Total Pageviews

Thursday, October 22, 2015

இந்த சள - எந்த வகை? புரிந்துகொள்க!

நம்முடைய மக்களிடையே பேச்சுகள் பற்றி சில நேரங்களில் சிலர் குறிப் பிடுகையில் சளசளவென்று பேசுவதே அவரது வாடிக்கை!
சும்மா சளசளவென பேசாதே! என்று கூறுகிற பழக்கமும் நம்மில் பல ருக்கு, பிறர் பேசும் போது குறுக்கிட்டுக் கூறுவதுண்டு.
நம்மில் பலர் அதனை தொண தொணவென்று பேசுகிறார்கள் என்ற பொருளில்தான் கூறுகின்றனர்.
ஆனால், இந்த சள என்பதற்குச் சரியான பொருள் என்னவென்பது, அண்மையில் கோவையில் என்னைச் சந்தித்து - சிறந்த நூல்களை எனக்கு மாலைக்கு - சால்வைக்குப் பதிலாக தரும் வழக்கம் உள்ள மானமிகு இ.கண்ணன் அவர்கள் (பெரியார் பகுத்தறிவு இலக் கிய அணியின் பொறுப்பாளர்களில் ஒருவர்) தந்த தேவிபிரசாத் சட்டோபாத் தியாயா எழுதிய இந்திய நாத்திகம் என்ற நூலைப் படித்தபோது,
இந்தியத் தத்துவத்தில் கடவுள் என்ற தலைப்பிட்ட 5 ஆவது அத்தியா யத்தில் மேலே கூறிய சள என்பது இந்திய தத்துவம் சார்ந்த கலைச்சொற் களில் ஒன்றாகும் என்பதை விளக்கு கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா அவர்கள்.
இதுபற்றி அந்நூலில் எவருக்கும் விளங்கும் வண்ணம் சளபற்றிய விளக் கம் இனி (பக்கம் 31-35) காண்போம்.
இந்தியத் தத்துவாசிரியர்களில் பெரும்பாலோர் நாத்திகர் என்பது உண்மையில் சரியான கூற்றா?
இந்திய தத்துவாசிரியர்களில் பெரும் பாலர் நாத்திகர் என்பது உண்மையில் சரியான கூற்றா? இக்கேள்விக்கு மத்திய காலக் கடவுள்வாதிகளுக்கு இருந்தது போன்றே இன்றைய ஆத்திகர்களுக் கும் மிகவும் நெருடலான ஒரேயொரு விடை தான் உண்டு! தமக்குச் சங்கட மான உண்மைகளை மூடி மறைக்கத் தத்துவ ஞானிகள் கைக்கொள்ளும் வழக்கமான தந்திரம் என்ன? வார்த்தை ஜாலத்தில் அடைக்கலம் தேடுவதே அது.
இதுதான் நாணயமற்ற அறிவாளித் தனத்தின் வழக்கமான வடிவமாக ஆதி காலத் தத்துவப் போர்களில் இருந் திருக்க வேண்டுமென்பது இத்தகைய சர்ச்சைகள் தொடர்பான நூல்களி லேயே மிகவும் பழைமையான ஒன்றில் நாம் காணும் இத்தந்திரம் குறித்த விரி வான விவாதத்திலிருந்து தெரிய வரு கிறது; ஆம், அதன் தத்துவார்த்தப் பயன் ஏதுமில்லைதான்.
இந்திய தத்துவம் சார்ந்த கலைச் சொற்களில் இது சள எனப்படும்; அதாவது, தனது வார்த்தை ஜாலத்தால் எதிரியின் நிலைப்பாட்டைத் திருத்தி விவாதத்தைத் திசை திருப்பி அவர் கனவிலும் நினைத்திராத கருத்தை முன் வைத்ததாகக் கதைப்பது! இதைப் பல வழிகளில் செய்யலாம்; சாமான்ய சள என்பது அவற்றுள் ஒன்று: ஒரு விச யத்தை அல்லது ஒரு பொருளைப் பற்றிய விவரிப்பில் எதிரி குறிப்பாக முன்வைக்கிற கருத்தைப் புறந்தள்ளி விட்டு அவ்விசயத்தின் அல்லது அப் பொருளின் பொதுவான குணாம்சத்தில் பொதிந்திருக்கிற - ஆனால், அவரால் பேசப்படாத கேலிக் கூத்தான அம்சத் தைப் பிடித்துத் தொங்குவது!
