Wednesday, October 19, 2011

தோழர் ஆனைமுத்து அவர்களுக்கு...


- கலி.பூங்குன்றன் -
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

பகுத்தறிவாளர்களாகிய நாம் பகுத்தறிந்து பார்ப்போம் எனும் தலைப்பில் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் சிந்தனையாளன் இதழில் (அக்டோபர் 2011) தலையங்கம் எழுதியுள்ளார்.
அவர் திராவிடர் கழகத்தில் இருந்தபோது 1971இல் மன்னார்குடியில்  அவர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் பற்றியெல்லாம் எழுதி இருக்கிறார். அதன் பின்னணி பற்றி எல்லாம் இப்பொழுது எழுதுவது வீண் வேலை என்பது நமது கருத்து.
அந்தக் கருத்தரங்கில் சொல்லப்பட்டதெல்லாம் சரி என்று தமது மனதுக்குப்பட்டு இருந்தால், அதற்குப்பின் இரண்டாண்டுகளுக்குமேல் தந்தை பெரியார் அவர்கள் உயிரோடு  இருந்த நிலையில், அவற்றைச் செயல்படுத்தியிருப்பார். 40 ஆண்டு களுக்குப்பிறகு அதைப்பற்றி எழுத முயற்சித் திருப்பது - அவருக்கு ஏராளமான அளவு நேரம் தாராளமாகக் கிடைத்திருக்கிறது என்றே தோன்று கிறது.
இடஒதுக்கீடு தொடர்பாக சில கருத்துக் களையும், தகவல்களையும் அவர் எழுதியிருப்பது வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக் கிறது.
மார்க்ஸிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி தனிப்பட்ட முறையில்  மேற்கொண்ட அறிவார்ந்த முயற்சியால் 19.8.1979 முதல் 7.10.1979 வரை அ.தி.மு.க. ஆட்சிக்குக் கொடுத்த அழுத்தத்தால் பிற்படுத்தப்பட் டோருக்கான 31 விழுக்காடு 1.2.1980இல் 50 விழுக்காடாக உயர்த்திப் பெறப்பட்டது என்பதுதான் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் தமாஷான துக்கடா பகுதியாகும்.
பார்ப்பனர்கள் வரலாற்றைத் திரித்து எழுது வார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்; இந்தத் திரிவு வேலையில் இப்படிப்பட்டவர்கள் ஈடுபடுவது - பார்ப்பனீயத்தின் தாக்கம் எவ்வளவு வீறு கொண்டது என்பதற்கான எடுத்துக் காட்டாகும்.
50 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எப்படி கிடைத்தது - அதன் பின்னணி என்ன என்பதைத் தெரிந்து கொண்டால்தான் தோழர் ஆனைமுத்து அவர்கள் எழுதியிருப்பதில் உள்ள உண்மையற்ற தன்மை எளிதாகப் புலப்படும்.
முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருமான வரம்பு ஆணை கொண்டு வந்தாரே - அதன்மீது கடுமையாக மேற்கொள்ளப்பட்ட தாக்குகளி லிருந்து பிரசவித்ததுதான் 50 சதவிகித இட ஒதுக்கீடு.
அந்த வருமான வரம்பு ஆணையை எதிர்த்ததில், மக்களைத் திரட்டியதில், போராடியதில் தோழர் ஆனைமுத்து அவர்களுக்கோ அவர் நடத்துவ தாகக் கூறப்படும் அமைப்புக்கோ என்ன சம்பந்தம்? அவர் பங்கு என்ன? எந்தத் துரும்பைக் கிள்ளிப் போட்டார்கள்?
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருமான வரம்பு ஆணை பற்றிய தகவல் ஏடுகளில் 1979 ஜூலை மூன்றாம் தேதி வந்தது என்றால் பிற்படுத்தப் பட்டோருக்குப் பேரிடி என்று அன்றைக்கே அறிக்கை வெளியிட்டவர் மானமிகு கி. வீரமணி  அவர்கள்.
மறுநாளே முக்கிய கட்சிகளின் தலைவர்களை - ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை எல்லாம் பெரியார் திடலில் அழைத்து, வருமான வரம்பு ஆணையில் உள்ள ஆபத்தை - விபரீதத்தை - சமூகநீதியின் வேரில் வைக்கப்படும் வெடியைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தவர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரே!
