Wednesday, August 17, 2011

கொல்லைப்புற வழியா?


சமச்சீர் கல்வியை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்ற முயற்சியில் மெட்ரிக் பள்ளி நடத்துப வர்களும், தமிழ்நாடு அரசும் கஜகுட்டிக் கர்ணம் போட்டுப் பார்த்தன. அதில் முழு தோல்வியை அடைந்த நிலையில், அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு, மேற்கு மண்டல கோரிக்கை மாநாடு சேலத்தில் நடைபெற்றுள்ளது.

அது தொடர்பாக சில தகவல்கள் ஏடுகளில் வெளிவந்துள்ளன.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வியை மெட்ரிக் பள்ளிப் பாடத் திட்டத்தோடு ஒப்பிடுகையில் தரம் குறைவாக உள்ளது என்று பழைய பல்லவியையே திரும்பவும் கூறியுள்ளனர்.

நீதிமன்றங்களில் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் தங்கள் உச்சகட்ட திறமையையெல்லாம் ஒன்று திரட்டி விவாதம் செய்தனர். அவை எடுபடவில்லை. சமச்சீர் கல்விப் பாடத் திட்டங்களைத் தயாரித்தவர்கள் எல்லாம் கல்வியாளர்கள்தாம். மூன்றாண்டுகள் உழைப்பை கொட்டிதான் பாடத் திட்டங்கள் தயாரிக்கவும் பட் டுள்ளன. ஏதோ குறை சொல்லவேண்டும் என்ற அவசியத்தில் இப்படி ஒரு குறையைச் சொல்லு கிறார்கள் என்பதுதான் உண்மை.

தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகளின் செயல் பாட்டைப்பற்றி அறிய நியமிக்கப்பட்ட கல்வியாளர் சிட்டிபாபு தலைமையிலான குழு - பெரும்பாலான பள்ளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமலும், தகுதி யான ஆசிரியர்கள் இல்லாமலும் அலங்கோலமாக நடைபெற்று வருவதை - ஆதாரப்பூர்வமாகவே அறிக்கை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் மெட்ரிக் பாடத் திட்டம்தான் சிறந்தது என்றும், சமச்சீர் கல்வி - பாடங்கள் தரக்குறைவானவை என்றும் சொல்லுவது எடுபடப் போவதில்லை.

மெட்ரிக் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற ஒரு புதிய கோரிக்கையை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அகில இந்திய அளவில் ஒரே சீர்மை கொண்டவை. அவை பெரும்பாலும் அகில இந்திய அளவில் பணி மாற்றம் செய்யப்படக் கூடிய மத்திய அரசு அலுவலர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்காக ஏற்படுத்தப்பட்டவையாகும்.

எந்த அளவுக்கு மத்திய அரசு அலுவலர்கள் பணியாற்றுகிறார்களோ அதற்கேற்பப் பள்ளிகள் போதுமானவையாக உள்ளன. இந்த நிலையில், மெட்ரிக் பள்ளிகளை சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாற்றவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

சில ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் பிளஸ்டூ தேர்வு முறைகள் வெளியானபிறகு - அதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பட்டியலை நன்கு ஆய்வு செய்து என்ன செய்தார்கள் தெரியுமா?

மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அதிக அளவு சி.பி.எஸ்.இ. திட்டத்தில் படித்த மாணவர்கள் இடம்பெறுவதற்காக ஒரு சூழ்ச்சியை அரங்கேற்றச் செய்தனர்.

சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கூடுதலாக மதிப்பெண்களைப் போட்டனர்.

அதனை எதிர்த்து திராவிடர் கழகம் நீதிமன்றத் திற்குச் சென்று அந்த முயற்சியை முறியடித்தது. ஒவ்வொரு பிரச்சினையிலும் கண்ணில் விளக் கெண்ணெய்யைப் போட்டுக் கொண்டு அல்லவா திராவிடர் கழகம் பிரச்சினைகளைக் கூர்மையாக அறிந்து, அவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியுள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டப் பாடங்களைப் படிக்கக் கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக கருத்து களை, திட்டங்களைச் சொல்லுவதுபோல பாவனை செய்கிறார்கள். இவர்களின் கோரிக்கைகளை ஏற்று சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தாமல் இருப்ப தற்குத் தமிழ்நாடு அரசு இணங்கக் கூடாது.

இந்தப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசு வாங்கிக் கட்டிக் கொண்ட குட்டுகள் போதும், போதும்! நடந்தவை ஒரு கெட்ட கனவு என்று கருதி புதிய தடத்தில் அடிகளைப் பதிக்கவேண்டும். அதுதான் புத்திசாலித்தனமானதாக இருக்கவும் முடியும்.

மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் கைகளில் பணம் நிரம்பவே இருக்கிறது. அந்தத் தைரியத்தில் எதாவது செய்துவிடலாம் என்று நினைக்கக்கூடும். தமிழ்நாடு அரசு உறுதியாக சமச்சீர் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தி, அனைவருக்கும் சமமான கல்வியை அளிப்பதில் வெற்றி பெறவேண்டும். அதுவே கழகத்தின் வலியுறுத்தலுமாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...