Thursday, September 20, 2018

தந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா? எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார்

 தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு
வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை!



தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை என்று திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

தந்தை பெரியார் அவர்களது 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை அகிலமே கொண்டாடி, அவர்தம் சிலைகளுக்கு மட்டுமல்ல, அவர் தந்த சுயமரியாதை - பகுத்தறிவு என்ற சீலத்திற்கும் - கொள்கை லட்சியங் களுக்கும் மாலை போட்டு வரவேற்று, பெரியார் ஓர் மாமருந்து என்பதை உணர்ந்து கொண்டாடுகிறார்கள்!

தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன! அவர் வாழும்போது சந்தித்த காட்டுமிராண்டிகளின் எதிர்ப்பு- இன்னமும் தொடர்கிறது என்பதற்குச் சரியான அடையாளமாக அவரது சிலை மீது செருப்பு வீசுவதுபோன்ற கீழ்த்தர நடவடிக்கைகளில் ஈடுபடுவது, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. காவிகள் இந்த கயமைச் செயல்களில் ஈடுபட்டு ஓடி ஒளிகின்றன.

செருப்புத் தோரண வரவேற்புகள்

தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே செருப்புத் தோரணங்களின் ‘‘வரவேற்பை''ச் சந்தித்து வந்தார்! (சிவகங்கையில்).

கடலூரில் இன்று கம்பீரமாக நிற்கும் சிலை எழுப்பப் பட்ட இடம்- அவர்மீது 1944 இல் செருப்பு வீசப்பட்ட அதே இடம்!

எந்த எதிர்ப்பையும், எதிரிகளின், அநாகரிக காட்டு மிராண்டித்தன எதிர்ப்புகளை நேருக்கு நேர் சந்தித்த அவர், நமது கொள்கை வயலில் பயிர் வளர போடப்படும் ‘உரங்கள்' என்று சொல்லி எதிர் கொண்டவர்!

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இராமனைக் கும்பிடுவோர், அவர்களின் இராமாயணத்தில் 14 ஆண்டுகள் சிம்மா சனத்தில் இருந்து ஆண்ட இராமனின் ஒரு ஜோடி (இரண்டு) செருப்புகளுக்கு ‘‘செருப்புக் காதலர்களாகி'' - ‘‘திராவிட'' நெருப்புடன் விளையாடத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத் தலைவர்கள் கண்டனம்

செருப்பு வீசியவர்களை தமிழக அரசு உடனடியாகக் கைது செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்புள்ள கட்சித் தலைவர்கள், தி.மு.க. தலைவர் தளபதி சகோதரர் மு.க.ஸ்டாலின், காங் கிரசு கட்சியின் தமிழகத் தலைவர் சு.திருநாவுக்கரசர், மேனாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் சகோதரர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன், தமிழ் மாநில காங்கிரசு கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தோழர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் போன்ற பல தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, காவல் துறை - இத்தகைய கயவர்கள்மீது கடுந் தண்டனை தரும் சட்டங்கள் பாய்ந்து, தமிழ்நாடு கலவர பூமியாகிவிடாமல் தடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

‘‘எய்தவனிருக்க அம்பை நோவது சரிதானா?'' என்ற பழமொழிக்கொப்ப இந்த முயற்சிகளை தொடங்கி வைத்தவர், ஒரு காலிப் பயல்கூடப் பயன்படுத்த அஞ்சும் பண்பற்ற கொச்சை சொற்களை தந்தை பெரியார் மீதும் (அன்று), நேற்று உயர்நீதிமன்றத்தின்மீதும், காவல்துறை மீதும் (இன்று) வீசியுள்ள நபர் இன்னமும் போலீஸ் பாதுகாப்புடன் மேடைகளில் ஏறி, புஸ்வாணம் விட்டுள்ளார்.

இது வடநாடு அல்ல- பெரியார் மண்!

தூத்துக்குடி மாணவியின்மீது உடனடியாகப் பாய்ந்த தமிழக காவல்துறையின் நடவடிக்கை, இத்தகைய காவி, காலி இராஜாக்கள்மீதும், நடவடிக்கை எடுத்து பாயத் தயாராகவில்லையே, ஏன்? இந்த இரட்டை அளவுகோல் ஏன்? மனு ஆட்சியா? ஜனநாயகமா? என்ன இங்கே நடைபெறுகிறது?