உடன் கூட்டறிக்கை தயாரிக்கப்பட்டு வெளி யிடப்பட்டது (4.7.1979). திராவிடர் கழகத்தின் சார்பில் கி. வீரமணி தி.மு.க. சார்பில் துரை. முருகன், உழைப்பாளர் கட்சித் தலைவர் எஸ்.எஸ். ராமசாமி,  காங்கிரஸ் சார்பில் திண்டிவனம் ராமமூர்த்தி எம்.எல்.சி.,  என்.எம். மணிவர்மா,  இரா. திருமாறன் (பார்வேடு பிளாக்) கே.சி. குமாரசாமி ரெட்டி (சேனைத் தலைவர்), பெரம்பூர் பாலசுந்தரம் (உழைப்பாளர் முன்னேற்ற கட்சி) ஆர்.பண்டரிநாதன் அய்.ஏ.எஸ். (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் இயக்குநர்) இரெ. பழனியப்பன் (வழக்குரைஞர்) கமாண்டர் வி.எஸ்.பி. முதலியார் (துளுவ வேளாளர் சங்கம்) கையெழுத்திட்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
வருமான வரம்பு ஆணையை எரிக்கும் போராட்டத்தை நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் நடத்தியது (26.11.1979) ஆணைகள் எரிக்கப்பட்டு,  தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்துக்கு - கோட்டைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
சேலம் (14.7.1979) திருப்பத்தூர் (வ.ஆ.) 18.7.1979) சென்னை (22.7.1979), புதுக்கோட்டை (2.8.1979) மதுரை (4.8.1979) இராசபாளையம் (12.8.1979) தருமபுரி (30.8.1979) திருநெல்வேலி (2.9.1979) காஞ்சீபுரம் (9.9.1979) தஞ்சாவூர் (17.9.1979) முதலிய இடங்களில் மாநாடுகளும், தந்தை பெரியார் நூற்றாண்டு விழாக்களும் நடைபெற்று, வருமான வரம்பு ஆணைக்கு எதிராக உணர்ச்சிகரமான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
14.8.1979 அன்று தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் எழுச்சிப் பேரணிகள் நடத்தப்பட்டு, வருமான வரம்பு ஆணையை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக்களும் அளிக்கப் பட்டன.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி பொதட்டூர் பேட்டை - குமரி - சென்னை முதலிய இடங்களிலிருந்து  தஞ்சையை நோக்கி கழகத் தோழர்களின் வழி நடைப்படை நடத்தப்பட்டு, வழியெங்கும் வருமான வரம்பு ஆணையின் தீமைகள்பற்றி நாட்டு மக்கள் மத்தியிலே எடுத்துரைக்கப்பட்டன.
இவற்றின் முடிவில்தான் நவம்பர் 26இல் (1979) வருமான வரம்பு ஆணை எரிக்கப்பட்டு, மூட்டை மூட்டையாக சாம்பல் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது (26.11.1979).
இன்னொரு ஆபத்து எம்.ஜி.ஆர். ஆட்சியில்; வேலை வாய்ப்புகளில் காலியாகும் இடங்கள், பிற்படுத்தப்பட்டோருக்குக் காலாவதியாவதாக அறிவிக்கப்பட்டது; அதுவும் இரண்டாண்டுகளுக்கு முன்பிலிருந்தே அதாவது 1977ஆம் ஆண்டு அமலுக்கு வந்ததாக (Retrospective effect) கருதப்படும் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப் பட்டது.
தந்தை பெரியாராலும் திராவிடர் கழகத்தாலும் போராடிப் போராடி பெற்ற உரிமைகளுக்கு ஏற் பட்டிருக்கும் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட தன்னை அர்ப்பணித்துக் கொண்டு போராடியது திராவிடர் கழகம்.
இத்தகு செயல்பாடுகளின் வரிசையில் ஒன்றே ஒன்றை தங்கள் பங்களிப்பு என்று தோழர் ஆனைமுத்து அவர்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?
1980 சனவரியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதுவரை தேர்தலில் தோல்வி என்றால் இன்னது என்று அறியாத எம்.ஜி.ஆரின் அ.இ. அ.தி.மு.க.வுக்கு மரண அடி விழுந்தது.  39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியைத் தழுவியது.
தோல்விக்குக் காரணம் என்ன என்று ஆய்வு செய்தபோது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு ஆணையைத் திணித்ததுதான் என்பதை முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். உணர்ந்தார்.
அவசர அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் எம்.ஜி.ஆர். (21.1.1980).
அந்தக் கூட்டத்தில் பல கட்சித் தலைவர்கள் பேசினாலும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்களின் கருத்துதான் முக்கியமாகக் கருதப்பட்டது. இந்தப் பிரச்சினையில் கூறப்படும் அத்தனை அய்யப்பாடுகளையும் கேள்விகளாக  எழுப்பி, அவற்றிற்குப் பதில் சொல்லும் முறையில் ஆவணம் ஒன்றைத் தயாரித்துச் சென்று, அனைத்துக் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டு, 40 நிமிடங்கள் விளக்கவுரை ஆற்றியவர்  திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்; அவரது நியாயமான காரணங்கள் புரிந்து கொள்ளப்பட்டன. அந்தக் கூட்டத்தில் திருவாரூர் தங்கராசு அவர்கள் என்ன பேசினார் தெரியுமா? பெரியார் இருந்திருந்தால் ஒன்பது மாடிகளின் படிக்கட்டுகளில் ஏறிவந்து முதல அமைச்சர் எம்.ஜி.ஆரைக் கட்டித் தழுவி இருப்பார் என்று பேசினார். கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், அல்லது வெளியேறிய வர்கள் இப்படித் தடம் புரள்வதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்து வெளியில் வந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்.   செய்தியாளர் களைச் சந்தித்தார்.
