Friday, December 30, 2016

மாநில அரசின் அனுமதியின்றி தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவம் நுழையலாமா?

மாநில அரசின் அனுமதியின்றி தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவம் நுழையலாமா?
இது அச்சுறுத்தல், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற விமர்சனத்துக்கு என்ன பதில்?
தமிழர் தலைவர் ஆசிரியர் எழுப்பும் வினா
மாநில அரசின் அனுமதியின்றி தமிழக அரசின் தலைமை செயலகத்துக்குள் துணை ராணுவம் நுழையலாமா? இது அச்சுறுத்தல் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற விமர்சனத்துக்கு என்ன பதில்? என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் குறிப்பாக 2016இல்கூட பல தொழிலதிபர்கள், கல்வி நிறுவன முதலாளிகள், சினிமாத்துறையினர் - இப்படி பலபேரிடம் வருமான வரித்துறை 'ரெய்டுகள்' நடந்துள்ளன!
ஆனால், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சென்னை அண்ணா நகரிலும், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலர் அறையிலும் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையும், அதில் பின்பற்ற வேண்டிய நடைமுறையும் பொதுவான பலரின் கேள்விக்கும், விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளன!
அரசியல் அச்சுறுத்தல்
இதில் அரசியல் அச்சுறுத்தல் என்ற உள்நோக்கம்  இருக்குமோ என்றெல்லாம் செய்தி ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் விவாதங்களும், ஆய்வுக் கட்டுரைகளும் வந்த வண்ணம் உள்ளன! தேவையா இது?
சந்தேகப்படும்படியாக ஏதேனும் தகவலோ, செய்திகளோ, வருமான வரித்துறை பெரிய அதிகாரிகளுக்குக் கிடைத்தால், அவர்கள் அந்த நபர்கள் வீட்டில் சோதனை நடத்திடுவதை யாரும் குறைகூறவோ, தவறு என்றோ, அரசியல் சார்ந்த நடவடிக்கை என்றோ கூறிடுவதில்லை; கூறிடவும் முடியாது!
அதற்கென கடமையாற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்போ, குரோதங்களோ இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுவதில்லை.
ஆனால், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த திரு.ராமமோகனராவ் அவர்கள் வீட்டில் நடைபெற்ற வருமான வரி ரெய்டும், அதன் தொடர்ச்சியாக சென்னை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரின் அறைக்குள் நுழைந்து - அதுவும் மத்திய அரசின் துணை ராணுவத்தின் பாதுகாப்போடு நடந்தது என்பதுதான்  இப்போது பொதுவானவர்களையும் நியாயமான கேள்விகளைக் கேட்க வைத்துள்ளது.
திரு. ராமமோகனராவின் ஆத்திரம் பொங்கிய பேட்டியில் அவர் கூறியதை ஏற்காதவர்கள் ("நான் புரட்சித்தலைவியால் பயிற்சி கொடுக்கப்பட்டவன், இன்னமும் நான்தான் தலைமைச் செயலாளராக இருக்கின்றவன்" என்பது போன்ற அதீதப் பேச்சுகள்- தேவையற்றவையாகும்) பலரும்கூட, அவர் எழுப்பிய சில சட்டபூர்வமான கேள்விகளைப் புறந்தள்ள முடியாததினால்தான், மிக மூத்த, பல ஆண்டுகளுக்கு முன்பே இந்திய ஆட்சிப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற 90ஆண்டு நீண்ட வாழ்வில் உள்ள மரியாதைக்குரிய திரு. பி.எஸ்.இராகவன் அவர்கள் தூய எண்ணத்துடன் இன்று ‘தமிழ் இந்து’ நாளேட்டில் எழுப்பியுள்ள சட்டபூர்வமான - அனுபவமிக்க பக்குவத்தோடு எழுதியுள்ள கட்டுரையில் கேட்டுள்ள சில கேள்விகளுக்கு வருமான வரித்துறை - நிதித்துறை - மத்திய அரசு மூலம் சரியான பதில் கிடைக்க வேண்டும்.
"ராம மோகனராவின் மூன்று வாதங்கள் நியாயமானவை என்று எனக்குப்படுகிறது. முதலாவது, சோதனை அனுமதிக் கடிதத்தில் தன் பெயரில்லை. தன்னுடைய மகனின் பெயர்தான் இருந்தது என்றும், வருமான வரித்துறை  சோதனைக்கு வந்தவர்கள் துணை ராணுவப்படையினருடன் தன் வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டது பலாத்காரமான செயல்" என்று அவர் கூறியுள்ளார்.
ராமமோகனராவ் மகன் (விவேக்) வேறு முகவரியில் உள்ளபோது, ராமமோகனராவ் வீட்டுக்கு வலுக்கட்டாயமாகச் சென்றது சரியில்லை என்ற கருத்தை திரு பி.எஸ்.ராகவன் கூறுவது நியாயமானது-அனுபவபூர்வமாக அதை விளக்கியுள்ளார்கள்.
இரண்டாவது, ராமமோகனராவ் வீட்டில் ரூபாய் 30 லட்சம் புது நோட்டுகள், 100க்கும் அதிகமாக கிலோ கணக்கில் தங்க, வெள்ளிப் பொருள்களையும் கைப்பற்றியதுபோன்ற தோற்றமுள்ள தகவல்கள் ஊடகங்களில்,  வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாக வெளியாயின.
ஆனால்,  ராமமோகனராவோ, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய் ரொக்கம், மனைவி, மகளின் 40, 50 சவரன்கள், விநாயகன், லட்சுமி, வெங்கடேசுவரா உள்பட 20-25 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருள்கள்தான் கைப்பற்றப்பட்டன என்கிறார்.
எனவே, “சோதனையின் அடிப்படையே சந்தேகத்துக்கு உரியதாகி விடுகின்றது’’ என்கிறார் திரு. ராகவன் அவர்கள்.