இந்திய கடவுள் வாத நூல்களில் தலையாயதாகக் கருதப்படும் நியாய- குசுமாஞ்சலியின் ஆசிரியரும், நியாய-வாதக் கூட்டத்தைச் சேர்ந்தவரும், மத்திய காலத் தத்துவ ஞானிகளில் பெரும் புகழ் பெற்றவருமான உதயணர் என்பாரின் எழுத்துகளில் மேற்சொன்ன தந்திரத்தின் உதாரணம் ஒன்றைக் காண முடியும். ஒவ்வொருவரும் அவரவர் வழியில் கடவுளை நம்புகின்றனர்; ஆத லால் நாத்திகர் என நானிலத்தில் எவரு மில்லை என அந்நூலின் ஆரம்பத்தில் அடித்துச் சொல்கிறார். நம் காலத்தில் மிகத் திறமை வாய்ந்த ஒருவரால் மொழி பெயர்க்கப்பட்ட அப்பத்தியை முழுமை யாக இங்கே மேற்கோள் காட்டுவது அவசியம்.
இயற்கையிலேயே தூய்மையா னதும், அறிவொளி பரப்புவதுமான பரம்பொருள் ஒன்றே என உபநிடத ஆதரவாளர்களும், முழுமுதல் ஞானி எனக் கபிலரின் சீடர்களும் இவ்வுலகத் துன்ப துயரங்கள், செயல்பாடுகள், பலாபலன்கள் ஆகியவற்றால் அண்ட முடியாதவராகவும், விஸ்வரூபம் எடுத்து வேதங்களை இவ்வுலகுக்கு அளிப்பவ ராகவும், அருள்பாலிக்கிறவராகவும் விளங்குபவர் எனப் பதஞ்சலியின் சீடர்களும், வேதங்களாலும், சாதாரணப் பழக்கங்களாலும் அங்கீகரிக்கப்பட்ட எந்தவித நடவடிக்கைகளாலும் மாசு படுத்த முடியாத, முற்றிலும் தனித்துவ மான ஒன்று என மகா பசுபதியின் மாணவர்களும், சிவன் எனச் சைவர் களும், புருசோத்தமன் என வைணவர் களும், முதன்மைத் தந்தை (அதாவது தந்தைமார்களின் தந்தை) எனப் பவுராணிகர்களும், உயிர்ப் பலியின் ஆன்மா எனப் பலி கொடுப்பவர்களும், சர்வ ஞானி எனப் பவுத்தர்களும், நிர் வாணக் கோலத்தவன் எனத் திகம்பரர் களும், வேதங்களால் வழிபாட்டுக்குரி யது என நிர்ணயிக்கப்பட்டது என மீமாம்சகர்களும், தனக்குரிய அனைத் துக் குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றது என நையாயிகர்களும், உலக வழக்காறுகளால் நிர்ணயமாகிய அதி காரத்தைச் செலுத்துபவர் எனச் சாரு வாகர்களும் - மேலும் கூறுவதாயின் - விஸ்வகர்மா (மாபெரும் வரைகலை ஞர்) எனக் கைவினைஞர்களும் - போற்றிப் பாராட்டுகிற மற்றும் சாதி, கோத்திரம், மிகச் சிறந்த முனிவர்களின் கூட்டம்(Pravara), (வேதப்) பள்ளி, குடும் பக் கடமைகள் போன்றவை தொடர் பான மேலதிகாரத்தைச் செலுத்துபவராக அனைவரும் அறிந்துகொண்டுள்ள சிவன் பற்றிய அய்யத்திற்கு எந்த ஆதா ரமும் இருக்க முடியாது என்பதால், அவனின் இருப்பு குறித்த ஆராய்ச்சிக்கு அவசியமே இல்லை! அந்த சிவனின் சிந்தனை என அழைக்கத் தக்கதும், தருக்கவியல் அடிப்படையில் அமை யப் பெற்றதுமான இந்த விளக்கவுரை, ஸ்ருதியைக் காதில் வாங்கி அதைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளதால் இதனை அவருக்குரிய வழிபாடு எனக் கருத லாம்.
