தமிழக அரசு, அரசு பள்ளி மாணவ -
மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி
வருகிறது. இதுவரை சென்னையில் சில பள்ளிகளில் மட்டும் காலை உணவு
வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் சென்னையில் உள்ள அனைத்து
மாநகராட்சிப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த முனைப்பு
காட்டி வருகிறது.
இதற்காக, ஏற்கெனவே கிருஷ்ண பக்தி
இயக்கமான இஸ்கான் நிறுவனத்தின் 'அட்சய பாத்ரா' என்ற துணை நிறுவனத்துடன்
ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பூண்டு,
வெங்காயம் போன்றவைகள் உடலில் உஷ்ணத்தைத் தூண்டி, உணர்ச்சி களை
ஏற்படுத்தும் எனக் கூறும் இஸ்கான் அமைப்பு, தமிழர்களின் அன்றாட உணவில்
இடம்பெற்றுள்ளதும், மருத்துவ குணமும், சுவையும் கொடுக்கும் பாரம்பரிய
உணவுப் பொருள்களான பூண்டையும், வெங்காயத் தையும் சேர்ப்பதைத் தவிர்த்து
வருகிறது. பூண்டு, வெங்காயம் இன்றித் தயாரிக்கப்படும் உணவு, தமிழகப்
பள்ளிக் குழந்தைகளிடையே வரவேற் பைப் பெறுமா என்பது கேள்விக்குறியாகி
உள்ளது. ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் சார்பில் கருநாடகவில் வழங்கப்பட்டு
வரும் சத்துணவுத் திட்டம் பெரும் தோல்வி அடைந்துள்ளது.
கருநாடக மாநிலத்தில் மதிய உணவு வழங்கும்
திட்டம் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி அங்குள்ள அரசு மற்றும் அரசு ஆதரவுப் பள்ளிகளில் பயிலும் மாண
வர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைகிறார்கள்.
கருநாடகத்தில் மொத்தம் 71 என்.ஜி.ஓ.
நிறுவனங்கள் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துகின்றன. சுமார் 9.31
இலட்சம் மாணவர்கள் இந்த மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பயனடைகின்றனர்.
இதில் 4.43 இலட்சம் மாணவர்களுக்கான உணவை 'அட்சய பாத்ரா' என்ற என்.ஜி.ஓ.
வழங்கி வருகிறது.
இந்த 71 என்.ஜி.ஓ. நிறுவனங்களில் அட்சய
பாத்ரா அமைப்பும் ஒன்று. 'அட்சய பாத்ரா' அமைப்பு, அகில உலக கிருஷ்ண பக்தி
அமைப்பு எனப்படும் இஸ்கான் நிறுவனத்தின் துணை அமைப்பாகும். இந்த
அமைப்புடன் ஒப்பந்தம் போட்டு, அங்குள்ள சில பகுதிகளில் உள்ள பள்ளி
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு சார்பில் வழங்கப்பட்டு
வரும் மதிய உணவு அங்குள்ள மாணவ - மாணவிகள் மத்தியில் வரவேற்பைப்
பெறவில்லை. பல மாணவ - மாணவிகள் அரசு வழங்கும் மதிய உணவு சாப்பிடுவதை
புறக்கணித்து வருகின்றனர். ஏனைய என்ஜிஓ நிறுவனங்கள் வழங்கும் மதிய உணவு
பள்ளிக் குழந்தைகளிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அட்சய பாத்ரா
நிறுவனம் வழங்கும் பள்ளிகளில் மட்டும், மதிய உணவுத் திட்டம் பெரும்
தோல்வி அடைந்து உள்ளது.
ஆனால், தமிழக அரசோ, காலை உணவு வழங்கும்
திட்டத்தை அட்சய பாத்ரா நிறுவனத்துக்குத் தாரை வார்த்துள்ளதானது.
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அட்சய பாத்ரா நிறுவனத்தினர் தயாரிக்கும்
உணவு களில் உடலுக்குத் தேவையான வெங்காயமும், பூண்டும் சேர்க்கப்படுவ
தில்லை. உணவுகளுக்கு முக்கிய பொருளாக விளங்குவது பூண்டும், வெங்காயமும்
ஆகும். ஆனால், அதை சாப்பிட்டால் கெட்ட உணர்ச்சிகள் உண்டாகுமாம்!
வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை
அல்லியம் இனத்தைச் சேர்ந்தவை, இவைகளில் கலோரிகள் குறைவு ஆனால் வி.டி.சி,
வி.டி.பி., பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் பல ஊட்டச்சத்துக்கள்
நிரம்பியுள்ளன; ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புக் கலவைகள்
உள்ளன; கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல்; புற்றுநோயை
எதிர்க்கும் கலவைகள் உள்ளன; மேம்பட்ட எலும்பு அடர்த்தியுடன் தொடர்புடையது;
பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டவை! குடல் ஆரோக்கியத்திற்கு
நல்லது, வெங்காயம் மற்றும் பூண்டு சக்தி வாய்ந்த மூலிகைகள் என்று
ஆயுர்வேதம் கருதுகிறது. அவை பாரம்பரியமாக மருந்தாகப்
பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இஸ்கான் நிறுவனம், பூண்டு, வெங்காயத்தை
உணவுகளில் சேர்ப்பதில்லை, அவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்
மோசமாக்கும் என்றும், உடல் நிலையை வெப்பமடையச் செய்யும் என்றும் கூறுவதற்கு
என்ன ஆதாரம்?
இந்த விவகாரம் கருநாடகாவில் சர்ச்சையை
ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கருநாடக மாநில மத்திய உணவு திட்ட இயக்குநர்,
"மதிய உணவில் வெங்காயமும், பூண்டும் சேர்ப்பது ஊட்டச்சத்தை மட்டுமல்ல,
உணவின் சுவையையும் அதிகரிக்கும். இதனைக் கருத்தில் கொண்டே நாங்கள்
அந்நிறுவனத்தை மாநில அரசு தரும் பட்டியலின்படி உணவு வழங்கக்
கேட்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு பதில் தெரிவிக்கவில்லை" என்று
குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு நேரடியாக பதில் தெரிவிக்க மறுத்த
அட்சய பாத்ரா நிறுவனம், மத்திய அரசு மற்றும் கருநாடக அரசின் மனித
வளத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளபடியே உணவு வழங்கப்பட்டு வருவதாக
அறிக்கை வெளியிட்டு, தனது பிடிவாதத்தைத் தளர்த்த மறுத்து விட்டது.
இஸ்கான் நிறுவனத்துக்குப் பாஜக உயர் தலைவர்கள் மற்றும் மத்திய அரசில்
செல்வாக்கு உள்ளதால், அந்த நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்க முடியாமல்
கருநாடக அரசு திணறி வருகிறது. கருநாடகாவில் அட்சய பாத்ரா நிறுவனம்
வழங்கும் சத்துணவுத் திட்டத்தின் நிலைமை இப்படியிருக்க, தமிழக அரசு,
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அட்சய பாத்ரா
நிறுவனத்திடமே ஒப்படைத்து உள்ளது.
இந்த அமைப்பு சார்பில் கடந்த ஆண்டு
(2019) பிப்ரவரி மாதம் திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் காலை உணவுத்
திட்டம் தொடங்கப்பட்டது. அதையடுத்து, தற்போது சென்னை உள்பட பல பகுதிகளில்
காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழகஅரசு அட்சய பாத்ரா நிறுவனத்திடம்
ஒப்படைத்து உள்ளது.
காலை உணவு தயாரிக்கும் வகையில் அட்சய
பாத்ரா நிறுவன அமைப்பினர் அமைக்கும் உணவுக் கூடத்திற்கான பூமிபூஜை
விழா கடந்த 15ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக
ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஒ. பன்னீர்செல்வம்
உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர்
'அட்சய பாத்ரா' அறக்கட்டளை இந்திய நாடு முழுவதும் மத்திய, மாநில
அரசுகளின் ஆதரவோடு, லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவை
அர்ப் பணிப்பு உணர்வுடன் அளித்து வருவதாகவும், தமிழகத்தில் 12 ஆயிரம்
மாணவர்களுக்கு காலை உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும்
தெரிவித்தார்.
ஏற்கெனவே சென்னையில் 24 பள்ளிகளில்
பயிலும் 5785 குழந்தை களுக்கு தினந்தோறும் காலை உணவினை அளித்து வரும்
நிலையில், சென்னை மாநகராட்சியின் 35 பள்ளிகளைச் சேர்ந்த 12000
பிள்ளைகளுக்கு சத்தான காலை உணவினை வழங்க அட்சய பாத்ரா அமைப்பு
திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு, தெலங்கானா,
ஆந்திரா, ஒடிசா போன்ற பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தான் மதிய
உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் முட்டைகள், பயறு வகைகள்
உள்பட பல விதவிதமான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றனஆனால், அட்சய பாத்ரா
நிறுவனமோ உப்பு சப்பில்லாத உணவையே வழங்கி வருகிறது.
பூண்டு, வெங்காயத்தை உணவில்
பார்ப்பனர்கள் தவிர்க்கக் கூடியவர்கள், அந்தக் கலாச்சாரத்தைத் திணிப்பது
இதன் பின்னணியில் உள்ளது. உணவில் மதவாதத்தை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க
முடியாது - முடியவே முடியாது.
No comments:
Post a Comment