மூன்றாவது, தலைமைச் செயலகத்துக்குள்ளே நுழைந்து தலைமைச்செயலாளர் அறையில் அதுவும் துணை ராணுவத்துடன் (உள்ளூர் போலீஸ் பெரிய அதிகாரிகளின் அனுமதிகூட பெறாமல்) சென்றது எல்லை மீறிய செயல் என்றும், தலைமைச் செயலாளர் அறையில் எத்தனையோ ரகசிய கோப்புகள் இருக்கும்; அதனை மூன்றாவது நபர் பார்க்க, படிக்கச் செய்ததில் அரசின் ரகசியத்தைப் பார்த்த குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை அந்த நபர்களுக்கு உண்டு என்றும் கூறியுள்ளார் திரு. பி.எஸ். ராகவன்.
அரசியல் சட்ட விதிகள் மீறல்
இது வெறும் ராமமோகனராவுக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே நடக்கும் பிரச்சினை என்ற பரிமாணத்தைத் தாண்டி,  மாநில அரசின் உரிமைகளை, அரசியல் சட்ட விதிகளை மத்திய அரசு மீறிடும் அளவுக்கு மிக அசாதாரணப் பிரச்சினையாக மாறியுள்ளதே!
மத்திய, மாநில அரசுகளின் உரிமைகள் அரசமைப்புச் சட்டப்படி வரையறுக்கப்பட்டவை.
மாநில அரசின் அனுமதியின்றி, துணை ராணுவம் நுழையலாமா?
இது அச்சுறுத்தல், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற கடும் விமர்சனத்துக்கும் இடம் தருவதாகாதா?
மத்தியில் உள்ள மோடி அரசு தமிழ்நாட்டு அரசினை இப்படி தங்களது ஆதிக்க, அதிகார வளையத்தில் நெருக்குவதா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளனவே!
இது பெரியார் மண்
உறவுக்குக் கைகொடுக்கவும், உரிமைக்குக் குரல்  கொடுக்கவும்தான் நம் மாநில  அரசு, குறிப்பாக திராவிடர் இயக்க ஆட்சிகள் நடைபெற்றிட வேண்டும் என்பதே தமிழ்நாட்டு  மக்களின் கருத்து. அதனால் கடந்த 50 ஆண்டுகளாக வேறு கட்சி ஆட்சிகள் வர முடியாத நிலை!
இது பெரியார் மண். உரிமைக்குரலை நசுக்கி, ஆதிக்கம் செலுத்த ஒத்திகைகள் இனி வேண்டாம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


சென்னை    
29-12-2016

Wednesday, December 28, 2016

தனிமை என்னும் கொடிய நோயை விரட்டுங்கள்!

மனித வாழ்க்கையே கூட்டு வாழ்க்கையில் மகிழ்வதும், குலாவுவதும், குதூகலிப்பதும், கும்மாளம் அடிப் பதும்தான்!
அறிவியல் குறிப்பாக நுண்ணறி வியல், மின்னணுவியல் முதலிய அறிவியலின் வியக்கத்தக்க கண்டு பிடிப்புகளால் மனித குலம் பெரிதும் வளர்ச்சி அடையும் வாய்ப்பைப் பெற்றி ருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான் என்றாலும்கூட, அதன் மறுபக்கத்தையும் நாம் பார்க்கத் தவறிவிடக் கூடாது!
அது சற்று பரிதாபகரமானதுதான்! கைப்பேசி வைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பலரும் - குறிப்பாக இளசுகள், பிள்ளைகள், பேரன், பெயர்த்திகள் - சதா சர்வகாலமும் அக் கைப்பேசியுடன்தான் ஒரு நாளில் விழித்திருக்கும் நேரத்தின் பெரும் பகுதியைச் செலவு செய்து, குடும்பத்துப் பெரியவர்களான தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவிடம்கூட பேசாமல், கண்கள் பூத்தாலும், கழுத்து வலி கண்டாலும், ‘ஒரே பொசிஷனில்’ அதையே கட் டிக் கொண்டு அலைகிறார்கள். வேத னையும், வருத்தமும் ஏற்படுகின்றது!
நாலு பேர் ஒரு இடத்தில் இருந் தால், உரையாடல் இந்த நாலு பேரில் எவருடனும்இல்லை!மாறாக,வேறு வெளிநபருடனோ,5ஆம்நபரிடமோ தான் சளசளவென்றோ, கலகல வென்றோ உரையாடுகின்றனர்!
நாலு பேரும் நாலு திசை நோக்கி - இவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுவதே இல்லாத ஒரு விசித்திர சூழ்நிலை!
முன்பெல்லாம்வீட்டில்உணவு சாப்பிடும்போது-வீட்டில்உள்ள கூட்டுக் குடும்பத்தவர் அனைவரும் அமர்ந்து கலகலப்புடன் கலந்துரை யாடிக்கொண்டே உணவு உண்ணும் பழக்கம் இருந்தது.
அதுவும் இந்த கைப்பேசி கலாச் சாரத்தால் காணாமற்போனது!
இதை இளைய தலைமுறை தவிர்க்க வேண்டும். அடிப்படையில் மனிதன் ஒரு சமூகப் பிராணி.
தந்தை பெரியார் அழகான விளக் கத்தைத் தருவார்:
‘‘ஒரு குருவி இன்னொரு குருவிக்குக் கூடு கட்டித் தராது! ஆனால், மனிதன்தான் அடுத்தவனுக்கு வீடு கட்டித் தருகிறான்; துணி நெய்து தருகிறான்; கல்வி கற்றுக் கொடுக்கின்றான்!’’ அப்படியிருந்தும் தனிமை - ஏகாந்தம் என்பது மிகவும் இல்லறத்தாருக்கும், தொண்டறம் புரி வோருக்கும் எப்போதும் ஆகாத ஒன்று!
கலந்து உறவாடுதலும், உரையாடி மகிழ்வதிலும்,  ஒருவருக்கொருவர் மாறு பட்டு, நாகரிகமாக விவாதிப் பதிலும்கூட எத்தனை இனிமை! எவ்வகையான சுகம்!
இதை உணர்ந்தோரே வாழ்வைப் புரிந்தோர்!
தனிமை ஒருபோதும் இனிமை தராது - சிற்சில நேரங்களைத் தவிர!
