Sunday, January 2, 2011

பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் 24,25-1938 திறனாய்வு

தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகளையும் பேச்சுகளையும் கால வரிசைப்படி தொகுத்து வருங்கால சமுதாயம் பயன்படக்கூடிய வகையில் வெளியிடுகின்ற அரும்பணியினை அருமை இளவல் தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்டு பெரியார் களஞ்சியம் - குடிஅரசு என்ற தலைப்பில் முதல் தொகுதி வெளிவரவிருப்பதும், அதனைத் தொடர்ந்து ஏனைய தொகுதிகள் வரவிருப்பதும், பெரிதும் வரவேற்றுப் பாராட்டத்தக்கதாகும் என்று 2009இல் பெரியார் களஞ்சியம் வெளியீட்டிற்குத் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழங்கிய அணிந்துரையில் குறிப்பிட்ட வாழ்த்துக்கேற்ப, அப்பணி தொடர்ந்து, தொய்வில்லாமல், தடைகளின்றி நடைபெற்று வருவதன் சான்றுகள்தான் குடிஅரசு தொகுதிகள் 24, 25 - 1938 அய்யாவின் நினைவு நாளில் 24.12.2010இல் வெளிவருவது என்பதாகும்.

இதுபோன்ற பணி உலகிலேயே எந்த நாட்டிலும் எவரும் செய்யாத பணி - எந்தத் தலைவர் வரலாற்றிலும் காணக் கிடைக்காத பணி - சொல்லப்போனால் காந்தியடிகளுக்கு வேண்டுமானால் ஓரளவு குறிப்பிடலாம். "Collected works of Mahatma Gandhi" என்று வெளிவந்துள்ளது.

இப்பணியைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடாக வெளியிட்டுவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப் பாராட்டவும் போற்றிப் புகழவும் வேண்டும். போற்றுவதோடு, வாழ்த்துவதோடு நின்று விடாமல் ஒவ்வொருவர் இல்லத்திலும் அகராதி நூல் இருப்பது போல், கலைக்களஞ்சியங்கள் போல் இடம் பெறவேண்டும்.

ஏனென்றால் பெரியாரின் சிந்தனைச் சிதறல்கள், மேடைகளில் எடுத்து வைத்த மேன்மையான கருத்து மணிகளைக் காற்றில் கலந்து போய் விடாமல் அறுவடை செய்து சேர்த்து வைத்த கருத்துக் களஞ்சியம், கருத்துக் குதிர்கள்தாம் குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு, புரட்சி, "Revolt" முதலிய பெரியார் நடத்திய ஏடுகள் ஆகும்.

நூலின் சிறப்பு

தலைவர் கலைஞர் அவர்களே தம் அணிந்துரையில் சுட்டிக் காட்டியதைப்போல் இந்த நூலின் சிறப்பு அம்சமாகத் தந்தை பெரியார் அவர்கள் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களும் அவர் கலந்து கொண்ட எண்ணற்ற நிகழ்ச்சிகளும் எந்தத் தேதியில் என்னென்ன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பதற்கான விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த விவரங்கள் எல்லாம் வருங்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் - திராவிட இயக்கத்தைச் சில கோணல் புத்தியாளர்கள், குறுக்குச் சிந்தனையாளர்கள் தவறாகப் பிழையாகக் காட்டுகின்ற நேரத்தில் - முறையாகவும் சரியாகவும் தெரிந்து கொள்ளவும் பெரிதும் உதவிடும் என்பதில் அய்யமில்லை.

தொடரும் பணி

பெரியார் களஞ்சியம் - குடிஅரசு தொகுதிகள் வெளியிடும் பணி ஏதோ அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்திடும் பணி அல்ல என்பதையும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் - தொடரும் பணி. இன்று குடிஅரசு வெளிவருவது - நாளை விடுதலையாக மலரும்.
இப்பதிப்புகள் வெளிவரும் நேரத்தில் புரட்சிக்கவிஞர் பாடிய சித்திரச் சோலைகளே உம்மைத் திருத்த இப்பாரினிலே எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ என்று சோலைகளைப் பார்த்துப் பாடிய பாடல் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

