Friday, August 19, 2011

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் சேர்ப்பதற்கான தகுதி மதிப்பெண் 45 முதல் 50 விழுக்காடு நிர்ணயிக்கப்படலாம்


டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு

டில்லி, ஆக.19-பிற்படுத்தப்பட்டோர் பற்றிய வழக்கில் உச்சநீதி மன்ற அரசமைப்புச் சட்ட அமர்வின் முடிவுக்கு விளக்கம் அளித்து நேற்று  நீதிபதிகள் ரவீந்திரன், பட்நாயக் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு கீழ்க் கண்டவாறு தீர்ப்பளித்தது.

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்ணாக  45 முதல் 50 வரை அந்தந்த கல்வி நிறுவனத்தின் விருப்பப்படி நிர்ணயித்துக் கொள்ளலாம். அல்லது நுழைவுத் தேர்வு ஒன்று எழுதவேண்டியிருப்பின், அத்தேர்வில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு தேர்வுக்கான மதிப்பெண் 40 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால், பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு 36க்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கலாம்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 2008-09 மற்றும் 2009-10 ஆம் கல்வியாண்டுகளில் கடைப்பிடிக்கப் பட்ட நடைமுறையையே இந்த ஆண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பி.வி. இந்திரேசன் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த நடைமுறையின்படி முதலில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்படும். பொதுப் பிரிவு இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்ட பிறகு, கடைசியாக சேர்க்கப்பட்ட மாணவன் பெற்ற மதிப்பெண்ணிலிருந்து 10 விழுக்காடு குறைத்து பிற்படுத்தப்பட்டோருக்கான தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு வந்தது.

இந்த நடைமுறையை செல்லாது என்று அறிவித்த டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை இப்போது உச்சநீதிமன்ற அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது: இத்தகைய ஒரு நடைமுறை யதேச்சதகாரமானதும் பாகுபாடு காட்டுவதுமாம். அது மட்டுமல்ல, கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு  இது போன்ற நடைமுறையை எப்போதும் எங்குமே கண்டு இருக்க முடியாது.

கல்வி ஆண்டின் தொடக்கத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கு வதற்கு முன்னதாக பாடப் பிரிவில் சேருவதற்காக தகுதி மதிப்பெண் அறிவிக்கப்படுவதுதான் எப்போதுமே வழக்கம். அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் எதுவாக இருந்தாலும் சரி, அனைத்து விண்ணப்ப தாரர்களுக்கும் பொதுவானதாக அது இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கு முன் ஒரு மாணவன் அதில் சேர தனக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்திருக்கவேண்டும்.

தீர்ப்பை எழுதிய நீதியரசர் ரவீந்திரன் கூறியதாவது:  அந்நாட்களில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் கடைப்பிடித்த அந்த கட்ஆஃப் மதிப்பெண் நடைமுறை, சேரத் தகுதி உள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர் மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்ணை மாற்றி எழுதும் பாதிப்பை ஏற் படுத்தியது.

தகுதி மதிப்பெண் இவ்வளவு இருக்க வேண்டும் என்று நிபந்தனையை நிறைவு செய்து,  சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தகுதி தரப்பட்டியலில் இடம் பெற்றி ருக்கும்  மாணவர்  எவர் ஒருவரது விண்ணப்பத்தையும், மற்ற பிரிவு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், அதிகப்படியான மதிப்பெண்களை அவர் எடுத்திருக்க வேண்டும் என்று காரணம் கூறி  நிராகரிக்க முடியாது. சேர்க்கைத் திட்டம் அறிவிக்கப் படும்போது அறிந்திராத, அறியப்பட இயலாத ஒரு கற்பனையான மதிப்பெண்ணை, மற்ற வகைகளில் சேர்க்கைக்குத் தகுதி பெற்றிருக்கும் மாணவர் ஒருவரை சேர்க்கைக்குத் தகுதி அற்றவர் என்று மறுக்க பயன்படுத்த முடியாது.

