Saturday, August 27, 2011

தை முதல் நாளைக் கொண்டாடுவோம் - புரோகிதர் கூட்டத்தை முறியடிப்போம்!

பெரியார் வழிவந்த நாம் பழைய பஞ்சாங்கத்தை ஏற்க முடியுமா? பூசுரர் கூட்டம், ஆரியர் கூட்டம் தமிழை அழிக்கத் துடிக்கிறது!

தை முதல் நாளைக் கொண்டாடுவோம் - புரோகிதர் கூட்டத்தை முறியடிப்போம்!

கலைஞரின் இனமான எழுச்சி முரசம்


சென்னை, ஆக. 27- தை முதல் நாள் தான் தமிழர் களின் புத்தாண்டு - அதனைச் சிறப்பாகக் கொண் டாடியே தீருவோம் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.

சென்னை தங்க காலையில் வியாழனன்று (25.8.2011) ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:

இன்றைக்குத் தமிழ் நாட்டிலே பொங்கல் நாள் - தமிழர் திருநாள் - தைத் திருநாள்தான்; புத்தாண்டு பிறக்கும் நாள் என்று உறுதிபடத் தெரிவித்து, அதைக் கொண்டாடி வருகின்றோம்.  கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகக் கொண்டாடி வருகின்றோம்.  அந்தக் குதூகலப் பொங்கலை குழந்தைகள், குமரிகள், கிழவிகள், கிழவர்கள், உழவர்கள், பாட்டாளிகள், தொழிலாளர்கள் அத்தனை பேரும் தமிழகத்திலே கொண்டாடுகின்ற நிலையை ஏற்படுத்தினோம்.  இப்போது  ஜெய லலிதா அம்மையார் அறிக்கை விட்டிருக்கிறார்.  அதை அவருக்கு யார் சொன்னார்களோ தெரியாது  அவரைச் சுற்றியிருப்பவர்கள் யார் என்று எனக்குத் தெரியும்.  (சிரிப்பு)  அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கு உள்ள கோபமெல்லாம், இந்தக் கருணாநிதியும் தி.மு.கழகத்தாரும் சேர்ந்து நம்முடைய ஆரியக் கலாச்சாரத்தை அழித்து விடுவார்கள் போலிருக் கிறதே என்று அம்மையாரிடத்திலே சொல்லி, தமிழ்ப் புத்தாண்டு -   தைத் திங்கள் முதல் நாள் என்பதை மாற்ற வேண்டும் - அந்தச் சட்டத்தையே உடைத்தெறிய வேண்டும் என்று கூறி நேற்றைக்கு அறிவித்துவிட்டார்கள்.  இனிமேல், தை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டு நாளல்ல.  பழைய வழக்கம்போல் மரபுப்படி, சித்திரை முதல்நாள்தான் தமிழர்களுடைய வருஷப்பிறப்பு நாள் என்று அறிவித்திருக்கிறார்கள்.  நாங்கள் அறிவிக்கும் போது கூட, நாங்கள் தமிழ்ப் புத்தாண்டைக் கொண் டாடுகிறோம்.  வேண்டுமானால், யாருக்காவது சித்திரை முதல் நாளைத்தான், ஆண்டுத் தொடக்க நாளாக கொண்டாட வேண்டும் என்று எண் ணினால், அவர்கள் கொண்டாடி விட்டுப் போகட் டும்! என்றுதான் சொன்னோம், கட்டாயப்படுத்த வில்லை.  நினைவூட்டினோம்.  ஆனால், தமிழர்களு டைய ஆண்டு தைத் திங்கள் முதல் நாளிலிருந்து தொடங்குகிறது என்பதைச் சொன்னோம்.  தந்தை பெரியார் வழியிலே வந்த நாம்.
சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
இவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? அவர்கள் சொல்லுகின்ற அந்த ஆண்டுக் கணக்கை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா?  பெரியார் வழியிலே வந்த நாம் - பெரியார் சொல்வதற்காக அல்ல - நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  இந்த ஆண்டு எப்படிப் பிறந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள் என்றால், தேவலோகத்திலே  - என்ன இது, திடீ ரென்று தேவலோகத்திற்குப் போகிறானே என்று எண்ணக் கூடாது  -   நடந்ததாக  எழுதி வைக்கப் பட்டதைச் சொல்லுகிறேன்.    இந்த  வருஷங்கள் எப்படி வந்ததாம்?  தேவ லோகத்தில் நடந்த ஒரு செயல். ஒரு நாள்  கிருஷ்ணனைப் பார்த்து  நகர்வலம்  வந்த  நாரதர்  -  கிருஷ்ணா  எனக்கொரு ஆசை என்றார்.   