Saturday, December 24, 2011

50 ஆண்டு காலமும் 50 ஆயிரம் சந்தாக்களும்


வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

அறிவாசான் தந்தை பெரியாரின் கொள்கை போர்வாளாம் "விடுதலை" எழுபத்தி ஏழு ஆண்டுகள் வீறுநடைப் போட்டு சமுதாய உச்சம் நோக்கிச் செல்கின்றது. அந்த கொள்கை போர் வாளுக்கு அய்ம்பது ஆண்டு காலம், இன எதிரிகளை துச்சமென்று மதித்து தம் வாழ்வையே அர்பணித்த ஒருவர் நீவீரே. உலகத்தில் எந்த ஒரு இயக்கமும் அல்லது அமைப்பும் இப்படி ஒரு முடிவை எடுத்தது கிடையாது - என்று சரித்திரம் படைக்கும் சந்தாக்கள் பற்றி உரைத் தார்கள் கழக பொதுசெயலாளர் அய்யா அவர்கள்.

அவர்களின் கூற்றுபோல், உலகில் எந்த ஒரு இயக்கமும் அல்லது அமைப்பும் தந்தை பெரியாருக்கு பின் இப்படி ஒரு பெருந்தலைவரை கண்ட தில்லை. இனியும் காண்போம் என்பதில் நிச்சயமில்லை. ஆம், தடைப்படாது சுவாசம் நிகழ்வது போல அவர் இடைவிடாது உழைக்கின்றார் என்று எழுத்தாளர் மானமிகு சோலை அவர்கள் பிரசங்கித்தது போல பத்துவயதில் பகுத்தறிவு பம்பரமாய் சுற்றியவர்.

இன்றும் சுற்றுபவர். என்றும் சுற்றுபவர். இப்படி ஒரு மாபெரும் தலைவரை இந்த தன்மான தமிழர்களுக்கு தலைவ ராய் கொண்டதில் பெருமைபடுகிறோம், ஆம் பேரின்பம் கொள்கிறோம்.

தந்தை பெரியாரின் விடுதலையால் வளர்ந்து, இன்று விடுதலையை வளர்க்கிறீர்கள் அய்ம்பது வருடங்களாய். இவ்வருடங்கள், பல இன்னல்களை எதிர்கொண்டும், பலவற்றை எதிர்த்தும் கடக்கின்றது. பெரியார் தந்த விடுதலை என்ற மூச்சுக்காற்று 1962இல் நிற்க இருக்கும் தருணத்தில், தம் வாழ்வு முழுமையும் அர்ப்பணித்து மீட்டெடுத்து, இன்று உலகம் போற்றும் விதமாக்கபட்டுள்ளது.

அவ் வாறு இனமானத்தை மீட்டெடுக்க வந்த விடுதலையைக் கண்டு, இனஎதிரிகள் அஞ்சி நடுங்கும் காலமிது. எங்கே நம் ஆதிக்கம் பறிபோய்விடுமோ என்று சில விசமிகளின் முன்னெச்சரிக்கை அடக்கு முறை அடைப்புகளை அன்றாடும் அடித்து நொறுக்கி வீழ்த்துகிறது நம் பத்திரிகை.                 

இதுவெறும் பத்திரிகை மட்டுமல்ல, பகுத்தறிவு பட்டம், கீழ நோக்கி இழுக்க இழுக்க மேல் நோக்கி கிளம்பும் பட்டம்."

சிதைவிடத்து ஒல்கார் உரவோர்; புதை அம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு-
என்ற வள்ளுவரின் வாக்கினுக்கு ஒரு எடுத்துக்காட்டாய். எத்தனை இழப்பீடு, எத்தனை இடையூறு. அத்துனை இடர் பாடுகளையும் உமியைப்போல் ஊதித் தள்ளி உயருகிறது. பக்கம் பக்கமாய் பார்ப்பனீயத்தை பதிக்கும் மற்ற நாளேடுகள் போலல்லாமல், பகுத்தறிவு படைப்புகளை பதிக்கிறது நம் விடுதலை. நமக்கு தெரிந்து, உலகளவில் ஒரே கொள்கைப் பிடிப்புடன் ஒரு நாளேடு இருந்ததில்லை. இருந்திருக்க வாய்ப்பில்லை.

