Thursday, December 15, 2011

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மேலாக கண்மூடித்தனமான கேரளாவின் தீர்வுகள்!


உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பி. சண்முகம், கே.பி. சிவசுப்பிரமணியம், ஏ.கே. ராஜன் கருத்துரை

(முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரள அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர் தெரிவித் துள்ள கருத்து இந்து ஆங்கில நாளிதழில் 11.12.2011 அன்று வெளி வந்துள்ளது. இதற்கு மறுப்பு தெரி வித்து சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள்  திருவாளர்கள் பி.சண்முகம், கே.பி.சிவசுப்பிர மணியம், ஏ.கே. ராஜன் ஆகியோர் இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய ஆங்கில  நாளிதழ்களுக்கு 12.12.2011 அன்று கடிதம் ஒன்று எழுதி அனுப்பியுள்ளனர்.

நமக்கும்  அதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே தரப் பட்டுள்ளது.)  ஏற்கெனவே உச்சநீதிமன்றம் முடிவு செய்துவிட்ட நிலையிலும், வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையிலும், பிரதமர் பெரியாறு அணை விவகாரத்தில் தலையிட முடியுமா என்பதுதான் அடிப்படைக் கேள்வியாகும்.

சட்டத்தின் ஆட்சியை அலட்சியப் படுத்திவிட்டு, குறுகிய மனம் படைத்த அரசியல்வாதிகள் மற்றும் சுயநலவாதிகள் தெரிவித்துள்ள குறுகிய கண்ணோட்டக் கருத்துகளை நாங்கள் பெருமதிப்பு வைத் திருக்கும் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ண அய்யர் ஆதரிப்பதைக் கண்டு நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம்.    அவரைப் போன்ற உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது, கண்டதும் சுடுவதற்கு உத்தரவிட கேரள அரசுக்குத் துணிவை அளித்துள்ளது. (ஊடகச் செய்திகள் மறுக்கப்படவில்லை.)

முல்லைப் பெரியாறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோருக்கு இடையேயான வழக்கில் மதிப்பிற்குரிய உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று தீர்ப் பளித்துள்ளது. மத்திய நீர்வள ஆணையம் ஆலோசனை தெரிவித்திருப்பது போல முல்லைப் பெரியாறு அணையைப் பலப் படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள  அனுமதித்தும், அனுமதிக்கப்பட்ட முறையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவ தற்கு எந்தத் தடையையும் கேரள அரசு செய்யாமல் தடுக்கவும் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளது.

மத்திய நீர்வள ஆதார அமைச்சகத் தினால் நிறுவப்பட்ட நிபுணர் குழு அணையை சோதனையிட்டு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த உச்ச நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. அது மட்டுமன்றி, நிபுணர் குழுவின் முன்னும், மதிப்பிற்குரிய உச்சநீதிமன் றத்தின் முன்னும் நடைபெற்ற விசாரணை களின் போது,  தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க கேரள அரசுக்கும் வழக்கில் தொடர்புடைய மற்ற அனைத்து பிரதிவாதி களுக்கும் எண்ணற்ற வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருந்தன. 1998 இல் தொடங் கிய இந்த வழக்கு 27.2.2006 அன்று முடிவுக்கு வந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போதுள்ள 136 அடியில் இருந்து 142 அடிக்கு உயர்த்துவதற்கு அணை பாதுகாப்பாக இருக்கிறதா என்ற  பிரச்சினை, நிலநடுக்கத்தை அணை தாங்குமா என்பது  உள்ளிட்ட அனைத் துக் கோணங்களிலும் அணையின் பாதுகாப்பு குறித்த பல்வேறுபட்ட அறிக் கைகள்  மிக ஆழமாகப் பரிசீலனை செய் யப்பட்டன. இத்தகைய அச்சங்களுக்கு எந்த ஆதாரமும், அடிப்படையும் இல்லை. உண்மையில்,  கேரள அரசின் இந்த மனோ பாவம் மூடநம்பிக்கை கொண்டதாக இருக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மறுபரிசீலனை செய்யவேண்டி கேரள அரசு 3.4.2006 அன்று உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு 27.7.2006 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

அணை  உறுதியாக இருந்த காலத்தை எல்லாம் கடந்துவிட்டது, அணையின் மோசமான நிலை என்ற  சொற்றொடர்கள் மதிப்பிற்குரிய உச்சநீதி மன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பிற்கு முற்றிலும் நேர்மாறானவை.

இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்ட 15 நாள்களுக்குள் கேரள நீர்பாசனம் மற்றும் நீர்சேமிப்பு (திருத்த) சட்டம் என்ற சட்டம் ஒன்றினை கேரள சட்டமன்றம் 15.3.2006 அன்று நிறைவேற்றியது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இந்தச் சட்டத்தால் 136 அடி வரைதான் இருக்க லாம் என்று வரையறை செய்யப்பட் டுள்ளது.

கேரள அரசின் இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அசல் வழக்கு எண். 3/2006 இல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் என்னென்ன பிரச்சினைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பது 13.12.2007 அன்று முடிவு செய்யப்பட்டது.

இந்த திருத்த சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்ற பிரச்சினை பற்றியும், நீதித்துறைக் கோட்பாடு பற்றியும், நீதிமன்ற ஆணை மீறல் பற்றியும், புதிய அணை கட்டுவது பற்றியும் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டது.

