Wednesday, May 19, 2010

பார்வதி அம்மையார் மருத்துவ சிகிச்சை மனிதநேயத்தில் தலையிடாத ஒரே கட்சி அதிமுக-ஜெயலலிதா தமிழர் தலைவர் ஆதாரப்பூர்வமான பேச்சு



சென்னை, ஏப்.28_ பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் மருத்துவ சிகிச்சை-_ மனிதநேய நிகழ்வில் தலையிடாத ஒரே கட்சி அதிமுகதான்_ஜெயலலிதாதான் என்று திராவிடர் கழக தலைவர் கிகி.வீரமணி அவர்கள்கூறி தோலுரித்தார்.
பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பிய பாவிகள் யார் என்பதை விளக்கும் பொதுக்கூட்டம் 25.4.2010 அன்று சென்னை_பெரியார் திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் 30.4.2010ன் தொடர்ச்சி வருமாறு:
முதல் களபலி உண்மைதான்
இந்தக் கூட்டத்தினுடைய நோக்கம் வெறும் கண்டனத்தைத் தெரிவிப்பது மட்டுமல்ல. உண்மை விளக்கத்தை சொல்வது மட்டுமல்ல. ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு. போர்க்களத்திலே முதல் கள பலியாவது யார் என்றால் வீரர்கள் அல்லர்.
உண்மைகள்தான் முதல் களபலியாகும். போர்க்காலத்திலே நடக்கலாம். ஆனால் இப்பொழுது மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய ஒரு நிலையிலே உண்மைகள் களபலியாவதிருக்கிறதே, அது எவ்வளவு கொடுமையான ஒன்று என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சினைபற்றி எல்லோருமே பேசினார்களே.
அ.தி.மு.க நிலை என்ன?
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க நிலை என்ன? நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது நான் தமிழ் ஈழத்தைப் பிரித்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன் என்று இந்த அம்மையார் சொன்னாரே. அ.தி.மு கட்சியின் கடைசி உறுப்பினராவது பார்வதி அம்மையார் சிகிச்சை பெறுவது பற்றி பேசினாரா?
ஒரு கை தொலைபேசி செய்தி வருகிறது. அ.திமுக உறுப்பினர் ஒவ்வொருவராக எழுந்து சட்டமன்றத்தை விட்டு வெளியே போய்விட்டார்கள். ஆக, தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவே இல்லை. பார்வதி அம்மையார் பிரச்சினையில் அ.தி.மு.க மட்டும்
பார்வதி அம்மையாருடைய மருத்துவ மனிதாபிமானப் பிரச்சினையை அ.தி.மு.க வைத் தவிர, ஜெயலலிதா அவர்களுடைய தலைமையிலே இருக்கக் கூடிய கட்சியைத் தவிர மற்ற எல்லோரும் இதில் பேசினார்கள்.
இதைக் கேட்கிறவர்கள் எல்லோருக்குமே சங்கடமாக இருக்காதா? எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம் என்பவர்களுக்கு எவ்வளவு கோபம் வரவேண்டும்? எவ்வளவு ஆத்திரம் பொங்க வேண்டும்? எவ்வளவு ஆவேசம் வரவேண்டும்?
ஆனால் அதை எல்லாவற்றையும் நீங்கள் வேறு பக்கம் திருப்பி விட வேண்டும் என்று நினைத்தால் என்ன அர்த்தம்? அரசியலுக்கு இதைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இதை விட உதாரணம் வேறு என்ன வேண்டும்?
இங்கே எங்களுடைய பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஒரு சம்பவத்தை நினைவூட்டினாரே. ஈழத்திலே மிகப் பெரிய அளவுக்குப் போர் நடந்துகொண்டிருக்கின்ற காலகட்டத்திலே அவர்களுக்கெல்லாம் ஆதரவு புருஷராக, மதி உரைஞராக, அறிவை சொல்லித்தருபவர்களாக திகழக்கூடியவர்களைக் கேட்கிறோம்.
ஆண்டன் பாலசிங்கத்தைத் தடுத்தவரும் இவர்தானே
ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் நீரிழிவு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஒரு சிறுநீரகம் முழுக்க செயல்படாமல் ஆகிப்போனது. இன்னொரு சிறுநீரகம் அவருக்கு செயல்இழந்து கொண்டேயிருக்கிறது. ஆண்டன் பாலசிங்கம் தமிழ்நாட்டில் தங்கி சிகிச்சை பெற லண்டன் அரசு அனுமதி கொடுத்தது. மருத்துவ சிகிச்சைக்கு இவர் வர முயற்சித்தபொழுது இலங்கை அரசும் ஆட்சேபணை செய்யவில்லை.