சிறைச்சாலைகளில் தனியே நம்மைப் பூட்டி வைக்கும்போது, தனித்துச் சிந்திக்க மட்டுமே - நம்மைப்பற்றி நாமே - சுயபரிசோதனை செய்து மெரு கேற்றிக் கொள்ளவேண்டுமானால், இப் படிப்பட்ட தனிமை விரும்பத்தக்கது.
மற்றபடி பல நேரங்களில் அது தண்டனைக்குரியதே!
‘‘யாரும்நம்மைவீட்டில்கண்டு கொள்ளவில்லையே, அலட்சியப்படுத்து கிறார்களே....’’ இப்படித்தான் தனிமை யாக ஒதுக்கப்பட்ட பலரும் மனநோய் பாதிக்கப்பட்டவர்களாகி, மனம் வெந்து நொந்து நோயாளிகள் ஆகி விடுகிறார்கள்.’’
அவர்கள் தங்களது மன அழுத்தத்தை வென்று, தனிமைச் சிறையிலிருந்து  வெளியே வர குடும் பத்தவர்களில்லாவிட்டாலும், நண்பர்கள் உதவிட முன்வரவேண்டும்.
அவர்களிடம் அன்போடு உரையாடுங்கள்; பாசம் கலந்த பேச்சுகளை பன்னீர் தெளிப்பதைப்போல பேசுங்கள்!
நலம் கேளுங்கள்; நாட்டு நடப்பு களில் சிலவற்றைப் பரிமாறி - அவர்தம் மவுனத்தை, விரதத்தைக் கலையுங்கள்!
கலகலப்பும், சிரிப்பும், கலந்துறவாட லும்தான் இதற்குக் கைகண்ட மருந்து!
வேறு மருத்துவர்களிடம் போகா தீர்கள்! நம்பிக்கைக்குரிய நண்பர்களை நாடுங்கள்! அன்பை விதையுங்கள்; மகிழ்ச்சியை அவர்களின் உள்ளத்தில் அவர்களே அறுவடை செய்ய தூண்டு கோலாக அமையுங்கள்!
காசு, பணம் தரவேண்டாம் - பாச நேசத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பலன் அதனால் ஏராளம் உண்டு.
மனித உறவுகள் மாண்பாக மாறும்!
- கி.வீரமணி

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் மீன்பிடிக்கக் காத்திருக்கும் கொக்குகள் - எச்சரிக்கை!

அ.இ.அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் உள்நோக்கத்தோடு ஆரிய ஏடுகள் அம்புகளை ஏவுவது ஏன்?
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் மீன்பிடிக்கக் காத்திருக்கும் கொக்குகள் - எச்சரிக்கை!
இந்தசந்தர்ப்பத்தில் தி.மு.க.வின் அணுகுமுறை மிக கண்ணியமிக்கதே!
இராணுவக் கட்டுப்பாட்டுடன் கட்சியையும் - ஆட்சியையும் காப்பாற்றட்டும் அ.இ.அ.தி.மு.க.!
தாய்க்கழகம் என்ற முறையில் தமிழர் தலைவர் ஆசிரியர்  விடுத்துள்ள முக்கிய அறிக்கை

Image result for ஆசிரியர் அறிக்கை
அ.இ.அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்திட முயலும் சக்திகளிடம் எச் சரிக்கை தேவை - இந்த சந்தர்ப்பத்தில் அ.இ.அ.தி.மு.க. இராணுவக் கட்டுப்பாட்டுடன் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றவேண்டும் என்று  தாய்க்கழகம்  என்ற முறை யில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:
அ.இ.அ.தி.மு.க.வில், அதன் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு காரணமாக அப்பொறுப்புக்கு அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க - அந்த அரசியல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு வருகின்ற 29.12.2016 அன்று சென்னையில் கூடவிருக்கிறது!
வெறும் உள்கட்சிப் பிரச்சினைதானா?
பல்வேறு வகையிலும் மக்களின் ஈர்ப்பும், செல்வாக்கும் பெற்று இருந்த தலைவரான ஜெயலலிதா அவர்களது தலைமைக்குப் பிறகு - அக்கட்சியை - கழகத்தை வழி நடத்திச் செல்லவேண்டிய தலைமையைத் தேர்ந் தெடுப்பதற்கு ஆயத்தங்கள் சட்டப்படி நடைபெறுகின்றன.
இது அக்கட்சியைச் சார்ந்த ஒரு முக்கியப் பணி - அவர்களுக்குக் கடமையும்கூட!
இதைப்பற்றி மற்றவர்கள் கவனம் செலுத்துவதோ, விமர்சிப்பதோ தேவையா என்ற கேள்வி எழலாம்.
தமிழ்நாட்டின், ஏன் இந்தியாவின் எதிர்காலத்தைப் பொறுத்து மிக முக்கிய பிரச்சினை இதில் அடங்கியுள்ளது என்பதால், பலரும் இதில் ஆர்வம் காட்டுவது தவிர்க்க முடியாதது.
சபலங்களுக்கு ஆளாகவில்லையே!
ஆனால், திட்டமிட்டே அவர்களில் யார் பிரதான பாத்திரம் வகிக்க வற்புறுத்தப்படுகிறாரோ அவர்மீது முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைந்த டிசம்பர் 5 ஆம் தேதி முதல் தொடங்கி இன்றுவரை சுமார் 20 நாள்களுக்குமேலாக - ஜெயலலிதாவின் நிழலாக அவரது தாழ்விலும், வாழ்விலும், சோதனையான காலகட்டத்திலும் முகம் கொடுத்து, அவருக்கு உற்ற துணையாக, அவருக்கு எதிராக  இருந்தவர்கள் உங்களுக்கு லாபம் - வாய்ப்பு வசதிகள் எல்லாம் உண்டு என்று ஆசை காட்டிய நேரத்திலும், அத்தகைய சபலங்களுக்கு இரையாகாமல், நட்புறுதியோடு, ‘வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் அவருடன்தான்’ என்று இருந்த திருமதி சசிகலா அவர்கள்மீது திட்டமிட்டே உள்நோக்கத்தோடு காகித அம்புகள், எதிர்மறைச் செய்திகள், எல்லாவற்றையும் தமிழ்நாட்டின் நடுநிலை என்று தங்களுக்குத் தாங்களே முத்திரை குத்திக் கொண்ட நாளேடுகள் - ‘தினமலர்’, சில ஆங்கில நாளேடுகள்,  ‘துக்ளக்‘, ஆர்.எஸ்.எஸ். ஏடுகளான ‘விஜயபாரதம்‘, ஆங்கில வார ஏடான ‘ஆர்கனைசர்’ (Organiser) போன்றவற்றில் கடந்த 20 நாள்களாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தொடர் ‘அர்ச்சனைகள்’ ஆதாரமில்லா அதீதக் கற்பனைகள், சிண்டு முடியும் சிறுநரித்தன ‘திருப்பணிகள்’ நடத்தப்பட்டு வருகின்றன!
