Monday, October 19, 2015

எதிர்கால வரலாறு பெரியாரை மய்யப்படுத்திய வரலாறாகத்தான் இருக்கும்

எதிர்கால வரலாறு பெரியாரை மய்யப்படுத்திய வரலாறாகத்தான் இருக்கும்
வாட்ஸ்அப் இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை
நாமக்கல் வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
நாமக்கல், அக். 18- எதிர்கால வரலாறு பெரியாரை மய்யப்படுத்திய வரலாறாகத்தான் இருக்கும். இன்றைய வாட்ஸ்அப் இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
3.10.2015 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற தந்தை பெரி யார் பிறந்த நாள் விழா மற்றும் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு உங்களைச் சந்திக் கின்ற இந்த வாய்ப்பில், எல்லாக் கருத்துகளையும் எடுத்து வைக்க முடியாது என்பதற்காகத்தான், அறிவாசான் தலை வர் தந்தை பெரியார் அவர்களின் காலத்திலிருந்தே இந்த இயக்கம் ஒரு அருமையான பிரச்சார ஏற்பாட்டைச் செய்து தொடர்ந்து  சிறுசிறு வெளியீடுகள், புத்தகங்கள், ஆராய்ச் சிக்குரிய பெருநூல்கள் இவற்றையெல்லாம் வெளியிட்டு வருகிறோம். அந்தப் பக்கங்களையும், அதனுடைய அடக் கத்தையும் கணக்குப் போட்டுப் பார்த்தால், லாபமில்லாமல் ஏறத்தாழ அடக்க விலைக்குத் தரக்கூடிய அளவிற்கு, மக் கள் மத்தியில் கருத்துகளைப் பரப்புவதற்காக கொள்கை களைப் பரப்புவதற்காக - பல்வேறு நூல்களை அச்சிட்டு இங்கே கொண்டு வந்திருக்கிறோம். இவற்றை நீங்கள் வாங்கவேண்டும்; படிக்கவேண்டும்; பிறருக்கும் கொடுத்துப் பரப்பவேண்டும்.
காரணம் இந்தக் கொள்கை என்பது எப்படிப்பட்ட ஆதாரப்பூர்வமான கொள்கை, மறுக்கப்பட முடியாத தத்துவங்கள், ஏற்கப்படவேண்டிய பகுத்தறிவு கருத்துகள் என்பதை யெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வதற்கு அந்த நூல்கள் உங்களுக்குத் துணை நிற்கக்கூடிய, உதவக்கூடிய வாய்ப் பைத் தரும். ஆகவே, இந்தக் கூட்டத்தில் இருக்கின்றவர்கள் எங்களுடைய உரையை எவ்வளவு சிறப்பாக ஒத்துழைத் துக் கேட்கிறீர்களோ, அதைவிட முக்கியம் ஒவ்வொரு வரும் ஒரு புத்தகத்தோடு திரும்புங்கள். புத்தகத்தோடு திரும்பினால், உங்கள் வாழ்க்கை புத்தகமாக ஆகும்; புதிய அகமாக நல்ல உள்ளத்தோடு, மூடநம்பிக்கையற்ற, பழைமை பாசிகள் அகன்ற, மூடநம்பிக்கை கண்மூடி வழக் கங்களெல்லாம் மண் மூடிப் போகக்கூடிய - ஒரு வெளிச்சம்    கிடைக்கக்கூடிய வாய்ப்பு இந்த நூல்கள் மூலமாகக் கிடைக்கும்.
நூலைப் படி! நல்ல நூலைப் படி...
ஏற்கெனவே நூல்களால்தான் நம்முடைய நாட்டில் தொல்லைகளே! அந்த நூல்களால் ஏற்பட்ட தொல்லை களை, இந்த நூல்கள்தான் மாமருந்தாக இருந்து போக்கக் கூடிய வாய்ப்பை அளிக்கும். ஆகவேதான், இந்த நூல் களை வாங்கிப் படிக்கவேண்டும் என்று சொல்கிறேன்.
அதுமட்டுமல்ல, புரட்சிக்கவிஞர் அவர்கள்,
நூலைப் படி! நல்ல நூலைப் படி
என்று ஒரு அழகான பாடலை எழுதியிருக்கிறார்.
