மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு தேசியக்
கல்விக் கொள்கை அறிக்கை குறித்து மாணவர்கள், பெற்றோர்களிடம் கருத்துக்
கேட்பு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். சார்பு கல்வி நிறுவனங்கள் கருத்துத்
திணிப்பு செய்வதையும், பள்ளிக் கல்வி தவிர பிற அத்தியாயங்கள் குறித்து
கருத்து சொல்லும் வாய்ப்பை மாநில அரசு தராதது குறித்தும், இறுதி நாள் ஜூலை
31 என்பதை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழர் தலைவர்
விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
மாணவர்களை நிர்ப்பந்தப்படுத்தி....
தேசியக் கல்விக் கொள்கை - 2019 வரைவு
அறிக்கையின் மீது கருத்துக் கேட்பு என்கிற பெயரில், எந்த விளம்பரமும் இன்றி
தமிழகத்தின் சில நகரங்களில் (கோவை, திருச்சி, சென்னை உள்பட) தனியார்
கல்லூரிகளில் கூட்டம் நடைபெற்று, சமுக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததன்
காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சில தனியார் பள்ளிகள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.
சார்புடைய பள்ளி களின் நிர்வாகம், பெற்றோர்கள் கவனத் திற்கு என்று சொல்லி
கருத்துக் கேட்புப் படிவங்களை அவர்களே தயார் செய்து, மாணவர்களிடம் கொடுத்து
வருகிறார்கள். படிவத்தை ஆசிரியர்கள் சொல்லியவாறு மாணவர்களை
நிர்ப்பந்தப்படுத்தி நிரப்பச் செய்து பெற்றோர்களின் ஒப்பம் பெற்று
வருவது நமது கவனத்திற்கு வந்துள்ளது.
படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கருத் துகள்,
பெற்றோர்களின் கருத்தினை அறிந்து கொள்ளும் நோக்கில் இல்லாமல், முற்றிலும்
அரசு வெளியிட்டுள்ள வரைவு கல்வி அறிக்கைக்குச் சாதகமாக இருக்கும் படி தயார்
செய்து தனியார் பள்ளிகள் கொடுத்துள்ளன.
எடுத்துக்காட்டாக,
பெற்றோர்களின் கையொப்பத்தை மட்டும் பெற்று வருமாறு...
* நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருக்க வேண்டும் (பான் கார்டு, ஆதார் அட்டை போல).
* தமிழகத்தில் உள்ளோர் வட மாநிலத்
திற்குச் சென்றால் இந்தி தெரியாமல் சிரமப் படுகின்றனர். இந்த சிரமத்தைப்
போக்க தமிழகத்திலும் இந்தி கற்பிக்க வேண்டுமா? எட்டாம் வகுப்பு வரை இந்தி
எழுத மற்றும் பேச கற்றுக் கொடுப்பது அவசியம்.
* ஒரு சில பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதுவும் நமக் குத் தேவை.
* நீட் தேர்வுக்கு பள்ளியிலேயே கட்டணம் பெற்றுக் கொண்டு, வகுப்பு நடத்தினால், பெற்றோர்களுக்கு கூடுதல் சுமையும் தவிர்க்கப்படும்.
இந்த கேள்விகளுக்கெல்லாம், ஆம் அல்லது
இல்லை என்று டிக் அடிக்க வேண்டும். ஆசிரியர்களே மேற்கூறிய கேள்விகளுக்கு,
ஆம் எனும் பதிலை மாணவர்களிடம் சொல்லி டிக் அடிக்கச் செய்து, பெற்றோர்களின்
கையொப்பத்தை மட்டும் பெற்று வருமாறு நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
புதிய கல்விக் கொள்கையை அனைவரும் நிராகரிக்கவேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கை
பள்ளி நிர்வாகத்தின் கருத்துக்கு மாறான
கருத்தோடு படிவத்தை நிரப்பி அனுப்ப பெற்றோர்கள் விரும்பமாட்டார்கள் என்
கிறபோது, இது எப்படி மக்களின் உண்மை யான கருத்தாகும்? மாறாக கருத்துத்
திணிப்புதானே!
தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு
அறிக்கை, சமுக நீதிக்கு எதிராக உள்ளது; மாநில உரிமைகளைப் பறிக்கிறது; கல்
வியை முன்னோக்கி எடுத்துச் செல்லாமல், வேத கால முறைக்கு எடுத்துச்
செல்கிறது; தமிழகத்தில் 1953 இல் விரட்டப்பட்ட "குலக் கல்வித்திட்டத்தை''
அகில இந்திய அளவில் கொண்டு வர எத்தனிக்கிறது; கல்வி முழுவதும் தனியார்
மயமாக்கப்படும் ஆபத்து உள்ளது; பல்கலைக் கழகங்கள் ஒழிக்கப்பட்டு அனைத்தும்
தனியார் வசம் ஒப்படைக்கும் நிலை உருவாக்கப்படுகிறது. மொத்தத்தில் இது
மக்களுக்கான கல்விக் கொள்கை அல்ல; மாறாக, வணிகமயம், கார்ப்பரேட் மயம், சமஸ்கிருதமயம் எனும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன - பனியா கூட்டுக் கொள்ளைக்கு வழிவகுக்கின்ற கல்வி அறிக்கை
என கல்வியாளர்கள், மேனாள் துணை வேந்தர்கள் கவலையோடு கருத்துத் தெரிவித்து,
இந்த கல்விக் கொள் கையை அனைவரும் நிராகரிக்க வேண்டும் என்று அறிக்கை
விடுத்துள்ளனர்.
