Friday, July 22, 2011

"ஓ" ஆப்பிரிக்காவில் அதிசயம் - 4


ஆப்பிரிக்கா என்ற உடனேயே பலருக்கு மனதில் தோன்றுவது இருண்ட கண்டமும், சிங்கம், புலி, யானைகளும் நிறைந்த காட்சிகளுந்தான். ஏன், அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியா என்றாலே மேல் நாட்டில் பலர் பாம்பு, யானை நிறைந்த கிராமங்கள் என்றுதான் நினைத்திருந்தனர்.
நைல் நதிக்கரையிலே எகிப்திய நாகரிகம் ஓங்கி வளர்ந்து, இன்று உலகம் அதிசயிக்கும் பெரிய பெரிய பிரமிடுகள் உள்ள எகிப்தும் ஆப்பிரிக் காதான். மனித இனம் முதன் முதலில் தோன்றி யதே ஆப்பி ரிக்கா என்று தான் இன்று தெரிய வருகிறது. கருப்பின மக்கள் தங்கள் கூட்டு வாழ்க்கையில் பல கூறுகளாக வாழ்கின்றனர். கென்யா, தென்ஆப்பிரிக்கா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகள் பல உலகத் தலைவர்களைத் தந்துள்ளன.
வட அமெரிக்காவிலே 1977இல் அலெக்சு ஃகேலி என்பவர் எழுதிய ஆராய்ச்சி நூல் வேர்கள் (Roots). அது தொலைக்காட்சிப் படமாக்கப்பட்டு 36 விருதுகள் பெற்றது. அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நீக்ரோ என்றழைப்பதை ஒழித்து ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்ற புதிய தாக்கத்தைச் சொல்லில் மட்டுமல்லாது மனதளவிலும் உருவாக்கிவிட்டது. தென் ஆப்பிரிக்க இனப் போராட்டம் அமெரிக்காவின் தெருக்களிலும், கல்லூரிகளிலும் தாக்கத்தை உண்டாக்கி "தென் ஆப்பிரிக்காவை ஒதுக்குங்கள்" போராட்டம் வலுவுற்றது. நெல்சன் மண்டேலா தீவிரவாதியாக அமெரிக்க அரசால் முத்திரை குத்தப்பட்டிருந்தாலும் அவர் விடுதலைக்காக அமெரிக்காவின் பெரும்பாலானோர் போராடி னார்கள். அவரது விடுதலை அமெரிக்கக் கருப்பினத்தைச் சுயமரியாதையுடனும், கருப்பில் பெருமை என்றும் வாழ வளர வழிகாட்டி விட்டது. அந்த மாபெரும் தலைவர் ஓப்ரா வின்பிரியீடம் ஆப்பிரிக்கப் பெண்களுக்காக நல்ல முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஓப்ரா வின்பிரி ஆழ்ந்து சிந்தித்து ஒரு அற்புதத்தை ஆப்பிரிக்காவில் ஏற்படுத்தினார். 52 ஏக்கர் பரப்பளவிலே, 28 அழகான இந்த நூற்றாண்டின் சிறந்த வகுப்பறைகள், கணினி மய்யங்கள், இரண்டு அற்புதமான அரங்கங்கள், இசை மன்றங்கள் என்று கனவில்கூட அந்தக் குழந்தைகள் நினைத்துப் பார்க்க முடியாத பெண்கள் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளி என்ற மாணவியர் பள்ளி 2007இல் நெல்சன் மண்டேலா, மற்றும் இங்கிலாந்து, உலகப் பெரிய பாடகர்கள் கலந்து கொள்ளத் திறக்கப்பட்டது. ஓப்ராவின் கொடை நிறுவனத்தால் 40 மில்லியன் டாலர்களில் அய்ந்து நட்சத்திர ஓட்டல் போன்ற அந்த மாணவியர் தங்கிப் படிக்கும் எதிர்காலத் தலைமைகளை உருவாக்கும் கருவறை தொடங்கப்பட்டது.
பெண்கள் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளியில் ஓப்ரா
இவ்வளவு ஆடம்பரப் பள்ளி அவசியமா? இந்தப் பணத்தை வேறு நல்ல முறையில் பயன்படுத்தியிருக்கலாமே என்று குறை சொன்னார்கள். நெல்சன் மண்டேலா தனது உரையில் தன்னம்பிக்கை குறைந்த, சமமான சந்தர்ப்பங்கள் அளிக்கப்படாத இந்த ஏழை, எளிய, நலிந்த பெண் குழந்தைகள் நன்கு பயிற்சி பெற்று பெரிய தலைவர்கள் ஆவார்கள். இங்கு நான் பலருடைய ஒளி மிகுந்த கண்களிலே பல வருங்கால ஓப்ரா வின்பிரீகளை இப்போதே பார்க்கின்றேன் என்றார். இந்த அரிய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஆப்பிரிக்காவையே மாற்ற வழி வகுக்கும் என்றார். அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் இதன் தாக்கம் ஆப்பிரிக்காவையே மாற்றி அமைக்கப் போகின்றது. இதைச் செய்த ஓப்ராவின் திறமையே தனித்தன்மை வாய்ந்தது என்றார். இதைச் செய்ய உங்களுக்கு எப்படித் தோன்றியது என்று பில் கிளிண்டன் ஓப்ராவைக் கேட்டார். அதற்கு ஓப்ரா, ஆசிரியர்கள்தான் மிகவும் முக்கியமானவர்கள். எனது வாழ்க்கையை மாற்றி அமைத்தவரே ஒரு ஆசிரியர்தான். அந்தச் சந்தர்ப்பம் இந்தக் குழந்தைகளைக் கட்டாயம் மாற்றும் என்றார்.
