குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பேச்சு தொடங்கிய காலத்திலிருந்தே அதற்கான எதிர்ப்புகளும் ஈட்டி முனையாகக் கிளர்ந்து வெடித்தன.
நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டம் வந்தபோது எதிர்க் கட்சிகள் கடுமையான கண்டனக் கணைகளை ஏவின.
மாநிலங்களவையில் பிஜேபிக்குப்
பெரும்பான்மை இல்லாத நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான அதிமுக போன்ற
கட்சிகளைப் பல வகையிலும் அச்சுறுத்தியும் வலியுறுத்தியும் மசோதாவுக்கு
ஆதரவு அளித்தே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினர். அவர்களும்
பதவி ஒன்றே குறிக்கோளுடன் சகலத்தையும் இழக்கத் தயாராகி விட்டனர்.
அதிமுகவின் 11 வாக்குகள், பா.ம.க.வின் ஒரே
ஒரு வாக்கும் இந்தச் சட்டத்தை எதிர்த்து இருந்தால், சட்டம்
செயல்படுத்தப்பட முடியாத நிலையை அடைந்திருக்கும்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில்
அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் அம்பலப்பட்டுப் போய் விட்டன. இனி எந்த முகம்
கொண்டு தமிழ்நாட்டு மக்களைச் சந்திக்கப் போகின்றனர் என்பது மிக முக்கியமான
கேள்வியாகும்.
கூட்டணி நிர்ப்பந்தம் என்று அதிமுக
மாநிலங்களவை உறுப்பினர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் பச்சையாகக் கூறி
விட்டார்; கூட்டணித் தர்மம் என்று பா.ம.க. நிறுவனர், மருத்துவர் இராமதாசும்
தெரிவித்து விட்டார்.
இதன் மூலம் இந்த இரு கட்சிகளும்
சிறுபான்மை முசுலீம் களுக்கு மட்டுமல்ல; ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல;
இந்திய மக்களுக்கே, மதச் சார்பின்மைக் கொள்கைக்கே கொள்ளி வைத்து விட்டனர்.
இந்தக் கறை படுதலிலிருந்து இவர்கள் மீள்வது அவ்வளவு சுலபமல்ல.
இந்தியாவின் பல பகுதிகளிலும் புதிய
சட்டத்திருத்தத்தை எதிர்த்து கிளர்ச்சி எரிமலையாகச் சீற்றம் கொண்டு
வானுக்கும், பூமிக்குமாகத் தாவி நிற்கிறது.
வட மாநிலங்களில் தந்தை பெரியார், அண்ணல்
அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா பூலே, சாகு மகராஜ், நாராயணகுரு போன்ற சமூக
சீர்திருத்தத் தலைவர்களின் பதாகைகளை பிடித்துக் கொண்டு வீதிக்கு வந்து
போராடத் துவங்கி விட்டனர்.
இந்தப் பதாகைகள் எதைக் குறிக்கின்றன?
ஜாதிய வருணாசிரம சனாதனத்தை எதிர்த்து
இந்தத் தலை வர்கள் பாடுபட்டவர்கள். அந்த தலைவர்களின் பதாகைகளை அவர்கள்
கையில் ஏந்தி யாரை எதிர்த்து முழக்கமிடுகிறார்கள் என்பதுதான் மிகவும்
முக்கியம்.
அந்த ஜாதிய வருண சனாதனத்தின் கூறுகளைக் கொண்டது தான் சங்பரிவாரும் அதன் அரசியல் கிளையான பா.ஜ.க.வும்.
இன்னும் புரியும்படியாகக் கூற
வேண்டுமானால் ஆரியர் - திராவிடர் போராட்டமாக இப்பொழுது உருவாகி விட்டது.
நாட் டில் நடப்பது அரசியல் அல்ல; ஆரிய - திராவிடர் போராட்டமே என்று தந்தை
பெரியார் தொலைநோக்கோடு சொன்னது இப்பொழுது - பிஜேபி ஆட்சி மூலம் உறுதியாகி
விட்டது.
பிஜேபி ஆட்சிக்கும் அதன் ஆர்.எஸ்.எஸ்.