அந்தக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் குறித்து வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். இடஒதுக்கீட்டில் அதிமுக அரசு எதிராக இருப்பதாக நம்பும்படிச் செய்து விட்டார்கள் என்றும் கூறினாரே!
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற மூன்று நாள்களில் வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப்பட்டதுடன், பிற்படுத்தப்பட்ட மக்களுக் கான இடஒதுக்கீடு 31 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குறைந்தபட்சம் கலந்து கொள்வதற்காகவாவது தோழர் ஆனைமுத்து அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லையே! அந்த அளவுக்குத்தான் அரசு பார்வையில் அவர் இருந்தார். அவரின் செயல்பாடும் இருந்தது.
உண்மை இவ்வாறு இருக்க, நமது தலை முறையில் நடந்த நிகழ்வுகளையே தலைகீழாகப் புரட்டி ஒருவரால் சொல்ல முடிகிறது என்பது எத்தகைய விந்தை! விபரீதம்!
எம்.ஜி.ஆர். அரசு பிறப்பித்த - பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து முன்னேறிய ஜாதிக்காரர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடுத்தார். அந்த வழக்கில் திராவிடர் கழகம் தம்மையும் இணைத்துக் கொண்டு (INTERVENER)  வாதாடியது (5.5.1981).
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவிகிதம் அளித்ததற்கான விளக்கம் (Criteria) அளிக்க ஆணையம் ஒன்றை அமைக்குமாறு உச்சநீதி மன்றம் ஆணையிட்டது. திரு. அம்பாசங்கர் அய்.ஏ.எஸ். அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த ஆணையம்  சமூகநீதிக்கு விரோதமான பகிர்வுகளை வழங்கிய நிலையில், அந்த ஆணையத் தின் குழு உறுப்பினர் ஒவ்வொரு வரையும் சந் தித்து, தலைவரின் கருத்து ஒன்று - உறுப்பினர் களுடைய கருத்து இதற்கு எதிரானது என்ற நிலையை உருவாக்கியதில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்களின் பங்கு மகத்தானது.
இதில் ஒரு வேடிக்கை வினோதம் என்ன வென்றால், வருமான வரம்பு ஆணை எதிர்க்கப் பட்டு - அதன்பின்னர் பிறப்பிக்கப்பட்ட பிற்படுத்தப் பட்டோருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணை யத்தின் தலைவர் அம்பாசங்கர், ஆணையம் நியமிக் கப்பட்ட நோக்கத்தின் தன்மைக்கு மாறாக, பொருளாதார அளவுகோல் தேவை என்று கூறிய நிலையில், அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லு வோம் என்று திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டார் (2.10.1983). பொருளாதார அளவுகோல் என்ற தம் கருத்தை வலியுறுத்தப் போவதில்லை என்று அம்பா சங்கர் கழகப் பொதுச் செயலாளருக்குக் கடிதம் எழுதினாரே! (6.10.1983).
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற் கான காலக்கெடு இன்றோடு முடிவடைந்தது என்பதைக் கூட திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தான் 25.9.1984 அன்று சென்னையில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் அரசுக்கு நினைவுட்டினார். அதன் விளைவாகத் தான் அவசர அவசரமாக அரசு செயல்படும் நிலை ஏற்பட்டது.
இதற்காகவே சென்னையில் தனி மாநாடு கூட்டப்பட்டது (13, 14.7.1985). அம்மாநாட்டுத் தீர்மானத்தின்படி 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான அம்பாசங்கர் ஆணையத்தின் கருத்து நிராகரிக்கப்பட்டு புது ஆணை பிறப்பிக்கப்பட்டு, அந்தக் கட்டத்தில் 50 சதவித இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது.
