Monday, June 5, 2017

பெண்களைப் பாலியல் பண்டமாகப் பார்க்காத நிலை பெரியார் கொள்கைகள் நூற்றுக்கு நூறு பரவினால்தான் சாத்தியம்!




திருச்சி, ஜூன் 4- பெண்களைப் பாலியல் பண்டமாகப் பார்க்காமல் அறிவியல் சிந்தனையாளர்களாக பார்க்கும் நிலை - பெண்கள் சிந்தனைகள் நூற்றுக்கு நூறு பரவும்போது தான் ஏற்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
27.5.2017 அன்று மாலை திருச்சி உழவர் சந்தையில் பஞ்சப்பட்டி சாவித்திரி அம்மாள் நினைவரங்கத்தில் நடைபெற்ற பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநில மாநாடு - கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
சுயமரியாதைச் சுடரொளி பஞ்சப்பட்டி சாவித்திரி அம்மாள் நினைவரங்கம்
மிகக் குறுகிய காலத்தில் வெகு சிறப்போடு நடைபெற்று முடிவடையக்கூடிய இந்த சிறப்பான திராவிடர் கழகத்தின் மகளிர் அணித் தோழர்கள் நடத்தக்கூடிய காலையில் கலந்து ரையாடல், மாலையில் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கக்கூடிய அன்பிற்குரிய அம்மையார் சுயமரியாதைச் சுடரொளி பஞ்சப்பட்டி சாவித்திரி அம்மாள் அவர்களுடைய பெயரால் நினைவரங்கமாக அமைந்த இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிக்கக்கூடிய கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களே,
இந்த சிறப்பான மாநாட்டையும், கலந்துரையாடலையும் தன்னுடைய சக தோழர்களோடு மிகக் கடுமையான உழைப்பை மேற்கொண்டு நடத்திய வரவேற்புக் குழுவின் தலைவர் மானமிகு தோழர் திராவிடர் மகளிர் பாசறை மாநில செயலாளர் செந்தமிழ்ச்செல்வி அவர்களே,
செந்தமிழ்ச்செல்வியோடு மிகச் சிறப்பாக இணைந்து செயலாற்றி, மாநாட்டை வெற்றிகரமாக ஆக்கிய தோழர் கலைச்செல்வி அவர்களே,
தோழர் இன்பக்கனி அவர்களே, தோழர் உமா அவர்களே, இன்னும் தொடர்ந்து அவர்களோடு ஒத்துழைப்புக் கொடுத் துக் கொண்டிருக்கக்கூடிய அருமை மகளிரணி தோழர்களே, தோழர் பார்வதி அவர்களே, நன்றியுரை கூறிய கிரேசி அவர் களே, கொடியேற்றிய மானமிகு தோழர் இறைவி அவர்களே,
மாநாட்டைத் திறந்து உரையாற்றிய பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு அருமையான கருத்துரை கள் வழங்கிய மணியம்மை அவர்களே, மதிவதினி அவர் களே, வழக்குரைஞர் பானுமதி அவர்களே,
இங்கே சிறப்பாக இருவர் பாராட்டப் பெற்றார்கள். சிறந்த தொண்டறத்தினுடைய சின்னங்களாக இருந்து, நல்ல வாய்ப்பாக வளர்ந்துகொண்டிருக்கக் கூடியவர்களுக்கு எடுத் துக்காட்டாக இருக்கக்கூடிய வகையில் இரண்டு பெயர்களை பாராட்டுப் பெறக்கூடியவர்களாக இந்த மாநாட்டு வரவேற்புக் குழு சிறப்பாக தேர்ந்தெடுத்து, அருமையாகப் பாராட்டியி ருக்கிறது.
பொறியாளர் மங்கை பாணு
நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்களை, சிறப்பாகப் பணி யாற்றக்கூடிய அத்துணை பேருக்கும் நாம் அவ்வப்பொழுது கடமை தவறாது வழங்கல் வேண்டும். அதுதான் மிக முக் கியம். அந்த வகையில், சிறப்பான வகையில் சமூக ஆர்வ லராக இருக்கக்கூடிய திருநங்கை பொறியாளர் மங்கை பானு அவர்களை சிறப்பாக அடையாளம் கண்டு இங்கே பாராட்டினார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு நாம் தனித்த மரியாதையை இந்த இயக்கம் எப்பொழுதும் அளிக்கத் தவறுவதே இல்லை. பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பாக, தமிழகத்தினுடைய ஏன் இந்தியாவினுடைய வரலாற்றிலேயே ஒரு திருநங்கைக்கு, நர்த்தகி நட்ராஜ் என்று சொல்லக்கூடிய ஒரு திருநங்கைக்கு கவுரவ முதுமுனைவர் டாக்டரேட் அளித்த பெருமை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் தைச் சார்ந்தது. அதனை பல ஆங்கில ஏடுகள் எல்லாம் கூட மிகச் சிறப்பாகப் பாராட்டி எழுதினார்கள்.