இங்கே புலவர் சுப்பண்ணனார் அவர்கள், அவரைச் சார்ந்த தோழர்கள், வயது முதிர்ந்தவர்கள் இடையறாது புரட்சிக்கவிஞர் அவர்களுடைய பெயரால், ஓர் அற்புத மான பணிகளை நாமக்கல்லில் செய்து வருகிறார்கள். அது பாராட்டத்தக்க பணியாகும்.
அந்தப் புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்கள்,
நூலைப் படி!
சங்கத் தமிழ் நூலைப் படி
முறைப்படி நூலைப் படி
காலையில் படி
கடும் பகல் படி
மாலை இரவு
பொருள் படும் படி
நூலைப் படி
பொய்யிலே கால்படி
புரட்டிலே முக்கால்படி
வையம் ஏமாறும்படி
வைத்துள்ள நூல்களை ஒப்புவதெப்படி ......
நூலைப் படி முறைப்படி
நூலைப் படி
என்று.
புராணங்களைப்பற்றியெல்லாம் மிக அழகாக அந்தப் பாட்டில் சொல்லியிருப்பார் புரட்சிக்கவிஞர் அவர்கள். அவைகளையெல்லாம்பற்றி புரிந்துகொள்ள வேண்டு மானால், இந்த நூல்களையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு விடியலைத் தரும்; அதுதான் உங்களுக்கு வெளிச்சத்தைத் தரும்
நோய் வந்தவர்கள் தலை சிறந்த மருத்துவர்களைத் தேடிச் செல்லும்பொழுது, அந்த நோய்க்கென்று இருக்கின்ற சிறப்பு மருத்துவர்களிடம் செல்வார்கள். அதுபோன்று, மூட நம்பிக்கை நோய்க்கு, மதவெறி நோய்க்கு, பெண்ணடிமை நோய்க்கு தீர்வு வேண்டுமானால், அது பெரியார் என்ற மாமருத்துவருடைய மருந்துகளைத் தேடித்தான் செல்ல வேண்டும். அதுதான் உங்களுக்கு விடியலைத் தரும். அது தான் உங்களுக்கு வெளிச்சத்தைத் தரும். அதுதான் உங்களு டைய வலியை நீக்கும், காலங்காலமாக.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடு வதைப்பற்றி எனக்கு முன்பாகப் பேசிய செயலவைத் தலைவர், பொருளாளர் எல்லோரும் சொன்னார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார். பெரியார் ஒரு தனி மனிதர் அல்ல. பெரியார் ஒரு சகாப்தம் என்று சொன்னார். ஒரு சகாப்தம் மட்டுமல்ல, பெரியார் ஒரு திருப்பம் - காலகட்டம் என்று சொன்னார்கள்.
தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவம் - கொள்கை கள் என்பவை எல்லா காலத்திற்கும் தேவை - ஆனால், முன்பு எப்பொழுதும் தேவைப்பட்டதைவிட, இப்பொழுது தான் பெரியார் அதிகம் தேவைப்படுகிறார் என்கிற நிலையை, இங்கே இருக்கின்றவர்கள் உணர்ந்திருக்கிறார் களோ என்னவோ, நண்பர்கள் இங்கே சுட்டிக்காட்டினார் கள்.
இங்கு நாம் ஊதுவது போர்ச் சங்கு!
