Wednesday, May 25, 2011

திராவிடர் இயக்க உணர்வை எவராலும் அழிக்க முடியாது!


ஆரியர் - திராவிடர் போராட்டம் இன்னமும் முடியவில்லை!
புரட்சிக் கவிஞர் விழாவில் தமிழர் தலைவர் அறைகூவல்


ஒளிப்படத்தில் இடமிருந்து வலம்: கோ.வி. லெனின், க. பார்வதி, இரா. தமிழ்ச்செல்வன், அசன் முகம்மது ஜின்னா, நக்கீரன் கோபால், தமிழர் தலைவர், சுப. வீரபாண்டியன்,  மு.நீ. சிவராசன்,  க. திருமகள் வீ. குமரேசன்
(சென்னை புரட்சிக் கவிஞர் விழா மகாகவி பாரதிநகர் - 30.4.2011)

சென்னை, மே 2- ஆரியர் - திராவிடர் போராட்டம் இன்னும் முடிய வில்லை. திராவிட இயக்க உணர்வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி கூறினார்.

தமிழர் தலைவர் உரை

சென்னை மகாகவி பாரதி நகரில் 30.4.2011 அன்று இரவு நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பிலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவாக மாலையிலிருந்தே தொடங்கி மிகச் சிறப்பாக அறிவு பூர்வமாக நடத்திக் கொண்டிருக்கின் றீர்கள். அதுவும் தாய்மார்கள், குழந்தை களுடன் குடும்பம் குடும்பமாக ஆர்வத் தோடு வந்து கலந்து கொண்டிருக் கின்றீர்கள். புரட்சிக் கவிஞர் விழாவை நாம் இப்படிக் கொண்டாடுகின்ற இந்த உணர்வை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது. திராவிடர் இயக்கத்தை எவராலும் அழித்துவிட முடியாது. தந்தை பெரியார் விருது பொதுத் தொண்டாற்றுபவர்களுக்கு இங்கே வழங்கப்பட்டிருக்கிறது.

சமுதாய ரீதியாக - தி.க.  அரசியல் ரீதியாக - தி.மு.க.


திராவிடர் இயக்க உணர்வுகளைப் பரப்பிட சமுதாய ரீதியாக பாடுபட்டுக் கொண்டிருப்பது திராவிடர் கழகம்; அரசியல் ரீதியாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். மக்களுக்கு இந்த இரு இயக்கங்களும் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. புரட்சிக் கவிஞ ருடைய கவிதைகளை - கருத்துகளை எடுத்துச் செல்ல வேண்டுமென்றுதான் வந்தேன்.

வரலாற்று ஆவணம் -
குடிஅரசு புத்தகங்கள்


தந்தை பெரியார் அவர்கள் எழுதிய - பேசிய பெரியார் களஞ்சியங்களான குடிஅரசு புத்தகங்கள் இங்கே வெளியிடப்பட்டிருக்கின்றன. இது வரலாற்றுச் செய்திகளைக் கொண்ட புத்தகம். தமிழக வரலாற்றைப் படிக்கலாம். இந்திய வரலாறு, உலக வரலாறுகளை பெரியாரின் குடிஅரசு நூல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இனப் போராட்டம்

இந்த நாட்டிலே ஆரம்பத்திலிருந்தே நடை பெற்றுக் கொண்டிருப்பது அரசியல் போராட்ட மல்ல; இனப் போராட்டம்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை இந்தத் தேர்தலின் தொடக்கத்திலிருந்து மட்டும் நாங்கள் சொல்ல வில்லை. தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக் கின்றோம். ஏன் புராண காலத்திலிருந்து அல்ல; ராஜகோபாலாச்சாரியார் காலத்திலிருந்து, ராமன் காலத்திலிருந்து, சோ ராமசாமி காலத்திலிருந்து நடைபெற்றுக் கொண்டு வருவது ஆரியர் - திராவிடர் போராட்டம்தான்!

45 ஆண்டுகால வலி

தந்தை பெரியார் அவர்கள் 45 ஆண்டு காலம் தன் வயிற்று வலியையும் பொறுத்துக் கொண்டு சமுதாயத்தினுடைய வலியைப் போக்க எப்படிப் பாடுபட்டார் என்பதை சுப.வீ. அவர்கள் சொன்னார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அய்யா அவர்களை  வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு செல்ல முடிவெடுத்து நாங்கள் புறப்பட்டோம். அப்பொழுது அய்யா அவர்களிடம், அவருக் கிருக்கின்ற உடல் உபாதையைப் பார்த்து, அய்யா,  தங்களுடைய சுற்றுப்பயணம் ஒத்தி வைக்க அறி விப்பை விடுதலையில் வெளியிட்டு விடலாமா? என்று நான் கேட்டேன்.

சுற்றுப்பயணத்தைத் தள்ளி வைப்பதா?