அதுபோலவே, பொறியாளராக உயர்ந்து, போராளியாக திகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒருவரை பாராட்டியிருக் கிறோம்.
மறைந்தும் மறையாத நம்முடைய
புலவர் கோ.இமயவரம்பன்
அதுபோலவே, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம். இந்தக் குழந்தைகள் இல்லத்தை அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் உருவாக்கினார்கள். அவர்கள் உருவாக்கியதைத் தொடர்ந்து, எங்கள் நெஞ்சத்தை விட்டு நீங்காத, தந்தை பெரியாரின் உதவியாளராக இறுதிவரையில் இருந்து, எங்க ளுக்கெல்லாம் தோன்றாத் துணையாக, தோழராக இருந்து, மறைந்தும் மறையாத நம்முடைய புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள், அந்தக் குழந்தைகளுக்கெல்லாம் உற்ற சகோத ரனாக திகழ்ந்து கொண்டிருந்தார்கள்.
திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் பெருமை...
அந்தக் குழந்தைகள் இல்லத்தை தான் குழந்தையாக இருந்து வளர்ந்த காலத்திலிருந்து, இன்றைக்கு அதனைக் கண்காணித்து, பெருமையோடு நடத்தக்கூடிய அளவிற்கு, ஏறத்தாழ 32 திருமணங்களை அந்தப் பிள்ளைகளுக்கு நடத்தி வைத்துவிட்டு, அந்தக் குடும்பங்கள் எல்லாம் சிறப்பாக இருக் கிறது என்கிற பெருமை, வேறு எந்த குழந்தைகள் இல்லத் திற்கும் இருக்க முடியாது. அதனுடைய அங்கீகாரத்தை நாங் கள் சொல்வதைவிட, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சொன்னார்.
திருச்சியில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்திற்குக் கொண்டு போய் சேர்க்கலாம் குழந்தைகளை என்று சிலர் சொல்லியபோது, ஏன் அங்கே கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம் சிறப்பாக நடைபெறுகிறதே, அங்கே சென்று குழந்தைகளை சேருங்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே தீர்ப்பு சொன்னார். அப்படி அந்த இல்லம் சிறப்பாக நடைபெறுவதற்கு அடித்தளம், கடும் உழைப்பு நம்முடைய தோழர் தங்காத்தாள் அவர்கள் ஆவார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய சிறப்பான ஒன்று.
தோழர் தங்காத்தாள்
தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் அடை யாளம் கண்ட யாரும் சோடை போனவர்களே கிடையாது. அப்படிப்பட்ட அருமையான ஒருவரை தேர்ந்தெடுத்து உற்சாகப்படுத்தவேண்டும். அப்படி உற்சாகப்படுத்துவதுகூட ஒரு சுயநலத்தின்பாற்பட்டது கூட. எப்படியென்றால், அவர் கள் செய்த பணிக்கு கொஞ்சம் பாராட்டு - செய்யவேண்டிய பணிக்கு இன்னும் அதிகமான சிறப்பு என்கிற அளவில் - இன்னும் நாம் அதிகம் செய்யவேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் - இந்தத் தொண்டறம் சிறக்கட்டும் என்பதுதான் மிக முக்கியம்.