பெரியார் இப்பொழுது எங்கே சென்றிருக்கிறார்? இமயத்திற்குப் பக்கத்தில் சென்றிருக்கிறார்! பிகாரில் தேர்தல் நடைபெறவிருக்கிறது - அங்கே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பார்ப்பனர்களுக்காக, உயர்ஜாதிக்காரர்களுக்காக சமூக நீதியை குழிதோண்டி புதைப்பதற்காகத்தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இது இரண்டாவது மண்டல் புரட்சி என்று லாலு பிரசாத் அவர்கள் சொல்கிறார்கள் என்று சொன்னால், அது பிகாருக்கு மட்டுமல்ல, எல் லோருக்குமே தெரிய வேண்டிய செய்தி (அப்பொழுது 8 மணி ஆனதால்,  சங்கு ஊதப்பட்டது) இங்கே ஊதப்பட்ட சங்கு 8 மணி சங்கு மட்டுமல்ல; எச்சரிக்கை சங்காகும், அதனை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்குகின்ற திராவிடனைத் தட்டி எழுப்ப, சங்கு ஊதியாவது அவனை எழுப்ப வேண்டும் என்று சொல்வதைப்போல, இங்கே ஊதப்பட்டது 8 மணி சங்கு; இங்கு நாம் ஊதுவது போர்ச் சங்கு! - ஒரு சமுதாயத்திற்கு ஆகச் செய்ய வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் பிறந்திருக்கா விட்டால், இந்த இயக்கம் தோன்றியிருக்காவிட்டால் என்ன நிலை என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைய இளைஞர்கள் ஏராளமானோர் படித்திருக்கிறார்கள். ஒடுக் கப்பட்ட சமுதாய மக்கள், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் ஒரு காலத்தில் இவர்கள் படிக்கவில்லையே என்று சொல் வதற்குப் பதிலாக, இவர்களுக்குரிய வேலை கிடைக்க வில்லையே என்று சொல்லக்கூடிய அளவிற்கு, தந்தை பெரியாரால், பாபா சாகேப் அம்பேத்கரால், பச்சைத் தமிழர் காமராசரால், திராவிடர் இயக்கத்தால் இந்தப் பெருமை ஏற்பட்டிருக்கிறது. கல்வி நீரோடை நாடெலாம் பாய்ந்தோடி யிருக்கிறது.
இன்றைக்குத் திரும்பிய பக்கமெல்லாம் பொறியியல் கல்லூரிகள். மெட்ரிக்குலேசன் பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. எங்கே பார்த்தாலும் செப்பனிப்பட்ட சாலைகள். ஒரு காலத்தில் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்கிற நிலை மாறி, பொறியியல் கல்லூரிகளில் லட்சம் இடங்கள் காலியாக இருக்கின்றன என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன் றைக்கு இடங்கள் அதிகம்; அந்த அளவிற்கு மாணவர்கள் வரவில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு கல்வி நிலை பெருகியிருக்கிறது என்றால், நீங்கள் எந்தக் கட்சிக்காரர் களாக வேண்டுமானாலும் இருங்கள், அது உங்கள் உரிமை. யாருக்கு ஓட்டுப் போடுவது? தெரிந்தோ, தெரியாமலோ கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையை சொறிந்து கொள்ளவேண்டுமானாலும், அது உங்கள் உரிமை. அருள்கூர்ந்து ஒன்றை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள், இன்றைக்கு 80 விழுக்காட்டினர் படித்திருக்கிறார்கள்; அதிலும் பெண்கள் அதிகமாகப் படித்திருக்கிறார்கள். பெண் கள் மருத்துவர்களாக, பெண்கள் நீதிபதிகளாக, பெண்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாக, பெண்கள் வழக்குரைஞர்களாக, பெண்கள் பொறியாளர்களாக ஆக எல்லாத் துறைகளிலும் வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக் கிறார்கள் என்றால், இவைகள் எல்லாம் எப்படி நடந்தன நண்பர்களே, பெரியார் பிறப்பதற்கு முன்! பெரியார் பிறந்ததற்குப் பின்! இப்படித்தான் வரலாற்றை எதிர்காலத்தில் கணிக்கப் போகிறார்கள்.
இன்றைய இளைஞர்களுக்கு தெரியப்படுத்தவேண்டியது நமது கடமை!
எதிர்கால வரலாறு என்பது ஏதோ காவி மயமாகத் திணிக்கப்பட்ட வரலாறாக இருக்காது; எதிர்கால வரலாறு பெரியாரை மய்யப்படுத்திய வரலாறாகத்தான் இருக்கும். பெரியாருக்கு முன் என்ன நிலை இருந்தது? நூறாண்டு களுக்கு முன்பு என்ன நிலை இருந்தது? இன்றைய வாட்ஸ் அப் இளைஞர்களுக்கு இது தெரியாது; தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை. இணைய தளத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்ற இளைஞர் களுக்குத் தெரியாது; பேஸ்புக்கைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டு, முகநூலில் மட்டுமே தங்கள் முகத்தைப் புதைத்துக் கொள்பவர்களுக்குத் தெரியாது. ஆகவேதான், மோடி முகநூல் அலுவலகத்திற்கு ஓடிப் போய், முகநூலை சரிப்படுத்திவிட்டால், இவர்களை நாம் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என்று பிரதமர், மாற்றம் மாற்றம் என்று சொல்லி வருகிறார்.