இனப் போராட்டமே!
தந்தை பெரியார் என்ற பதவி நாடா பகுத்தறிவுப் பகலவன் சொல்வார்:
‘‘இந்நாட்டில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை; அரசியல் பெயரில் - போர் வைக்குள் நடைபெற்றவை அத்துணையும் ஆரிய - திராவிட இனப் போராட்டமே’’ என்று.
அதை அப்பட்டமாக  ஆரிய ஏடுகளும், மற்ற மக்கள் ஆதரவைப் பெற்று இந்தப் பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் காலூன்றிட முடியாத, குறுக்கு வழி அரசி யலில்,  லாட்டரியில் பரிசு விழாதா என்று கனவு காணும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கட்சிகளும் காட்டுகின்றன; பிரச்சி னையாக்க  முயலுகின்றன!
சூன்யம் ஏற்பட்டுள்ளதா?
இங்கு ஏதோ ‘சூன்யம்‘ ஏற்பட்டு விட்டதாகவும், அதை நிரப்பத் தங்களால்தான் முடியும்; அதற்காகவே ‘புது அவதாரம்‘ எடுத்துள்ளவர்கள் போலும் நித்தம் நித்தம் சிலர் உளறுவதும், அதை ஏதோ பிரகடனம் போல் ஆசைக் கனவுகளை பகலிலே கண்டு அறிவித்து மகிழுவதுமாக உள்ளனர்!
தந்தை பெரியாரின் நுண்ணாடியைப் போட்டுப் பார்த் தால்தான் இந்தக் கிருமிகளின் ஊடுருவல்பற்றி சரியாக அறிய முடியும்!
சகோதரி திருமதி சசிகலா அவர்களை எதிர்க்க வன்மையான ஆயுதமோ, எதிர்ப்போரோ யாரும் வலிமையாக இல்லாத நிலையிலும், உறவு என்ற பெயரால் சில ‘‘சோளக்கொல்லை பொம்மைகளைக்‘’ காட்டி அக் கட்சியினர் சிலரைக் குழப்பலாமா என்னும் பணியில் ஊடகங்கள் - சில தொல்லைக்காட்சிகள் தொடர்ந்து முயன்று வருகின்றன!
ஜெயலலிதா வாழ்விலும் - தாழ்விலும் உடனிருந்தவர் யார்?
யார் அக்கட்சியின் பொதுச்செயலாளாரைத் தேர்வு செய்ய தகுதியும்,  அதிகாரமும், பொறுப்பும் உள்ளவர்களோ, அவர்கள் ஓரணியில் திரண்டு, ஒரே குரலில் தங்களது வேண்டுகோளை அந்த அம்மையார் முன் வைக்கின்றனர்!
காரணம், திருமதி சசிகலா கடந்த பல ஆண்டுகளாக வெற்றி - தோல்விகளில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் எப்படிப்பட்ட வியூகங்களை வகுத்தார்; எந்தெந்த ‘அஸ்திரங்களை' எவ்வப்போது, யார் யார்மீது ஏவினார் என்பதையெல்லாம் நீக்கமற அவருடன் இருந்து புரிந்தவர் மட்டுமல்ல; அச்செயல் வடிவம் எடுக்கப் பெரும் பங்காற்றியவர் சசிகலா என்பதை எவரே மறுக்க முடியும்?
பொறாமைக்காரர்களும், கலக மூட்டிகளும் பொங்கி - திராவிட இன வெறுப்பினை மூச்சுக்காற்றாய் சுவாசிப் போரையும், தவிர வேறு எவரும் நாம் கூறுவதை அறிவு நாணயமிருந்தால் மறைக்கவோ, மறுக்கவோ முடியுமா?
ஒதுக்கினார் - பின் இணைத்தார்
இந்த அம்மையாரை சில காலம் ஜெயலலிதா ஒதுக்கியதையே ஊதி ஊதித் திரும்பத் திரும்பச் சொல்லு வோருக்கு அதன் பிறகு அவரை அழைத்து தன்னுடன் கடைசிவரை வைத்து அவரது நிர்வாகப் பொறுப்பு, ஆலோசனை முதற்கொண்டு எல்லாவற்றிலும் பங்கேற்கச்  செய்தார் என்பதை ஏனோ வசதியாக  மறந்துவிடுகின்றனர்?
திருமதி சசிகலா இன்னமும் தனது ஒப்புதலை அளிக்க வில்லை என்பதையும்கூட நல்லெண்ணத்தோடு இந்த இன எதிரிகள் பார்ப்பதற்குத் தயாராக இல்லையே!
இடையில் ஜாதியை நுழைத்தனர்; அந்தப் ‘பலூன்’ அவர்கள் யாரை நம்பினார்களோ அவர்களாலேயே கிழிக்கப்பட்டு விட்டது! பயனற்றுப் போய்விட்டது!
‘அரசியல் மீன்’ பிடிக்கக் காத்திருக்கும் கொக்குகள்!
இதில் ‘அரசியல் மீன்’ பிடிக்க வாடி நிற்கும் கொக்குகள் தங்களிடம் உள்ள அதிகாரப் பலங்களையும், ஒரு கட்டத்தில் காட்டி அச்சுறுத்தக் கூடும்! எம்.ஜி.ஆர். காலத்திலேயே நடந்த பழைய முறைதானே இது?
