Wednesday, August 24, 2011

பகத்சிங்கின் வீரத்தைக் கண்டு வியந்து பாராட்டிய, காந்தியைக் குறை கூறிய தந்தை பெரியார்

பகத்சிங்கின் அரசியல் கண்ணோட்டத்தையும், கருத்துகளையும் கண்டு வியந்து பாராட்டிய திராவிடர் கழக தோற்றுநர் - தலைவர் தந்தை பெரியார் ராமசாமி அவர்கள், பகத் சிங் தனது செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்திய முறை தவறானது என்று, தான் கருதுவதாகக் கூறி, மகாத்மா காந்தியின் காந்தியத்தை எதிர்ப்பதற்கு பகத் சிங்கின் தியாகத்தைச் சுட்டிக் காட்டினார். இந்தியாவுக்கு, ஏன் உலகத்துக்கே, உண்மையான சமத்துவம் மற்றும் அமைதி என்றால் என்ன என்பதைக் காட்டும் ஒரு மாபெரும் நோக்கத்துக்காக தனது இன்னுயிரை ஈந்த பகத் சிங்கின் தியாகத்தைப் பாராட்டி, தனது குடிஅரசு இதழில் 1931 மார்ச் 29 பதிப்பில், தலையங்கம் ஒன்றை பெரியார் எழுதினார். பகத்சிங் பற்றிய அரிய ஆவணங்களைத் திரட்டி வரும் வரலாற்றாசிரியர் சமன்லால் பெரியார் அவர்களின் தலையங்கத்தைக் கண்டார். அவரது வேண்டுகோளின்படி, அது ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரேஷனலிஸ்டு ஏட்டில் வெளியிடப்பட்டது.

பெரியார் எழுதுகிறார்: இந்த உலக விவகாரங்களைக் கையாள வருணாசிரம தர்மமே மேலான நடைமுறை என்றும், உலகில் நடப்பவை அனைத்தும் கடவுளின் விருப்பத்தின்படியே நடைபெறுவதாகவும் கூறி, கடவுள் மட்டுமே தன்னை வழி நடத்துகிறார் என்று காந்தி என்று சொன்னாரோ, அன்றே, காந்தியத்துக்கும், பார்ப்பனீயத்துக்கும் எந்த வேறுபாடுமில்லை என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இது போன்ற ஒரு தத்துவத்திற்கும், கொள்கைக்கும் ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிக்கப்படவில்லையென்றால், நாட்டிற்கு நன்மை இல்லை என்ற முடிவுக்கும் நாங்கள் வந்தோம். இப்போது இந்த உண்மை ஒரு சில மக்களுக்கு மட்டுமாவது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் பேரறிவினையும், காந்தியக் கொள்கையை வீழ்த்துவதற்கான அழைப்பு விடுக்கும் துணிவையும் பெற்றனர். இது எங்களது நோக்கத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

பகத் சிங் உயிரிழக்காமல் இருந்திருந்தால், புகழ் பெற்ற இந்த வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். பகத் சிங் தூக்கிலிடப்படாமல் போயிருந்தால் காந்தியம் அதிக செல்வாக்கு பெற்றிருக்கும் என்று கூறவும் நான் துணிவேன். மக்களுக்கு சாதாரணமாக ஏற்படுவது போல, நோய்வாய்ப்பட்டு, துன்பப் பட்டு பகத்சிங் இறக்கவில்லை. இந்தியாவுக்கு, ஏன் உலகத்துக்கே, உண்மையான சமத்துவம் மற்றும் அமைதி என்றால் என்ன என்பதைக் காட்டும் ஒரு மாபெரும் நோக்கத்துக்காக தனது இன்னுயிரை ஈந்தவர் பகத் சிங். நமது நெஞ்சின் ஆழத்தில் இருந்து அவரது வீரத்தையும், தியாகத்தையும் பாராட்டிப் பாடுவோம். அதே நேரத்தில், ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும் பகத் சிங்கைப் போன்ற உண்மையான நான்கு பேரைக் கண்டுபிடித்துத் தூக்கிலிடவேண்டும் என்று நமது அரசை நாம் கேட்டுக் கொள்கிறோம்.