ஆனால், முகநூல் பார்ப்பது தவறல்ல; நீங்கள் இணைய தளத்தில் மூழ்கியிருப்பது தவறல்ல; நீங்கள் டுவிட்டரில் மிகப்பெரிய அளவிற்கு
ஈடுபாடு கொண்டிருப்பது தவறல்ல. ஆனால், உங்கள் வேர்கள் எப்படிப்பட்டது என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஒரு மரம் பச்சை பசேல் என்று இருக்கிறது; கிளைகளில் கனிகள் காய்த்துத் தொங்குகின்றன. இவைகள் எல்லாம் மிக அழகாக இருக்கிறது. பழத்தைப் பலர் பறித்து சுவைக் கிறார்கள்; அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், இந்தப் பழத்தை பறித்து சுவைக்கிறவர்களிலே பலர் எத்தனை பேர் அந்த மரத்தின் வேர் நன்றாக மண்ணில் வேரூன்றி ஒவ்வொரு பருவத்திற்கும் தவறாமல் அந்தக் கனியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அந்த மரம் என்று நினைக்கிறார்களா? அருள்கூர்ந்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். நீங்கள் நினைக்கிறீர்களோ, இல்லையோ, தோட்டக்காரனுக்கு இருக்கின்ற கவலை, அந்த மரத்தினுடைய வேர்கள் பழுதுபடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய கவலை.
வேர்களை அழிக்க - வேர்ப் புழுக்கள் உள்ளே நுழைந்திருக்கின்றன
அதுபோன்று திராவிடர் கழகத்துக்காரன் - ஒரு தோட்டக்காரன்; தந்தை பெரியார் ஊன்றிய விதை இருக்கிறதே, அது ஆல்போல் தழைத்து அருகுபோல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனுடைய கனிகள் இன்று பயன் தந்துகொண்டிருக்கிறது. ஆனால், வேரை அழிக்க வேண்டும் என்று வேர்ப் புழுக்கள் உள்ளே நுழைந்திருக் கின்றன. வேரை வெந்நீர் கொட்டி அழிக்கவேண்டும்; அது வளர்ந்துவிட்ட மரமாக இருந்தாலும்கூட, அதனை நாம் சாய்த்துவிடவேண்டும் என்கிற தொடர் முயற்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவேதான், இந்த இயக்கம் திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டை நடத்துகிறது. எதற்காக இந்த திராவிடர் விழிப்புணர்வு மாநாடு என்பதை எண்ணிப் பாருங்கள். விழித்தால்தான் நமக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக் கும். நம்முடைய சமுதாயத்திற்கு எவ்வளவு பெருமைகள்; நாம் சாதாரண அன்னக்காவடிகளா? இந்த நாட்டை ஆண்ட பரம்பரை என்கிற பெருமை உடையவர்கள் அல்லவா! ஆண்டவர்கள் எல்லாம் பார்ப்பனர்களுடைய காலடியில் வீழ்ந்தார்கள். பார்ப்பனியம் அவரை அப்படியே விழுங்கி விட்டது. விழுங்கிக் கொண்டிருந்த பார்ப்பனியத்தி லிருந்து அவனை வெளியே கொண்டு வந்த பெருமை தந்தை பெரியார் என்கிற தத்துவத்திற்குத்தான்; அந்த மாமருத்துவருக்குத்தான் உண்டு.
இன்றைக்கு எட்டி நில்! கிட்டே வராதே! தொடாதே! என்று சொல்ல முடியுமா? ஆனால், நூறாண்டுகளுக்கு முன்பாக,  சொன்னார்களே! ஆதாரங்களோடுதான் நாங்கள் பேசுவோம். 1899 சென்னை தலைநகரத்தில் ஒரு நாடக நோட்டீஸ் விளம்பரம்.