என் சுற்றுப்பயணத்தைத் தள்ளி வைப்பதா? தோழர்கள் கஷ்டப்பட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருப்பார்கள். நான் வேலூர் மருத்துவ மனைக்குப் போகிறேன். வலியைச் சரி பார்த்துக் கொண்டு உடனே திரும்பப் போகிறேன். அதற்கு ஏன் எனது சுற்றுப்பயணத்தை நிறுத்த வேண்டும்? வலி உங்களுக்கு இல்லிங்க, வலி எனக்கு. ஆகவே சுற்றுப் பயணத்தைத் தள்ளி வைக்க வேண்டாம் என்று சொல்லி புறப்பட்ட தலைவர்தான் தந்தை பெரியார். அவர் தன் வலியைப் பொறுத்துக் கொண்டு இந்த சமுதாயத்திற்காக ஆற்றிய பணியினால்தான் சுயமரியாதை உணர்வுகளை, திராவிடர் இயக்க உணர்வுகளைப் பெற்றிருக்கின்றோம்.

சாயிபாபா மருத்துவமனை சோதனை

சாயிபாபாவை அவதாரம் என்று சொல்லு கிறார்கள். அவர் மறைந்த இந்த நிலையிலே அவருடைய மருத்துவமனையையே சோதனையிட வேண்டும் என்று செய்திகள் வெளிவந்திருக்கிற தென்றால், பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பகவான் கவலைக்கிடம்...!

பகவான் கவலைக்கிடமாக இருக்கிறார் என்று சொல்லலாமா? அல்லது கவலைக்கிடமாக இருப்ப வரை பகவான் என்று சொல்லலாமா? மனிதன் இறந்தாலும் ஆன்மா அழிவதில்லை என்று கீதையில் சொல்லப்பட்டிருக்கின்றது. சாய்பாபா மறைந்ததற்காக ஆன்மீகப் பக்தர்கள் ஏன் கவலைப் பட வேண்டும்? இன்றைக்கு  தந்தை பெரியாரின் குடிஅரசு 1939ஆம் ஆண்டின் இரு தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றோம்.

1940ஆம் ஆண்டு குடிஅரசு

அடுத்து 1940ஆம் ஆண்டு குடிஅரசு தொகுதி வெளிவரப் போகின்றது அதில் உள்ள செய்திகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

சமுதாயத்தில் நிகழ்ந்த செய்திகள், அரசியல் ரீதியாக நடந்த நிகழ்வுகள் எப்படி ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வரலாற்று ஆவணங்களை எங்கும் தேடிக் காண முடியாது.

1940 ஆம் ஆண்டு குடிஅரசில்...!

1940ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற கால கட்டம். திராவிடர் இயக்கத்தை, இந்த உணர்வுகளை அழிக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் பெல்லாரி சிறையில் இருந்த கொடுமை - இந்த சிறை வாசத்தால் அவரது உடல் நிலை நலிவுற்றது.

அன்றைக்கு அய்யா அவர்களுக்கு ஜின்னா வாழ்த்து தெரிவித்து வாழ்த்துச் செய்தி அனுப் பினார். இன்றைக்கு ஆயிரம் விளக்கு தி.மு.க. வேட் பாளர் ஜின்னா இங்கே வந்து அதே உணர்வோடு  பேசியிருக்கிறார். அடுத்து 1940 ஆண்டு குடிஅரசு தொகுதி வெளிவரப் போகின்றது. அந்தத் தொகுதியில் உள்ள செய்தியைச் சொல்லுகிறேன்.

இந்தி எதிர்ப்பில் மறைந்த நடராசன்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சென்னை சிறையில் அடைக்கப்பட்ட நடராசன் அய்யா, அவர்களின் கொள்கைக்காக தன் உயிரையே பலியாகக் கொடுத்தார்.

காலஞ்சென்ற நடராசனுடைய தந்தையார் தந்தை பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கின்றார். நீங்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை ஏகி என் மகன் உயிரிழந்தான். நானும், என் குடும்பமும் உங்களுடைய கொள்கைக்காக எங்களையும் இழக்கத் தயாராக இருக்கிறோம் என்று உருக்கமாக எழுதி இருந்தார்.

வேலூர் சிறையில் 14 வயது சிறுவன்

அதேபோல 1957 ஆம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பல தோழர்களுடன் இலால்குடிக்கு அருகில் உள்ள வாளாடியைச் சேர்ந்த  14 வயது சிறுவன் பெரியசாமி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் தண்டிக்கப் பட்டான். அப்பொழுது கவர்னராக இருந்தவர் விஷ்ணுராம் மேதி. சிறைச்சாலையை சுற்றிப் பார்க்க வந்தார். அவர் சுற்றிப் பார்த்துக்கொண்டு வருகை யில், 14 வயது சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டி ருக்கின்றானே, என்ன குற்றம் செய்தான் என்று அழைத்துக் கேட்டார். கவர்னர் ஆங்கிலத்தில் கேட்க அதைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சிறு வனிடம் அதிகாரிகள் சொன்னார்கள்.