ஒவ்வொருவரையும் கடவுள் நம்பிக் கையாளராக மாற்றிடும் காரியத்தை லாவகமாகச் செய்திடும் இத்தகைய எடுப்பான் (சமஸ்கிருத) மொழிநடை, சமஸ்கிருத மொழி மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டோருக் குக் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம்; ஆனால், வேண்டுமென்றே உண்மை யைத் திரித்துரைப்பதற்காக வலிந்து புனையப்பட்ட சொல் அலங்காரம் என்றே இந்திய தத்துவ வரலாற்று மாணவருக்கு இது தோன்றும். கடவுள் இருப்பைப் பொய்யென நிறுவிடப் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்ட கபிலரின் சீடர்கள். சாங்கிய தத்துவாசி யர்கள், சவ்கதர்கள், பவுத்தர்கள், திகம்பர சமணர்கள், மீமாம்சகர்கள் ஆகி யோரை மட்டுமின்றி சாருவாகர்களை யுங் கூடக் கடவுள் நம்பிக்கையாளர் களாகச் சித்தரிக்க மேற்கண்ட மிடுக் கான மொழிநடை முயற்சிக்கிறது; சுருங்கச் சொல்வதாயின், நாத்திகத் திற்குப் பெயர்போன கூட்டத்தைச் சேர்ந்த எல்லோரையுமே கடவுள் நம் பிக்கையாளர்கள் எனக் கதை கட்டுகிற உதயணரைக் கண்ணுறுகிற ஒரு மந்தி ரவாதி கூடக் கண் சிமிட்டும் நேரத்தில் தொப்பியிலிருந்து பொருட்களைக் கொட்டி உடன் மறைக்கும் கண்கட்டி வித்தையில் அவர் தன்னைவிடக் கை தேர்ந்தவரோ எனப் பொறாமைப்படு வார்! அவர் இந்த மாயா ஜால வித் தையை எவ்வாறு செய்தார்? இந்திய தத்துவாசிரியர்களால் சமான்ய சள என அழைக்கப்படுகிற எதிரியின் உண்மை யான நிலைப்பாட்டைத் திரித்துக் கூறிடும் தருக்க முறையைக் கையாண்டு தான் இந்த சாதனையை நிகழ்த்தி யுள்ளார்!
பவுத்தர்களும், சமணர்களும் எவ் வாறு முறையே புத்தர், ஜீனர்கள் ஆகி யோரின் ஞானத்திற்கு வரம்பே இல்லை எனக் கருதினரோ அதேபோன்றுதான் சாங்கியர்களும் கபிலரை முதல் ஞானி அல்லது ஆதி வித்வான் என அழைத் தனர்; அப்படியாயின் அவர்கள் எல் லையற்ற அறிவு எனும் பாதை வழியே கடவுளை நம்பினர் என்பது சரியா? இல்லவே இல்லை! தங்களின் தத்து வத்தை நிறுவியவர் தெரிந்தே கடவு ளைப் புறந்தள்ளிவிட்டு இப்பேரண்டத் தின் படிமலர்ச்சி பற்றிய விளக்கத்தைத் தேடிட மேற்கொண்ட முயற்சியைப் பல முக்கியமான காரணங்களில் ஒன்றாக எண்ணியே அவரின் அறிவாற்றலை வியந்தனரேயொழிய அவரை எல்லை யற்ற ஞானக் கடலெனக் கருதிட வில்லை! பவுத்தர், சமணர் விசயத்திலும் இது பெரும்பாலும் பொருந்தும்; 
மந்திரச் சடங்குகள் தொடர்பான வேதக் கட்ட ளைகளில் மீமாம்சகர் ஆழ்ந்த நம் பிக்கை கொண்டிருந்தனர்; ஆயினும் அவர்களின் எந்த ஏட்டிலும் அந்த வேதக் கட்டளைகள் வழிபாட்டுக்குரி யவை என்பதற்கான குறிப்பு எவ் விடத்தும் காணப்படவில்லை; மாறாக, அவர்கள் வேதக் கட்டளைகளே எனி னும் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்த விரும்பியதால் கடவுள் மறுப்பில் சளைக்காமல் ஆர்வம் காட் டினர்; அதன் பொருட்டே வழிபாட்டு முறைகளையும் உதாவதவை எனப் புறந்தள்ளினர். சடங்குகளால் அவற்றின் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டே சகலத்தையும் சாதித்திட முடியும். இந்த நம்பிக்கையில் தெய்வீகத் தலையீட் டுக்கு இடமிருக்க முடியாது.
சள எனும் சொல்லாடலை உத யணர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பது சாருவாகர்களையும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என அவர் கூறுவ திலிருந்து விளங்கும்; உலக வழக்கின் அடிப்படையில் ஆண்டவனின் அதி காரம் அவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாகக் கூறுகிறார். பிற்காலத்திய எழுத்தாளர்கள் இதிலிருந்து உருப்படி யாக எதையாவது உய்த்துணர முயன் றார்கள்; முடியாத ஒன்றைச் சாதிக்கும் முயற்சியே இது. இத்தகைய முட்டாள் தனமான சள எனும் வாத முறை பொருளற்றது; மார்க்ஸ், லெனின் மற்றும் பொதுவுடைமைத் தத்துவம் ஆகியவற்றிலுங்கூட மதத்தைத் தேடு கிற மகா புத்திசாலித்தனத்தை(!) இதற்கு இணையான நம் சம காலத்திய வாதம் எனலாம்.