இந்தத் தொகுப்பினைச் செப்பமுற வெளிக்கொணரக் கடும் உழைப்பினை நல்கி வரும் பெரியவர் மு.நீ.சிவராசன் முதலாக, அவர் தலைமையிலே தேனீயை விடவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இளைஞர்கள், இளம் பெண்கள், கணினி வடிவமைத்தவர்கள், வடிவமைப்புச் செய்தவர்கள் மா.விஜயன், தஞ்சை ம.லெனின், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அச்சிட்டவர்கள் அதை வெளிக்கொணரப் பாடுபட்ட சைதை மதியழகன் விடுதலை நிருவாகிகள் - ப.சீதாராமன், க.சரவணன் என்று முகம் தெரிந்த - முகம் தெரியாத - பெயர் தெரிந்த, பெயர் தெரியாத அந்தப் பல உழைப்பாளிகளை, இந்த வேளையில் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களின் உழைப்பைக் கைதட்டிப் பாராட்ட வேண்டும். வாய் திறந்து பாராட்ட வேண்டும். அவர்கள் இயக்கத்தினுள் இயக்கமாகப் பணியாற்றி வருகிறார்கள்.

ஆசிரியரின் அயராத உழைப்பு

மெய்ப்புப் படிகளைக் கட்டி மூட்டை, மூட்டையாக ஆசிரியர் சிங்கப்பூர் சென்றாலும், திருச்சி சென்றாலும், அல்லது வேறு சுற்றுப்பயணம் சென்றாலும் உடன் தவறாது எடுத்துச் சென்று இந்த வயதிலும் சுறுசுறுப்பாகப் படித்துத் திருத்தங்கள், கருத்துகளை எடுத்துக்கூறி உரிய நேரத்தில் வெளியிட்டு வரும் பாங்கு அவ்வப்போது உடனிருந்து பார்த்தவர்களே என்னைவிட நன்கு அறிவர்.

ஆராய்ச்சியாளர் என்ற வகையில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை முதன் முதலில் ஆய்வு செய்து எம்.லிட். பட்டம் பெற்றவன் என்ற முறையில் குடிஅரசுக் கட்டுரைகளை 1970-களில் அன்றைய சின்னஞ்சிறு நூலகமாக இருந்து இன்று பெரிய சிறந்த ஆராய்ச்சி நூலகமாக வளர்ந்துள்ள பெரியார் மணியம்மை நூலகத்திலும், லிங்கிச் செட்டி தெருவில் இருந்த மறைமலை அடிகள் நூலகத்திலும் சுவைத்தவன் என்ற முறையில் இத்தொகுப்பு கள் கரும்பாகவும், வெல்லக் கட்டியாகவும் இனிக்கின்றன.

கரும்பென்றால் கூட அடிக்கரும்பு, நடுக்கரும்பு வரைதான் தித்திக்கும். ஆனால், இக்குடிஅரசு தொகுப்புகளோ முழுவதும் தித்திக்கும் ஒட்டுக் கரும்பு என்பேன்.

1938இன் முதன்மை நிலை

குடிஅரசு வெளிவந்த ஒவ்வொரு காலகட்டமும் தந்தை பெரியாரின் வாழ்வில் முதன்மையான கட்டம்தான். அது முதலில் வெளிவந்த ஆண்டான 1925 ஆக இருந்தாலும் சரி, சுயமரியாதை இயக்கம் தொடங்கிய 1926ஆம் ஆண்டாயினும் சரி - இப்போது தொகுதிகள் 24, 25 வெளிவந்த 1938 ஆண்டா யினும் சரி முதன்மையான கட்டங்கள்தாம். எனினும் சுய மரியாதை இயக்க வரலாற்றில் மிக முக்கியமான கட்டம் இது.

இதுவரை சுயமரியாதை இயக்கத்தவராக விளங்கிய கல்லடியும், சொல்லடியும் ஏச்சுகளும், இழிப்பும், பழிப்பும் பெற்ற தலைவர் பெரியார் இந்தி எதிர்ப்புத் தலைமைப் பொறுப்பு ஏற்றுத் தமிழன் தொடுத்த முதல் போரினைத் தலைமையேற்று - அதன்பின் சிறை புகுந்து, திராவிடர் இயக்கமாம் நீதிக்கட்சிக்குத் தலைமைப் பொறுப்பு சுமத்தப்பட்டு ஏற்றுக்கொண்ட காலம் இது.

