Sunday, August 21, 2011

எதிர்ப்புக் குரல் கொடுக்கும் பா.ஜ.க.வை சந்திக்கத் தயார்!

நாகை மாநாடு - வெற்றிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள்
எதிர்ப்புக் குரல் கொடுக்கும் பா.ஜ.க.வை சந்திக்கத் தயார்!
கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை



 
நாகப்பட்டினத்தில் 13ஆம் தேதி நடைபெற்ற கழக மாணவரணி மாநாட்டின் வெற்றிக்குப் பாடுபட்ட கழகத் தோழர் களைப் பாராட்டி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 13-8-2011 ஞாயிறு அன்று நாகையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழகம் நடத்திய இன எழுச்சி மாநாடு மிகப் பெரிய வெற்றியாக அமைந்ததோடு, அப்பகுதியை மட்டுமல்லாமல் மற்ற பகுதி மக்களையும் நம் லட்சிய எதிரிகளான இன எதிரிகளையும் மிகவும் உலுக்கி, அதிரச் செய்தது என்று தெரிகிறது!

ஏதோ, எதிர்ப்பாம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிணைக் கைதியாகியுள்ள அரசியல் கட்சியாம் பா.ஜ.க.வினர் ஏதோ எதிர்ப்பு சுவரொட்டிகளை அடித்து (நமக்கு எதிராக) நகரில் ஒட்டி, மாநாடு நடத்திய நம் தோழர்களை, நம் இயக்கத்தவர்களைக் கைது செய்யச் சொல்லி எழுதியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இதில் நமது வருத்தமெல்லாம், மாநாட்டிற்கு முன்பே அவர்கள் (அதாவது ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு முன்பே) இதைச் செய்திருக்கக்கூடாதா? நமது விளம்பரச் செலவாவது கொஞ்சம் மிச்சமாகியிருக்கும்! அதோடு கூட, எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தால் இது போல இன்னும் பல பத்தாயிரக்கணக்கான இளைஞர்கள், தோழர்கள், தாய்மார்கள், விவசாயிகள் வந்து கூடி, நாகையைத் திணற அடித்திருப்பார்களே!

பா.ஜ.க. நண்பர்களே நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்; அரசாங்கத்திடம் ஏன் கஜேந்திர மோட்சம் கோரி அபயக் குரல் எழுப்புகிறீர்கள்? நீங்களும் அதே போல் ஒரு மாநாடு, கூட்டம் கூட்டி எங்களது கருத்துகளை, பிரச்சாரத்தை எதிர்த்துப் பேச முயற்சிக்கலாமே!

அடுத்து நாங்களும் கருத்துரிமைப் போரில் ஈடுபட்டு கடமையாற்ற முன்வருவோமல்லவா? காவி நண்பர்களே! நீங்கள் தமிழ்நாட்டில் எங்காவது ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியிலாவது தனித்துப் போட்டியிட்டு, வெற்றி பெறுவீர்களா? (டெபாசிட் - பிணைத்தொகை - வாங்குவீர்களா என்பது கூட சந்தேகமே). இந்நிலையில் நீங்கள் எத்தனை அவதாரங்களுடன் அரிதாரம் பூசி வந்தாலும், (ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள், இந்து முன்னணி, (ஒன்று, இரண்டு, மூன்று) சிவசேனை என்ற எந்த அவதாரத்தில் வந்தாலும் இங்குள்ள திராவிட மக்கள் அறிவர். சரக்கு ஒன்றுதான்; லேபிள்தான் மாற்றம் என்பதை!) நாங்கள் கருத்து ரீதியாக, கொள்கை ரீதியாக, எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்!

நாகை இயக்கத்தின் பாசறைகளாகவே இருந்த இருக்கும் பகுதி - இப்போதும் கீழத் தஞ்சை என்ற நாகை, திருவாரூர், மயிலாடு துறை பகுதிகள் இயக்கத்தின் கொள்கைப் பாடி வீடுகள்தான். இதை ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று நாகையில கூடிய எழுச்சி மிக்க மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் நிரூபித்துக் காட்டினார்களே!

தோழர்களுக்குப் பாராட்டுகள்!

இவ்வளவு சிறப்பான மாநாட்டை நடத்திய நமது மாணவக் கண்மணி களுக்கு நமது நெஞ்சம் வழியும் பாராட்டுகள்! மாணவரணி செய லாளர் ரஞ்சித்குமார், இளைஞரணிச் செயலாளர் ஜெயகுமார், மாணவரணி துணைச் செயலாளர் சென்னியப்பன், மாவட்டத் தலைவர் அழகப்பனார், மாவட்டச் செயலாளர் செந்தில் குமார், நகரத் தலைவர் குஞ்சிபாபு, நாகை நகர செயலாளர் வீரமணி, திருமருகல் ஒன்றிய பகுதியில் சி.பி.கே. நாத்திகன், பூபேஷ்குப்தா முதலியோரும் எண்ணற்ற செயல் வீரர்களான பாசறையாளர்கள், பொறுப்பாளர்கள், கீவளூர் ஒன்றிய, பகுதி முத்துராஜா கமலம், வீ. புரட்சிமணி, நாகை ஒன்றியகீழையூர் ஒன்றிய பொறுப்பாளர்கள், இவர்களோடு இயக்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன், துரை. சந்திரசேகரன் ஆகியோரும், நாகை தி.மு.க.வின் முக்கிய தோழர்களான மு.க. ஜீவா, இளைஞர் அணி தோழர் இல. மேகநாதன் மற்றும் தி.மு.க. கழக உடன் பிறப்புக்கள் அனைவருக்கும் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், பலரும் நமது பாராட்டுதல்களுக்கு உரியவர்கள்.
அடுத்து திருத்தணி, நாகையை மிஞ்சுமா? பொறுத் திருந்து பார்ப்போம்!

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...