Saturday, May 14, 2011

அரசியல் களத்திற்கு அப்பாலும் தி.மு.க.வுக்குப் பணிகள் உண்டு


இனம், மொழி, பகுத்தறிவு, பண்பாடு, சமூக நீதிக் களங்கள் உண்டு
அரசியலோடு இப்பணிகள் தொடரட்டும்! தொடரட்டும்!!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்தும், அதே நேரத்தில் அரசியல் மட்டுமே தி.மு.க.வின் களமல்ல; மேலும் பல களங்கள் உண்டு என்றும் எடுத்துக் கூறியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்; அறிக்கை வருமாறு:

நேற்று (மே 13-2011) வந்த தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள், அதிர்ச்சி தரத் தக்கவை - வெற்றி பெற்ற அணிக்கும், தோல்வியுற்ற அணியினரான (நம்) அனைவருக்கும்.

வெற்றி பெற்ற அ.தி.மு.க. அணியினர்கூட இவ்வளவு சாதகமான அலை போன்ற முடிவைப் பெறுவோம் என்று எண்ணவில்லை. அங்கே இடம் பெற்ற கூட்டணிக் கட்சியினர் பலரும் இதை நேற்று குறிப்பிட்டுள்ளார்கள்!

சாதனைகளுக்குக் கிடைத்த பரிசு!

இந்தத் தோல்வி, கலைஞர் (தி.மு.க.) அரசு சொன்னதையெல்லாம் செய்த அரசு, மேலும் சொல்லாததையும் கூடுதலாகச் செய்த அரசு என்பதால் அதற்குக் கிடைத்த வாக்காளர் பரிசா என்றால், ஆம் என்று ஒப்புக் கொள்ளுவதில் உண்மை பேசுவோர் எவரும் வெட்கப்படத் தேவையில்லை.

ஜனநாயகம் என்ற மக்களாட்சியின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று!

இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவு என்று கேட்கின்றனர் பல நண்பர்கள்.

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் 1933-லேயே குடிஅரசில் எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்குத் தக்க பதில் கிடைக்கும்.

நன்றி என்பது பலனடைந்தவர்கள் கட்ட வேண்டிய பண்பாகும்; உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்

- இவ்வரிகள் மக்களின் இயல்புகளைக் காட்டும் கண்ணாடிகள் அல்லவா?

அன்று சர்ச்சிலுக்கு ஏற்பட்ட இதே நிலை!


இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனையும், நேச நாடுகளையும் அச்சு நாடுகள் அணித் தலைவர் சர்வாதிகார ஆரிய இட்லரிடமிருந்து காப்பாற்றி, போரில் மக்களுக்குத்   தன்னம் பிக்கை ஊட்டி, தளராது பாடுபட்டார் அன்றைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.

எனது மக்களிடம் வியர்வையும், ரத்தமும், உழைப்பும் தாருங்கள் என்று கேட்பதைத் தவிர, நான் தருவதற்கு வேறுஒன்றுமில்லை என்று கூறி, மிகப் பெரிய போரை வென்று ஜனநாயகத்தை, சர்வாதிகாரம் கொல்லாமல் காத்த வின்ஸ்டன் சர்ச்சலின்  கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்தனர் பிரிட்டிஷ் மக்கள் - இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் நடந்த பிரிட்டனின் பொதுத் தேர்தலில். மக்கள் தீர்ப்பு - விசித்தரமானதாகவும் அதிர்ச்சியூட்டக் கூடியதாகவும் இருந்தாலும் அதைத் தலை வணங்கி ஏற்கிறேன் என்றுதான் இரும்பு மனிதர் வின்ஸ்டன் சர்ச்சில் அன்று கூறினார்!

சிரித்துக் கொண்டே கலைஞர் சொன்ன பதில்

தான் நின்ற தொகுதிகளில் எல்லாம் (திருவாரூர் உட்பட) தொடர்ந்து வென்றே சரித்திரம் படைத்த நமது முதல்வர் கலைஞர் அவர்கள், இவ்வளவு பெரிய தோல்வி கண்டும் சிறிதும் கலங்காமல், மனந் தளராமல், மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர் களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் நேற்று!