தனது கருத்துகளை ஒளிவு மறைவின்றி வெளிப் படுத்துவதில் புகழ் பெற்ற பெரியார், தங்களுக்கு மரியாதையும் கவுரவமும் தேடும் சுயநலம் படைத்த மடையர்கள், முட்டாள்களின் செயல்பாடுகளைக் காணும் பெருந்துன்பத்திலிருந்து பகத் சிங் விடுதலை பெற்றது போன்றதொரு வாய்ப்பு தனக்குக் கிடைக்காமல் போனதற்காக வருந்துவதாகக் கூறினார்.

பகத் சிங்கின் கருத்துகளை தான் முழுமையாக ஒப்புக் கொண்டாலும், தனது கொள்கையை நடைமுறைப் படுத்தும் வழிமுறையைத் தேர்ந்தெடுப்பதில் அவர் ஒரு சிறிய தவறு செய்துவிட்டார் என்று பெரியார் கூறினார்.

நம் முன் உள்ள பிரச்சினையே ஒரு மனிதன் தனது கடமையைச் செய்தானா இல்லையா என்பதே. அந்த செயலால் பலன் விளைந்ததா என்பதல்ல பிரச்சினை. என்றாலும், செயல்பாட்டுக்கான நேரம் மற்றும் இடத்தைக் கருத்தில் கொண்டு நமது கடமையை நாம் செய்யவேண்டும் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.

பகத்சிங்கினால் பின்பற்றப்பட்ட கொள்கைக்கு காலம், இடம், பொதுவான மக்களின் மனப்போக்கு ஆகியவை எதிராக இருக்கவில்லை என்பதை மட்டும் நாம் நிச்சயமாக அறிவோம். என்றாலும், தனது கொள்கையைச் செயல்படுத்தும் வழிமுறையைத் தேர்வு செய்வதில் அவர் தவறு செய்து விட்டார் என்று நமக்குத் தோன்றுகிறது. அவரது கொள்கை தவறான ஒன்று என்று மட்டும் கூற நாம் எப்போதும் துணியமாட்டோம். உண்மையில் அவர் எந்த வழியில் தான் காணப்பட வேண்டும் என்று கருதினாரோ அதே வழியில் அவர் நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால், அவரை நாம் ஒரு நேர்மையான மனிதர் என்று கூறியிருக்கமாட்டோம்.

சமதர்மம் மற்றும் நாத்திகம் பற்றிய கருத்துகளுக்கு தனது ஆதரவை வலியுறுத்தும் வகையில் பஞ்சாப் ஆளுநருக்கு பகத் சிங் எழுதிய கடிதத்தையும் பெரியார் நினைவு கூர்ந்தார்.

பி. ஜீவானந்தம் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு, பெரியாரால் அவரது குடிஅரசு ஏட்டில் வெளியிடப்பட்ட நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற பகத்சிங்கின் கட்டுரையை பேராசிரியர் லால் சேகரித்தார்.

நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு, ஒரு நேரத்தில் பகத் சிங் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி எங்குமே கிடைக்கவில்லை என்று கூறும் லால், தமிழிலிருந்து பின்னர் அது ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது என்று கூறினார். ஆங்கில மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்தக் கட்டுரை இன்றும் பல இணையதளங்களில் உள்ளன. புதுடில்லி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் இப்போது பகத்சிங்கின் கட்டுரை மைக்ரோ பிலிமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பின்னர் திராவிடர் கழகத் தலைவர் பெரியாருடன் அவரது சுயமரியாதை இயக்கத்தில் ஜீவானந்தம் பணியாற்றி வந்தார். ஜீவானந்தத்தையும், குடிஅரசு பதிப்பாளரும் பெரியாரின் சகோதரருமான ஈ.வெ.கிருஷ்ணசாமி ஆகிய இருவரையும் ஆங்கிலேய அரசு கைது செய்தது. பெரியார் கேட்டுக் கொண்டபடி இருவரும் மன்னிப்பு கோரி விடுதலை பெற்றனர்.

அவர்களை தான்தான் மன்னிப்பு கேட்கச் சொன்னதாகவும், அதற்காக அவர்களைக் குறை கூறக் கூடாது என்றும் பெரியார் பின்னர் எழுதிய தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி பெரியாருக்கும், ஜீவானந்தத்துக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியதால், சுயமரியாதை இயக்கத்தை விட்டு விலகிய ஜீவானந்தம் காங்கிரசில் சேர்ந்தார் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் கூறினார்.
(நன்றி: தி ஹிந்து, 22.8.2011 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...