ஆனால், அ.தி.மு.க.வின் பலம் என்பது தமிழ்நாடு சட்டமன்றத்தில் மட்டுமல்ல; நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள 50 உறுப்பினர்களின் கட்டுப்பாடு என்ற ‘விஸ்வரூபத்தின்முன்’ எந்த அதிகாரமும், அச் சுறுத்தலும் சாதாரணம் என்பதை, ஜெயலலிதா அம்மையாரின்  வீரஞ்செறிந்த  நிலைப்பாட்டை  எண்ணிக்கொண்டால், தாமே தம் பலத்தை அ.தி.மு.க.வினர் உணர முடியும்!
தேவை இராணுவக் கட்டுப்பாடு
இது மணல் வீடு அல்ல; கோட்டை என்பதைக் காட்ட அந்த சகோதரர்கள் எழுச்சியுடனும், நம்பிக்கையுடனும், அய்யா - அண்ணா கூறிய கட்டுப்பாட்டுடன் - ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருந்தால்,  இரும்பை விழுங்க எறும்புகளால் முடியாது என்று உணர்த்த முடியும்!
தி.மு.க.வின் கண்ணிய அரசியல்!
இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான தி.மு.க. மிகுந்த முதிர்ச்சியுடன் - குறுக்கு வழிகளில் எதற்கும் ஆசைப்படாமல், கண்ணியத்துடன் அரசியல் நடத்துவது பாராட்டுக்குரியது!
எதிர்க்கட்சி என்ற முறையில் உரிய அளவு, தன் கருத்துகளை வெளியிட்டு வருகிறது.
‘கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும்;
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்,
மானம் மழுங்க வரின்’  (நாலடியார்)
என்ற பழையப் பாட்டு நியதிப்படி - இடப்பக்கம் வேட்டையில் வீழ்ந்தால் புலி அதனை உண்ணாதாம்; வலப்பக்கம் வீழ்ந்தால்தான் உண்ணும் என்பது எப்படியோ - வேட்டையில்கூட ஒரு நியதி உண்டு.
குறுக்கு வழியில் எந்த முயற்சியும் தேவை என்று எண்ணாத திண்மைதான் உண்மையான ஜனநாயக வாதிகள் என்பதை உலகுக்கு அவர்களை அடையாளம் காட்டும்.
ஆக்கபூர்வ எதிர்க்கட்சிப் பணியைச் செய்யும் அந்த இயக்கம் - தனது கடமை வழுவாது - அதன் பண்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறது!
கடல் வற்றிக் கருவாடு தின்னக்
காத்திருக்கும் சில கொக்குகள்தான்
குடல்வற்றி சாகும் பரிதாபம்-
தமிழ்நாடு அரசியலில் ஏற்படுவது உறுதி.
தாய்க்கழகம் என்ற முறையில்...
எனவே, திராவிடர் இயக்கங்களின் தாய்க்கழகம் என்ற உரிமையோடும், உறவோடும் கூறுகிறோம் - அ.தி.மு.க. பொறுப்பாளர்களே!
‘இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்பது குறள் மொழி அறிவுரை. (இவன் என்பது இருபால் உரிமையுள்ளதே).
மறைந்த ஜெயலிதாவை அறிந்தவர், அளந்தவர் - அவருடன் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து பக்குவப்பட்டவர் என்ற கனிந்த நிலையில் முதிர்ச்சி யுடன் உள்ள ஒருவர் - அ.தி.மு.க.வின் சோதனையான இந்த காலகட்டத்தில் திருமதி சசிகலா அவர்களைத் தேர்வு செய்வது, அடுத்தடுத்து வரவிருக்கும் சோதனை களையெல்லாம் சந்திக்கும் சித்தத்துடன் இருக்க ஒரே வழி - தடுமாற்றமோ, குழப்பமோ உங்களுக்கு இல்லை; உருவாக்க முயலும் இனப் பகைவர்களை, அரசியல் எதிரிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் அடையாளம் கண்டு நடந்துகொள்வதுதான் முக்கியம்.
இதுவரை சசிகலா வெறும்  கேடயம் மட்டும்தான் - இனி....!
திருமதி சசிகலா இதுவரை கேடயமாய் பயன் பட்டவர்; இனி வாளும் - கேடயமாய் நின்று அந்த இயக்கத்திற்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டம்! போகப் போக இது மற்றவர்களுக்குப் புரியும்.
இயற்கை நடப்புகளை எப்போதும் எதிர்கொள்ளப் போதிய பக்குவமும் அவரிடத்தில் அபரிமிதமாய் உண்டு என்பதை இனிதான் அகிலம் காணும் வாய்ப்பு ஏற்படும் - வாய்ப்பே தராமல் எவரையும் மதிப்பிடலாமா?
நமக்குத் தனிப்பட்ட எந்த அபிமானமும் இல்லை; இந்தக் காலகட்டத்தில் தாய்க்கழகம் ஆற்றவேண்டிய கடமை இது.

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.
சென்னை
27.12.2016






இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, December 20, 2016

சாவிலும் ஜாதியா?

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெய லலிதாவிற்கு உண்மையான இறுதிச் சடங்கை சிறீரங் கப்பட்டணத்தில் நடத்தினார்களாம்.
பார்ப்பன சமூகத்தில் பிறந்த ஜெயலலிதாவை எரிக்காமல் புதைத்தது தவறு என்று ஆரம்பம் முதலே பார்ப்பனர்களில் ஒரு பகுதியினர் புலம்பிக் கொண்டு திரிகின்றனர். பார்ப்பனர்களில் அய்யங்கார் பிரிவைச் சேர்ந்தவர்கள் உடலை எரித்து அதன் சாம்பலை ஓடும் நீரில் கரைத்து விடுவார்களாம். (குளம், குட்டைகளில்கூட கரைக்கக்கூடாதாம்). அப்படி எரிக்காமல் புதைத்தாலோ, உடலை எரித்த சாம்பலை ஓடாமல் நிற்கும் ஏரி, குளம், குட்டைகளில் கரைத்தாலோ மறைந்தவரின் ஆன்மா மோட்சமடையாமல் துன்பமடையுமாம்.