50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீட்டின் அளவு செல்லக் கூடாது என்ற உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில், அப்பொழுதும் தமிழ்நாட்டின் 69 சதவிகிதத்துக்கு ஆபத்து வந்தது. வாய்ஸ் கன்ஷ்யூமர் கேர் கவுன்சிலின் சார்பில் வழக்குரை ஞர் விஜயன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
அதனையும் காப்பாற்றிட திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள்தான் புதிய மசோதா ஒன்றையே (31-சி) தயாரித்துக் கொடுத்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் அது நிறைவேற்றப்பட்டு (31.12.1993) நாடாளுமன்றத் திலும் திருத்த மேற்கொள்ளப்பட்டு (76ஆவது திருத்தம்) 31-பியின் கீழ் ஒன்பதாவது அட்டவணை யில் இணைக்கப்பட்டுப் பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி  தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் (13.7.2010) சிறப்பான தீர்ப்பினை வழங்கி விட்டது. 69 சதவிகித ஒதுக்கீட்டுப் பிரச்சனையை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து முடிவு எடுக்கலாம் என்றும், தேவைப்பட்டால் தமிழ்நாடு அரசு இது தொடர்பாக புது சட்டம் ஒன்றையும் கொண்டு வரலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்.எஸ். கபாடியா, ராதாகிருஷ்ணன், அந்தேர் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு (Bench) தீர்ப்பு வழங்கி விட்டது!
உச்சநீதிமன்றத்தின் வழி காட்டுதல்படி நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான  காரணங்கள் அடங்கிய அறிக்கையினை தமிழக அரசிடம் அளித்து விட்டது (8.7.2011)
இதன் அடிப்படையில் 69 சதவிகித இடஒதுக் கீட்டை உறுதிபடுத்தி தமிழ்நாடு அரசு 11.7.2011 அன்று ஆணையையும் பிறப்பித்துவிட்டது.
இவ்வளவுப் பெரிய நீண்ட வரலாற்றில், திராவிடர் கழகத்தின் பங்கு தான் முதன்மை யானது என்பதைத் தெரிவிக்கத் தேவையில்லை. அங்குலம் அங்குலமாக பொத்திப் பொத்தி 69 சதவிகித இடஒதுக்கீடு கழகத்தால் காப்பாற்றப் பட்டு, நிலைநிறுத்தவும் பட்டுள்ளது. முழு யானையை ஒரு பிடி சோற்றில் மறைத்த கதையாக, 19.8.1979 முதல் 7.10.1979 வரை அதிமுக ஆட்சிக்கு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட அறிவார்ந்த முயற்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 31 விழுக்காடு 1.2.1980-இல் 50 விழுக்காடாக உயர்த் திப் பெறப்பட்டது என்று தோழர் ஆனைமுத்து எழுதுகிறார் என்றால் இதைப்பற்றி என்னசொல்ல! முரட்டுத்துணிச்சல் என்பார்களே, அது இது தானோ!
பெரியாரியல் பெயரைச் சொல்லிக் கொண்டு உண்மையல்லாத ஒன்றுக்கு உரிமை கொண்டா டலாமா?
அதுபோலவே மண்டல் குழுப் பரிந்துரை அமல் ஆக்கத்திற்கும் உரிமை கொண்டாடி வருகிறார் தோழர் ஆனைமுத்து. 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தியது திராவிடர் கழகமே!
மண்டல் குழு பரிந்துரைகளுள் ஒன்றான வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு செய்து ஆணையிட்ட சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்களே கழகப் பொதுச் செயலாளரின் பங்களிப்பை ஒப்புக் கொண்டு பல இடங்களிலும் வெளிப்படுத்தி யிருக்கிறார்.
மண்டல் குழு பரிந்துரைகளில் காணப்படும் மேலும் பல உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படுவதற்கு முற்றிலும் தகுதியானவர் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களே என்பதை டில்லி மாவ்லங்கர் மன்றத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் (19.9.1995) கூறினார் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.
நுழைவுத் தேர்வு ஒழிப்பு, கிரீமிலேயர் எதிர்ப்பு, கல்வியில் இடஒதுக்கீடு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதிலே முனைப்பு உள்ளிட்ட அனைத்து சமூகநீதித் திசையிலும் முன் வரிசையில் நிற்கும் திராவிடர் கழகத்தை இருட்டடிப்புச் செய்யலாம் என்று நினைப்பதேகூட பெரியாரியல் பற்றிப் பேசுவோர்க்கு அழகானதல்ல.
நெருக்கடி நிலையை ஆதரித்தவர் தோழர் ஆனைமுத்து; அதற்கு எதிரான நிலையை எடுத்து வெஞ்சிறை சென்றவர்கள் திராவிடர் கழகத் தோழர்கள்! இந்த  வேறுபாடு போதும் மக்கள் எடை போடுவதற்கு; எவ்வளவோ அவதூறுகளை உண்மைக்கு மாறான பலவற்றை பல முறை அவர் எழுதி வந்துள்ளார் - அவற்றை அலட்சியப்படுத்தி தான் உள்ளோம். இதற்குமேலும் அண்டப்புளுகுக் குத் தயார் என்று வந்தபிறகு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சிலவற்றை வெளிப்படுத்திதானே தீர வேண்டியுள்ளது. அதுவே இது!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...