என்ன ஆசை நாரதா என்றான் கிருஷ்ணன். ஒரு அழகான பெண்ணோடு  நான் ஒரு நாளாவது  வாழ வேண்டும் என்றார் நாரதர்.    கிருஷ்ணனுக்கு கோபம் வந்து விட்டது.   நம்மைப் பார்த்து இப்படிக் கேட்கிறாரே என்று.   இருந்தாலும் நாரதரிடம்  நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன்,  நீ இந்த ஊரில்  எல்லா வீடுகளுக்கும்  போ,  எந்த வீட்டிலேயாவது அழகான ஒரு பெண் உனக்காக இருந்தால், நீ அவளை ஏற்றுக் கொள்ளத் தடை இல்லை.  அவள் உன்னோடு வருவாள், போ என்று அனுப்பி வைத்தார்.   நாரதர் போனார்.   ஒவ் வொரு வீட்டிலும் ஒரு புருஷனோடு பெண் இருந் தாளே  தவிர  தனியாக ஒரு பெண் இல்லை.   திரும்பி வந்தார் நாரதர்.   ஏன் என்று கிருஷ்ணன் கேட்டார்.   எல்லா வீடுகளிலும்  பெண் ஆணோடு தான் இருக்கிறாள், அதனால் எனக்கேற்ற பெண் எங்கும் கிடைக்கவில்லை என்றார்.  சரி என்னை என்னச்  செய்யச் சொல்கிறாய் என்றான் கிருஷ்ணன்.  அதற்கு  நாரதர்  நானே பெண்ணாக ஆகி விடுகிறேன்,  நீ ஆணாக இருந்து என்னைச் சந்தோஷப்படுத்து  என்று நாரதர்  கிருஷ்ணனைக் கேட்கிறார்.    சரி, உன் இஷ்டப் படியே ஆகட்டும் என்று  நாரதரைப் பெண்ணாக்கி  நாரதர்,  நாரதியாகி  -  கிருஷ்ணன், நாரதர் இரண்டு பேரும் மகிழ்ச்சியாக இருந்து   அவர்கள் இருவருக்கும் அறுபது பிள்ளைகள் பிறந்தனவாம்.   கடவுளுடைய  காதல் அல்லவா?   அவர்கள் இருவருக்கும்  ஒரே நாளில் அறுபது பிள்ளைகள் பிறந்தன. அந்த அறுபது பிள்ளை களுக்கும் வைத்த பெயர்கள் தான்  பிரபவ, விபவ, சுக்கில,  பிரமோதூத,  பிரஜோத்பத்தி,  ஆங்கிரச,  சிறீமுக, பவ,  யுவ,  தாது, ஈஸ்வர,  வெகுதான்ய,  பிரமாதி,  விக்கிரம, விஷூ,  சித்ரபானு, சுபானு,  தாரண,  பார்த்திப,  விய, சர்வசித்து,  சர்வதாரி,  விரோதி,  விக்ருதி, கர, நந்தன,  விஜய,  ஜய,  மன்மத,  துன்மகீ,  ஏவிளம்பி,  விளம்பி,  விகாரி, சார்வரி,  பிலவ,  சுபகிருது,  சோபகிருது,  குரோதி, விசுவாவசு,  பராபவ,  பிலவங்க,  கீலக,  சௌமிய,  சாதாரண,  விரோதிகிருது,  பரிதாபி,  பிரமாதீச,  ஆனந்த,  ராஷச,  நள, பிங்கள,  காளயுக்தி,  சித்தார்த்தி,  ரௌத்திரி,  துன்மதி,  துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாஷி,  குரோதன,  அட்சய  என்ற  அறுபது வருஷங்கள். (தலைவர் கலைஞர் அவர்கள் இவ்வாறு அறுபது ஆண்டுகளின் பெயர்களையும் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூடியிருந்த பல்லாயிரக்கணக் கானோர் பெருத்த ஆரவாரத்தோடு கையொலி எழுப்பி  மகிழ்ந்தார்கள்).
நம்முடைய தலையிலே எழுதி வைத்தனர்
அது தான் தமிழா,  உன்னுடைய ஆண்டுக் கணக்கு என்று நம்முடைய தலையிலே எழுதி வைத்தார்கள். தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.   அறுபது ஆண்டுகள் ஒரே சக்கரமாகச் சுழலும்போது,  நீ  எந்த வருடம் பிறந்தாய்  என்று  என்னையே கேளுங்கள் - அவர்களுடைய  கணக்குப் படி  -  நான் ரக்தாட்சி வருடம் பிறந்தேன்  -  அப்படி யென்றால் இப்போது எனக்கு என்ன வயது  என்றால்  அறுபது ஆண்டுகள்   பெயர்கள் சுற்றிக்  கொண்டே வரும் போது,  அந்த வருடக் கணக்கு சரியாக வராது.     அதே நேரத்தில் 1924ஆம் ஆண்டு பிறந்தேன் என்றால், ஒன்று, இரண்டு, மூன்று என்று கணக் கிட்டு  ஆங்கிலக் கணக்குப்படி இப்போது 87 வயது என்று சரியான கணக்கைச் சொல்ல முடியும்.   ஆனால்  அந்தக் கணக்கில்  - புராணக் கணக்கில்  -  ஆண்டுகளைக் கணக்கிட்டால்  -  சரியான வயது கணக்கு வராது.    