அப்படி இருக்க, முன்னாள் முதல்வர் ஜெய லலிதா இறந்தவுடன் அவரது உடலை எம்.ஜி.ஆர். சமாதி அருகே புதைத்து விட்டனர். இது அரசும், அ.இ.அ.தி.மு.க. கட்சியினரும் ஒன்று கூடி ஆலோ சித்த பின் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொந்த ஊரான மைசூர் அருகே சிறீரங்கப்பட்டணத்தில் ரங்கநாதன் என்ற பார்ப்பனர்  ஜெயலலிதாவிற்குப் பதிலாக ஒரு பெண் பொம்மையை தயார் செய்து, இந்தப் பொம்மைக்கு ஜெயலலிதாவிற்கு விருப்பமான அனைத்து ஆடை, அணிகலன்களும் அணிவித்தார். இந்தப் பொம்மைக்கு ஜெயலலிதாவின் பெரியம்மா பையன் வாசுதேவன் அனைத்து சடங்குகளையும் செய்தார். இறுதியில் இந்தப் பொம்மை நெருப்பு மூட்டி எரிக்கப்பட்டது.
இதுகுறித்து இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட வாசுதேவன் ஆஜ்தக் என்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் பேசும்போது,
‘‘திராவிட இயக்கம் இந்து மற்றும் இந்து மதக் கலாச்சாரத்தை எதிர்ப்பதையே தங்கள் வேலையாக செய்துகொண்டிருக்கிறது. திராவிட இயக்கத்தின் வழிவந்த அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன் போன்றோர்களின்உடலும்எந்தஒருஇந்துமத சடங்கு,சம்பிரதாயமின்றிபுதைக்கப்பட்டது.இதே முறையில்தான் ஜெயலலிதாவின் உடலும் புதைக் கப்பட்டது. ஜெயலலிதாவின் இறுதி ஆசை தனது உடலை இந்து முறைப்படி எரிக்கவேண்டும் என் பதாகவே இருக்கும். ஆனால், அவரது ஆசையை நிறைவேற்றாமல் செய்துவிட்டார்கள். ஆகவே, நாங் கள் இந்த சடங்கை செய்து முடித் தோம்‘’ என்று கூறினார்.
ஒரு மனிதன் செத்தான் என்றால் அவ்வளவுதான்; அதற்குமேல் எதுவும் இல்லை.
கறந்த பால் முலை புகா,
கடைந்த வெண்ணை மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா,
விரிந்த பூவும், உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா,
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!
என்பது சித்தர் பாடல்.
பார்ப்பனச் சுரண்டல் என்பது பிறப்பு முதல் சாகும்வரைதொடர்வதுமட்டுமல்லாமல்;ஒவ்வொரு ஆண்டும் திதி என்ற பெயராலே புதுப்பிக்கப்பட்டும் வருகிறது. இதில் ஒரு வேடிக்கை வினோதம் என்ன வென்றால் ஜெயலலிதா அவர்களின் மறைவை யொட்டி எம்.ஜி.ஆர். சமாதியின் அருகில் புரோகித வேலையை பார்ப்பனர்தான் செய்தார்.
ஒரே மதத்துக்குள் ஒருவரை புதைப்பதும், எரிப்பதும் நடக்கிறது. நிலைமை இப்படி இருக்கும் போது ஏக இந்தியா, ஏக மதம், ஏக  கலாச்சாரம் என்று கூவுவதெல்லாம் யாரை ஏமாற்றிட?
திலகர் இறந்தபோது அவர் பாடையின் ஒரு பக்கத்தில் தன் தோளைக் கொடுத்துத் தூக்க விரும்பி கிட்டே காந்தியார் போனபோது, பார்ப்பனர்கள் அதனை அனுமதிக்கவில்லையே! காரணம், திலகர் பிராமணராம் - காந்தியார் வைசியராம்.
இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமா?
ஜெயலலிதா மறைவு கட்சிக்காரர்கள் வட்டத்தில் பெரும் துன்பம் சூழ்ந்திருக்கும் ஒரு காலகட்டத்தில் அய்யங்கார்ப் பார்ப்பனர்கள் இப்படியெல்லாம் அக்கப்போரில் ஈடுபடுவது சரியல்ல - மக்களின் வெறுப்பு அவர்கள் பக்கம் திரும்புவதற்குள் திருந்தி விடுவது நல்லது.

தேசிய புதிய கல்விக் கொள்கை 2016 மற்றும் ‘நீட்’ நுழைவுத் தேர்வினை எதிர்த்து டிச.30 அன்று ஒன்பது நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தேசிய புதிய கல்விக் கொள்கை 2016 மற்றும் ‘நீட்’ நுழைவுத் தேர்வினை எதிர்த்து
டிச.30 அன்று ஒன்பது நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருச்சியில் தமிழர் தலைவர் கொட்டினார் போர் முரசு!
திருச்சி, டிச.19- தேசிய புதிய கல்விக் கொள்கை 2016 மற்றும் ‘நீட்’ நுழைவுத் தேர்வினைக்  கண்டித்தும், கைவிடக் கோரியும்  டிசம்பர் 30 ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலை 11 மணியளவில் ஒன்பது முக்கிய நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.
திருச்சியில் நேற்று (18.12.2016) மாலை நடைபெற்ற தேசிய புதிய கல்விக் கொள்கை மற்றும் ‘நீட்’ நுழைவுத் தேர்வினை எதிர்த்து - ஆசிரியர், மாணவர், பெற்றோர் முத்தரப்பு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டதாவது:
திருச்சி என்றால் திருப்பு முனைதான்!
திருச்சியில் எப்பொழுதும் மாநாடுகள் திருப்பு முனை மாநாடாகவே அமைந்துவிடுகின்றன. அந்த வகையில் இந்த மாநாடும் திருப்புமுனை மாநாடாகவே அமையும் என்பதில் அய்யமில்லை.
இப்பொழுது மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய புதிய கல்விக் கொள்கை, ‘நீட்’ நுழைவுத் தேர்வுபற்றிய தகவல் வெளிவந்துள்ள நாள் முதல் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பினைத் தெரிவித்து வருகிறது.
