Thursday, November 24, 2011

யாரைப் பார்த்து யார் காப்பியடித்தார்கள்?



மதங்கள் என்பவையெல்லாம் ஒரு கடவுள் இருந்தாக வேண்டும்; மோட்சம் - நரகம் இருந்தாக வேண்டும்; கடவுள் தன்மை பொருந்திய அவதார புருஷர்கள், குருமார்கள் இருந்தாக வேண்டும்.
இவை இல்லாமல் உலகில் எந்த மதமும் இருக்க முடியாது. இந்து மதத்துக்கோ இவை மாத்திரம் போதாது. அதாவது பல கடவுள்கள் வேண்டும்; பலவிதமான மோட்சங்கள், பலவிதமான நரகங்கள் வேண்டும்; மற்றும் பலவிதமான பிறப்புகள், முன் பின் ஜன்மங்கள் வேண்டும்; இவ்வளவும் போதாமல் கடவுளை நேரில் கண்டு மோட்சத்திற்குப் போக பலவிதமான பக்தர்களும் வேண்டும்.
இந்தக் காரியங்கள் சிறப்பாக இந்து மதத்தின் உட்பிரிவு மதங்களான சைவ மதம், வைணவ மதம் என்று சொல்லப்படும் இரண்டு உட்பிரிவு மதங்களுக்கும் ஏறக்குறைய ஒன்று போலவே இருந்து வருகின்றன.
பெயர்களைப் பொறுத்தவரையில் சில மாறுதல்கள் இருக்கலாமேயொழிய காரியங் களைப் பொறுத்தவரையில் ஏறக்குறைய ஒருவரைப் பார்த்து ஒருவர் காப்பியடித்தது போலவேதான் இருக்கிறது.
உதாரணமாக வைணவத்தில் இராமாயணம் ஏற்பட்டதற்குக் காரணம் விஷ்ணுவும், அவரது மனைவியாகிய லட்சுமியும்  கலவி செய்ததில் இருந்தே ஏற்பட்டது என்றால், சைவத்துக்குக் கந்தபுராணம் ஏற்பட்டதற்குக் காரணம் சிவனும் அவரது மனைவியாகிய பார்வதியும் கலவி செய்ததில் இருந்தே ஏற்பட்டது.
எப்படியெனில் விஷ்ணுவும், லட்சுமியும் பகல் நேரத்தில் கலவியில் இருந்தபோது சில ரிஷிகள் படுக்கை அறைக்குள் பிரவேசித்து விஷ்ணுவைக் காண ஆசைப்பட்டதாகவும், துவாரக பாலர்கள் தடுத்ததாகவும், அதற்கு அவர்களை ரிஷிகள் சபித்ததாகவும், அந்தச் சாபம் தீர வேண்டியதற்கு ஆகவே இராமாயணம் முதலியவை ஏற்பட வேண்டியதாயிற்றாம்.
அதுபோலவே, பரமசிவன் பார்வதியோடு பல நூறு வருஷங்கள் விடாமல் கலவி செய்து கொண்டு இருந்ததாகவும், அதனால் ஏற்படும் வீரியமும், கர்ப்பமும் மிகக் கொடுமையான காரியத்தைச் செய்யக் கூடியதாகிவிடும் என்று, தேவர்கள் முறையிட கலவி முற்றுப் பெறுவதற்கு முன்பாகவே கலவியை நிறுத்திக் கொள்ள வேண்டியதாகி, அதனால் இந்திரியம் நிலத்தில் விழுந்து, பிறகு என்னென்ன  ஆபாசமாகி கடைசியாக சுப்பிரமணியர் தோன்றி, கந்தபுராணம் ஏற்பட வேண்டியதாயிற்று என்றுமே கதைகள் இருக்கின்றன.
அன்றியும் பூபாரம் தீர்க்கவும், ராட்சதர்களை அழிக்கவும் விஷ்ணு, ராமராய்த் தோன்றினார்.
அதுபோலவே பூபாரம் தீர்க்கவும், அசுரர் களை அழிக்கவும், சிவன் சுப்பிரமணியனாகத் தோன்றினார்.
ராமன் பிறப்பதற்கு ஆக தேவர்கள் விஷ்ணுவை வேண்டினார்கள்.
