Friday, December 23, 2011

தந்தை பெரியாரும் விடுதலையும்.....


தந்தை பெரியார் நினைவு நாளில் விடுதலை சந்தா வழங்கும் நிகழ்ச்சி அமைந்திருப்பது பொருத்தமான ஒன்றாகும். ஏனெனில், தந்தை பெரியாருக்குப் பிறகு விடுதலை வெளிவருமா? வராதா? என்றெல் லாம் பேசிக்கொண்டதைக் கேட்டுள்ளேன். தந்தை பெரியார் அவர்கள் 8.11.1968 வெள்ளி மாலை 5.00 மணியளவில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா மண்டபத்தில், பல்கலைக்கழகச் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் தலைவராக, அன்றைய துணை வேந்தர் எஸ்.பி. (ஆதிநாராயணா) கலந்து கொண்டார். பல்கலைக் கழக மாணவர் பேரவை சார்பில் வரவேற்பிதழ் வாசித்தளிக்கப்பட்டது.

அன்றைய தினம் விடுதலை ஏட்டின் விலை 10 பைசா ஆகும்; ஒரு மாத சந்தா மூன்று ரூபாயாகும். திராவிடர் மாணவர் கழகத்தைச் சேர்ந்த நாங்கள் விடுதலை சந்தா சேர்த்து தந்தை பெரியாரிடம் அளித்தோம், தொகை எவ்வளவு என்பது இப்பொழுது நினைவில்லை. அன்றைய தினம் கழகத் தோழர்கள் அனைவரும் தந்தை பெரியாரிடம் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான், அது என்னவென்றால், விடுதலை எழுத்துககளை மாற்றுங்கள் என்பதாகும்.

இக்காலம் போல கணினி வசதி இல்லாத காலம், அச்சுக் கோர்த்து அச்சடிக்கும் காலமாகும். அந்த அச்சு எழுத்துக்கள் நாளாக நாளாகத் தேய்ந்து விடும். அந்த எழுத்துக்களைக் கொண்டு அச்சிடும் ஏடு படிக்க சிரமமாக இருக்கும். எனவேதான், விடுதலைக்கு புதிய எழுத்துக் கள் வாங்கி அச்சடியுங்கள் என்று தோழர்கள் கோரிக்கை வைப்பார்கள்.

கழகத் தோழர்கள் தந்தை பெரியாரிடம் மற்றொரு வேண்டுகோளையும் வைப்பார்கள், கழகத் தொடர்பான நிகழ்ச்சிகளின் படங்கள் நிறைய வரவேண்டும் என்பதாகும். அக்காலங் களில் புகைப்படங்கள் பிளாக் செய்யப்பட்டு வெளியிட வேண்டும். இப்பொழுதுபோல் அவ்வளவு எளிதாக படங்கள் வெளியிடும் வாய்ப்பில்லை. நம் விடுதலை ஏட்டுக்கு, சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து குகா பிராசஸ் என்ற நிறுவனத்திலிருந்து பிளாக் செய்து வரவேண்டும்.

நான் அந்த பிளாக் செய்யும் கடைக்கு விடுதலை பணியாளர்களுடன் சென்றுள்ளேன். 1969 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் பேசினார்கள் (இது இரண்டாம் முறை) அந்த புகைப்படத்தை கொண்டுபோய் கொடுப்பதற்காகச் சென் றுள்ளேன். அக்காலத்தில் விடுதலையில் எல்லா கழக நிகழ்ச்சிகளையும் படம் எடுத்து போடுவதில்லை. ஏனெனில், பிளாக் செய்ய செலவாகும் என்பது ஒரு காரணம்.

1976 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தந்தை பெரியார் மலர் வெளியிடவே தடைவந்தது. ஏனெனில், அப்பொழுது அவசர நிலை அமுலில் (Emergency) இருந்த காலம் ஆசிரியர் அவர்கள் (மிசாவில் சிறையில் இருந்தார்கள். கவிஞர் கலி.பூங்குன்றன் தான் விடுதலை பொறுப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

விடுதலை ஒவ்வொரு நாளும் நுங்கம்பாக்கத் திலுள்ள சென்சார் அலுவலகம் சென்று, அவர்கள் ஒப்புதல் தந்தால்தான் பத்திரிக்கை அச்சிடமுடியும் இக்காட்சிகளை எல்லாம் கவிஞர் அவர்களுடன் இருந்து பார்த்துள்ளேன். அப்படிப் பட்ட தொல்லை அனுபவித்த விடுதலை இன்று தமிழர் தலைவர் காலத்தில் அய்ம்பது ஆயிரம் சந்தா பெறுவது - அதுவும் தந்தை பெரியார் நினைவு நாளில் நிகழ்வது சிறப்பாகும்.

பேராசிரியர் பூ.சி. இளங்கோவன்
மாநில அமைப்புச் செயலாளர், ப.க.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...