விஷமக்கார வீணர்களே, கலவரங்களைத் தூண்டி  இந்துத்துவா வாக்கு வங்கியை ஒருமுனைப்படுத்திடும் தேர்தல் செப்படி வித்தைகளுக்கு இது ஒன்றும் வடநாடு அல்ல!

பெரியார் மண்! திராவிட பூமி! இங்கு மக்களின் எதிர்வினைகள் அரசியல் ரீதியாக, ஜனநாயக வழிமுறைகளையொட்டியே வருமே தவிர, கலவரங்கள்மூலம் ஏற்படும் என்று கனவு கண்டு தூண்டிலைத் தூக்க நினையாதீர்!

காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்யும் புத்தி கெட்ட புல்லர்கள் நீங்கள் என்பதை விரைவில் உணர்வீர்கள்!

‘‘மத்தியில் எங்கள் ஆட்சி, மாநிலத்தில் எங்களுக்கு - தோப்புக்கரணம் போடும் ஒரு முதுகெலும்பற்றவர்கள் ஆட்சி'' என்பதால்தானே, இந்த வாய்க் கொழுப்பு, வக்கணை, வன்செயல், தரங்கெட்ட தறுதலைத்தனம்! எவ்வளவு காலம் இந்தக் கோலம் - பார்ப்போம்!

தூண்டியவர்களை விட்டுவிட்டு அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை!

அந்த ஆணவத்திற்கு வரும் தேர்தல்கள் மூலமும், மற்ற ஜனநாயக வழியில், அறப்போர்களின்மூலமும் விரைவில் இதன் தாக்கத்தை உணர்வீர்கள். இறுதியில் சிரிப்பவர்களே வெற்றி பெற்றவர்கள்!

அணையப் போகும் விளக்கு சற்று வெளிச்சம் காட்டுவது வழமைதானே!

தூண்டியவர்களை விட்டு, அம்புகளுக்குத் தண்டனை கொடுத்துப் பயனில்லை!








தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

சென்னையில் தமிழர் தலைவர் பேட்டி

தந்தை பெரியாருடைய 80 ஆண்டுகால தொண்டினாலே

மதச்சார்பின்மை - சமூகநீதி - சம வாய்ப்பு - பெண்ணடிமை ஒழிப்பு கொள்கைகளுக்கு வெற்றி!


சென்னை, செப்.17   தந்தை பெரியாருடைய 80 ஆண்டுகால தொண்டினாலே, மதச்சார்பின்மை - சமூகநீதி - சம வாய்ப்பு - பெண்ணடிமை ஒழிப்பு கொள்கைகளுக்கு வெற்றி கிட்டியது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (17.9.2018) காலை சென்னை பெரியார் திடலில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

இணையற்ற அறிவுப் புரட்சி

20 ஆம் நூற்றாண்டில் பிறந்து, 21 ஆம் நூற்றாண்டிலும், இனி வரக்கூடிய நூற்றாண்டிலும் இணையற்ற அறிவுப் புரட்சியை நிகழ்த்தும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய 140 ஆம் ஆண்டு பிறந்த நாளாகும் இன்று. அவர் கண்ட வெற்றிகளையெல்லாம் ஒன்று திரட்டி, இப்பொழுது தோன்றியிருக்கக்கூடிய அறைகூவல்களையெல்லாம் சந்திக்கக்கூடிய சூளுரை நாளாக இந்த நாளை திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம் ஏற்கிறது.

மதச்சார்பின்மை, சமூகநீதி, சமவாய்ப்பு, பெண்ணடிமை ஒழிப்பு இத்தகைய கொள்கைகள் இன்றைக்கு ஆழமாக மக்கள் மத்தியில் பரவியிருக்கின்ற இந்தக் கொள்கைகளுக்கு தந்தை பெரியாருடைய 80 ஆண்டுகால தொண்டினாலே, மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பை உருவாக்கிய அந்த சூழல் இன்றைக்கு மாற்றப்பட்டு விடுமோ என்கிற அச்சம் பல நேரங்களில் இந்தியா முழுவதும் இருக்கிறது. காரணம், மத்தியில் உள்ள காவி ஆட்சி, மதச்சார்பின்மையையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டி ஒரு பாசிசத்தை இன்றைக்கு வளர்த்துக் கொண்டிருக்கலாம். மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என்கிற நிலை இருக்கிறது. ஜனநாயகம் என்பதே, ஆரோக்கியத்திற்கு அடையாளமே மாற்றுக் கருத்துதான்.

தந்தை பெரியார் என்கிற ஓர் ஆயுதம்தான்

எனவே, அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வரம்பு மீறி நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், அதற்கு ஒரே தடுப்பு தந்தை பெரியார் என்கிற ஓர் ஆயுதம்தான்.

