தோக்கத்தான் போகுதுன்னு கெட்ட கெட்ட வார்த்தையால் பெரியவா திட்டித்தீர்த்துட்டார். அவர் திட்டியதில் எனக்குப் பீரியடே வந்துடுச்சி என நம்மிடம் அழுதுவிட்டுக் கிளம்பிவிட்டார். அடுத்து என்ன நடக்கிறது என நாம் தொடர் விசாரணையில் இருந்தபோதுதான் ஜெயேந்திரரே பேசிய சி.டி. வெளியாகி வழக்கு விசாரணைக்குத் தடை விழுந்திருக்கிறது. சகலத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஜெயேந்திரரின் சங்கரமடப் பணம் ஏகத்துக்கும் சங்கரராமன் கொலைவழக்கில் புகுந்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 6 அன்று இந்த ஆடியோ குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்திருக்கிறது. அவர் தனது விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்.
***


அடுத்தவர் உண்ணாவிரதம் இருந்து பெண் உடை அணிந்து தப்பியோடிப் புகழ் பெற்ற யோகா சாமியார் ராம்தேவ். வெறும் சைக்கிளில் சாமியார் தொழிலை ஆரம்பித்து இன்று உள்நாட்டுச் செலாவணியில் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துச் சேர்த்துவிட்ட இந்தக் காவி ஆடைக்காரர் மீது அன்னியச் செலாவணி மோசடிப் புகார் வந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி யோக பீட அறக்கட்டளை, திவ்ய யோகா மந்திர் அறக்கட்டளை, பாரத் ஸ்வபிமான் அறக்கட்டளை போன்றவைக்கு வெளிநாடு களில் இருந்து ஏராளமான பணம் முறைகேடாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை யின் இறுதியில், அன்னியச் செலாவணி மோசடி மற்றும் சந்தேகத்துக்கு இடமான வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது தெரியவந்தது.
எனவே, ராம்தேவ் மற்றும் அவரது அறக்கட்டளைகள் மீது அன்னியச் செலாவணி மோசடிச் சட்டத்தின் (பெமா) கீழ், அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கிடையே ராம்தேவின் தீவிர ஆதரவாளராக வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் இருந்து வருகின்றனர். எனவே, ஸ்காட்லாந்து அருகே ஒரு குட்டித் தீவையே ராம்தேவுக்குப் பரிசாக அளித்து அவர் பெயரி லேயே அந்தத் தீவை எழுதி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள மீன்பிடி நகரான லார்க்ஸ் அருகே உள்ள அந்தத் தீவின் பெயர், லிட்டில் கும்பிரே தீவு ஆகும். ராம்தேவின் வெளிநாட்டுத் தலைமை அலுவலகமாக அந்தத் தீவு செயல்படுகிறது.
எனவே, இது தொடர்பான முழு விவரங்கள் மற்றும் அந்தத் தீவு மூலமாக நடைபெறும் பணப் பரிமாற்றத் தகவல்கள் போன்றவற்றை அளிக்குமாறு இங்கிலாந்து நிதித்துறை அதிகாரிகளிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குட்டித்தீவு குறித்து விசாரிக்க உதவுமாறும் கேட்டுள்ளனர். இது தவிர, மடகாஸ்கர் தீவிலும் முறைகேடான பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளதால் அந்தத் தீவின் அதிகாரிகள் உதவியையும் அமலாக்கப் பிரிவு கோரியுள்ளது. இந்த மோசடிகளை யெல்லாம் மறைப்பதற்காகத்தான் ராம்தேவ் ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருவதாக ஊடகத்தினர் கூறுகின்றனர்.
***

மூன்றாமவர் லீலாவினோதங்களில் திளைத்து கார்ப்பொரேட் நிறுவனமாக தனது சாமியார்த் தொழிலை வளர்த்து வரும் ரஞ்சிதா புகழ் நித்யானந்தா. பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி கம்பி எண்ணிவிட்டு தற்போது ஜாமீனில் உள்ள இவர் மீது கிளம்பியிருக்கும் அடுத்த புகார் நிதி மோசடி.

தனக்குப் பக்தர்கள் தரும் பணத்தை யெல்லாம் ஆசிரமக் கணக்கில் மட்டுமே சேர்த்துவருவதாக நித்யானந்தா கூறுவது அப்பட்டமான பொய் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதி அய்.சி.அய்.சி.அய். வங்கிக் கிளையில் சிறீ பரமஹம்ச நித்யானந்தா என்ற பெயரில் கணக்கு உள்ளது. இதில் 2006 ஏப்ரல் 20 முதல் 2010 ஏப்ரல் 5 வரை 32 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. முற்றும் துறந்தவரின் சொந்தக் கணக்கில் இவ்வளவு பணம். இந்தப் பணம் அமெரிக்காவில் உள்ள தனது ஆசிரமக் கணக்கில் இருந்து இங்கு மாற்றப்பட்டுள்ளதாம். இதுபோக ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் மூலமும் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாம். அந்த நிறுவனத்தை நித்யானந்தாவின் சகோதரர்தான் நிருவகித்து வருகிறாராம். ஆன்மீகத்தின் பெயரால் ஆசிரமம் நடத்திக் கொண்டு அதற்கு வரிவிலக்குப் பெற்றுவரும் இது மாதிரியான சாமியார்கள், அரசை ஏமாற்றித் தொழில் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் பலமாக எழுந்துள்ளன.
அரசை நிருவகிப்பவர்கள் ஊழல் செய்கிறார்கள் அதற்கு வலுவான சட்டம் வேண்டும் என்று கோரிவரும் நவீன நியாயவான்கள்(?) இந்தச் சாமியார்களின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்புவதில்லை. காவி அணிந்து காலித்தனம் செய்தாலும் அதனைக் கண்டுகொள்ளாத போக்கே இந்தியாவின் பெரிய அரசியல் கட்சிகளிடம் காணப்படுகின்றது. இந்து மதம் என்ற பெயரில் மடம் அமைத்துக் கொண்டால் அவர்கள் என்ன வேண்டுமா னாலும் செய்யலாம் என்ற நிலையே இங்கு நீடித்து வருகிறது. இதன் மத்தியில் இந்த மூவர் மட்டுமே தற்போது காவல்துறையின் பிடியில் சிக்கி நீதியின் முன்னே நிற்கிறார்கள். இயலாதவர்களையே நீதி தண்டிக்கும்; இருப்பவர்களை அது கண்டு கொள்ளாது என்ற நிலை இனியும் இந்தியாவில் நீடித்தால் சாமானியர்களின் கோபம் எரிமலையாக வெடிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். சட்டம் என்பது சாமானியர்க்கும் சாமியார்களுக்கும் ஒன்றுதான் என்ற உண்மை நிலைநாட்டப்பட வேண்டும். அதுவே இந்திய ஜனநாயகத்திற்கு நல்லது.
- மணிமகன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...