அப்பொழுது தமிழகத்திலே முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் இருந்துகொண்டிருக்கின்றார். அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னார். எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஆண்டன் பாலசிங்கத்தை தமிழகத்திலே சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதிக்கவே கூடாது. அவரை விடவே கூடாது என்று சொல்லி சட்டமன்றத்திலும் தெளிவாக இதைப் பேசினார். எதையாவது இடையில் பிடித்து பாராளுமன்றத்-திற்குள் நுழைந்து விடலாம் என்று நினைத்தார்கள். தமிழ்மக்கள் ஏமாறவில்லை. சில பேர் ஏமாந்தார்கள்.
ஜெயலலிதாவிடம் வைகோ பேசினாரா?
ஆகவே உண்மையான தடை எங்கேயிருக்கிறது? உண்மையாகவே இதற்குக் காரணமானவர்கள் யார்? அ.தி.மு.க பொதுச்செயலாளர் மீது ஆத்திரப்-பட்டாலும் இதைப் பற்றி கூட்டணியில் உள்ளவர்கள் பேசவேண்டாமா? ஏப்.27ஆம் தேதி கடை அடைப்பு பொது வேலை நிறுத்தம் என்று சொல்லுகிறார்கள். நம்முடைய சகோதரர் வைகோ போன்றவர்கள் எல்லாம் அம்மாவைப் போய் பார்த்திருக்கிறார்கள்.
பென்னாகரம் இடைத்தேர்தலுக்குப் பிறகு போயஸ் தோட்டத்திற்கு யார் போனாலும் உட்கார வைத்துப் பேசுகிறார்கள் (சிரிப்பு_கைதட்டல்).
அந்த அம்மையாரைப் பார்த்திருக்கிறார்கள். படமெல்லாம் வந்திருக்கிறது. அந்த அம்மையாரிடம் நீங்கள் கேட்டிருக்கலாமே. நீங்கள் முதலமைச்சராக இருந்தபொழுது போட்ட உத்தரவு காலாவதியாகி-விட்டதா? அப்படி இல்லை என்றால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலே நீங்கள் பேசலாமே என்று ஒரு வார்த்தை பார்வதி அம்மாள் அவர்களைப் பற்றி இவர்கள் பேசியிருக்கின்றார்களா? ஏன் பேசவில்லை? வெளியே வந்தார்கள். உடனே கலைஞர் அவர்களுக்கு எதிராக உண்ணாவிரதம் என்று அறிவித்தார்கள். கலைஞரா இதற்குக் காரணம்?
உடனே தடையை நீக்கினார் கலைஞர்
ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது எழுதிய தடை இன்னமும் அமலில் இருக்கிறது. அந்தத் தடையை நீக்க வேண்டும். அந்தத் தகவல் தெரிந்தவுடனே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்படும் என்று அறிவித்தார்.
சகோதரர் நெடுமாறன் அவர்கள் ஆனாலும், நம்முடைய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆனாலும் ஜெயலலிதா அவர்கள் இவர்கள் மீது வழக்குப் போட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலமாக எந்தப் பொதுக்கூட்டத்திலும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டார். இவர்கள் எல்லாம் மேடைக்கு இங்கு வந்தால் பேச மாட்டார்கள். இப்படித்தான் செய்வார்கள்.
பொம்மலாட்டத்தில் காட்டுகிற மாதிரிதான். வாயைத் திறக்காமல் கைகளை அசைத்துக்காட்டி நீதிமன்றம் வாய்ப்பூட்டு போட்டிருப்பதை தெரிவிப்பார்கள்_சைகை மூலமாக (சிரிப்பு_-கைதட்டல்).நாம் அதற்கு வியாக்யானம் செய்வோம். இதே மேடையில்தான் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு ஒரு விண்ணப்பதைக் கொடுத்தோம்.
கோயில் பூட்டுக் கதவையே திறந்தவர்
கலைஞர் கோயில் பூட்டுக் கதவையே திறந்தவர். இவர்களுடைய வாய்ப்பூட்டுகளைத் திறக்க வேண்டும் என்று நான்தான் இங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துப் பேசினேன். விடுதலையில் அது கட்டம் கட்டி வந்தது. பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன் ஆகியோருடைய வாய்ப்பூட்டையும் திறக்கிறோம் என்று நாங்கள் நம்புகிறோம் என்று சொன்னேன்.
அடுத்தநாள் நான் முதல்வர் கலைஞர் அவர்களை சந்தித்தவுடனே கேட்டார். என்னய்யா நீங்கள் விடுதலையில் இப்படி பேசியிருப்பது வந்திருக்கிறதே. நாம் என்ன செய்ய முடியும்? நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறதே என்று சொன்னார்.
நான் சொன்னேன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய காலத்தில்தான் இப்படி ஓர் உத்தரவு வாங்கியிருக்கிறார்கள்.