பஞ்சமர்களுக்கு இடமில்லை
சென்னையில், தலைநகரத்தில் லட்சுமி விலாஸ் நாடகக் கொட்டகை என்று ஒற்றைவாடை தெருவில் இருந்தது;  நாமெல்லாம் பிறக்காத காலத்தில். ஒரு பெரிய நோட்டீஸ் அடித்து, அதில் அபிராம சுந்தரி சரிதம் நடக்கும் என்று விளம்பரம் எல்லாம் போட்டு, அந்தக் காலத்தில் அந்த நாடகம் பார்ப்பதற்கு மிகப்பெரிய அளவிற்கு இருக்கின்ற சேர் ஒரு ரூபாய்; கேலரி எட்டணா, தரைக்கு நாலணா என்றெல்லாம் போட்டு, கதை சுருக்கத்தைப் போட்டு கீழே போட்டிருப்பார்கள்; பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று போட்டிருப்பார்கள்.
அந்த நோட்டீசை நாங்கள் வைத்திருக்கிறோம். (பின் இணைப்பு காண்க) சுயமரியாதை இயக்கத்தினுடைய ஆவணக் காப்பகங்களில் இருக்கக்கூடிய பல்வேறு ஆவணங்களில் அந்த நோட்டீசும் ஒன்றாகும். காசு கொடுத் தால்கூட பஞ்சமருக்கு இடமில்லை. சில பேர் சொல்கிறார் கள், பொருளாதாரம் வந்துவிட்டால், ஜாதி ஒழிந்துவிடும்; பொருளாதாரத்தில் உயர்ந்தால் ஜாதி ஒழிந்துவிடும் என்று. கண்டிப்பாக இல்லை. அதற்கு என்ன அடையாளம் என்றால், நூறாண்டுகளுக்கு முன்பாக அடித்த நோட்டீசே ஆதாரம்.
இன்றைக்கும் அந்த வருணாசிரம தருமம் மிகப்பெரிய அளவில் இருக்கிறதே! நாடகம் பார்க்கவேண்டுமானால் கூட, ஜாதி சான்றிதழைக் காட்டவேண்டும். வசதி இருந்தா லும், பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று சொன்னார்களே! இன்றைக்கு அப்படி நோட்டீசு அடிக்கக்கூடிய துணிவு, தைரியம் யாருக்காவது உண்டா? அப்படி அடித்தால் அவன் எங்கே இருப்பான்? நாடகக் கொட்டகைகள் இருக்குமா? நாடகத்தில் நடிப்பவர்கள் இருப்பார்களா? காவல்துறைதான் சும்மா இருக்குமா?
இவையெல்லாம் எப்படி வந்தது? சரசுவதி பூஜை கொண்டாடியதால்தான் வந்ததா? ஆயுத பூஜை கொண்டா டியதால் வந்ததா? காளியாத்தாளுக்கும், மாரியாத் தாளுக்கும் திருவிழா கொண்டாடியதால் வந்ததா? பெரியார்! பெரியார்!! பெரியார்!! அதனை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.
பெரியார் என்ன செய்தார் என்று சிலர் கேட்கிறார்கள், பெரியார் வேறொன்றும் செய்யவில்லை, நீ முழங்காலுக்குக் கீழே வேட்டிக் கட்டிக் கொண்டிருக்கிறாயே, அந்த வேட்டியை மற்றவர்கள் உருவாமல் பார்த்துக் கொள்வதற்கு, பெரியாருடைய கைத்தடிதான் உனக்குப் பாதுகாப்பாக இருந்தது. தோளில் போட்டுக் கொண்டிருக்கிறோமே துண்டு, நம்மால் எப்படி போட முடிந்தது என்று  தெரியுமா?
இந்த மேடையில் அமர்ந்திருக்கிறவர்கள் அனைவரும் படித்திருக்கிறோமே, எல்லோருமே கல்லூரிக்குச் சென்று படித்திருக்கிறோமே, பட்டங்கள் வாங்கியிருக்கிறோமே!
இப்பொழுது எவ்வளவு நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் வழக்குரைஞர்கள் என்றால், அய்யர், அய்யங்கார், சாஸ்திரிகள், சர்மாக்கள்தானே வழக்குரைஞர் களாக இருந்தார்கள். ஆனால், இப்பொழுது அந்த நிலை இருக்கிறதா? என்பதை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...