எனவேதான், தந்தை பெரியார் அவர்கள் மறைந்து உருவத்தால், உடலால் 45 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், இன்றைக்குப் பெரியார் தத்துவம் ஜீவ நதியாக உலகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றது. பெரியார் என்கிற மாமருந்து, இன்றைக்கும், நாளைக்கும் வருகின்ற நோய்களுக்கெல்லாம், மூடநம்பிக்கை நோய்களுக்கெல்லாம் ஜாதி நோய்க்கெல்லாம், தீண்டாமை நோய்க்கெல்லாம், மதவெறி நோய்க்கெல்லாம், பெண்ணடிமை நோய்க்கெல்லாம் அதுதான் ஒரே மாமருந்து என்று கருதுகின்ற காரணத்தினாலே, அந்தப் பணியை நாம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இன்றைக்கு கிழக்கும் - மேற்கும் ஏந்தி அதை செய்து கொண்டிருக்கின்றது.

பெரியார் உலகத் தலைவராக உயர்ந்து காணப்படுகிறார்

பெரியார் உலகப் பெரியாராக - உலகத் தலைவராக இன் றைக்கு உயர்ந்து காணப்படுகிறார்.

பெரியார் வாழ்க! பெரியார் கொள்கை வெல்க!

பிள்ளையார் ஊர்வலம் என்பதே கலவரத்திற்காகத்தான்!

செய்தியாளர்: நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தியின் ஊர்வலம் போது பல்வேறு இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு இருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பதே  ஆங்காங்கே கூலிப்படைகளை தயாரித்து, ஆங்காங்கே பிள்ளையாரை நட்டு வைத்து, பிறகு கடலில் கரைப்பது என்பது இருக்கிறதே, இதற்கு முன்னால் இருந்ததைவிட இந்த ஆண்டு குறைந்திருக்கிறது என்பது அவர்களே ஒப்புக்கொண்ட ஒரு செய்தி.

இந்தப் பிள்ளையார் ஊர்வலம் என்பதே கலவரத்திற் காகத்தான் அதற்கு முன்பெல்லாம் பிள்ளையாரை கும்பிடுகிற மக்கள், வீட்டிற்குள் பிள்ளையாரை வைத்துக் கும்பிட்டுவிட்டு, கிணற்றிலோ, குளத்திலோ போட்டு விடுவார்கள்.

பிள்ளையார் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று, ஆட்டம் பாட்டம் என்று நடத்தி, காவல்துறையினரை தாக்குவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, உயர்நீதிமன்றத்தைப்பற்றி தாறுமாறாக கொச்சையாகப் பேசுவது இப்படிப்பட்டவற்றை நடத்தி, கலவர பூமியாக தமிழ்நாட்டை ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இது பெரியார் மண்- திராவிட மண்!

ஒருபோதும் அவர்கள் வெற்றி பெற முடியாது. காரணம், இது பெரியார் மண்; திராவிட மண். இங்கே மனிதநேயம்தான் தழைக்குமே தவிர, மதவெறி ஒரு போதும் தழைக்காது.

இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டார்.
எச்.இராஜா விஷயத்தில் சட்டம் என்ன செய்யப் போகிறது?

பெரியார் சிலை மீது செருப்பு வீசியவர்கள்

அடுத்து எதைத் தூக்கப் போகிறார்கள்?



சென்னை, செப்.17   எச்.இராஜா விஷயத்தில் சட்டம் என்ன செய்யப் போகிறது? என்றும், பெரியார் சிலைமீது செருப்பு வீசியவர்கள் அடுத்து எதைத் தூக்கப் போகிறார்கள்?  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (17.9.2018) காலை சென்னை பெரியார் திடலில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

மக்கள் மன்றம் தண்டனை வழங்கும்!

செய்தியாளர்: எச்.இராஜா அவர்கள் நீதிமன்றம் குறித்து தரக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: அவர் தரக்குறைவான வார்த்தை களைப் பேசுவது இது முதன்முறையல்ல. எல்லோரையும் தரக்குறைவாகப் பேசுவதற்குப் பெயர்தான் எச்.இராஜா என்பது. இதுவரையில் பலமுறை அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையும், அரசும் சும்மா இருந்த தினுடைய விளைவு, அவர் நீதிமன்றத்தைத் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால், நீதிமன்றத்தையே மிகவும் தரக்குறைவாகப் பேசுவது, காவல்துறையை இன்னும் அசிங்கமாகப் பேசியிருக்கிறார் என்று அவர்மீது வழக்குப் பதிவு செய்துவிட்டோம் என்பது பயனளிக்காது.

