Wednesday, October 19, 2011

காங்கிரசின் பலகீனமே பி.ஜே.பி.யின் பலம்!


காங்கிரசின் பலகீனமே பி.ஜே.பி.யின் பலம்!


வட மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அரியானா, மகாராட்டிரம், பிகார் ஆகிய மூன்று மாநிலங் களிலும், தெற்குப் பகுதியில் ஆந்திராவிலும் காங்கிரஸ் படுதோல்வியை அடைந்தது. கட்டிய பணத்தை (டெபாசிட்) இழக்கும் அளவுக்குத் தோல்வியைச் சுமந்துள்ளது.
இதற்கான காரணங்களை காங்கிரஸ் தீவிரமான வகையில் ஆசாபாசங்களுக்கு இடமின்றிச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளது.
அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரம்தான் இந்த நிலைக்குக் காரணம் என்று பொதுவான கருத்து நிலவுகிறது.
இதன் பலனை பி.ஜே.பி. அடைந்திருக்கிறது என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது. அன்னா ஹசாரேயை இந்த அளவுக்குப் பெரிய மனிதராக ஆக்கிய குற்றத்தை காங்கிரஸ்தான் செய்தது.
அய்ந்து காபினெட் அமைச்சர்கள் ஓடோடிச் சென்று அவரது தாவாயைப் பிடித்தார்களோ அப்பொழுதே அந்த ஆசாமி பெரிய ஆளாக ஆகிவிட்டார்.
இப்பொழுது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் நிலைக்குக் காங்கிரஸ் தள்ளப்பட்டுவிட்டது.
மத்தியில் உள்ள ஆட்சி மக்கள் பிரச்சினையின் நாடி எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் ஆட்சியாக இல்லை.
சாதாரண மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்பது விலைவாசிப் பிரச்சினை. அதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. ஏன் பெட்ரோல் விலை இப்படி தாறுமாறாக ஏறுகிறதே - இதனால் விலைவாசிகள் வேகமாக ஏறுகின்றனவே என்று கேட்டால், நிதியமைச்சர் இணக்கமான வகையில்கூடப் பதில் சொல்லுவது கிடையாது. அது அப்படிதான் - கச்சாப் பொருள் விலை ஏறினால் பெட்ரோல் விலையும் ஏறத்தான் செய்யும் என்று முரட்டுத்தனமாகப் பதில் வருகிறதே தவிர, இதனைக் குறைக்க என்ன செய்யலாம் என்று சிந்திக்கக் கூடத் தயாராக இல்லையே.
கச்சாப் பொருள்கள் விலை ஏறினாலும் வேறு நாடுகளில் எல்லாம் இந்தியா அளவுக்குப் பெட்ரோல் விலை ஏறுமுகத்தில் இல்லையே என்று கேட்டால், அதற்குப் பதில் வருவது இல்லை.
மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் எப்படி எப்படியெல்லாம் பார்ப்பனத்தனத்தோடு நடந்து கொள்கிறது இவ்வரசு? உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் சட்ட ரீதியாக உரிய 27 சதவிகித இடங்களை அளிப்பதில் எப்படி எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போடுகிறது?
வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு செய்து அறிவித்து 21 ஆண்டுகள் ஓடிவிட்டன. 21 ஆண்டுகளுக்குப் பிறகும் கல்வியில் இட ஒதுக்கீடுக்கு வழி செய்யப்படவில்லை. 27 சதவிகிதத்தை ஆண்டுக்கு 9 சதவிகிதமாகப் பிரித்து மூன்று ஆண்டுகளில் அளிக்கப்படும் என்பதெல்லாம் சரிதானா?
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நாடாளுமன்றக் குழு அமைப்பது என்பது சாதாரண அடிப்படையான பிரச்சினை; அதைக் கொடுப்பதற்குக் கூட மனம் வரவில்லையென்றால், பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டவர்களின் ஆதரவு அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கப் போகிறது?
பாபர் மசூதியை இடித்து 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தக் குற்றவாளிகளைத் தண்டிக்கத் துப்பு இல்லை. வட மாநிலங்களில் காவித் தீவிரவாதம் - அவை நடத்திய வன்முறைகள் - வெடிகுண்டுகள் - இவைபற்றி தெளிவான ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கைகள் ஏன் குறட்டை விடுகின்றன?
அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் போதாதா - சங் பரிவார்க் கூட்டத்தைச் சட்ட ரீதியாக கூண்டோடு காலி செய்ய?
மாலேகான் வழக்கில் உண்மையான குற்றவாளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த நேர்மையான காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டது எப்படி? மத்திய அமைச்சர் அந்துலே அவர்களே சந்தேகக் கேள்வியை நாடாளுமன்றத்திலேயே எழுப்பினார்... என்ன நடவடிக்கை? மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்கியதுதான் மிச்சம்!
காவிக் கூட்டத்துக்கு பி.ஜே.பி. ஆட்சியைவிட காங்கிரஸ் ஆட்சியே பாதுகாப்பாக இருக்கிறது என்பதுதான் உண்மையான நிலவரம்.
அத்வானிமீது  சட்டம் தன் கடமையைச் செய்திருந்தால் அவர் தேர்தலில் போட்டியிடத்தான் முடியுமா?
இந்துத்துவா கூட்டத்தின்மீது சட்ட ரீதியான நடவடிக் கைகளை எடுப்பதில் அலட்சியம் காட்டுவதால் சிறுபான்மை மக்களின் அதிருப்தியையும் தேடிக் கொண்டுவிட்டது காங்கிரஸ்.
காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் சரி, பிரதமராக இருந்தாலும் சரி, மக்கள் பிரச்சினைகளை சரிவர அறிந்தவர்களைத்தான் ஆலோசகர்களாகவே வைத்துக் கொள்ளவேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையினர்கள் ஆலோச கர்களின் வட்டத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டாமா?
வருணம், மதம் என்பவற்றால் பிளவுண்டு கிடக்கும் ஒரு நாட்டில் இந்த யோசனை மிக முக்கியமானது.
மக்களிடம் வாருங்கள் - அவர்களின் பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ள முயலுங்கள் - செயல்படுங்கள். உங்களுடைய தவறான அணுகுமுறைகளால் மதவாதக் கும்பலை அதிகாரப் பீடத்தில் அமர வைத்து விடாதீர்கள். அவர்களின் பலத்தால் அவர்கள் வெற்றி பெறவில்லை; காங்கிரசின் பலகீனம்தான் அவர்களின் பலம் என்பதை மறக்கவேண்டாம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...