பொதுவாகவே, ஆண்கள், பெண்களை அவ்வளவு சுலபத்தில் பாராட்டமாட்டார்கள். பெண்கள், பெண்களைப் பாராட்டுவார்கள். அதிலேகூட ஒரு கோடு இருக்கும். ஆனால், இங்கே எந்தவிதமான பேதமும் இல்லாமல், மிகச் சிறப்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
கருத்தாழமிக்க, கொள்கை மணம் வீசக்கூடிய நிகழ்வுகள்
அதுபோலவே, காலையில் மிக அற்புதமான கலந்துரை யாடல். மாலையில், நான் கொஞ்சம் தாமதமாக வந்தாலும், நம்முடைய பிள்ளைகள் மிக அற்புதமான கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அது நடனமாக இருந்தாலும், சிறு நாட்டிய நாடகமாக இருந்தாலும், அல்லது வேறு சில உரையாடல்கள், வீச்சுகளாக இருந்தாலும், அவ்வளவும் கருத்தாழமிக்க, கொள்கை மணம் வீசக்கூடிய அத்துணையும் நம் பிள்ளைகள் செய்தார்கள் என்றால், இதுபோன்ற மாநாடுகளில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில், நம்முடைய பொது நிகழ்ச்சிகளில்கூட இனி மேல் இதுபோன்ற குழந்தைகளுடைய நிகழ்ச்சிகளை, கொள்கை வீச்சுகளாக, மகளிரை வைத்து, ஒரு மணிநேரம் அல்லது அரை மணிநேரம் தொடக்கத்திலோ, அல்லது இடை வெளி நேரத்திலோ அதனை செய்யவேண்டும். இடை வெளியில் பாட்டு, நாட்டியம் போன்ற நிகழ்வுகளை செய்வது நல்லது. சிலருக்கு தூக்கமும் வராது. அதுபோன்ற நிகழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன்.
20 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் யூனியனுக்குச் சென்றிருந்தபோது, அங்கே இடை இடையே பாட்டுகளும், நிகழ்ச்சிகளை வைத்துதான் மாநாடுகளை நடத்தினார்கள். உலக சமாதான மாநாட்டிற்கு கோபநேகனுக்குப்போய், அங்கி ருந்து ரஷ்ய அரசின் விருந்தினர்களாக நாங்கள் இந்தியத் தூதுக்குழுவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டோம்.
அப்பொழுது அவர்கள் எங்களுக்குக் கொடுத்த வரவேற் பில் ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால், நம்முடைய தொடர் சொற்பொழிவுகள் போன்று நீளமாக இருப்பதில்லை. மாறாக, இடைவெளி விட்டுவிட்டு, பாட்டு, கலகலப்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, உரை வீச்சுகள் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. கேட்பவர்களும் உற்சாகத்தோடு கேட்டும், பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இனிமேல் திராவிடர் கழக எல்லா நிகழ்வுகளிலும்...
எனவே, இந்த மாநாட்டிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட ஒரு பாடம், புகுத்துகின்ற ஒரு புதிய நிகழ்ச்சி - இனிமேல் திராவிடர் கழக எல்லா நிகழ்வுகளிலும், இளைஞர்களுடைய நாடகங்கள் இடையிலோ, தொடக்கத்திலோ இருக்கும். தொடக்கத்தில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகள் - இடையில் நாடகம் - பிறகு உரைகள்.
உரைகள் மூலம் சொல்லுவதைவிட, இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளின்மூலமாக, நகைச்சுவையாக சொல்லும்பொழுது அது மிகவும் சுவையாக இருக்கும்.
வீதிநாடக வித்தகர் சித்தார்த்தன் போன்றவர்களும், அதேபோல, நல்லாசிரியராக இருக்கக்கூடிய செந்தமிழ்ச் செல்வி போன்றவர்களும் கலந்துரையாடி ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
36 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
அற்புதமான 36 தீர்மானங்கள். திருவாரூரிலும் 36 தீர்மானங்கள்தான் என்று நம்முடைய கழக துணைத் தலைவர் இங்கே சொன்னார். அந்த 36-க்கு என்ன விசேஷம்? ஒன்றும் கிடையாது. எழுதினோம், அது 36 தீர்மானமாக முடிந்தது. 18 நாள் பாரதம் படிக்கிறார்களே, ஒருவேளை அவனை மண்டையில் அடிப்பதற்காக இரண்டு 18 களை யாவது சேர்த்து கொடுத்தால், 36 வருமா என்பதற்காகக் கூட அல்ல.
இன்றைக்கு மற்றவர்களால் எளிதில் செரிமானம் செய்துகொள்ள முடியாத தீர்மானங்கள். இன்னுங்கேட்டால், ஊடக நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள். இந்தத் தீர்மானங் களை அவர்களுடைய அலுவலகத்தில் கொடுப்பார்கள். நானும் பத்திரிகையாளன்தான். எனவே, உரிமை எடுத்துக் கொண்டு சொல்வதில், தவறு ஒன்றும் இருக்காது.