ஏற்கெனவே ஒரு மாணவி, ‘‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக!'' என்று உணர்ச்சிவயப்பட்டு எங்கோ ஓரிடத்தில் சொன்னதை, உலகம் முழுவதும் அதைப் பிரபலப்படுத்தி கைது செய்தார்கள்.

எச்.இராஜா விஷயத்தில் சட்டம் என்ன செய்யப் போகிறது?

ஏற்கெனவே பெண் பத்திரிகை செய்தியாளர்களைக் கொச்சைப்படுத்திய எஸ்.வி.சேகர் போன்றவர்கள் இன்னமும் வெளியில்தான் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான், சட்டம்- ஒழுங்கு தூங்கிக் கொண்டிருக் கின்றபொழுது, குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றபொழுது, இவர்களுக்கெல்லாம் அந்தத் துணிச்சல் ஏற்படுகிறது.

எப்படியென்றாலும், அதனுடைய விளைவுகளிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது.

நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு எல்லாவற்றையும் தாண்டி, மக்கள் மன்றம் அதற்கான தண்டனையை வழங்குவார்கள்.

பெரியார் பிறந்த நாள் சூளுரை

செய்தியாளர்: சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கும், திருப்பூரில் உள்ள பெரியார் சிலைக்கும் செருப்பு மாலை போட்டிருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: பெரியாரைப் பொருத்தவரையில், ஒரு செருப்பு போட்டால், இன்னொரு செருப்பு எங்கே என்று கேட்டு பழக்கப்பட்ட ஒரு தலைவர். எனவே, இந்த சலசலப்புகளால் அவரை அவமானப்படுத்தி விட முடியாது.

அதேநேரத்தில், செருப்பைத் தூக்கியவர்கள், அடுத்து எதைத் தூக்கப் போகிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்.

இதையெல்லாம் ஏன் இந்த அரசு அனுமதித்துக் கொண்டிருக்கிறது. இதை அரசு அனுமதித்தால், மக்கள் பதில் கூற ஆரம்பித்தால், நாட்டில் கலவரங்கள் வெடிக்கும். கலவரங்கள் வெடிக்காமல், கொள்கை ரீதியான விடை இதற்குக் கிடைக்கவேண்டுமானால், இத்தகைய ஆட்சிகளுக்கு விடை கொடுப்பதுதான் ஒரே ஒரு வழி. அதுதான் பெரியார் பிறந்த நாள் சூளுரையாகும்.

இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டார்.

தந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி


சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது.

பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஊர்வல மாக சென்று பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம் மையார் சிலைக்கு மாலை அணிவித்தார்கள். பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர பெரியார் சிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியார் நினைவிடத்தில் கழகத் தோழர்கள் புடைசூழ தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் உறுதிமொழியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்ல, அவரைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் உறுதி மொழி கூறி சூளுரை ஏற்றனர்.

அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப் பட்டது.

கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், சட்டத்துறைத் தலைவர் வழக்கு ரைஞர் த.வீரசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி, பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர்  தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.ரத்தினசாமி, செயலாளர் தே.செ.கோபால், திராவிடர் வரலாற்று  ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், திருமதி ராஜம்மாள், கவிஞர் அரிமா,  வரியியல் வல்லுநர் ச.ராசரத் தினம், ஆடிட்டர் ராமச்சந்திரன், டாக்டர் இராஜ சேகரன், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, திருமதி. மோகனா அம்மாள், பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, மயிலை சேதுராமன், பெரியார் திடல் பொது மேலாளர் ப.சீதாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், விடுதலை அச்சகப் பிரிவு மேலாளர் க.சரவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் உள்ளிட்ட கழகப்பொறுப் பாளர்கள் கலந்துகொண்டனர்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளான இன்று (17.9.2018) பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கும், பெரியார் நினைவிடம், அன்னை மணியம் மையார் நினைவிடம் மற்றும் பெரியார் சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடம் ஆகிய இடங்களில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, திராவிட தொழிலாளரணி, பெரியார் மருத்துவமனை, திராவிடன் நலநிதி, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம், புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பு, அகில இந்திய பிற்படுப்பட்டோர் பணியாளர் நலச்சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பெரியார் திடல் அனைத்து துறை பணி தோழர்கள் மற்றும் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த கழகத் தோழர், தோழியர்கள் பெரும் திரளாக பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