இந்தப் பள்ளி ஆரம்பித்ததிலிருந்தே பல் துறைகளிலே பெருஞ்சாதனைகளைப் படைத்துக் காட்டியுள்ளது. உலக அளவிலே போட்டியிட்டுப் பல வெற்றிகளைப் படைத்துள்ளது. கணிதத்தில், அறிவியலில், பேச்சுப் போட்டியில், கலைகளில் என்று பல்வேறு உலக அளவிலே பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளனர். இதிலே படிக்கும் மாணவிகள் பலர் எளிய சூழ்நிலையில், இன்னும் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சரியான பயிற்சியும் சந்தர்ப்பமும் அளிக்கப்பட்டால் இவர்கள் சாதிக்கக் கூடிய வர்கள் என்பதைக் காட்டியுள்ளனர்.
இந்தப் பள்ளியின் கல்வி முறையே வேறுபட்டது. மாணவர்கள் சேர்ந்து பயில்வதும், புரியாததை மற்ற மாணவர்களே அவர்களுக்குப் புரிய வைப்பதுமான கூட்டுக் கல்வி முறை. அனைத்திலும் ஒரு புதிய அகன்ற நோக்குள்ள பயிற்சி. கலை, நாட்டியம், நாடகம், இசை இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. தலைவர்களாக வரத் தயாராக பொது அறிவு, பேச்சுத் திறமை, எழுத்துத் திறமையை வளர்த்தல் என்று அதுவே ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த பயிற்சி ஆக்கப்பட்டுள்ளது.
அனைத்திற்கும் மேலாக ஒவ்வொரு மாணவரும் 3,000 மணிகள் போல சமுதாயப் பயிற்சி பெறுகின்றனர். முதியோர், உடல் நலமில்லாதவர்கள், கிராமத்துப் பெண்கள் இவர்களுக்கு உதவுதல், பயிற்சிகள் அளித்தல் போன்றவற்றைச் செய்கின்றனர். 2007இல் இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 2008லேயே இந்தப் பள்ளி மாணவிகள் காய்கறிகள் வளர்ப்பது, மார்பகப் புற்று நோய் தடுப்பது பற்றிப் பெண்களுக்கு எடுத்துச் சொல்லுதல், ஆதரவற்றவர்கள் விடுதிகளுக்குச் சென்று பணி செய்தல் போன்றவற்றைச் செய்துள்ளனர்.
அலெக்சு ஃகேலி
2009இல் பெரிய எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பயிற்சி நடத்தினார்கள். 30 பள்ளிகளிலிருந்து 100 குழந்தைகளை வரவழைத்து அவர்களுக்குப் பயிற்சிகள் அளித்தனர். அவர்களுடைய புத்துலக அரங்கிலே பசுமைப் புரட்சிபற்றி நாட்டிய, கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அதிலே ஒரு எளிய குடும்பத்திலிருந்து வந்த பெண் அவரது குடும்பச் சூழ்நிலையை வருணித்து தான் எப்படி முன்னேறி நோபல் பரிசு வாங்கப் போகின்றேன் என்று சொன்னதைக் கேட்ட ஓப்ரா அப்படியே உருகிப் போய் அந்தப் பெண் குழந்தையைக் கட்டித் தழுவிப் பெருமைப் பட்டார். இங்கிலாந்து மற்றும் பிற நாட்டுப் பாடகர்கள், நடிகர்கள் அங்கே வந்து பங்கேற்றுள்ளனர். மற்றும் கலை மூலம் எதிர்கால வாழ்க்கை, எப்படி அனைத்தையும் குப்பையாக்காமல் மறுபடி பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கியுள்ளனர். ஆகஸ்ட் 2009இல் 44 நாடுகளிலிருந்து போட்டியிட்டு இரண்டு குழந்தைகள் அமெரிக்க பாசுடன் நகரிலே நடந்த பெண்கள் தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்றனர். 16 வயது டெப்ரா இளம் பெண்கள் கருத்தரிப்பு, பெண்கள் அனுபவிக்கும் குடும்ப வன்முறை, பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் என்பதைப்பற்றிய கட்டுரைப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
2010இல் ஃகேபிடட் ஃபார் ஃகுயுமேனிட்டி (Habitat for Humanity) என்ற உலக அமைப்புடன் சேர்ந்து ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் 225 மாணவிகள் சுண்ணாம்பு, கற்கள் என்று அனைத்திலும் பங்கு பெற்று உழைத்தனர்.
இதையெல்லாம் அதிசயம் என்று நினைக்கலாம். ஆனால் இதற்கும் மேலே ஒரு அதிசயம் நடந்துள்ளது. இவரது பள்ளியிலே பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் குழந்தைகளைத் துன்புறுத்தியுள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. உடனே ஓப்ரா தனது அனைத்து முக்கிய அலுவல்களையும் தள்ளி வைத்துவிட்டு அமெரிக்காவிலிருந்து நேரே சென்று ஏழு குழந்தைகளையும் விசாரித்தார். அவர்கள் பெற்றோருடன் பேசினார். அந்தக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் செல் பேசியைக் கொடுத்து தனது எண்ணையும் கொடுத்து ஏதாவது நடந்தால் என்னை நேரே கூப்பிடுங்கள் என்று சொன்னார்.
ஓ வென்ற அதிசயம் ஆப்பிரிக்காவை மட்டுமல்ல உலகத்தையே அதிசயிக்க வைத்தது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...