அரசாங்க அடிவாரங்களை அசைக்கும் ஆசிரியரின் அறிக்கைகள். வரலாற்று பார்வை பத்தியாக ஒற்றைப்பத்தி. தினம் ஒரு அறவுரையாய் தந்தை பெரியாரின் அறிவுரை. தறிகெட்டு ஆடும் தலைகளை அடக்கும் தலையங்கம். வாழ்வினில் சிந்திக்க வாழ்வியல் சிந்தனைகள். அழகு அணிகலன்களாக ஆசிரியர்க்கு கடிதங்கள். கருத்து பேழையாய் கருத்துப் படம். தெரியாததை தெரிந்து கொள்ளவும், தெரிந்ததை தெளிவுபடுத்தவும் தெரிந்துகொள் வோம் பகுதி.

உலகை அறிய உலகச் செய்தி, வணிகம், விளையாட்டு செய்தி கள் எனவும். வரலாற்று நிகழ்வுகள் வரலாற்று சுவடுகளாகவும், பகுத்தறிவு களஞ்சியம், மகளிர், இளைஞர், மருத்துவம் மற்றும் அறிவியல் அரங்கம் என பலத்தரப்பட்ட செய்திகளைகொண்ட "கொள்கலன்" போல் படிக்க படிக்க இனிமையாகவும் கருத்து பொருந்தியவை யாகவும் இருக்கிறது நம் விடுதலை.

பிரச்சார பீரங்கி மட்டும் போதுமா! படைவீரர் தேவையில்லையா!! என்று ஞாயிறு தோறும் மறுமலர்ச்சி மலராக வெளிவருகிறது, "ஞாயிறு மலர்". இப் பெருமைகள் மட்டுமின்றி இணையதளத் தில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் என்ற பெருமையையும் உள்ளடக்கியது.

மேற்கண்ட பெருமைகளை காத்திடவும், மென்மேலும் பெருக்கிடவும், பெருந் திரளாய் தோழர்கள் ஒன்று சேர்ந்து சேர்க்கப்பட்டுள்ளது விடுதலை சந்தாக் கள். இனியும் சேர்க்கப்படும். இதுவரை கண்டிராத தனிமனித சாதனைகளையும், தனி மாவட்ட சாதனைகளையும் செய்து வருகிறோம். வியக்கவேண்டியவை, பாராட்டபட வேண்டியவை.

இவ்வுழைப்பினால் திராவிடர் பெருமை களையும், தந்தை பெரியாரின் கொள்கை களையும் வீடுதோறும் விடுதலை மூலம் கொண்டு சேர்க்கபடுகிறது. அந்த கடின உழைப்பின் பயன் வீணாகாமல், சரியான முறையிலும், சரியான இடத்திலும் விடுதலை போய் சேர்கிறதா என்று கவனம் செலுத்தி பார்க்கவேண்டியதும் நம் கடமை. இவை அல்லாமல், மற்ற நாளேடுகள் போன்று தினசரி காலையில், மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிடப் பட்டால் மேலும் மெருகேறும். இந்நடவ டிக்கையால், படிக்கும்பொழுது செய்திகள் கடந்தகால செய்தியாக இல்லாமல், நிகழ்கால செய்தியாக இருக்குமல்லவா.

இவ்வாறு மேற்கண்டவைகளை தாங்கள் தங்கள் கவனத்தில் எடுத்துக் கொள் வீர்கள் என்று தாழ்மையுடன் பணிந்து கேட்டுக் கொள்கிறோம்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

இப்படிக்கு
இரா. திலீபன்.
கண்ணந்தங்குடி கீழையூர், உரத்தநாடு

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...