இது ஒரு கட்சியைச் சேர்ந்த மாநாடல்ல; ஒட்டு மொத்தமான ஒடுக்கப்பட்டோர்களுக்காக நடத்தப்படும் பொது மாநாடாகும். இம்மாநாட்டுக்கு வராதவர்கள் எல்லாம் இதற்கு எதிரானவர்கள் என்று கருதவேண்டிய தேவையில்லை. வர வாய்ப்பில்லாதவர்கள் என்று வேண்டுமானால் நினைக்கலாம்.
பத்திரிகையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
இங்கே ஏராளமான செய்தியாளர்கள் வந்திருக்கிறீர்கள். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கூட தலைக்குமேல் ஆபத்து சூழ்ந்து இருக்கிறது என்பதை மனதிற்கொண்டு இம்மாநாட்டுத் தீர்மானங்களையும், அறிவிப்புகளையும், நாட்டு மக்களுக்குத் தெரியும் வண்ணமும், அரசுகளின் காதுகளுக்கும் எட்டும் - பார்வைக்கும் செல்லும் வண்ணம் தாராளமாகவே செய்திகளை வெளியிடவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம் - கடமையாற்றவேண்டும் என் பதே எங்களின் முக்கிய வேண்டுகோள்.
அனைவரையும் வரவேற்கிறோம்!
எங்களுடைய அழைப்பினை ஏற்று பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் இங்கே திரண்டு இருப்பது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. அவர்களுக்கெல்லாம் எங்களின் பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பந்து இப்பொழுது ஆசிரியர்ப் பெருமக்களின் கைகளில்தான் இருக்கிறது. அந்தப் பந்தை எந்த அளவுக்கு ஆசிரியர்கள் வேகமாக உதைக்கிறார்களோ, அந்த அள வுக்கு மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கிளர்ச்சி ஏற்படும் என்பதில் அய்யமில்லை. எல்லோரும் வீதிக்கு வந்து போராடத் தயாராக வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இந்த மைதானத்தில் கவலையுடன் கூடியிருக்கிறீர்கள்.
உங்கள் கவலை எங்களுக்குப் புரிகிறது. நிச்சயமாக இந்தக் கவலையை அறவே நீக்கிட நாம் அனைவரும் ஒன்றுபட்டு எழுந்து போராடுவோம் - வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! (பலத்த கைதட் டல்!).
அவர்கள் தீயை மூட்டுகிறார்கள்!
அவர்கள் தீயை மூட்டியுள்ளார்கள். நாம் அந்தத் தீயை அணைக்கின்ற இடத்தில் இருக்கிறோம்.
நம் கைகளில் இருக்கும் ஆயு தங்களை நம் எதிரிகள் தான் தீர்மா னிக்கிறார்கள். மாவோ சொன்னதுபோல மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்க விடுவதில்லை.
புதிய கல்வியை எதிர்க்க 20 காரணங்கள் அடங்கிய  தீர்மானம்!
தேசிய புதிய கல்விக் கொள் கையை ஏன் எதிர்க்கிறோம் என்ப தற்கான 20 காரணங்கள் இங்கே நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் ஒன்றே ஒன்றையாவது மறுக்க முடியுமா? தவறு என்றுதான் கூற முடியுமா?
என்னையும் ஆசிரியர் என்றுதான் அழைக்கிறார்கள். எனவே, ஆசிரியர் களோடு சேர்ந்து நின்று போராட எனக்குப்பொருத்தமிருக்கிறது.இந்த வகையில் நம்முடைய உறவு சிறப் பாகவே இருக்கிறது.
யாரும் இல்லாத வீட்டில் திருடன் உள்ளே புகுந்து களவாடுவதுபோல ஓர் அரசு நடந்துகொள்ளலாமா? பொது மக்களின் கருத்தைக் கேட்டு இருப்பதாக சொல்லுகிறார்கள். இது உண்மையா? இங்கே கூடியி ருக்கும் ஆயிரக்கணக்கான மக்களில் யாருடன் கலந்து ஆலோசித்தார்கள்? குறைந்தபட்சம் மாநில அரசுடனாவது கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளதா?
கல்வியைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்றதே காரணம்!
மத்திய அரசின் அத்துமீறலுக்கெல் லாம் காரணம்  கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டிய லுக்குக் கொண்டு சென்றதுதான்.
இதற்காகவேகூட சென்னையில் திராவிடர் கழகம் மாநாடு ஒன்றினை பெரியார் திடலில் நடத்தியதுண்டு. நீதிபதிகள், கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் என்று பலதரப்பட்ட பெரு மக்களும் அந்த மாநாட்டில் பங்கேற்று கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.
அந்த மாநாட்டின் தீர்மானங் களை அனைத்து மாநில முதலமைச் சர்களுக்கும் அனுப்பி வைத்தோம் என்றாலும், அதுகுறித்த கவலையை எவரும் எடுத்துக்கொள்ளாதது வருந் தத்தக்கது.
நம் எதிர்கால சந்ததி நாசமாகிவிடும் -
எச்சரிக்கை!
இந்தப் பிரச்சினையில் நாம் அலட் சியமாக இருந்துவிட்டால் நம்முடைய எதிர்கால சந்ததிகளின், பிள்ளைகளின் வாழ்வு என்புது நாசமாகப் போய்விடும்.
70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் இன்னும் ஆறரைக் கோடி மக்கள் பள்ளிக் கூடங்களை எட்டிகூடப் பார்க் காதவர்களாக இருக்கிறார்கள் என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறு உண்டா?
மனுதர்மம் என்ன கூறுகிறது?
ஏன் நம் மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது? நமது அரசர்களே கூட மனுதர்மப்படிதானே ஆட்சி செய் துள்ளனர். மனுதர்ம சாத்திரம் என்ன கூறுகிறது?
நான்கு வருணங்களை பிரம்மாவே படைத்ததாகவும், அந்த நான்கு வரு ணத்தார்களுக்கும் தனித்தனியாகக் கருமங்களைப் படைத்ததாகவும் கூறப் பட்டுள்ளதே!
பிராமணனின் தர்மம் என்ன? ஓதல், ஓதுவித்தல். இதன் பொருள் என்ன? படிப்பு என்பது பிரம்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணனுக்கு என்று ஆகிவிடவில்லையா?