அவர்களேகூட, ஆசிரியர் குழுவோ, அதனை வெளியி டக்கூடிய குழுவோ, இந்தத் தீர்மானங்களில் ஏதோ ஒரு துண்டுத் துணுக்கைத்தான் வெளியிடுவார்கள். அதுகூட மிகக் கடுமையாக இருக்கக்கூடிய விஷயங்கள் வராது. ஏனென்றால், இந்த மாத்திரைகளை செரிமானம் செய்வதற்குக்கூட பக்கு வம் வேண்டும். ஆனால், பல நேரங்களில் அந்தப் பக்குவம் படிப்படியாக வந்துகொண்டிருக்கிறது.
எங்களுடைய தீர்மானங்கள் வருங்காலத்தினுடைய சட்டங்கள்
ஒன்றே ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஊடகத் தோழர்களாக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி, பொதுப் பார்வையாளர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தெரிந்தகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால்,
நீதிக்கட்சிக் காலத்தில் தந்தை பெரியார் தொடங்கிய, சுயமரியாதை இயக்கம் - திராவிடர் இயக்கம் அந்த மாநாடு களில் போடுகின்ற தீர்மானம் - திருச்சியில் இன்றைக்குப் போடப்பட்டிருக்கின்ற தீர்மானங்கள்வரையில், எங்கள் தீர்மானங்கள் என்றால், அது வெறும் எழுத்து வடிவங்கள் அல்ல. அல்லது ஏதோ செய்திக்குக் கொடுக்கப்படுகின்ற தலைப்புக்கான செய்திகள் அல்ல. வருங்காலத்தினுடைய சட்டங்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
பெரியாரையும் - அம்பேத்கரையும் பாதுகாப்பதே முக்கியம்!
வரக்கூடிய அரசுகள், எப்படி விஞ்ஞானத்தை உங்களால் புறக்கணிக்க முடியாதோ, இனிமேல் எப்படி உங்களால் மின்சாரத்தை தவிர்க்க முடியாதோ, அதுபோலத்தான், திராவிடர் கழகத்தின் தீர்மானங்களை, தந்தை பெரியாருடைய தத்துவங்களை, டாக்டர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய தத்துவங்களை முழுக்க முழுக்க யாராலும் புறக்கணிக்க முடியாது. இனிமேல் ஏற்கவேண்டிய அவசியம் வரும். அதனால்தான் எங்களுக்குப் புதுக் கடமை தோன்றியி ருக்கிறது.
பெரியாரைப் பரப்புவது முக்கியமல்ல; அம்பேத்கரைப் பரப்புவது முக்கியமல்ல. பாதுகாப்பது முக்கியம், திரிபுவா தங்களில் இருந்து.
யார் யாரோ அவர்களை சொந்தம் கொண்டாட வந்து விடுவார்கள். ஆனால், நல்ல வாய்ப்பாக பெரியாரிடம் அவர்கள் வரவில்லை. அம்பேத்கர் அவர்களை கபளீகரம் செய்வதற்கு வந்துவிட்டார்கள். பெரியார் என்பவரிடம் நெருங்கவில்லை. நான் ஏற்கெனவே ஒருமுறை செய்தியாளர் களிடம் சொன்னேன், அம்பேத்கர் இமயமலை என்றால், ஏறிப் பார்க்கலாம் என்கிற ஆசை வருகிறது. ஆனால், பெரியார் எரிமலை என்றால், எட்டிப் பார்ப்பதற்குக்கூட எவருக்கும் துணிவு வரவில்லை என்பதுதான் அடிப்படை என்று தெளிவாகச் சொன்னோம்.
அத்தகைய பெரியார், அவரை அடையாளங்கண்ட பெருமை ஆண்களைவிட பெண்களுக்குத்தான் என்பதை நம்முடைய கழக துணைத் தலைவர் இங்கே எடுத்துச் சொன்னார்.
இன்றைக்குப் பெரியார் என்று சொன்னால், ஒருவரைத் தான் குறிக்கும். பெரியாரைத் துணைகோடல் என்று வள் ளுவர் நீண்ட காலத்திற்கு முன் எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல, மோடிகளுக்கும், அரசுகளுக்கும் எச்சரிக்கை செய்வதுபோல, தலைப்புகள் அமைந்திருக்கின்றன அந்தக் காலத்தில். ‘‘பெரியாரைப் பிழையாமை’’ என்பது. இது மிக முக்கியமாகும்.