மதிமுக சார்பில் நினைவிடத்தில் மரியாதை

பெரியார் திடலுக்கு வருகைதந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வர வேற்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதிமுக பொறுப்பாளர்கள் மல்லை சத்யா, செங்குட்டுவன் மற்றும் மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் வருகை தந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பெரியார் நினைவிடத் தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத் தினார்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி (ஏஅய்ஓபிசி), வாய்ஸ் ஆப் ஓபிசி ஆசிரியர் ஜெ.பார்த்தசாரதி மற்றும் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கும், நினை விடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இலவச மருத்துவ முகாம்

தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாளை யொட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்ற இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.

அன்னை நாகம்மையார் அரங்கம் திறப்பு

தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் 90 வயதை கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு இன்று(17.9.2018) காலை பெரியார் திடலில் பாராட்டு, வாழ்த்து, விருதளிப்பு விழாவிற்கு வருகை தந்த திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் விழா தொடங்குவதற்கு முன்பு பெரியார் திடலில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அன்னை நாகம்மையார் அரங்கத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் முன்னிலையில் திறந்து வைத்தார்.

தொண்டறச் செம்மல்களுக்குப்

பாராட்டு - வாழ்த்து - விருதளிப்பு

இதையடுத்து தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழாவையொட்டி, தொண்ணூறு வயதைக் கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு பாராட்டு - வாழ்த்து - விருதளிப்பு! காலை 10.30 மணியளவில் நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் இனமான பேரா சிரியர் க.அன்பழகன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களின் சார்பில் தோழர் சுகந்தி அவர்களும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு ஆகியோர் சிந்தனைசார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.

ஏன் அவர் பெரியார்? கருத்தரங்கம்

தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்பு கருத்தரங்கம், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி   தலைமையில் நடைபெற்றது. பொறியாளர் இ.ச.இன்பக்கனி வரவேற்றார். வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அறிமுக  உரையாற்றினார். பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்... வழக்குரைஞர் கிருபா முனுசாமி, பயன்பெற்றோர் பார்வையில்... ஊடக வியலாளர் கவிதா சொர்ணவல்லி, பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பற்றி... எழுத்தாளர் ஓவியா ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக தமிழர் தலைவர் நிறைவுரை ஆற்றினார்.

பெரியார் நினைவிடத்தில் தோழர்கள் உறுதிமொழி

கடவுள் இல்லை கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி

ஜாதியை கடவுள் உருவாக்கினார், மதத்தை கடவுள்பரப்பியிருக்கிறார்,  பெண்ணடிமையை கடவுள் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார் என்பதற்காக கடவுள் மறுப்பை, மனித நேயத்தை அனைவருக்கும் அனைத் தும் என்ற சமூக நீதியை காப்பதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் 95ஆண்டு காலம் வாழ்ந்த பெரியார் மறைந்த பிறகும், உடலால் மறைந்த பிறகும், தத்துவமாக, உலகத் தத்துவமாக உயர்ந்து நிற்கிறார்.

வெல்லும் வழி- அவர் சொல்லும் முறை எல்லா வற்றிலும், உலகளாவிய சிந்தனையாளராக நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் திகழ்ந்து ஈரோட்டுப் பெரியாராகி, உலகத் தலைவராக, கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்கும், மேலும் கீழும் அய்யிரண்டு பத்துதிசையிலும் வெல்லக்கூடிய நம் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய 140ஆவது ஆண்டு பிறந்த நாளாகிய இன்று அவர் இட்ட பணிகளை அவர்கள் போட்டுத்தந்த பாதையில், எந்தவித சபலத்திற்கும் ஆளா காமல், செய்து முடிப்போம் என்று அவருக்குப் பிறகு தலைமையேற்ற அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையில் உறுதியேற்ற நாம், இந்நாளில் அதை மேலும் புதுப்பித்துக்கொண்டு, பெரியார் பாதையில் ஆயிரம் எதிர்ப்புகள், பல்லாயிரம் ஏளனங்கள், எத்த னையோ கண்டனங்கள், அடக்குமுறைகள் எதுவந் தாலும் எதிர்நீச்சல் அடித்து அவைகளைத் துச்சமெனக் கருதி  வெற்றி பெறுவோம், பயணத்தைத் தொடர்வோம், சூளுரைப்போம், சுயமரியாதை வாழ்வு வாழ்வோம்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...