அச்சுறுத்தும் போக்கை அனுமதிக்க முடியாது!
ஆனால், பார்ப்பனர்கள் நடத்தும் தனியார்
பள்ளிகளில், மோடி அரசின் கல்விக் கொள்கை தங்களது ஆதிக்கத்தை மேலும்
வலுப்படுத்தும் என்கிற நோக்கில், இது பற்றிய எந்த விவரமும் தெரியாத
மாணவர்களிடம் தவறான கருத்துகளை சொல்லி மூளைச் சாயம் ஏற்றுகின்ற செய் கின்ற
நிலையும், இதற்கு மாறான பெற் றோர்களின் பிள்ளைகளை அச்சுறுத்தும் போக்கும்
தமிழகத்திலே நடைபெறுவதை நாம் அனுமதிக்க முடியாது. வன்மையாகக்
கண்டிக்கிறோம்; கண்டனக் குரல்கள் எழுப்பவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். சார்பான தனியார் பள்ளிகள்
தங்களின் மாணவர்களின் கருத்து என்று இவற்றைத் திணிக்க முற் படும்போது,
உண்மையிலேயே இதனால் பாதிக்கப்படப் போகின்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள்
போன்றவற்றில் பயிலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர் களின் கருத்துகளை அறிய
மாநில அரசு ஏதேனும் ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா?
வேடிக்கை பார்க்கப் போகிறதா தமிழக அரசு?
கல்விக் கொள்கை குறித்த விவாதங் களை
முழுமையான அளவில் நடத்தாமல், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தாமல்,
ஏதுமறியா மாணவர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்துவதை வேடிக்கை பார்க்கப்
போகிறதா தமிழக அரசு?
தனியார் பள்ளிகள் மாணவர்களையும்,
பெற்றோர்களையும் கட்டாயப்படுத்தும் போக்கை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்
துறை தலையிட்டு, தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழக அரசின் கொள்கை நிலைப்பாடு என்ன?
பள்ளிக் கல்வித்துறை தனது இணைய தளத்தில் வரைவு தேசியக் கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வி தொடர்பான முதல் எட்டு அத்தியாயங்களை மட்டுமே வெளியிட்டு, கருத்துக்
கோருகிறது. 23 அத்தியாயங்களில் எஞ்சிய 15 அத்தியா யங்கள் குறித்து தமிழக
அரசிடம் எப்படி கருத்துச் சொல்வது? உயர்கல்வித் துறை அதற்கென செய்துள்ள
நடவடிக்கைகள் என்ன? கல்லூரிக் கல்வி, பல்கலைக்கழகங் கள், தொழில்சார் கல்வி,
ஆசிரியர் படிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக்
உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தமிழ்நாட்டு மக்களின் கருத்தை அறிய மாநில
அரசு வழங்கியுள்ள வாய்ப்புகள் என்ன? இது குறித்து கருத்துத் தெரிவிக்கும்
வாய்ப்புகள் எதையும் தராமலேயே மக்களிடம் கருத்துக் கேட்டு அறிவிப்பதாக
மாநில அரசு தன் கருத்தை அறிவிக்கப் போகிறதா?
மக்கள் விரோத, பார்ப்பன - பனியாக் களின்
மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் மத்திய அரசின் வரைவு கல்விக் கொள்கை மீது
தமிழக அரசின் கொள்கை நிலைப்பாடு என்ன என்பதை உடன் தெளிவு படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப்
போகின்றது என்பதை அறிய மக்கள் ஆர்வமாக இருப்பது இயல்பு. கருத்து
தெரிவித்திட ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு தெரிவித்துள்ள
நிலையில், தமிழக அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.
மக்களிடம் கருத்துக் கேட்கும் நடைமுறை இன்னும் இத்தனை சிக்கலில்
இருக்கும்போது, அவசர அவசர மாக ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்பதை மத்திய
அரசு மாற்றவேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். விரிவான
விவாதத்திற்குட்படாமல், இந்தக் கல்விக் கொள்கையை நிறைவேற்றிட தமிழக அரசு
அனுமதிக்கக் கூடாது
கல்வி உரிமை பறிபோனால் மக்கள் போராட்டம் வெடிக்கும்
கல்வி உரிமைக்காக ஒரு நூற்றாண்டு போராடி வெற்றி பெற்ற இயக்கம் திராவிட இயக்கம். இந்த உரிமை பறிபோனால் மக்கள் போராட்டம் வெடிக்கும்.
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
தஞ்சை,
26.7.2019