வேறு எவரும் செய்ய முன்வராததால்....
பெரியார் என்ற சொல் என்றால், அது ’’ஈ.வெ.ராம சாமியாகிய நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக அந்த மக்களை ஆக்குவதுதான்  என்னுடைய ஒரே பணி. அந்தப் பணியை செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதா என்று யோசித்தேன். வேறு எவரும் செய்ய முன்வராததால், அது ஒன்றே போதும் என்று முடிவு செய்தேன்’’ என்று 95 வயதிலும், இயற்கை வழியாக சிறுநீர் பிரியாமல், மருத்துவ அறுவை சிகிச்சை செய்து, ஒரு ரப்பர் குழாயைப் போட்டு அதில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் வைத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் சிறுநீர் வடிந்துகொண்டே இருக்கும் நேரத்திலும்கூட, எழுதிக்கொண்டும், பேசிக்கொண் டும், மக்களை சந்தித்துக் கொண்டும் இருந்தார்.
உங்களுக்கெல்லாம் இரண்டு கால்கள்; எனக்கோ ஆறு கால்கள். நான் வலது பக்கத்தில் ஒருவரைப் பிடிக்கவேண்டும்; இடது பக்கத்தில் ஒருவரைப் பிடிக்கவேண்டும். அவர்களுக்கு நான்கு கால்கள்; எனக்கு இரண்டு கால்கள் என்று சொல்வார். அப்படியெல்லாம் உழைத்த தந்தை பெரியார் அவர்களை, அடையாளம் கண்ட பெருமை இந்த மகளிருக்கே உண்டு என்பது, உங்களுக்கு இருக்கின்ற தனிப் பெருமை. பெரியாருக் குப் பெருமை சேர்த்து, உங்களுக்குப் பெருமை சேர்த்திருக் கிறது.
மனிதநேயத்தை யார் யார் கடைபிடிக்கிறார்களோ...
எனவே, அத்தகைய மகளிருக்கு இன்றைக்கு எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இங்கே வழக்குரைஞர் பானுமதி அவர்கள் அருமையா சொன்னார்கள் - அவர் திரா விடர் கழகத்துக்காரர் அல்ல. அவர் ஒரு பெரியாரிஸ்ட். மனித நேயத்தை யார் யார் கடைபிடிக்கிறார்களோ அவர்களெல்லாம் பெரியார் என்ற மருந்தைத்தான் உட்கொள்ளவேண்டும். பெரியார் என்ற சத்துணவைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கருதுவார்கள்.
அந்த வகையில், இவ்வளவு நேரம் நான் உரையாற்றக் கூடிய வாய்ப்பு இருக்குமோ என்று நினைத்தேன். காரணம், மழை அச்சுறுத்துகிறது, மழை அச்சுறுத்துகிறது என்பதற் காகத்தான், கலை நிகழ்சிகளைக்கூட விரைந்து முடிக்கவேண்டும் - உங்களிடம் கருத்துகள் போய் சேரவேண்டும் என்று நினைத்தோம்.
ஆனால், நாம் போட்டி போட்டபோது, நிச்சயமாக இயற்கையையும் பகுத்தறிவு வெல்லுகிறது என்பதற்கு அடையாளமாகத்தான், நல்ல வாய்ப்பாக இன்றைக்கு இந்த சிறப்பான நிகழ்ச்சியை நடத்துவதற்கு, திருச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் ஒத்துழைத்தார்கள்.
இந்த அழைப்பிதழ்களில் பார்த்தால், அவர்களுடைய பெயர்கள் இருக்காது. மகளிர் பெயர்கள்தான் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், முழுக்க முழுக்க அவர் களே முன்னின்று இதனை செய்திருக்கிறார்கள். நிறைய உழைத்தார்கள், அவர்களுடைய கடும் உழைப்பின் காரண மாக, திருச்சி தலைநகரில், ஒரு அற்புதமான ஒரு புதிய வரலாற்றை உருவாக்கி, 36 முத்தாய்ப்பான தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கக்கூடிய இந்த வாய்ப்பில், அடுத்தடுத்து நிறைய பணிகள் இருக்கின்றன.