சத்திரியன் பிரஜைக் காப்பாற்றுப வன், வைசியன் வியாபாரம் செய்தல், சூத்திரர்களாக்கப்பட்ட நான்காம் வருணத்தவராகிய நமக்குப் பிரம்மா வகுத்துக் கொடுப்பது என்ன?
சூத்திரன் பொறாமையின்றிப்
பணிவிடை செய்யவேண்டுமாம்!
பிராமணன், சத்திரியர், வைசிய னுக்குப் பொறாமையின்றிப் பணிவிடை செய்து கிடப்பதே என்றுதானே மனு தர்மம் கூறுகிறது.
நம் மக்களுக்குக் காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்டிருப்பது என்பது சாஸ்திர ரீதியாகவே மறுக்கப்பட்டுள்ளதே!
பொறுத்துக் கொள்ள முடியவில்லை எதிரிகளால்!
தந்தை பெரியார் போராடி, திராவிடர் இயக்கம் போராடி, ஒரு காமராசர் முயற்சி செய்து, ஒரு தலைமுறையாகத்தானே படித்து வருகிறோம். அதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை - ஒரு கூட்டத்துக்கு. அதன் வடிவம்தான் சூழ்ச்சித் திட்டம்தான் இந்தப் புதிய கல்வித் திட்டமும், அகில இந்திய நுழைவுத் தேர்வும்.
மனிதன் பிறக்கும்போதே அவன் தலையில் ஜாதி முத்திரை - அவன் செத்தாலும் சுடுகாட்டிலும் ஜாதி - இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமாம்.
48 ஆண்டுகளாக
வெறும் 6 சதவிகிதம்தானா?
கோத்தாரி கல்விக் குழு கல்விக்கு மொத்த உற்பத்தியில் 6 சதவிகிதம் ஒதுக்கவேண்டும் என்று கூறிய 48 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே ஆறு சதவிகிதத்தை புதிய கல்விக்கான குழு பரிந்துரைக்கிறதே - இதுதான் வளர்ச்சியா?
அன்று ஜனாதிபதி சம்பளம் எவ்வளவு? அமைச்சர்களின் சம்பளம் எவ்வளவு? எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் சம்பளம் எவ்வளவு? இப்பொழுது எவ்வளவு? கடுகளவு பொருளாதார அறிவு உள்ளவர்களுக்கும் இந்த நிலை புரியவேண்டுமே!
இதில் வெட்கக்கேடு என்ன தெரியுமா? இப்பொழுது கல்விக்கு ஒதுக்கப்படுவது வெறும் 3 புள்ளி 6 சதவிகிதமே!
2014-2015 ஆம் ஆண்டில் கல்விக்கு மத்திய அரசு 17.6 சதவிகிதம் ஒதுக்கியது. மீதி 82.4 சதவிகித நிதியை மாநில அரசுகளே சுமக்கவேண்டும்.
அதேநேரத்தில்மாநிலஅரசுகளின் உரிமைகளின் இறக்கைகளையல்லவா மத்திய அரசு வெட்டுகிறது. கல்விக் கொள்கை என்கிறார்களே - மாநில அரசின் கருத்தினைக் கேட்டதுண்டா?
இவ்வளவுக்கும் முழு அறிக்கையும் வெளிவரவில்லையாம் - இப்பொழுது வந்துள்ளது ஒரு சிறு குறிப்புதானாம். சிறு குறிப்பே இவ்வளவுப் பெரிய ஆபத்துக்கு வழிவகுக்குமேயமானால், முழு அறிக்கையும் வெளிவந்தால் நாடு தாங்குமா? ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்குவார்களா?
முதற்கட்ட வெற்றி!
நமது தொடர் முயற்சி ஒன்றும் தோற்றுப் போய்விடவில்லை - நமது குரலை அவர்களால் அலட்சியப்படுத்த முடியவில்லை என்பதற்கு ஒரு செய்தி கிடைத்திருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று மத்தியமனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் சொல்லியிருக்கிறார் - இது நமக்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றி (பலத்த கரவொலி).
போராட்ட அறிவிப்பு
ஏற்கெனவே புதிய கல்வி, ‘நீட்’ நுழைவுத் தேர்வை எதிர்த்து சென் னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
அனைத்துக்கட்சியினரும்,ஆசி ரியர் பெருமக்களும், கல்வியாளர்களும் கலந்துகொண்டனர். எனது தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் அதில் பங்குகொண்டார்.
இடையிலே பல கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தியுள்ளோம். தீர் மானங்களையும் நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் உள்ளோம்.
இந்த முத்தரப்பு மாநாட்டின் சார்பாக ஒரு போராட்டத் திட்டத்தை அறிவிக்க விரும்புகிறோம்.
தமிழ்நாட்டின் முக்கிய ஒன்பது நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 30 ஆம் தேதி வெள்ளியன்று காலை நடைபெறும்.
நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, சேலம், தருமபுரி, கோவை, திருச்சி, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய ஒன்பது இடங்களில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். (உற்சாகமான கைதட்டல் - நீண்ட நேரம்).
ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர் கள் இணைந்து நின்று கட்சிகளை மறந்து ஒட்டுமொத்தமான சமூகப் பாதிப்பிலிருந்து விடுதலை பெற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பெரியார் இல்லை - அவர் கைத்தடி இருக்கிறது - எச்சரிக்கை!
இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால், நமது அடுத்த கட்டப் போராட்டம் தொடரும்; வெற்றி கிட்டும்வரை நமது போராட்டமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
பெரியார் உயிருடன் இல்லை; ஆனால், அவர்களின் கைத்தடி எங்களிடம் இருக்கிறது என்பதை மறக்கவேண்டாம் - எச்சரிக்கை! (பலத்த கரவொலி).
அன்று ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டினோம்; ஆச்சாரியாரையும் ஆட்சியைவிட்டே விலகும்படிச் செய்தோம்.
மத்திய அரசின் இந்த நவீனக் குலக் கல்வித் திட்டத்தையும் விரட்டி யடிப்போம். ஒன்றுபடுவோம் - வென்றிடுவோம் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...