எங்களுக்கு அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேச எந்த ஆட்சேபணையும் இல்லை என்று அரசு வழக்குரைஞர் மூலம் நீங்கள் நீதி மன்றத்தில் தெரிவித்தால் வழக்குகள் உடனடியாக ரத்தாகிவிடும். இவர்களும் பொதுக்கூட்டத்தில் பேசக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று சொன்னேன். அப்படியா? என்று கலைஞர் கேட்டார். கேட்டவுடனே என் எதிரிலேயே தொலைபேசியை எடுத்து அரசு வழக்கறிஞருக்கு அவரே சுழற்றினார். என்னய்யா இந்த மாதிரி வழக்கு இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.
உடனடியாக நெடுமாறன், சுப.வீரபாண்டியன் மீதிருக்கின்ற தடையை வாபஸ் பெறுங்கள். இதை நீதிமன்றத்தில் ரத்து செய்துவிட்டு தன்னிடம் சொல்ல வேண்டுமென்று சொன்னார்.
வாய்ப்பூட்டு அகற்றப்பட்டது
இரண்டு நாள் அந்த நிலைமாறி வந்தது. தடை விலக்கப்பட்டது. அதன் பிறகுதான் வாய்ப்பூட்டு அகற்றப்பட்டது. அதற்குத்தான் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
எதற்காக சொல்லுகிறேன் என்றால், கலைஞர் அவர்கள் என்றைக்கும் விரோதம் பார்த்துக் கொண்டிருப்பவர் அல்லர். எத்தனையோ பேர் விமர்சனம் செய்கிறார்கள். அதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை. ஈழப்பிரச்சினையில் ஈடுபாடு உள்ளவரிடம் போய் எதிர்ப்பைக் காட்டலாமா? அதே நேரத்தில் வைகோ அவர்கள் 13 மாதங்கள் சிறையில் ஓய்வு எடுப்பதற்கு யார் காரணம் என்பதும் உங்களுக்குத் தெரியும்.
நாடாளுமன்றத்திற்குச் செல்வதைத் தடுத்தவர்
அப்பொழுதும் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து எழுதினோம். அவர் சிறையில் இருந்தபொழுது ஒரு நாள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள நீதிபதி அனுமதி வழங்கினார். உடனே இந்த அம்மையார் ஆட்சியில் தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்து அவர் டில்லி நாடாளுமன்ற ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தநாள் எதிர்க்கட்சி தலைவர் அந்நாள் முதலமைச்சர் தான் அந்தத் திருப்பணியை செய்தார். இதெல்லாம் பழைய கதை. ஆனால் இன்றைக்குத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி நம் அனைவர் முன்னாலும் உள்ள பிரச்சினை என்னவென்றால் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வந்து அவருக்கு தக்க சிகிச்சை கொடுக்க வேண்டும் (பலத்த கைதட்டல்). அதற்கு நாம் உதவ வேண்டும். அவரை வைத்து அரசியல் நடத்தக்கூடாது. அரசியல் நடத்துவதற்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது.
முதல்வர் மூலமாகத்தான் செய்ய முடியும்
முதல்வர் மூலமாகத்தான் இதை செய்ய முடியும். நல்ல வாய்ப்பாக கலைஞர் முதலமைச்சராக இருக்கிறார். மனிதநேயம் உள்ள ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார் (கைதட்டல்). நாம் அவரிடத்திலே சொல்லுவோம். சட்டமன்றத்திலும் முதல்வர் கலைஞர் உறுதி மொழி கொடுத்-திருக்கின்றார்.
சொல்லாத வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு அவருக்கு இருக்கும்.
தமிழக அரசுக்குக் கடிதம் எழுதுங்கள்
எனவே, இந்தக் கூட்டத்தின் வாயிலாக பார்வதி அம்மாள் அவர்களுக்கு எங்களுடைய வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து உடனடியாக நீங்கள் உங்களுடைய விருப்பதைத் தெரிவித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதுங்கள். நான் மருத்துவ உதவி பெற தமிழகத்திற்கு வருகிறேன். உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பது தவறல்ல.
ஆகவே அவர்கள் கடிதம் அனுப்ப வேண்டும். நம்முடைய முதல்வர் ஏற்கெனவே சட்டமன்றத்திலே உறுதி அளித்திருக்கின்ற காரணத்தால் மீண்டும் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்வார்கள். செய்ய வேண்டும் என்பதுதான் இந்தக் கூட்டத்தினுடைய ஒருமனதான கருத்து என்பதை நீங்கள் எல்லோரும் ஏற்று, அதற்கு கைதட்டல் மூலமாக உங்களுடைய ஆதரவைத் தெரிவியுங்கள் (பலத்த கரவொலி). நடந்தவைகள். நடந்தவைகளாகப் போகட்டும். நடப்பவைகள் நல்லவையாக நடக்கட்டும்
இனி நடப்பவைகள் நல்லவைகளாக மாறட்டும் என்று அண்ணா அவர்கள் சொன்னதையே நினைவூட்டி அந்த வகையிலே மீண்டும் மனித நேயத்தைக் காப்போம்! மருத்துவத்தை அளிப்போம் என்று கூறி முடிக்கிறேன். _இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...