வாளாடி பெரியசாமி சொன்ன செய்தி

சரி, நீ இனிமேல் இந்த மாதிரி செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடு. உன்னை விடுதலைப் பண்ணச் சொல்லுகிறேன் என்று கவர்னர் சொன்னார். அந்தச் சிறுவன் சொன்னான்? இல்லை, மறுபடியும் என் தலைவர் பெரியார் அரசியல் சட்டத்தைக் கொளுத் தச் சொன்னால் மீண்டும் கொளுத்தி விட்டு சிறைச் சாலைக்குத் தான் வருவேன் என்று சொன்னான்.

அப்படிப்பட்ட கொள்கை உணர்வு கொண்ட தோழர்கள்தான் திராவிடர் கழகத் தோழர்கள்.

அண்ணா அவர்கள் சொன்னார்: நாங்கள் அரசியலுக்குப் போனாலும் இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தத்தான் செல்கிறோம் என்று சொன்னார். புரட்சிக் கவிஞர் தனது பாடலில் மிகத் தெளிவாக ஒரு செய்தியைச் சொன்னார்.

உரிப்பான் தோலை!

தமிழ்நாடென்ன தோட்டத்துப் புடலங்காயா?
தூங்கி எழுந்தவன் கண் விழித்தால் உரிப்பான் தோலை என்று பாடினார். புரட்சிக் கவிஞரை நாம் நினைக்கும் பொழுது தந்தை பெரியார் கொள்கை வழி நின்று  அவரது கருத்துகளை இன உணர்வோடு பரப்பியவர்.

ஆகவே, இது போன்ற குடும்ப விழாக்கள் ஒவ் வொரு பகுதியிலும் நடத்த வேண்டும். எழுத்தாளர் கோ.வி. லெனின் அவர்கள் இங்கே பேசும்பொழுது சொன்னார்: தந்தை பெரியார் விருது பெறுவது எனக்குக் கூச்சமாக இருக்கிறது. அந்த அளவுக்கு என்ன செய்தேன் என்றே தெரியவில்லை என்று சொன்னாரே அதுதான் அவர் விருது பெறுவதற்கே தகுதியானது.  பதவியை யார் விரும்பாதவர்களோ அவர்கள் தான் அந்தப் பதவிக்கே தகுதியானவர்கள்.

என்ன சாதித்தாய்? என்று கேட்டால்...


அதேபோல நமது நக்கீரன் கோபால் அவர்கள் இங்கே எனக்கு முன்பு பேசியபொழுது சொன்னார்: நான் என் ஊருக்குச் சென்றால் என்ன சாதித்தாய்? என்று யாராவது கேட்டால் பெரியார் விருது பெற்றிருக்கின்றேனே, அது ஒன்றே போதும் என்று சொன்னாரே - அதுதான் பாராட்டத்தக்க செய்தி. உழைப்பாளிகளைப் பாராட்ட வேண்டும். அவர் களுடைய சாதனைகளைப் பாராட்ட வேண்டும்.

போலி மருந்து, போலி சர்டிபிகேட் கொடுத்த போலி விமானி, சாமியார்கள் என்றாலே போலி - போலி சாமியார்கள், போலி உணவு இப்படி எல்லாவற்றிலும், எங்கும் போலி.

பார்ப்பனர் புத்தி

தந்தை பெரியார் கொள்கை என்றைக்கும் தேவைப்படுகிறது. பெரியார் சொல்லுவார்:  கன்னியாகுமரியில் இருக்கின்ற பார்ப்பானுக்கு  தேள் கொட்டினால் காஷ்மீரில் இருக்கிற பார்ப்பானுக்கு நெறிகட்டும் என்று சொல்லுவார்.

அதுபோல பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருப்பதை எடுத்து வீட்டிற்குள்ளே போடுவான். நம்மாளுக்குப் பைத்தியம் பிடித்தால் வீட்டில் இருப்பதை எல்லாம் எடுத்து வெளியில் போடுவான் என்று சொல்லுவார்.

பெரியார் புகழின் சிதறல்கள்

ஒரு மனிதனுக்கு மூச்சுத் திணறும் பொழுதுதான் மூச்சுக் காற்றின் அவசியம் தெரியும். பேரறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னார்: தமிழ் நாட்டினுடைய தலைவர்கள் எல்லாம் யார் என்றால் தந்தை பெரியார் புகழின் சிதறல்கள் - என்று சொன்னார்.

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்! என்று சொன்னார்.

அந்த வகையிலே பெரியாரின் கொள்கை உலகம் போற்றுகிறது; உலகம் ஏற்கிறது. இந்த நிகழ்ச்சிகளை இவ்வளவு சிறப்பாக நடத்திய அத்துணை தோழர் களையும் பாராட்டுகின்றோம்.

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...