Saturday, December 24, 2011

டிசம்பர் 24


டிசம்பர் 24 - வரலாற்றுக் குறிப்பு நாள். இந்நாளில்தான் -1973இல் மானுட உலகின் மகத்தான தலைவரான தந்தை பெரியார் தம் கண்களை இறுதியாக மூடினார்.

இந்நாளை நினைவு நாளாகக் கருதுவது ஒரு வரலாற்றுக் குறிப்புக்காகவே! மற்றபடி தந்தை பெரியார் அவர்கள் ஒவ்வொரு நொடியும் நினைக்கப்படும் நெடும் வரலாற்றுக்குச் சொந்தக்காரர்.

மூடநம்பிக்கை பற்றியா? ஜாதி ஒழிப்புச் சிந்தனையா? மண்ணுரிமையா? மகளிர் பற்றிய கருத்தா? சமூகநீதியா? அறிவியல் பற்றியா? ஏடுகள் குறித்தா? இனப் பிரச்சினை பற்றியா? சுதந்திரம் சம்பந்தமானதா? மனித வாழ்வின் குறிக்கோள் குறித்தா?

ஜனநாயகம் பற்றியா? குறிப்பாக மனித வாழ்வைத் தொடர்புபடுத்தும் அத்துணைத் துறைகளிலும் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளும் கருத்துகளும் கூர்மை மிகுந்த பளபளக்கும் வாளின் சுணை போன்றவை!

இன்றைக்கும்கூட பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் தந்தை பெரியார்மீது சேற்றை வாரி இறைக்கின்றன என்றால் அந்த அளவுக்கு தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக் கோட்பாடுகள், அவர்களால் ஊட்டப்பட்ட உணர்வுகள் பார்ப்பனர்களை சமூகத்தில் குற்றப் பரம்பரையாக அடையாளம் காட்டிக் கொண்டு இருக்கின்றன - எச்சரிக்கை - விளக்காகச் சுழன்று கொண்டு இருக்கின்றன.

உண்மையான திராவிடர் இயக்கங்களை ஊதித் தள்ளி விடலாம் என்று மனக் கோட்டை கட்டிக் கொண்டிருக்கும் பார்ப்பன ஊடகங்களுக்கும், சக்திகளுக்கும் தந்தை பெரியார் சிம்ம சொப்பனமாகக் காட்சி அளித்துக் கொண்டு இருக்கிறார் - அச்சுறுத்திக் கொண்டும் இருக்கிறார்.

தென்னாட்டில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 69 விழுக்காடு என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்தியாவின் பிற பகுதிகளில் பரிதாபமான நிலைதான்.

இன்றைய தினம் இந்த ஒப்பீடு பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரியார் ஊட்டிய உணர்வு, ஊன்றிய அந்தச் சுயமரியாதை எண்ணங்கள் நமக்கும் தேவை என்று உணரப்படும் கால கட்டம் இது.

உச்சநீதிமன்ற நீதிபதி - மண்டல் குழுத் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் தந்தை பெரியார் கனவு நனவாகிறது என்றாரே! பிரதமர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் நாடாளுமன்றத்திலேயே அறிவிக்கவில்லையா பெரியாரின் கனவு நனவாகிறது என்று? சட்டமன்றத்திற்குள் நுழையாத, நாடாளுமன்றத்திற்குச் செல்வது குறித்து என்றும் நினைத்துப் பார்க்காதவர் தந்தை பெரியார்!

ஆனாலும்; இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை! என்று முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் பிரகடனப்படுத்தினார் என்றால் சாதாரணமா? அந்தப் பிரகடனத்தில் எத்தனை எத்தனைச் சிந்தனைகள், தத்துவங்கள் செயல்பாடுகள் கூர்தீட்டி நிற்கின்றன என்பதை நம்மை விடப் பார்ப்பனர்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால் இது பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று சொல்லக் கூடிய பட்டியலில் இது சூத்திரர்களின் அரசு என்று ஒரு முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் சங்கநாதம் செய்யவில்லையா?

ஓட்டுக் கேட்காத தலைவர் பெரியார் ஆட்சிகளை மாற்றி அமைக்கவில்லையா? ஆச்சாரியாரை இரண்டு முறை பதவி நாற்காலியிலிருந்து விரட்டி அடிக்கவில்லையா?

தொலைநோக்கோடு சிந்தனையோடு எதிர்வரும் உலகம் குறித்து சொன்னவர் அவர்தானே சோதனைக் குழாய் குழந்தைபற்றி 1938இல் பேசி இருக்கிறாரா? - புருவத்தை மேலும் கீழும் உயர்த்தி ஆச்சரியக் குறியாக நிற்கிறார்கள் அறிவியல்வாதிகள்.

இன்றைக்கு மதவாதம். பல வகைகளில் எழுந்து நிற்கிறது - இந்தியாவில் மட்டுமல்ல; உலகில் பல நாடுகளிலும் இந்த அவலம் மக்களை மிருகமாக்கிக் கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்படவில்லையா? பல்லாயிர மக்களின் குருதி மண்ணில் நதியாக ஓடவில்லையா?

குஜராத்தில் என்ன நடந்தது? ஈராக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டதே!

இந்த வகையில் தந்தை பெரியார் உலகெங்கும் தேவைப்படுகிறார்.

மண்டைச் சுரப்பை உலகு தொழும்! என்றார் புரட்சிக் கவிஞர். கவிஞர் சொல் பொய்த்து விடவில்லை. இன்றைக்குத் தந்தை பெரியாரியல் உலகெங்கும் தேவைப்படுகிறது.

நமது இயக்கச் செயல்பாடுகள் மேலும் விரிவடைய வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

இதில் ஒன்றுதான் இளைஞர்கள் மத்தியில் விடுதலை என்னும் போர் வாளைக் கொண்டு சேர்க்கும் முயற்சி! இதில் வெற்றியும் பெற்று விட்டோம்.

இன்று மாலை - தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைவரின் கைகளில் 50 ஆயிரம் சந்தாக்களை ஒப்படைக்கப் போகிறோம்.

தமிழ்நாட்டுக் கட்சிகளின், தலைவர்களின், ஊடகங் களின் கண்கள் இந்த வகையில் நம்மை நோக்கித் திரும்பும் நிலை.

தந்தை பெரியார் என்ற இமயம் சாய்ந்த நிலையில் இது சிகரத்துக்குச் சமமான சாதனை!

ஆம், பெரியார் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் - நீரோட்டமாக இருந்து கொண்டு இருக்கிறார். அந்த மகத்தான சக்தியின் தோளில் நின்று வாள்களை வீசுவோம்! அவர் காண விரும்பிய ஜாதிகளற்ற, பேதங்களறற்ற ஒரு பெரும் சமத்துவ சமதர்மச் சமூகத்தை நிர்மாணிப்போம். வாழ்க பெரியார்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...