புல் முளைத்துப் போய்விட்டது தேர்தல் தோல்வியால் என்று சொல்லப்பட்ட நீதிக்கட்சி, அய்யாவின் தலைமையில் புதுவாழ்வு பெற்ற காலம். குடிஅரசு ஒவ்வொரு தொகுப்பையும் அதில் காணப்படும் கல்லூரி காணாக் காளையான - அந்த முதுபெரும் கிழவரின் சொற்பெருக்கு - எழுத்துப் பெட்டகம் ஒவ்வொன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது - அவரை விண்ணுயர மட்டுமல்ல அதற்கப்பாலும் கொண்டு செல்ல வைக்கிறது. இத்தொகுப்புகளில் உள்ள விஷயங்களை, செய்திகளைத் திறனாய்வு செய்வது என்று ஒருவர் இறங்கினால் அது இத்தொகுப்புகள் போல் இன்னும் இரண்டு தொகுப்புகளாக முடியும். எனவே குறிப்பிடத்தக்க, மிக, மிக முதன்மையான இரண்டொரு நிகழ்ச்சிகளை மட்டும் தொட்டுக் காட்டி, நூலைப் படிப்பவர்களை உட்புகச் சொல்கிறேன்.

காங்கிரசின் இன்னொரு முகம்

காங்கிரஸ் என்றால் ஏதோ விடுதலைக்குப் பாடுபட்ட இயக்கம் என்று மட்டும்தான் எண்ணிக் கொண்டிருப்பவர் களுக்கு அக்காலக் காங்கிரஸ் பேரியக்கத்தின் இன்னொரு முகம் இத்தொகுப்பைப் படித்தால் தெரியும் என்று கூறுவதால் காங்கிரசு அன்பர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஏனென் றால் கடைசி வரை கதர் உடுத்திய என் தந்தை, காங்கிரசில் பல்லாண்டுகளாகத் தலைமைப் பொறுப்பை ஏற்ற குடும்பத்தைச் சேர்ந்த சுயமரியாதைக்காரன் - தந்தை பெரியார் என்ன நோக்கத்திற்காகக் காங்கிரசிலிருந்து கொண்டிருந் தாரோ, என்ன நோக்கத்திற்காகக் காங்கிரசைவிட்டு விலகி னாரோ, என்ன நோக்கத்திற்காகச் சுயமரியாதை இயக்கம் தொடங்கினாரோ அந்தக் கோட்பாடுகளை உறுதியாகப் பின்பற்றி இருப்பவன்.

காலித்தனம்

தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறித் தன்மதிப்பு இயக்கம் கண்ட பிறகு காங்கிரசு இயக்கத்தவர் மட்டுமல்ல, காங்கிரசுப் பத்திரிகைகளும் காலித்தனத்திற்கு ஆதரவாக இருந்திருப்பதைக் காண்கிறோம்.

காங்கிரஸ் ராஜ்ஜியமும் கவர்னர் கடமையும் எனும் முதல் கட்டுரையில் தொடக்கமே இப்படித்தான் - எச்சரிக்கை என்பதோடு தொடங்குகிறது.

காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய முட்டாள்தனமானதும் சூழ்ச்சிகரமானதுமான காரியங்களைப் பற்றி யார் சமாதானம் கேட்டாலும் காலித்தனத்தையும் பலாத்காரத்தையுமே சமாதானமாக உபயோகிக்கத் தீர்மானித்து விட்டார்கள் என்றுதான் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.

காங்கிரஸ்காரர்கள் தவிர வேறு யாருக்கும் பொதுக்கூட்டம் கூட்டும் உரிமையே இருக்கக் கூடாது என்பதுதான் காங்கிரஸ்காரர்களின் சுயராஜ்ஜியமாகவும் பேச்சுச் சுதந்திரமாகவும் இருந்து வருவதாகவும் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. சற்றேறக் குறைய இந்த இரண்டு மூன்று வருஷ காலமாய்க் காங்கிரஸ்காரர்களின் காலித் தனத்தை அவ்வப்போது நாம் வெளியிட்டு வந்திருப்பதுடன் அப்படி வெளியிடும் ஒவ்வொரு, சந்தர்ப்பத்திலும் பொது ஜன சமாதானத்துக்கும் அமைதிக்கும் காப்பளிக்கும்படி, பொறுப்பான அதிகாரிகளுக்கும் கவர்னர் பிரபுக்கும் வேண்டுகோள் செய்துகொண்டே வந்திருக்கிறோம்.

தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கூட்டங்களில் 100-க்கு 99 கூட்டங்களில் காங்கிரஸ் காலிகள் கலகம் செய்தே வந்திருக்கிறார்கள். இவற்றைக் காங்கிரஸ் பத்திரிகைகள் விளம்பரப்படுத்திக் காலிகளுக்கு உற்சாகமூட்டி மறுபடியும் மேற்கொண்டும் மற்ற இடங்களி லும் காலித்தனம் செய்ய தூண்டியே வந்திருக்கின்றன.

காங்கிரஸ் காலிகளால் கூட்டங்களில் மிக்க இழிவானதும், கோபமூட்டத்தக்கதுமான வார்த்தைகளையும் வேண்டுமென்றே தூஷணையான விஷயங்களையும் கொண்ட துண்டுப் பிரசுரங்களை அள்ளி இறைப்பதும், கையில் கொடுப்பதும், தபாலில் அனுப்புவதுமான அயோக் கியத் தனங்கள் ஏற்பட்டு வேண்டுமென்றே மக்களை வம்புக்கு இழுப்பது போன்ற காரியங்கள் நடந்த வண்ண மாகவே இருந்திருக்கின்றன.

கூட்டங்களை எப்படியாவது கலைத்து விடுவதிலேயே காலிகள் கவலை வைத்து எவ்வளவு பொறுப்புடனும் பயத்துடனும் நடந்து கொள்ளும் கூட்டங்களிலும் காங்கிரஸ் காலிகள் சிலர் கூடிக் கொண்டு ஜே போட்டு கலகம் செய்வதும் சிறு பிள்ளை களைத் தூண்டிவிட்டுத் தொல்லை விளைவிப்பதுமான காரியம் செய்தே வந்திருக்கிறார்கள். இவ்வளவையும் பொறுமை யுடன் சமாளித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது.

அன்றைய காங்கிரஸ்காரர்கள் ஏதோ காந்திய நெறி - வன்முறையற்ற அகிம்சா நெறி வழி நடந்து, வந்தே மாதரம் கூறிக் கைராட்டையில் நூற்று, ஈசுவர அல்லா தேரேநாம் வைஷ்ணவ ஜன்தோ என்று பாடிக் கொண்டிருந்தவர்கள் என்று எண்ணிவிடக் கூடாது. பெரியார் கூட்டங்களில் மட்டுமல்ல - மதுரையில் பேசிய சர்.குமாரசாமி ரெட்டியார் கூட்டத்தில் சர்.பி.டி. ராஜர் அமைச்சராய் இருக்கும் போதே சேலம், கோயம்புத்தூர் கூட்டங்களில், திருச்சி, சேலத்தில் தோழர்கள் சித்தையன், நடேசன் முதலியவர்களை மேடைக்கு அழைத்து நையப்புடைத்த சம்பவங்கள், திருச்சி தமிழர் மாநாட்டில் நடந்த காலித்தன நிகழ்ச்சிகள் என்று பெரியார் பட்டியல் போடுகிறார்.

காந்தியவாதிகள் கல்லெறிந்த போது சுயமரியாதைக் காரர்களை எதிர்த்துத் தாக்க, வன்முறையில் இறங்கப் பெரியார் ஒருபோதும் அனுமதிக்காத உண்மையான அகிம்சாவாதியாக இருந்திருக்கிறார். அப்படிப் பட்ட உணர்வு கொண்டவர்களை அழைத்துக் கண்டித்து முன்னே நிற்காதே என்று விரட்டிய உத்தமத் தலைவராக விளங்கியிருக்கிறார் என்பதற்கு இத்தொகுப்புகள் சான்று மட்டுமல்லாது - எவ்வளவு உயர்ந்த பண்பாளர் பெரியார் என்று காட்டுவதைப் பெரியாரின் இந்த நினைவு நாளில் இந்தத் திறனாய்வு வழி பதிவு செய்தல் வேண்டும்.

(24.12.2010 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் நினைவு நாள் கருத்தரங்கில் - எழுத்துரை)


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...