Monday, December 19, 2011

கோயில் ஆய்வுக்களம்


பள்ளியில் அய்ந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். களரில் அய்ந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது. அதனால் ஆர்க்காடு நகரத்தில் அமைந்துள்ள அப்துல் அக்கீம் சாயபு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். என் ஊரிலிருந்து இப்பள்ளி மூன்று (மைல்) கல் தொலைவு உள்ளதாகும். நடைப் பயணமாகத்தான் உயர்நிலைப் பள்ளி சென்று திரும்ப வேண்டும். பல நேரங்களில் நண்பகல் உணவுக்காக வீட்டிற்கு நடந்தே வந்து சாப்பிட்ட பின் பள்ளி செல்வதுண்டு. உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த சில மாதங்களிலேயே திராவிடர் கழக நிறுவனத் தலைவர் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா மேலும் பல தலைவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
அவர்கள் பேசும் பொதுக் கூட்டங்களுக்குச் சென்று அவர்களின் சொற்பொழிவினை பலமுறை கேட்டதுண்டு. விரைவிலேயே நானும் என் தம்பியும் தந்தை பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டோம். போகப் போக கடவுள் சிலைகளைக் கண்டால் பக்தி உண்டாவது மாறி அவற்றைக் கண்டால் இழிவு செய்யத் தொடங்கி விட்டோம். கோயிலில் ஆள் இல்லாத நேரங்களில் கடவுள் சிலைகளை அடித்து உதைத்து பார்ப்பதுண்டு. இதனைச் செய்யும் போது மனதில் அச்சம் இருக்கும். ஆனால் எதிர் விளைவாக எங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. எனவே கடவுளைப் பற்றிய அச்சமும் நீங்கி விட்டது.
ஊருக்குச் சற்றுத் தொலைவில் பொன்னி அம்மன் கோவில் உள்ளது. அக்கோவிலின் சுற்றுச் சுவருக்கு உள்ளே, உட்கோவிலின் நுழைவு வாயிலுக்கு இருபுறங்களிலும் நடப்பட்டிருந்த சிறு கடவுள் உருவங்களின் கை, கால், முகம் இவற்றைக் கற்களால் குத்திச் சிதைத்தோம். சில கடவுள் சிலைகளை அவ்வப்போது அசைத்து அசைத்துப் பிடுங்கி எடுத்துக் கோவில் கிணற்றிலேயே எறிந்து விட்டோம். அங்குள்ள சிலைகள் மீது நாய்கள் சிறுநீர் கழிப்பதையும் காக்கை குருவிகள் எச்சமிடுவதையும் கண்டிருக்கிறோம்.
அவற்றிற்குக் கடவுள் என்பதும் தெரியவில்லை எவ்விதத் தீங்கும் ஏற்படவில்லை. எனவே, நானும் என் தம்பியும் அங்குள்ள சிலைகள் மீது சிறுநீர் கழித்தோம். உள்ளத்தில் அச்சமும், அடுத்தநாள் சிறுநீர் வருமோ வராதோ என்ற நடுக்கமும் இருந்தன. அடுத்த நாள்காலை எழுந்து சிறுநீர் வருமா வராதா என்பதை அறிய ஓடிச் சென்று உட்கார்ந்தோம். எப்போதும் போல் சிறுநீர் கழித்தோம். அச்சம் நீங்கி விட்டது. பின்னர் நினைத்த நேரமெல் லாம் சிறுநீர் பாய்ச்சல்தான். கடவுள் சிலைகளை பலவித ஆய்வுகளுக்கு உட் படுத்தி  கடவுள் சிலை, கோவில் போன்ற மற்றவற்றில் கடவுள் தன்மை இல்லை என்பதை அறிந்தோம்.
எடுத்துக்காட்டாக ஒரு சமயம் எங்கள் நண்பர்கள் என் துணிவைச் சோதிக்க கடவுள் சிலையை கோவில் உறை கிணற்றில் போட்ட பின்னர் அக்கிணற்றில் இறங்கி அதன் நீரில் முகம் கழுவிக் கொண்டு மேலே ஏறி வர வேண்டும் என்று தூண்டினர். நான் அவ்வாறே செய்து வியப்பில் ஆழ்த்தினேன். இவ்வாறெல்லாம் கடவுள்களை இழிவு செய்வது ஆசிரியர் (என் தந்தை) வீட்டுப் பிள்ளைகளாகிய நானும் என் தம்பியும்தான் என்பது ஊர் அறிந்த உண்மை.
அக்கோவில் ஊருக்கு வெளியே கொல்லை மேட்டில் இருந்ததுதான் எங்களுக்கு நல் வாய்ப்பாக அமைந்தது. அங்கிருந்த கருவறைக் கடவுள் உட்பட எந்தக் கடவுளுக்கும் ஒழுங்கான பூசை கிடை யாது. எனக்குத் தெரிந்து அக்கோவிலுக் கும் ஒரு பார்ப்பன பூசாரி இருந்தார். எனினும் அங்கு மக்கள் பூசைக்கு வருவதில்லை. பார்ப்பன பூசாரிக்கு வருமானம் இல்லாததால் அவர் பூசை செய்வதை நிறுத்தி விட்டார். எப்போதாவது சில விழா நாள்களில் ஊரிலுள்ள யாரேனும் ஒருவர் வந்து பூசை செய்வார். அக்கோவிலுக்குச் சிறப்பாக நடைபெற்று வந்த ஒரு திருவிழா பொங்கலை அடுத்து வரும் மயிலேறு என்ற விழாதான். அந்த ஒதுக் கப்பட்ட கடவுள் கருவறை எப்போதும் பூட்டியே இருக்கும். கோயிலின் விமான மும் சிதைக்கப்பட்டது: சுற்றுச் சுவர் முற்றிலுமாக இடிக்கப்பட்டது எங் களால்தான். எனவே, எங்கள் ஆய்வு முழு வெற்றி பெற்றதாக எங்கள் எண்ணம்.
(நன்றி: என் வாழ்க்கை பெரியாரின் பாதையில் புலவர் துறவரசன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...