Friday, July 13, 2012

சீர்கேடு நோயை விரட்டவேண்டாமா?


கோயிலுக்குள் நுழைந்தால் ஆபாசம் - கோயில் சிலைகள் - தேர்களைப் பார்த்தால் அருவருப்பு - சாமியார்களைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்! கோயில் கருவறையிலோ அர்ச்சகனின் காம லீலை கள்! கடவுள் கதைகள், புராணங்கள், இதிகாசங் களைப் படித்தால் கேவலமான ரசனைகள் - இத்தோடு முடிந்ததா?
ஏடுகளை, இதழ்களைப் புரட்டினால் அரைகுறை ஆடைகளோடு பெண்களின் வண்ண வண்ணப் படங்கள் (ஆனந்தவிகடன் உள்ளிட்ட வார இதழ்கள் எல்லாம் இதில் அடக்கம்!)
ஓட்டல்களில் இரவு நேரங்களில் மதுவிருந்து - நடிகர் நடிகைகள் பட்டாளங்கள் அங்கு அணிவகுப்பு - ஆட்ட பாட்டம் - அடிதடிக் கூத்துகள். செய்தி ஏடுகளில் வெட்கம் கெட்ட முறையில் இவைகளுக்கு முன்னுரிமை!
இதுபோன்ற ஓட்டல் ஆட்டம் பாட்டங்களில் கல்லூரி மாணவிகளும், கைநிறைய சம்பாதிப்பவர் களும் பங்கேற்கிறார்களாம்.
சின்னத் திரை - பெரிய திரைகள் என்றால் ஆபாச நச்சுக் காற்றின் பிரவாகம்! வசனம், பாடல் களில் இரட்டை அர்த்தங்கள். இணைய தளங்களிலோ எழுத்துக்களால் கூறமுடியாத அளவுக்கு நிர்வாணங்கள். இவற்றைப் பயன்படுத்தி மோசடிகள்!
இவற்றின் தாக்கங்களால் இளைஞர்கள், மாணவர்கள் திசை மாறித் தத்தளிக்கும் போக்குகள். 15 வயதுக்குள் மது பழக்கம் வந்துவிட்டதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பேருந்துகளில் சக பயணிகள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு இளம் வட்டங்களின் அருவருப் பான பேச்சுகள் - அதீதமான சேட்டைகள்!
இரவு நேரங்களில் கடற்கரைச் சாலைகளில் பெருங்குடி மகன்களின் ஆர்ப்பாட்டமான நடவடிக் கைகள்.
சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் எட்டு வளைவு போட்டுப் பறக்கும் போக்குகள் - இவை எல்லாம் எங்கு கொண்டு போய் விடும் என்கிற அச்சமும், கவலையும் நாணயமான சமூக சிந்தனையாளர்களுக்கு ஏற்படாமல் போகாது. கல்வித் திட்டமும், கல்வி நிறுவனங்களும் இவற்றிற்குத் தீர்வு காணும் என்கிற நம்பிக்கை இல்லை. உயர்நிலைப் பள்ளி மாணவன் தன் ஆசிரியையே கத்தியால் குத்திக் கொலை செய்கிறான்.
வீட்டில் பெற்றோர்கள் பரபரப்பாக இருக்கிறார் கள். அவர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள். பிள்ளைகளைக் கவனிக்க நேரம் ஏது? அப்படியே நேரம் கிடைத்தாலும் சின்னத்திரை சாகரத்தில் அவர்கள் மூழ்கிவிடுவார்கள்.
அரசியல் போக்கோ கேட்கவே வேண்டாம். சித்தாந்தங்கள் சிறகொடிந்து போய், பெரும்பாலும் குறுக்கு வழியில் குபேரர் ஆவதற்கான மும்முரங் களில் மூளைகளைக் கசக்கிக் கொண்டு இருக் கிறார்கள் - புதிய தலைமுறையினர்.
போதும் போதாததற்கு உலக மயம் என்ற பொருளாதார ஒட்டகம் நுழைந்து, நுகர்வுக் கலாச்சாரம் எனும் அபினில் மக்கள் மயங்கிக் கிடக் கிறார்கள். தங்கள் வருமானம் என்ன என்பதைப் பற்றி கவலையில்லை - கடன் வாங்கியாவது சொகுசுப் பொருள்களை வாங்கி வீட்டை நிரப்பும் போலித்தன படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் நிலை!
சித்தாந்தம் உள்ள தலைவர்களைவிட, கட்சிகளை விட சினிமாக்காரர்கள்தான் தங்கள் வழிகாட்டிகள் என்று சிகரத்தில் வைத்து வழிபடும் அவலம்!
இவற்றைப் பற்றி எல்லாம் சிந்திக்கும் தலைவர்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்? எத்தனை ஏடுகள் - இதழ்கள் இருக்கின்றன? பொதுக்கூட்டங்களில் ஒரு மணி நேரம் பேசினால் அதில் ஒரு பத்து நிமிடம் தனி ஒழுக்கம், பகுத்தறிவு, பொது ஒழுக்கம்பற்றிப் பேசக்கூடாதா? கேடுகெட்ட கலாச்சாரத்தைக் கண்டித்துக் கருத்துக் கூறக்கூடாதா?
எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள்? சிந்தனை யாளர்கள் என்ன செய்கிறார்கள்? ஆன்மீகத்துக் காக வாரம் ஒருமுறை சிறப்பு இதழ்களை வெளியிடும் பத்திரிகை முதலாளிகள், பொது ஒழுக்கத்தைப்பற்றி நான்கு வரிகளை இடம்பெறச் செய்யக்கூடாதா?
இவை குறித்த உரத்த சிந்தனை தேவை - செயல் பாடுகளும், திட்டங்களும் தேவை! தேவை!! கழகமும், நமது ஏடுகளும்தான் இவற்றை ஆழமாகச் செய்து கொண்டு இருக்கின்றன என்பதை மறுக்க முடியுமா?



1 comment:

Thamizhan said...

ஆங்காங்கே திருக்குறள் படிப்பும், போட்டிகளும் நடத்துவது நல்ல பயன் தரும். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு குறல் படித்து அதற்கு அவருக்கு விளங்கியதைச் சொல்லச் சொல்லி வாரந்தோரும் நடத்த அனைவரும் முன் வர வேண்டும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...