பல்கலைக் கழகம் கடைப்பிடித்த நடைமுறையின் விளைவாக, பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கீடு செய்யப் பட்ட இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப் பட்டதைச் சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்ற அமர்வு, ஒரு பாடப்பிரிவில் உள்ள மொத்த இடங்கள் 154 என்றும் அவற்றில் பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 42 என்றும் வைத்துக் கொண்டால், இந்த 42 இடங்கள் அனைத்தும் பிற்படுத்தப் பட்ட பிரிவு மாணவர்களைக் கொண்டு, (சேர்க்கைக்குக் குறிப்பிடப் பட்டுள்ள குறைந்த அளவு மதிப்பெண்களை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்; நுழைவுத் தேர்வு ஏதேனும் இருந்தால் அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற வழக்கமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு) அவர்களின் தர வரிசைப்பட்டியலில் இருந்து நிரப்பப்படவேண்டும். சேர்க்கைக்குத் தகுதி பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவர் இருக்கும்போது, பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட இடம் பொதுப் பிரிவுக்கு மாற்றுவது அனுமதிக்கப்படமாட்டாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

2008 ஆம் ஆண்டு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட் ஆஃப் மதிப்பெண் பற்றி விளக்கம் அளிக்கையில், உச்ச நீதி மன்ற அமர்வு கூறியதாவது: அந்தத் தீர்ப்பில் கட்ஆஃப் மதிப்பெண் என்ற சொற்கள் மூன்று இடங்களில் பயன் படுத்தப்பட்டுள்ளது. முதலில் கட்ஆஃப் மதிப்பெண் வரை என்று குறிப்பிட்டிருப்பது, சேர்க்கைக்குத் தகுதியான குறைந்த அளவு மதிப்பெண் என்பதைக் குறிக்கிறது.

இரண்டாவது முறை, பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகப்படியான கட்ஆஃப் மதிப்பெண் என்று குறிப் பிட்டிருப்பது,  பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப் பட்டோருக்கு சேர்க்கைக்கான குறைந்த அளவு தகுதி மதிப்பெண்களிடையே உள்ள வேறுபாட்டைக் குறிக்கிறது. அத்தகைய வேறுபாடு பொதுப்பிரிவு மாணவர்களின் சேர்க்கைத் தகுதி மதிப்பெண்ணிலிருந்து 10 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கக்கூடாது . மூன்றாவது முறையாக, பொதுப் பிரிவு மாணவர்க்கான கட்ஆஃப் மதிப்பெண் என்று குறிப்பிட்டிருப்பது,  நுழைவுத் தேர்வு இருக்குமேயானால், பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்குக் குறைந்த அளவு தகுதி மதிப்பெண் என்பதைக் குறிக்கிறது.

உச்சநீதிமன்ற அமர்வு கூறியிருப்பதாவது: 2011-12 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையைப் பொறுத்த வரை, இறுதியாக சேர்க்கப்பட்ட பொதுப் பிரிவு மாணவரின் மதிப்பெண் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்ணை எந்த மத்திய கல்வி நிறுவனமாவது முன்னதாக நிர்ணயித்து, அதனால் நிரப்பப்படாமல் இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை பொதுப்பிரிவு மாணவர்களுக்காக மாற்றி அளித்திருந்து, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்திருந்தால், அதை மாற்றியமைக்க வேண்டிய தில்லை.

ஆனால், அவ்வாறு நிரப்பப்படாத இடங்கள் மாற்றி அளித்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கை அளிக்கும் நடைமுறை முற்றுப் பெறாமல் இருந்தால், அந்த பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கப் பட்ட இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டுதான் நிரப்ப வேண்டும்.

மேலும் அமர்வு தெரிவித்திருப்பதாவது:

எந்த மத்திய கல்வி நிறுவனத்திலாவது, பிற்படுத்தப்பட்டோ ருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப் படாமல் இருந்தால்,  அவை பிற்படுத்தப்பட்ட மாணவர் களைக் கொண்டே நிரப்பப் படவேண்டும். சேர்க்கைக் கான குறைந்த அளவு தகுதி மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் எவரும் தகுதிப்பட்டியலில் இல்லாத நிலையில் மட்டுமே அந்த இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படலாம். பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை நிரப்புவ தற்கு ஏதுவாக, மாணவர்  சேர்க்கைக்கான இறுதி நாளை ஆகஸ்ட் 31 வரை உச்ச நீதிமன்ற அமர்வு தனி வழக்காக கருதி நீட்டித்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...