தனது 18.02.2010 நாளிட்ட ஆணையில்  உச்சநீதிமன்றத்தின்  மூன்று முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட உயரதிகாரம் பெற்ற குழுவை நியமிக்க உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு ஆணையிட்டது,

அணையின் நீர்மட்டத்தை உயர்த் துவது, அணையின் பாதுகாப்பு நிலை , அதன் உறுதித் தன்மை பற்றிய கவலைகள், புதிய அணை கட்டுதல் போன்ற எந்தெந் தப்  பிரச்சினைகளைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது என்று இந்த குழு 15.10.2010 அன்று முடிவு  எடுத்தது.

இரண்டு தரப்பினரும் தங்கள் சார் பான ஆவணங்களைத் தாக்கல் செய்த துடன், போதுமான அளவில் தங்கள் நிலையை எடுத்துரைத்திருக்கின்றனர். இந்தக் குழுவின் பணிக்காலம் 2012 பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மனு

இதற்கிடையில், பெரியாறு அணை யின் நீர் மட்டத்தை 120 அடிக்குக் குறைக்காமல் இருக்குமாறு கேரள அரசை தடை செய்ய வேண்டும் என்றும், அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்துள்ளது. இந்த இரண்டு மனுக்களும் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

நிலைமை இவ்வாறு இருக்க, அவர் களுக்கு மட்டுமே தெரிந்த காரணங் களுக்காக, கேரள அரசும், அரசியல் கட்சிகளும் முல்லைப் பெரியாறு அணை யின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளையும், புதிய அணை ஒன்றைக் கட்டுவது பற்றிய கேள்வியையும் ஊடகங்களில் எழுப்பி வருகின்றனர். அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பது என்ற ஒரு தீர்மானத்தை கேரள சட்டமன்றம் தனது சிறப்புக் கூட்டத்தில் - நிறைவேற்றியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை இடிந்து கேரள மாநிலமே வெள்ளக்காடாக ஆகிவிடுவது தவிர்க்க இயலாதது  என்பது போன்ற ஒரு பேரச்ச உணர்வை, பீதியை கேரள மக்கள் அனை வரின் மனதிலும் கேரள அரசும், செய்தித் துறையினரும் உருவாக்கி வளர்த்து வருகின்றனர்.

நியாய உணர்வு படைத்த அனைத்து குடிமக்களாலும் எழுப்பப்படவேண்டிய கேள்விகள் வருமாறு:

1) முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு பற்றியும், புதிய அணை ஒன்று கட்டுவதன் தேவை பற்றியும்  முடிவு செய்ய, உச்சநீதிமன்றத் தின் மூன்று முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட உயரதிகாரம் பெற்ற குழு தகுதி பெற்றுள்ளதா?

2) 27.2.2006 அன்று மதிப்பிற்குரிய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை ஒரு சட்டத்தை நிறைவேற்றி மாற்றி விட முடியுமா? நீதிமன்ற முடிவை  ஒரு மாநில சட்டமன்றம் ரத்து செய்வது அனுமதிக்கப் படக்கூடியதா?

3) பிரதிவாதிகளுக்கு அளிக்கப்பட்டி ருந்த வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத் திய பிறகே, அணையின் கொள்ளளவுத் திறன் பற்றி மறுபடியும் தற்போது எழுப்பப் பட்டுள்ள கேள்விகளை உயரதிகாரக் குழுவின் முன்னும் உச்ச நீதிமன்றத்தின் முன்னும் எழுப்புகின்றனரா?  அத்தகைய வாய்ப்புகள் அனைத்தையும் கேரள அரசு பயன்படுத்தி முடித்து விட்டதா?

4) இந்தப் பிரச்சினைகள் வன்முறை பலத்தாலா அல்லது சட்டத்தின் ஆட்சி யினாலா தீர்க்கப்பட வேண்டும்?

நாம் அரசமைப்புச் சட்டத்திற்கும் சட்டத்தின் ஆட்சி என்னும் கோட்பாட்டுக் கும் கட்டுப்பட்டவர்கள்.  அரசமைப்புச் சட்ட 141ஆம் பிரிவின்படி உச்சநீதி மன்றத் தின் தீர்ப்பு  அனைவரையுமே கட்டுப்படுத் துவது ஆகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை ஒரு சட்ட மன்றத்தினால் மாற்ற முடியாது. கேரள அரசு நிறைவேற்றி உள்ள சட்டதிருத்தம் செல்லத்தக்கதா என்ற பிரச்சினை தற்போது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

கண் மூடித்தனமான தீர்வுகள்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, உறுதித் தன்மை, அணை உறுதியாக இருந்த காலத்தைக் கடந்து விட்டது என்ற கூற்று, மற்றும் அணையின் புவியியல் சூழ்நிலைகள் ஆகியவை அந்தந்தக் களங்களில் உள்ள நிபுணர் களால் மட்டுமே முடிவு செய்யப்பட இயன்ற  பொருள்களாகும்.  நிபுணர்களின் உதவி யுடன் இந்த அனைத்துப் பிரச்சினைகளும் பரிசீலிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்ட நிலையில், கண்மூடித்தனமான தீர்வுகளை அளிக்க முன்வருவது அறிவு டைமையாகுமா? நீதிமன்ற அவமதிப்பு, நீதித்துறைக் கோட்பாடு, நீதிமன்ற ஆணை மீறல் ஆகியவை பற்றி ஒவ்வொரு வரும் நன்றாக அறிந்திருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளில் சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதிப்பது ஒன்றே பேரறிவான செயலாகும் என்று கருது கிறோம்.
(ஒப்பம்: நீதியரசர்கள் பி.சண்முகம், கே.பி.சிவசுப்பிரமணியம், ஏ.கே.ராஜன்.)
தமிழில்: த.க.பாலகிருட்டினன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...