Tuesday, August 16, 2011

தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு

நாகையில் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற திராவிடர் இன எழுச்சி மாநில மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சமூகநீதிப் பிரச்சினை தொடர்பாக நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதாகும். கல்வியில் கிராம - நகர பேதமும், வருணபேதமும் உள்ள ஒரு சமூக அமைப்பில், கல்வி கற்பிக்கப்படும் நிறுவனங்களில் கட்டமைப்புகள்கூட பெரிய அளவு வித்தியாசம் உள்ள ஒரு நாட்டில் அனைவரையும் சம நிலையில் வைத்து நுழைவுத் தேர்வு நடத்தித் தகுதியை முடிவு செய்வது சமூக அநீதியாகும்.

வெகு காலம் போராடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, அவர்களும் முன்னேற்றத் திசையில் காலடிப் பதிக்கும் பொழுது, எப்படியாவது இந்நிலையைத் தட்டிப் பறிக்க வேண்டும் என்ற சூழ்ச்சியில் இது மாதிரியான திட்டங்களை அவ்வப்பொழுது உயர்ஜாதி ஆணவக்கூட்டம் அரங்கேற்றி வருகிறது. எந்த விலை கொடுத்தேனும் இத்தகைய சூழ்ச்சிகளை முறியடித்தே ஆக வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. உச்சநீதிமன்றம் வரை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மீறி மருத்துவக் கவுன்சில் நுழைவுத் தேர்வைத் திணிக்குமேயானால், அது நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும் - எச்சரிக்கை!

சமச்சீர் கல்விக்கு எந்த கெதி ஏற்பட்டதோ, அதே கெதிதான் இதற்கும் ஏற்படும்; நீதிமன்றத்தில் அடிபட்டு வீழ்ந்து விடும்.

எதற்கெடுத்தாலும் தகுதி - திறமைப் பூச்சாண்டியைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். மருத்துவம் உள்ளிட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு, +2 தேர்வில் மாணவன் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில்தானே மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்; அதேபோல தேர்வுகளில் உரிய மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தானே பட்டமும் அளிக்கப்படுகிறது. இந்த நிலையை வைத்துப் பார்த்தாலும் தகுதி - திறமைக்கு எங்கே பாதிப்பு ஏற்பட்டுவிட்டது? இடஒதுக்கீட்டால் தகுதி - திறமை பாதிக்கப்படும் என்று சொல்லி வந்த - எழுதி வந்த பார்ப்பனர்களே மாநாடு கூட்டி எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று தீர்மானம் போட்டனரே - இதன் பொருள் என்ன? இடஒதுக்கீட்டில் தகுதி - திறமை பாதிக்காது என்பதை இதன் மூலம் அவர்கள் ஒத்துக் கொண்டு விட்டதாகத் தானே பொருள்?

இந்தியாவில் அரசுத்துறை நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் அருகி தனியார்த் துறை நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் பெருகி வரும் நிலையில், தனியார்த்துறைகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதில், கழகத்தின் அடுத்த கட்ட பணி அதிகமாக இருக்கும் என்றும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

இன்றைக்குத் தனியார்த்துறைகளில் முக்கிய நிருவாகிகளாக இருப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களே. பணிகளுக்கு ஆள்களை நியமனம் செய்யும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அதனால் யார் பயன் அடைவார்கள் என்பது தெரிந்த ஒன்றே.

சந்தோஷ் கோயல் என்பவரின் ஆய்வு அறிக்கை முக்கியமானது. 3129 அதிகாரிகளைப் பேட்டி கண்டு வெளியிடப்பட்ட புள்ளி விவரம் அது. இதில் 2082 அதிகாரிகள் பற்றிய விவரம் வருமாறு: பார்ப்பனர்கள் 41.2 சதவிகிதம், சத்திரியர் 18.5 சதவிகிதம், வைசியர்கள் 17.9 சதவிகிதம், சூத்திரர்கள் 4.2 சதவிகிதம். இது எட்டாண்டுகளுக்கு முன் வெளி வந்தது. இப்பொழுது இன்னும் அதிக அளவில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.

அரசுத் துறைகளில் பணியாற்றி, ஓய்வு பெறும் முன்னர் விருப்ப ஓய்வு பெற்று (Voluntary Retirement) தனியார் நிறுவனங்களுக்குச் சென்று அங்கு முக்கிய பதவிகளை (Key Post) ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலும் இவர்கள் பார்ப்பனர்களாகவே இருப்பது கண் கூடு. எந்த வகையிலும் பார்ப்பனர்கள் தமிழர்களுக்குப் பாதகமாகவே இருந்து வருகின்றனர்.
தனியார்த் துறைகள் என்றாலும், சலுகை விலையில் நிலம், தண்ணீர், தட்டுப்பாடு இல்லாத மின்சாரம், கடனுதவி என்று எல்லா வகைகளிலும் அரசின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கின்றது.

அந்த வகையில் இடஒதுக்கீட்டை அதில் கோருவது சட்டப்படியும் சரியானதே! இந்தியாவில் இடஒதுக்கீட்டை மறுக்கும் தனியார் நிறுவனங்கள், வெளி நாடுகளில் தொழிற்சாலைகளை நடத்தும்போது அங்கு உள்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடுக்குச் சம்மதம் தெரிவிக் கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படி என்றால் பட்டை நாமம் சாத்துவதற்கு இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நெற்றித்தான் நீளமாகவும் அகலமாகவும் இருக்கிறது போலும்.

மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்று - தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பதுமாகும். எந்த வகையில் பார்த்தாலும் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு குறித்து நாகை மாநாட்டின் தீர்மானம் சரியானது - முக்கியமானதே! - செயல்படுவோம் - செயல்படுத்த வைப்போம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...