13.11.1938 - தமிழ் நாட்டின் வரலாற்றில் பட்டை தீட்டப்பட்ட வயிரம் ஜொலிக் கும் நாள். அந்நாளில்தான் தமிழ் நாட்டின் மகளிர் குலம் மாநாடு கூட்டி ஈ.வெ.ரா. அவர்களுக்கு பெரியார் என்று பட்டம் அளித்து மகிழ்ந்தது.
அம்மாநாடு முடிந்த மறுநாளே மங்கைமார் இந்தி எதிர்ப்புப் போர் முரசு கொட்டி சிறைக் கோட்டம் ஏகினர்.
டாக்டர் தர்மாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர்முகத் தம்மையார், சீதம்மாள், உண்ணா முலை அம்மைர் (ஒரு வயது குழந்தையுடன்), பட்டம்மாள் (பாவலர் பால சுந்தரம் அவர்களின் துணைவியார்) என்று அடுத்தடுத்து சிறைச் சாலைக்குள் வீராங்கனை களாக நுழைந்தனர்.
பெண்களைப் போராட்டத்தில் குதிக்கத் தூண்டியதாக பெரியார் மீது ஆச்சாரியார் ஆட்சி (ராஜாஜி) வழக்குத் தொடுத் தது. பெண்கள் மாநாட்டிலும் (13-11-1938) மறுநாள் பெத்த நாயக்கன்பேட்டை யில் நடைபெற்ற பெண்கள் சிறை புகுந்ததற்கான பாராட்டுக் கூட்டத்திலும் போராட்டத்தில் குதிக்க பெண்களை பெரியார் தூண்டினார் என்று குற்றச் சாற்றின் பெயரில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தந்தை பெரியார் அவர்களுக்குச் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பெரும் வரவேற்பு காத்திருந் தது. (இதே டிசம்பர் ஆறில்தான் - 1938).
கோச் ஒன்றில் பெரியார் என்னும் தலைதாழாச் சிங் கம் வீற்றிருக்க, பல்லாயிரக் கணக்கான தோழர்கள் புடை சூழ, வாழ்த்து முழக் கங்களுடன் ஊர்வலமாக நீதிமன்றம் நோக்கி அணி வகுத்தது. 500 போலீஸ் காரர்களின் பாதுகாப்பு என்றால் சொல்லவும் வேண்டுமா?
வழக்கம் போல பெரியார் எதிர் வழக்காடவில்லை. ஆனால், அறிக்கை ஒன்றை அளித்தார். அறிக்கையா அது? அரிமாவின் வீரச் சுவைக் காவியம்!
நீதிபதியாகிய தாங்கள் பார்ப்பன வகுப்பைச் சேர்ந் தவர். முதல் மந்திரியும் (ராஜாஜியும்) பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். இம்மாதிரியான சூழலில் நீதியை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்! எனவே கோர்ட்டார் தங்கள் திருப்தியடையும் வண்ணம், அல்லது மந்திரிமார்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு தண்டனையைக் கொடுக்க முடியுமோ, அவற்றையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து, இந்த வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்க மாய்க் கேட்டுக் கொள் கிறேன் என்றாரே பார்க்க லாம். இதுபோல் வரலாற் றில் படித்ததுண்டா? கேள்விபட்டதுதான் உண்டா? மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அந்நாள் தான் இந்த டிசம்பர் 6 (1938).
- மயிலாடன்
No comments:
Post a Comment