Thursday, August 25, 2011

கல்விக்கே முன்னுரிமை!


பள்ளிக் கல்வித் துறை செயல்முறைத் திட்டம் மற்றும் புள்ளிவிவரக் கையேடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது. அதில் திடுக்கிட வைக்கும் புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
31 ஆயிரத்து 816 அரசுப் பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் உள்ளன என்றாலும், 3979 பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. 6943 பள்ளிகளில் தளவாட சாமான்களே இல்லை; 2248 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் கிடையாது. 1510 பள்ளிகளில் குடிநீர் வசதி பயன்பாட்டில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டு 64 ஆண்டுகள் பறந்து ஓடிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்திலும், குடியரசு நாளிலும் பள்ளிப் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுக்கின்றனர்; அவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் அரங்கேறுகின்றன - என்றாலும், இவ்வளவுக் குறைபாடுகளுடன் பள்ளிகள் ஏதோ இயங்குகின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டம் 45 ஆவது பிரிவின்படி இந்திய அரசமைப்புச் சட்டம் துவக்கப்பட்டு பத்தாண்டு களுக்குள் 14 வயது முடியும் வரையில் இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எத்தனையோ பத்தாண்டுகள் பறந்தோடிய பின்பும் அந்த எல்லையைத் தொட முடியாத நிலை!
52 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் ஒருமுறை 86 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, சாசனத்தின் 21-அ பிரிவின்கீழ் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் கல்வி உரிமை அடிப் படையாக்கப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டது (13.12.2002).
வறுமை ஒரு பக்கம், கல்லாமை மறுபக்கம் என்கிற இரட்டைத் தாக்குதல்கள் பெரும்பாலும் இந்த நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள்மீதே நிகழ்ந்திருக்கின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சம் என்ற அடிப்படையில் எழுத்தறிவு என்பது 80.33 விழுக்காடாகும். (ஆண்கள் 86.81 சதவிகிதம்; பெண்கள் 76.86 சதவிகிதம்).
எழுத்தறிவு என்றால் கையொப்பம் போடத் தெரியும் என்கிற அடிப்படையில்தான்; பட்டதாரிகள் என்று பொருள் அல்ல. இதிலும் ஆண்களின் எழுத்தறிவு பெண்களின் எழுத்தறிவை விஞ்சி நிற்கிறது.
இந்து சமூக அமைப்பில் இது ஒன்றும் ஆச்சரிய மானதல்ல. ஆண்களே (சூத்திரர்களே) படிக்கக் கூடாது என்று மனு சட்டம் செய்த பிறகு, பெண்களை ஒரு ஜடமாக நினைக்கும் மனு அவர்களுக்குக் கல்வியை அனுமதித்து இருப்பானா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் எழுத்தறிவுள்ளவர்களின் எண் ணிக்கை உச்சத்தில் உள்ளது
(92.14 சதவிகிதம்). இரண்டாம் இடம் சென்னைக்கு (90.33 சதவிகிதம்).
தருமபுரி மாவட்டம் கடைசி இடத்தில் இருக்கிறது (64.71 சதவிகிதம்).
நூற்றுக்கு நூறு எட்டாதவரையில், இது ஓர் ஆரோக்கியமான நிலையாகக் கருதப்பட முடியாது.
ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் கல்வியின் நிலை எந்தத் தடத்தில் இருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டாம்.
கல்வி என்பது அறியாமையை மட்டுமல்ல, வறுமையையும் விரட்டியடிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
இந்த நிலையில், மாநில அரசின் நிதிநிலை அறிக்கை என்றாலும் சரி, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையாக இருந்தாலும் சரி, அவற்றில் கல்விக்குக் கணிசமான நிதி ஒதுக்கப்படவேண்டும்.
இரயில்வே பட்ஜெட் தனியாக இருப்பதுபோல, கல்விக்கும் தனியாக இருந்தால், அதன்மீதான அக்கறையும், செயல்பாடும் பெருமிதமாக இருக்கக்கூடும்.
தொடக்கப் பள்ளிக்குள் இடை நிற்றல், உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்குள் இடைநிற்றல், மேனிலைப்பள்ளி அளவில் இடைநிற்றல் (Drop Outs) எனும் நிலை இருக்கிறது. தமிழ்நாடு அரசு இந்த நிலையை மாற்றிட ஒவ்வொரு மாணவனுக்கும் உதவித் தொகை அளிப்பது வரவேற்கத்தக்கதே!
சமச்சீர் கல்வி என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் கல்வி கற்க வசதி செய்து கொடுப்பதாகும். சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் மேல்மட்டக் கல்வி, பெரும்பாலான மக்களுக்குக் கடைப்பட்ட கல்வி என்பது - இன்னும் மனுதர்மம் வேறு வடிவத்தில் கத்தித் தீட்டிக் கொண்டு அலைகிறது என்றுதானே பொருள்?
தமிழ்நாடு அரசு அந்த மனப்பான்மையிலிருந்து விடுபட்டு பெரும்பான்மை மக்களின் திசையில் சிந் தனையைத் திருப்பட்டும் என்பதே நமது வேண்டுகோள்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...