சுப்பிரமணியன் பிறப்பதற்கு ஆக வேண்டியும் தேவர்கள் சிவனை வேண்டினார்கள்.
ராமன் ராட்சதர்கள் என்பவர்களைக் கொன்றான்.
சுப்பிரமணியன் அசுரர்கள் என்பவர்களைக் கொன்றான்.
ராமன் ராட்சதர்களைக் கொல்லும்போது (மூலபலம்) கொல்லக் கொல்ல உற்பத்தியாகிக் கொண்டே வந்தன.
ராமன் பெண்சாதி சீதை ஒரு வளர்ப்புப் பெண். நிலத்தில் கண்டெடுக்கப்பட்டவள்.
சுப்பிரமணியன் பெண்ஜாதியும் ஒரு வளர்ப்புப் பெண். வள்ளிச் செடிக்கடியில் கண்டெடுக்கப்பட்டவள்.
சைவத்துக்கும், வைணவத்துக்கும் இனியும் அநேக விஷயங்களில் கடவுள்களைப் பற்றிய கதைப் பொருத்தங்கள் காணலாம்.
அதுபோலவே சைவ, வைணவ ஆச்சாரியார்கள் விஷயங்களிலும், சைவத்துக்கு நாயன்மார்களாகவும், வைணவத்துக்கு ஆழ்வாராதிகளாகவும், ஏற்படுத்தப்பட்டி ருப்பதோடல்லாமல், பல பக்தர்களையும் அவர்கள் செய்த காரியங்கள், அதன் பயனாய் அவர்கள் அடைந்த முக்திகள் முதலிய விஷயங்களிலும் ஒன்றுபோலவே கதைகள் கற்பிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
வைணவ பக்தர்கள் விஷயத்துக்கு பக்த லீலாமிருதம் என்னும் புத்தகம் போலவே சைவ பக்தர்கள் விஷயத்துக்கு பெரிய புராணம் என்னும் புத்தகமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
வைணவ பக்தரில் ஒரு குயவர் இருந்தால், சைவ பக்தரிலும் ஒரு குயவர் இருக்கிறார்.
எப்படி எனில் வைணவக் குயவர் கோராகும்பராய் இருந்தால், சைவக் குயவர் திருநீலகண்டராய் இருக்கிறார்.
இரு குயவ பக்தர்களுடைய கதையும் ஒன்றுபோலவே, அதாவது கோராகும்பரும் தன் பெண்சாதியுடன் பேசாமல் இருந்து கடைசியாக மகாவிஷ்ணுவே இருவரையும் பேசும்படிச் செய்து சேர்த்து வைக்கிறார்.
திருநீலகண்ட குயவனாரும் தன் பெண்சாதியோடு பேசாமல் இருந்து சிவபெருமான் வந்தே இருவரையும் பேசும்படிச் செய்து சேர்த்து வைக்கிறார்.
மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பதிலும் வைணவ மதத்துக்குச் சேர்க்கலாமா என்கின்ற தீண்டாத ஜாதி பக்தர் ஒருவர் இருந்து அவரைக் கோவிலுக்குள் விடாமல் தடுக்கப்பட்டு கனவு கண்டு கடைசியாக விஷ்ணு வந்து அழைத்துப் போகிறார்.
சைவத்திலும் தீண்டப்படாத வகுப்புக்கு நந்தன் என்பதாக ஒருவர் இருந்து பரமசிவன் வந்து கனவில் சொல்லி, சாமி தரிசனம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இரண்டு மத புராணங்களிலும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் ஒரே மாதிரியான உயர்வும், மற்றவர்களுக்கு இழிவும் ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு ஜாதிப் பாகுபாடுகளைப் பற்றி ஒரே மாதிரியாகவே குறிப்பிட்டுப் பலப்படுத்தியிருக்கிறது.
இவற்றுள் சைவத்தைப் பார்த்து வைணவர்கள் காப்பி அடித்தார்களா?
அல்லது வைணவர்களைப் பார்த்து சைவர்கள் காப்பியடித்தார்களா?
அல்லது இருவரும் ஒன்றாய் உட்கார்ந்து கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்துதான் இப்பெரும் புளுகு மூட்டைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ!
வாசகர்களே சிந்தியுங்கள்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...