தமிழக முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள்மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பினைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
தி.மு.க. தலைவர் கலைஞர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.இ.அ.தி.மு.க.வே இந்தக் காரியத்தில் ஈடுபடுவது தான் ஆச்சரியமானது.
இந்த வன்முறைகள்மூலம் சட்டம் - ஒழுங்கு அறவே கெட்டு விட்டது என்ற நிலை எழும்போது, அது ஆட்சிக்குத்தானே கெட்ட பெயர். இதன் மூலம் அ.இ.அ.தி.மு.க.வே - அதிமுக ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது என்ற நிலைதானே விஞ்சும்.
ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பார்களே அது இதுதானா? திமுக தலைவர் கலைஞர், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் உருவப் பொம்மைகளை எரிப்பது நாகரிகம் தானா?
இதில் இன்னொன்றையும் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஆளும் கட்சியே நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தால் ஆட்சி பிறப்பிக்கும் சட்டங்களைக் குடிமக்கள் எப்படி மதிப்பார்கள்?
ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சட்ட ரீதியாக விசாலமான வழிமுறைகள் தாராளமாக இருக்கும்போது அதனைக் கைவிட்டு விட்டு, இத்தகைய வன்முறைகளில் இறங்குவது தீர்வுக்கு வழியாகுமா?
நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய வழிமுறைகளைக் கையாளுவதற்கு ஆளும் கட்சியே வழிகாட்டலாமா?
இதற்கு முன்பேகூட கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல்வழக்கில் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது தருமபுரியில், வேளாண் கல்லூரிப் பேருந்தை எரித்ததால் மூன்று பெண்கள் கொடூரமான முறையில் மரணம் அடைந்த வழக்கில், அஇஅதிமுகவை சேர்ந்தவர்களுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டதே நினைவில்லையா?
இப்பொழுதுகூட அரசுப் பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. இவை அரசாங்க சொத்து அல்லவா!
பொதுச் சொத்துக்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து நட்ட ஈடு வசூலிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை இந்த ஆட்சி தானே கொண்டு வந்தது! இந்தச் சட்டத்தின்படி பா.ம.க. நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று இவ்வாட்சி உத்தர விடவில்லையா? (அதனை எதிர்த்த பா.ம.க. நீதிமன்றம் சென்ற வழக்கு நிலுவையில் உள்ளது)
பிரதமராக இருந்த இந்திராகாந்திகூட கைது செய்யப்பட்டதுண்டு, கலைஞர் போன்றவர்களும் கைது செய்யப்பட்டதுண்டு. அப்பொழுதெல்லாம் வன்முறையில் ஈடுபடாததோடு, சம்பந்தப்பட்ட தலைவர்களும், யாரும் வன்முறையில் இறங்கக் கூடாது என்று பொறுப்புணர்ச்சியோடு அறிக்கைகள் வெளியிடப்பட்டதுண்டே!
தந்தை பெரியார் அனுபவிக்காத சிறை வாசமா? அவர்களாவது கொள்கைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்கள். சிறை செல்லுமுன் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அறிக்கை கொடுப்பார் தந்தை பெரியார்.
ஆனால், ஜெயலலிதா அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்பது கொள்கை, இலட்சியங்களை முன்னிறுத்தி நடத்திய போராட்டத்துக்காக அளிக்கப்பட்ட தண்டனையல்ல; எந்தக் காரணத்துக்காக இந்த தண்டனை என்பது எல்லோருக்கும் தெரியும்.
மோடியைப்பற்றி குற்றம் சொல்லும்பொழுது, அவர்மீது எந்தத் தண்டனையையும் எந்த நீதிமன்றமும் அளிக்கவில்லையே என்று வக்காலத்துப் போட்டுக் கருத்துத் தெரிவிக்கும் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையால் அவருக்குப் பின்னடைவு அல்ல - நாட்டுக்குத்தான் பின்னடைவு என்று கருத்துச் சொல்லுகிறாரே. ஏனிந்த இரட்டை அளவுகோல்? இதன் பின்னணியில் இருக்கும் உணர்வுக்கு என்ன பெயர்!?
காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கு என்றாலும், அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்கிறார் என்றால் இவாளைப்பற்றித் தெரிந்து கொள்ள இதுதான் சரியான தருணமும் - சந்தர்ப்பமுமாகும்.
வன்முறை என்பது இருமுனை கூர்மையான ஆயுதம் என்றார் அறிஞர் அண்ணா; அந்த அண்ணா பெயரில் கட்சி நடத்துகின்றவர்கள் இதனைத் தெரிந்து, வைத்திருக்க வேண்டாமா?
சட்டமறுப்பு இயக்கம் நடந்த காலத்திலும், வெள்ளையனே வெளியேறு என்று சொல்லப்பட்ட காலத்திலும்கூட, வன்முறைகளை காங்கிரஸ்காரர்கள் கையாண்டபோதுகூட கடுமையாகக் கண்டித்தவர் தந்தை பெரியார். தண்டவாளத்தைப் பெயர்த்த போது, தண்டவாளத்துக்குக் கீழா சுதந்திரம் இருக்கிறது? என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பியவரும் - அவரே!
அ.இ.அ.தி.மு.க. இப்பொழுது செய்ததற்காக அல்ல - இதனை யார் செய்திருந்தாலும் - திராவிடர் கழகம் கண்டிக்கவே செய்யும் - திராவிடர் கழகத் தலைவர் கண்டித்துக் கருத்தைத் தெரிவிக்கவே செய்வார்.
சில தொலைக்காட்சி அரங்கங்களில் சில அறிவு ஜீவிகள் உட்கார்ந்து கொண்டு மக்கள் கொந்தளித்து எழுந்தார்கள்! என்று எல்லாம் கருத்துச் சொல்லுவது ஆபத்தானது; எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதற்கு ஒப்பாகும். ஊடகங்கள் வன்முறைகளை அடக்கவேண்டுமே தவிர, தூபம் போடக் கூடாது.
இரண்டு நாட்கள் தமிழ்நாட்டில் ஆட்சி என்பது இல்லாமல் இருந்தது போன்ற நிலைதான் - இனி மேலாவது சட்டம், ஒழுங்கு நிலையைச் சரிபடுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்ப்பார்ப்பு!
Read more: http://viduthalai.in/e-paper/88423.html#ixzz3EmMCpz2x