Friday, August 26, 2011

காவல்துறை அதிகாரிகளின் முக்கிய கவனத்துக்கு...

அய்யப்பனும் கடவுளா - மகர ஜோதியும் உண்மையா? என்ற தலைப்பில் திராவிடர் கழகத்தின் தலைமை நிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட துண்டு அறிக்கைகள், கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சியைத் தூண்டியது. பல்வேறு இடங்களிலும் இந்தத் துண்டு அறிக்கையை மய்யப்படுத்தி ஆரோக்கியமான வகையில் வாத - பிரதிவாதங்களும் நடைபெற ஆரம்பித்தன.

இதனைப் பொறுக்க மாட்டாத இந்து முன்னணியைச் சேர்ந்த நாகர்கோவில் வழக்குரைஞர் ஒருவர் - திராவிடர் கழகத்தின் துண்டு அறிக்கைகள் பக்தர்களின் மனதைப் புண்படுத்துகின்றன - மதத்துவேஷத்தை உண்டு பண்ணி கலவரத்தை உண்டாக்கப் பார்க்கிறார்கள் என்று கூறி இ.பி.கோ. 295ஏ பிரிவின்படி குற்றமானது என்று புகார் செய்தார்.

இது தொடர்பான வழக்கு 2006ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் - அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி வழக்குரைஞர் பெலமாண்ட் நீதிமன்றத்தில் வாதாடினார். அய்ந்தாண்டுகளுக்குப்பிறகு இப்பொழுது தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கிலிருந்து குமரி மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் மானமிகு ப. சங்கரநாராயணனை விடுவித்து நீதிபதி தீர்ப்புக் கூறினார்.

இது சட்டப்படியான நிலைமையாகும். அரசமைப்புச் சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்கிற அடிப்படையையே அறியாத காவல்துறை அதிகாரிகள் திராவிடர் கழகத்தின் சார்பில் விநியோகிக்கப்படும் துண்டு அறிக்கையை சர்ச்சைக்கு உரியதாக ஆக்குவது அப்பட்டமான அறியாமையே யாகும்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர், திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மானமிகு ச. மணிகண்டன் அவர்களுக்கு தாக்கீது ஒன்றினைக் கொடுத்துள்ளார். (25.8.2011).

செப்டம்பர் முதல் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி திராவிடர் கழகத்தின் சார்பில் விநாயக சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் கவனத்துக்கு என்ற தலைப்பில் துண்டறிக்கையைப் பொது மக்கள் மத்தியில் இம்மாதம் 28 முதல் 30ஆம் தேதி வரை பொது மக்களுக்கு வழங்கப்பட இருப்பதை அறிந்த நிலையில், மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரை அணுகி அனுமதி பெற வேண்டும் என்று அந்தத் தாக்கீதில் கூறப்பட்டுள்ளது.

இது அப்பட்டமான சட்டமீறல் என்பதோடு மட்டுமல்லாமல் கருத்துப் பிரச்சார உரிமையைத் தடுக்கக் கூடியதாகும். துண்டு அறிக்கையில் காணப்படும் வாசகங்களோ, கருத்துக்களோ சட்டப்படி குற்றமாக கருதுவார்களேயானால், அதன்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும்.

மதப் பிரச்சாரம் செய்ய மட்டும்தான் நாட்டில் அனுமதி உண்டா? மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவுவாதிக்கு உரிமை கிடையாதா? அரசமைப்புச் சட்டத்தில் அப்படி எங்காவது கூறப்பட்டுள்ளதா?

குமரி மாவட்டத்தில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்தை சரியாக உணர்ந்தத் தன்மையோடு உள்ளது.

1971இல் சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் தொடர்பாககூட வழக்குப் பதிவு செய்யப்பட்டதுண்டு; எந்தவிதத் தண்டனையும் வழங்கப்படவில்லையே!

1974 டிசம்பர் 25ஆம் தேதியன்று, தந்தை பெரியார் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இராமன், சீதை, லட்சுமணன் உருவங்களை திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் தீயிட்டார்களே - வடக்கே இராம லீலா கொண்டாடப்படுவது போலவே சென்னையில் அன்று இராவண லீலா கொண்டாடப்பட்டதே!

அதன்மீது தொடுக்கப்பட்ட வழங்கப்பட்ட தீர்ப்பில் எதிர் பிரச்சாரம் செய்ய திராவிடர் கழகத்துக்கு உரிமையுண்டு என்று கூறி குற்றஞ்சாட்டப் பெற்ற அத்தனை பேரும் விடுவிக்கப்பட்டனரே - தீர்ப்பு வழங்கியது மாவட்ட நீதிமன்றமாயிற்றே.!

வெள்ளைக்கோயில் காவல் நிலையமாக இருந்தாலும் சரி, வேறு எந்த ஊர் காவல் நிலையமாக இருந்தாலும் சரி, திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவார்களேயானால் அது நீதிமன்ற அவமதிப்பாகவே கருதி வழக்குத் தொடுக்கப்படும் என்று எச்சரிக்கின்றோம்!

வாழ்க பெரியார்!!
வளர்க பகுத்தறிவு!!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...