எந்த நிலையிலும் எதிர் நீச்சல் போடத் தயங்காத ஈரோட்டுக் குரு குல வாசத்தின் பண்பையும், பழக்கத்தையும், எதையும் தாங்கும் அண்ணாவின் இதயமும் கொண்டவர் என்பதை இதன் மூலம் காட்டியுள்ளார்!

1967-இல் பச்சைத் தமிழர் காமராசர்கூட தோற்ற நிலையில், சாதனைகளை அதிக மாகச் செய்தோம் என்றாலும் நம்மைத் தோற் கடித்தார்கள் - மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் என்றார்!

தொங்கு சட்டசபைக்குத் தமிழ்நாட்டில் வேலையில்லை

ஏன் இப்படிப்பட்ட தோல்வி தி.மு.க. கூட் டணிக்கு என்று அலசி ஆராய்வதற்கு போதிய அவகாசம் உள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்றுமே கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல கூட்டணி ஆட்சியையோ, தொங்கு சட்ட சபையையோ விரும்பியதில்லை என்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே அ.தி.மு.வுக்கு அதன் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவிற்கு தனித்த மெஜாரிட் டியைத் தந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது!

புதிய முதல் அமைச்சர் ஒன்றரை ஆண்டுக்குள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

புதிய முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒன்றரை ஆண்டுகளுக்குள் தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளையெல்லாம் செய்து முடிப்பதாகக் கூறியுள்ளார் நேற்று ஒரு பேட்டியில்.

அதனை எதிர்பார்க்க, வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. ஜனநாயகத்தில் அதோடு அதை வற்புறுத்தும் உரிமையும் உண்டு எதிர்க்கட்சிகளுக்கு - குறிப்பாக தி.மு.க.வுக்கு; கடுகு சிறுத்தாலும் காரம் போகாதல்லவா?
நல்ல சாதனைக்கு பிறகும் தோல்விகளை சந்திப்பது திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி  காலம் முதல் ஜனநாயகத்தில் இது முதல் தடவை அல்ல. புதிதும் அல்ல.

திராவிடர் இனத்தின் தலைவர் கலைஞரின் மவுனம் எளிதில் கலையக் கூடாது; தொடர வேண்டும் என்பதே நமது விழைவு.

தி.மு.க.விற்குப் பல களங்கள் உண்டே!

மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களுக்கு, ஓய்வு என்பது சட்டசபை - ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணி களுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம் களம்  - போன்றவை காத்துக் கொண்டிருக் கின்றன - வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக!

அரசியல் களம் போல, சமரசங்களுக்கு உட்படாதவைகள் அக்களங்கள்! திராவிடர் - தமிழர் இனமானப் பிரச் சினைகள் என்ற பணிகள், ஈழத் தமிழர் வாழ்வுரிமை விடியல்  உள்ளிட்ட  பல்வேறு பிரச்சினைகள் உட்பட பகுத்தறிவுப் பிரச்சாரம் வரை எத்தனையோ களங்கள் காத்திருக் கின்றன தி.மு.க.விற்கு அரசியல் களத்திற்கும் அப்பால்!

இவற்றில் சாதிக்கப்பட வேண் டியவை நிரம்பவே உண்டு - அரசியலோடு வலிமையாக அந்தப் பணிகளும் தொடரப்பட வேண்டும்.

வெறும் பதவி அரசியலுக்காகத் துவங்கப் பட்டதல்ல தி.மு.க. என்பது நிரூபிக்கப்பட வேண்டும். மக்கள் வழங்கியுள்ள வாய்ப்பாக இதனைக் கருதி தி.மு.க.வின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்

சமுதாயப் புரட்சி இலட்சியங்களை செயல் படுத்த ஆட்சியைக் கருவியாக்கிடத்தான் அரசியல் கட்சியானோம் என்பதுதானே அண்ணா தந்த விளக்கம்?

அரசியல் நாகரீகப்படி  புதிய அரசுக்கு நமது வாழ்த்துக்கள்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...