கொள்கைகளான சனாதன தருமத்துக்கும் எதிர்ப்பு இளைஞர்கள் மத்தியிலும், பொதுவாக
வெகு மக்கள் மத்தியிலும் வேர்ப் பிடித்துத் திகு திகு என எரிய ஆரம்பித்த
நிலையில், இந்த நாட்டு ஊடகங்கள் மத்திய பிஜேபி ஆட்சியையும் அதன் சனாதன
வருண தருமத்தையும் எப்பாடு பட்டேனும் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில்
கடந்த இரு நாட்களாக ஏதேதோ காரணங்களைக் கற்பித்து எழுத ஆரம்பித்துள்ளனர்.
கல்வியாளர்கள் இந்த சட்டத்தை
ஆதரிக்கிறார்கள், எதிர்ப் பாளர்கள் சட்டத்தின் சரத்துகளைப் புரிந்து
கொள்ளாமலேயே ஏதோ எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கிறார்கள் என்று
தினமணிகளும், தினமலர்களும் தலையங்கங்களும்; சிறப்புக் கட்டுரையும் எழுத
ஆரம்பித்து விட்டன.
ஒரு வகையில் அதுவும் நன்மைக்கே. யார் யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பது வெளியாவது நன்மைக்கே!
"புதிய குடியுரிமை சட்டத்
திருத்தத்தின்படி அண்டை முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம்,
ஆப்கானிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு வேறு எந்த நாடுகளிலும் அடைக்கலம் புக
முடியாத ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள்,
மற்றும் கிறிஸ்துவர்களுக்கு இந்தியாவுக்குள் குடியுரிமை உள்ளது - இதனால்
இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கோ அல்லது சிறுபான்மை மக்களுக்கோ எந்த
பாதிப்பும் இல்லை. ஒரு நாட்டிற்கு தன் எல்லைகளைப் பாதுகாக்கவும், எத்தகைய
மக்கள், தன் நாட்டில் இருக்க வேண்டும் என முடிவு செய்யவும் உரிமை உள்ளது.
அதுபோல எத்தகைய பிற நாட்டினருக்கு குடியுரிமை வழங்கலாம் என்பதும் சுதந்திர
நாட்டின் உரிமை" என்று தினமலரில் (22.12.2019 பக்கம் 9) "குடியுரிமை
சட்டம் நாட்டின் உரிமை" எனும் தலைப்பில் சிறப்புக் கட்டுரை
எழுதப்பட்டுள்ளது. நெற்றியில் நாமத்தைத் தீட்டிக் கொண்டு எழுதும் அவர் ஒரு
சமூக ஆர்வலராம்.
எப்படியோ இருந்து போகட்டும்; மேலே கூறப்பட்ட கருத்திலேயே அதிக வஞ்சகத்தன்மை வெளிப்படுகிறதே.
அசாமில் 19,06,657 பேர் நாடற்றவர்களாக
அறிவிக்கப்பட் டுள்ளனரே - இதுதான் இந்த சட்டத்தால் எவரும் பாதிக்கப் பட
மாட்டார்கள் என்பதற்கான இலட்சணமா?
1933ஆம் ஆண்டில் அடால்ப் ஹிட்லர் என்ன
செய்தார்? குடியுரிமைச் சட்டம் ஒன்றை அவர் கொண்டு வரவில்லையா? ஒன்றரை
லட்சம் யூதர்கள் நாடற்றவர்கள் என்று ஹிட்லர் அறிவித்தாரே! அந்த ஹிட்லரின்
நாஜிக் கொடியான ஸ்வஸ்திக் தானே ஆர்.எஸ்.எஸ். கொடி.
குடியுரிமை திருத்த சட்டமாக இருந்தாலும்
சரி, தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டமாக இருந்தாலும் சரி, இந்தியாவை
ஹிந்துஸ்தானாக ஆக்கும் மறைமுக ஏற்பாடே! மற்றவர்களைப் பார்த்துப்
பிரிவினைவாதிகள் என்று கூறும் இந்தப் 'பத்தரை மாற்றுத் தேசிய
திலகங்கள்'தான் நாட்டை மேலும் பிரிவினைக்கு ஆளாக்கப் போகிறார்கள் என்பது
மட்டும் உண்மை - உண்மையே!