‘‘சமுதாயத்தின் பக்கவாதத்திலிருந்து
மீட்பு மாநாடு’’
இந்த மாநாட்டினுடைய தலைப்பு - பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநில மாநாடு. இந்த மாநாட்டிற்கு வேறு தலைப்பு கொடுக்கலாமா? என்று ஒரு போட்டி வைத்தால், நிச்சயமாக வேறு தலைப்பு கொடுக்கலாம். அது என்னவென்றால், ‘‘சமுதா யத்தின் பக்கவாதத்திலிருந்து மீட்பு மாநாடு’’ என்பதுதான் அது.
சமுதாயத்தில் மனித குலம் - ஆண் - பெண் என்ற இரண்டு பேராக இருக்கக்கூடிய சூழல். இப்பொழுது மூன்றாம் பாலினமும் இணைந்து இருக்கிறது - முப்பால் என்று வைத்துக்கொள்ளலாம். அதற்கப்பால் இப்பொழுது இல்லை.
அந்த வகையில் வருகின்றபொழுது, ஒன்றை நாம் நன் றாக கவனிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
நூற்றுக்கு நூறு எப்பொழுது பெரியார் கொள்கை உள்ளே நுழைகிறதோ....
பெண்களை பாலியல் பண்டமாகப் பார்க்கிறார்களே தவிர, அவர்களை அறிவியல் சிந்தனையாளர்களாகப் பார்க் கக்கூடிய பக்குவம் இன்றைக்கு இந்த சமுதாயத்தில் வந்திருக் கிறதா என்றால், இல்லை. நூற்றுக்கு நூறு எப்பொழுது பெரி யார் கொள்கை உள்ளே நுழைகிறதோ அப்போதுதான் அவர்களைப்பார்க்க முடியும்.
அழகு போட்டிகள் முக்கியமல்ல - அறிவுப் போட்டி கள்தான் மிக முக்கியம். அழகு நிரந்தரமல்ல - அறிவு நிரந் தரமானது.
அழகு தற்காலிகம் - அது மாறக்கூடியது - ஆனால், அறிவுதான் நிலையானது - அதற்கு அடிப்படையானது - எதை எதைத் தடுக்கவேண்டுமோ அத்தனையும் செய்தான். அதற்குத்தான் கடவுள் - அதற்குத்தான் மதம்.
ஏன் மனுதர்மத்தை எரித்தார்கள் எங்களுடைய தோழி யர்கள் என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள். மனுதர்ம எரிப்புப் போராட்டம் என்பதை மிகப்பெரிய அள விற்கு செய்தவர்கள் இந்தத் தோழியர்கள் சில மாதங்களுக்கு முன்.
இதுதான் இந்த நாட்டில் இப்போதுள்ள போராட்டமே! பக்கவாதத்திலிருந்து சமுதாயத்தை மீட்கிற மருத்துவ மாநாடு என்று இதை சொல்கிறோம் என்றால் என்ன காரணம்?
பெரியார்தான் கேட்டார்,
இரண்டு கால்களும், இரண்டு கைகளும் சரியாக இயங்க வேண்டுமா இல்லையா? இரண்டு கண்களுக்கும் சரியான பார்வை இருக்கவேண்டுமா? இல்லையா? இரண்டு காது களும் சரியாகக் கேட்கவேண்டுமா? இல்லையா?
ஒரு கை சரியாக இயங்குகிறது; இன்னொரு கை சரியாக இயங்கவில்லை; ஒரு கண்ணுக்குப் பார்வை உண்டு - இன் னொரு கண்ணுக்குப் பார்வையில்லை. ஒரு காது நன்றாகக் கேட்கிறது, இன்னொரு காது கேட்காது என்றால் - இப் படிப்பட்ட சூழல் இருந்தால், அது எப்படிப்பட்ட வாழ்க்கை. அதனை நிவர்த்திக்கவேண்டும் என்று விரும்புவோமோ இல்லையா? இதுதானே காலங்காலமாக ஆண் - பெண் என்று சொல்லக்கூடிய இந்த சமுதாயத்தில் இருக்கக்கூடிய ஒரு சூழல்.
இதைத்தான் பெரியார் சொன்னார், சம உரிமை, சமத்துவம், சம வாய்ப்பு என்பது இருக்கிறதே மனித குலத்தில் - வேறு எந்த நாட்டிலாவது இங்கே இருப்பதைப்போல இருக்கிறதா? என்று கேட்டார்கள்.
(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...