Monday, November 19, 2012

பி.ஜே.பி.யும் - காங்கிரசும்!


அடுத்து ஆட்சியை நாங்கள்தான் பிடிக்கப் போகிறோம் என்று தலைகால் புரியாமல் துள்ளிக் குதிக்கும் பி.ஜே.பி.,க்குள் என்ன நடக்கிறது?
பிரதமருக்கான வேட்பாளர்களின் பட்டியல் அங்கு அனுமார் வால்போல நீண்டுகொண்டே போகிறது (இராம பக்தர்கள் அல்லவா! அதனால்தான் இந்த உதாரணம்!).
குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்குக் கழுத்து முட்டும் ஆசை புடைத்துக் கொண்டு இருக்கிறது.
அவர் என்னதான் வேடம் கட்டி ஆடினாலும் குஜராத்தில் சிறுபான்மை மக்களான முசுலிம் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று நரவேட்டை ஆடிய ரத்த வாடை அடையாளத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே முடியாது!
ஒரு மாநிலத்தின் அதிகாரத்தை வைத்துக் கொண்டே இவ்வளவு ஆட்டம் போட்டவர் பிரதம ரானால் நாடு தாங்காது - உலக நாடுகள் மத்தியில் மாபெரும் தலைக்குனிவுதான்!
அன்றையப் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பேயி குஜராத் படுகொலைகளை மனதிற் கொண்டு, எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரே - அந்தப் புலம் பலுக்கான கருப்பொருள் நரேந்திர மோடியல்லவா!
பி.ஜே.பி.யில் இப்படிப்பட்டவர்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்றால், அந்தக் கட்சியின் யோக்கிய தையும், அடையாளமும் எவ்வளவு மட்ட ரகமானவை என்பதை எளிதிற் புரிந்துகொள்ளலாமே!
உண்மையைச் சொன்ன காவல்துறை அதிகாரிகளையே சிறையில் தள்ளும் இன்னொரு இடிஅமீன் இந்த மோடி! தன் அமைச்சரவையில் இருந்த பெண் அமைச்சர் மாயாபென் கொட் நானிக்கு கொலைக் குற்றவாளியாக 28 ஆண்டுகள் தண்டனை பெற்று இருக்கிறார். இதைவிடக் கொடிய தண்டனைக்கு உரியவர்தான் இந்த நரேந்திர மோடி!
உச்சநீதிமன்றம் நியமித்த  அமிக்கஸ் க்யூரி - இராமச்சந்திரன் (பாரபட்சமற்ற நடுவர்) தம் அறிக்கையில் மோடி மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) உள்ள கட்சிகளே மோடி பிரதமர் ஆவதற்குத் தம் எதிர்ப் பினை மிக வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளன. பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத் துக்கு நரேந்திர மோடி வரக்கூடாது என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தடை போட்டதும் யாருக்குத்தான் தெரியாது?
இப்பொழுது இன்னொரு குரல் பி.ஜே.பி.,க்குள்; பி.ஜே.பி. தலைவர் நிதின்கட்காரி மீது ஊழல் புகார் கிளப்பப்பட்டுள்ளதன் பின்னணியில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி இருக்கிறார் என்று ஆர்.எஸ்.எஸின்  மூத்த தலைவர் வைத்யா கூறியதன் மூலம் கட்சிக்குள் ஓர் அணுகுண்டைத் தூக்கிப் போட்டு, அலைகளை எழுப்பியுள்ளார். அதற்கு எதிர்வாதங்களும் எழும்பிக் குதிக்கின்றன.
நிதின்கட்காரி மீது ஊழல் புகார் கிளம்பிய நிலையில், அவரைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். துடியாய்த் துடிக்கிறது. ஆர்.எஸ்.எஸின் மூத்த ஆலோசகராகக் கருதப்படும் திருவாளர் ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி அய்யரின் பூணூல் எல்லாம்கூட வியர்த்துக் கொட்டுகிறது; எல்லா ஆவணங்களையும் அலசிப் பார்த்துவிட்டாராம் - நிதின்கட்காரி ஊழல் ஏதும் செய்யவில்லை என்று தீர்ப்பே எழுதி விட்டார்!
ஒன்று மட்டும் உறுதி; ஆர்.எஸ்.எஸின் உற்பத்திப் பொருள் இந்த கட்காரி என்பதால், அவரைக் காப் பாற்றும் நிலையில் அது இருக்கிறது என்பதுதான் பெருத்த உண்மை.
பி.ஜே.பி.க்கு என்று ஊழியர்கள் கிடையாது; எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் தொண்டர் குழாம்! தேர்தல் பணி என்று வந்தாலும், அவர்கள்தான் ஈடுபடவேண்டும்.
அந்த ஆர்.எஸ்.எஸ். நிதின் கட்காரியின் கையை வலுப்படுத்துவதன்மூலம் மோடியின் நிலை வெளிறிப் போன பரிதாபம்!
பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களைப்பற்றியோ கேட்கவே வேண்டாம்!
இவ்வளவுக் கேடு கெட்டு பி.ஜே.பி. அல்லாடும் நிலையில்,
காங்கிரஸ் தன் நடவடிக்கைகளால் பி.ஜே.பி.,க்கு உதவி செய்தால்தான் உண்டு; அதனை நம்பிதான் பி.ஜே.பி. இருக்கிறது என்றுகூடக் கருதலாம்.
மக்களின் அடிப்படைப் பிரச்சினை - குறிப்பாக விலைவாசிப் பிரச்சினையில் காங்கிரஸ் கவனம் செலுத்தத் தவறினால் அது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...