எனவே தான்  அந்தக் கணக்கையும் பார்த்து, அதையும் சிந்தித்துச் செயல்படுத்த வேண்டுமென்று நான் சொன்னேனே  -  மறைமலை அடிகள் தலைமை யில்  500 புலவர்கள்  பச்சையப்பன் கல்லுரியிலே கூடி  சிந்தித்துச் செயல்படுத்தினார்களே,  அந்த ஆண்டுக்கணக்கை  அதாவது  தை முதல் நாளி லிருந்து  ஆண்டுக்கணக்கைத் தொடங்க வேண்டும்,  தை முதல்நாள் தான் நம்முடைய தமிழர்களுடைய ஆண்டு பிறந்தநாள் என்று தொடங்க வேண்டு மென்று சொன்னார்களே, அதைக் கடைப்பிடித் திருக்க வேண்டும். நமது கலை - கலாச்சாரம் - மரபுகளுக்கு வந்துள்ள பெரிய ஆபத்து! அதைக் கடைப்பிடிக்காமல், சுற்றிச் சுற்றி நாம் மறுபடியும் இருந்த இடத்திற்கே வந்துவிடக் கூடிய அளவிற்குள்ள ஆண்டுகள் நமக்குத் தேவையில்லை என்பதற்காகத்தான் நான் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இனி தை முதல் நாள்,  நம்முடைய தமிழர் ஆண்டு பிறந்த நாள்.  அந்த நாளில் வெடிகளை வெடிப்போம் - அந்த நாளில் பலகாரங்கள் செய்து படைப்போம் - அந்த நாளில் வாழை மரங்களை வீட்டு வாசல்களில் நாட்டுவோம் - அந்த நாளில் தெருவில் கோலங்கள் இடுவோம் - வீட்டில் கோலங்கள் இடுவோம் - குளித்து முழுகி, அந்த நாளில் ஆடவரும், பெண் டிரும் குதூகலமாக இருப்போம் என்று தை பிறந்தநாள், வழி பிறந்தநாள் என்று கொண்டாடு வோம் என்பதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே அதை அறிவித்தோம்.
பழைய பஞ்சாங்கங்கள்
நேற்றைய தினம் சட்டமன்றத்திலே என்ன அறி வித்திருக்கிறார்கள்?  இனிமேல், இந்த ஆண்டுக் கணக்கு பழைய கணக்குதான்.  புதிய மரபை நாங்கள் கடைப்பிடிக்க முடியாது. பெரியார் என்ன? மறை மலையடிகள் என்ன? யாராக இருந்தால்தான் என்ன? அவர்கள் சொன்னால் நாங்கள் கேட்க மாட்டோம்.  நாங்கள் பழைய பஞ்சாங்கப்படிதான் நடப்போம் என்று பழைய பஞ்சாங்கத்தைத் தூக்கி தலையிலே வைத்துக் கொண்டு, நடக்க ஆரம்பித்திருக்கிறார் கள் என்றால், நான் கேட்கின்றேன்.  நம்முடைய கலை, கலாச்சாரம், மரபு இவைகளுக்கெல்லாம் எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது என்பதை  தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.  இன்றைக்கு இது சாதாரண விஷயமாகத் தெரியலாம்.   எதிர்காலத்தில்  கொஞ்சம் கொஞ்ச மாக செல்லரிப்பதைப்போல நம்முடைய செல்வங் களையெல்லாம், அறிவுச் செல்வங்களையெல்லாம்,  நம்முடைய கலைச் செல்வங்களையெல்லாம்,  நம்முடைய  இதிகாசச் செல்வங்களையெல்லாம், நம்முடைய இலக்கியச் செல்வங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக  அறுத்து அழித்து அவை களை இல்லாமலேயே புதைத்து, எதிர்காலத்திலே தமிழன் என்று ஒருவன் இருந்தான் என்று சொல்வ தற்கே ஆள் இல்லாமல் நம்முடைய சமுதாயம் போய்விடுமோ - இன்றைக்கு தி.மு.கழகம் இருக்கிற காரணத்தால் தான், பெரியார் பிறந்த காரணத் தால்தான், அவர் வழியிலே அண்ணா பணியாற்றிய காரணத்தால்தான், அவர் வழியிலே நாமெல்லாம் தொண்டாற்றிய காரணத்தால் தான் எதற்கும் அஞ்சாமல் இந்தியை எதிர்த்து, தமிழை வாழ வைத்து எதற்கும் அஞ்சாமல் பல உயிர்களைக் கூட தத்தம் செய்து நாம் தமிழை காப்பாற்றினோமே அந்தத் தமிழுக்கு இன்றல்ல, நான் இன்றைக்கு  உயிரோடு இருக்கிறேன், நான் இல்லாத காலத் திலேகூட யாரும் அறியாமல், உங்களையெல்லாம் அறியாமல் தமிழ் மொழியை கொள்ளை கொண்டு போய்விடுவார்கள், தமிழை அழித்து விடுவார்கள்.

தமிழ் உணர்வை எந்த உலுத்தர்களும் அழித்து விடாமல் பாதுகாப்போம்! ஆகவே, இன்றைக்கு தமிழக சட்டமன்றத்திலே ஜனநாயகத்திற்கு மாத்திரம் ஆபத்தல்ல, நம்முடைய தமிழ் மொழிக்கே ஆபத்து.  நாம் பேசுகின்ற தமிழ் இலக்கியத்திற்கே ஆபத்து,  நாம் பேசுகின்ற, பாடு கின்ற தமிழ் இசைக்கே ஆபத்து, தமிழுக்கே ஆபத்து.  அந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்திட ஜனநாயகத்தை நாம் காப்பாற்றுவது முதலாவதாக, இரண்டாவதாக இருந்தாலும்கூட, முதலாவதாக இருக்க வேண்டி யது, இன்றைக்கு அழிக்கத் தலைப்பட்டிருக்கிறார் களே,  நம்முடைய தமிழ் உணர்வை அந்த உணர்வை - நாம் காப்பாற்றித் தீர வேண்டும். அந்த உணர்வை எந்த உலுத்தர்களும் அழிக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன். பூசுரர்கள் கூட்டம்,  புரோகிதர்கள் கூட்டம், ஆரியக் கூட்டம், தமிழை அழிக்க பின்னுகின்ற வலைகளை யெல்லாம் அறுத்தெறிந்து தமிழ் வாழ, தமிழர் வாழ நாம் உயிரையும் கொடுக்கத்  தயாராவோம் என்று கூறி உங்கள் அன்பான வரவேற்புக்கும் நீங்கள் காட்டுகின்ற எழுச்சிக்கும், இத்தகைய இளைஞர்கள் எல்லாம் இருக்கின்ற வரையில் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்கின்ற அந்த நம்பிக்கை யோடு உரையை நிறைவு செய்கிறேன். - இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

1 comment:

Inbachudar Chandran said...

தமிழ்ப் புத்தாண்டை மாற்றுவது ஒரு மனித உரிமை மீறல் என்பதால் தமிழ் உணர்வுமிக்கவர்கள் தமிழகத்தில் அதிமுக அரசின் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு பிரகடனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கவேண்டும் என ஆவலுடன் எதிர்பார்கின்றோம்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...