கம்யூனிசம் என்கிற மதத்தின் இறைத் தூதர் லெனின்; அறிவியல் (அதாவது விஞ்ஞானம்) அதன் புனிதச் சின்னம் என்கிறார் இராதாகிருஷ்ணன். இதற்குச் சான்றாக மாஸ்கோ மனமகிழ் மன்றத்தின் சுவர்களில் வரையப்பட் டுள்ள பின்வரும் வாசகங்களை அவர் குறிப்பிடுகிறார்: உலகம் தோன்றியது எப்போது என்பதை எவரும் அறியார்; ஆனால், அக்டோபர் 1918 இல் புத்துலகு ஒன்று பிறந்ததை அறியாதார் யார்? விண்ணுலகிலிருந்து கடவுளர்களையும், மண்ணுலகிலிருந்து முதலாளித்துவத் தையும் வெளியேற்றுவோம்! கட்டிளங் கம்யூனிசக் காளைகளுக்கு வழிவிடு வோம்! இத்தகைய பிசிரற்ற(!) சான்று களைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் அவர் மேலும் தொடர்கிறார்:
பூடகமான ரஷ்ய மண்ணின் மீது தூவப்பட்ட காரல் மார்க்சின் கம்யூனிச விதை மதமாக முகிழ்த்து அதிகாரத்தின் அரவணைப் பில் தன்னை வளர்த்துக் கொள்ள அதற்கேற்ற உத்திகளைக் கையாள் கிறது; செஞ்சேனை, பள்ளிக்கூடங்கள், பத்திரிகைகள், பொதுக்கூட்ட மேடை கள் ஆகிய அனைத்தும் அந்த மண் ணிலிருந்து மதத்தைத் துரத்திடப் பகீ ரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன! 
நம்பிக்கை, ஆழ்ந்த ஈடுபாடு, சாகவும் துணியும் தியாகம் ஆகியவையே போல்ஷ்விக் கொள்கையின் உந்து சக்தி! யூத மதத்தவர் கடவுளின் அருள் வெளிப்படும் நாளை எதிர்நோக்கி இருப்பதைப் போன்றே போல்ஷ்விக்கு களும் புதிய விண்ணுலகம் - மண்ணு லகம் பற்றிய கனவுகளில் மூழ்கிக் கிடக் கிறார்கள்! நாங்கள் மதத்திற்கு எதிரி களோ, ஆதரவாளர்களோ அல்லர்; அதைப் புறந்தள்ளிவிட்டு நாங்கள் படைக்கவுள்ள உலகளாவிய சகோதரத் துவம் என்பது கடவுள், கிருஸ்து அல்லது வேறெந்த மதத்தை விடவும் உன்னதமானது என்றொரு சோசலிச வாதி முழங்குவாராயின் அவர் பெரும் பாலான கடவுள் நம்பிக்கையாளர்களை அல்லது கிருஸ்துவை வணங்குகிறவர் களை விடவும் மேலான மத நம்பிக் கையாளர் என நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்!
மார்க்ஸ், லெனின் ஆகியோரிடத் திலும், பொதுவுடைமைத் தத்துவத்திலும் மதத்தைக் கண்டுபிடிக்கிற இராதா கிருஷ்ணனின் வாதத்தையும், சாங்கியம், பவுத்தம், சமணம், பூர்வ மீமாம்சம் ஆகியவற்றோடு நிற்காமல் சாருவாகத் தத்துவத்திலும் கடவுளை அடையாளங் காட்டுகிற உதயணரின் முயற்சியையும் ஒன்றை மற்றொன்று முந்துவதற்காகத் தமக்குள் மோதிக் கொள்ளத் தற் போதைக்கு வழிவிடுவோம்! அதே சமயம் புனை கதைகளைப் புறந்தள்ளி விட்டு உண்மைகளை நாடிப் போவோம்!
இந்தியத் தத்துவ ஞானிகளில் டாக்டர் இராதாகிருஷ்ணன் பலரால் புகழப்படுகிறார்; ஆனால், எப்படி சளவாதியாக உள்ளார் என்பதை சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா!
கடவுள் மறுப்பாளரான, பகுத்தறிவு மேதையான புத்தரையே, மகாவிஷ்ணு வின் - 9 ஆவது அவதாரம் என்று காட்டினார் டாக்டர் இராதாகிருஷ்ணன் - அவரது சள முயற்சிக்கு மற்றொரு - திரிபுவாதம் - திசை திருப்பல் இது!
நாம் இந்த சளவுக்கு நமது தொலைக்காட்சி விவாதங்களில் சரக் கில்லாது வாதம் புரியும் சளவாதிகள் பலரை அனுதினமும் பார்க்கிறோமே!
எனவே, சளவாதிகளிடம் அதுவும் சாமான்ய சளவாதிய சரித்திரப் புகழ் வாய்ந்த சளவாதிகள் வரை எச்சரிக்கை யோடு இருப்போமாக!

0 comments: