தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கதே!
மேலும் போதிய அளவுக்கு இன்னும் நிதியுதவி அளித்திட
மத்திய அரசை வலியுறுத்தி நிதி பெறவேண்டும்!
அனைத்துக் கட்சிக் குழுக்களை ஆங்காங்கே அமைத்து
நிவாரணப் பணிகளையும், உதவிகளையும் மேற்கொள்க!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்த தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்று, அதேநேரத்தில் இன்னும் கூடுதலான அளவுக்கு நிதி உதவி செய்ய மத்திய அரசிடமிருந்து நிதி உதவியைப் பெற்றிட போதிய முயற்சியில் தமிழ்நாடு அரசு முனைப்பாக செயல்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசு வறட்சி மாநிலமாக தமிழ்நாட்டை அறிவித்திருப்பது - வரவேற்கத்தக்கதே! திருவாரூரில் கடந்த 17.12.2016 அன்று நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் இதனை வலியுறுத்தித் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அறிக்கைகள் வாயிலாகவும் திராவிடர் கழகம் வற்புறுத்தி வந்துள்ளது - பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன. முதலமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகு சூழ்நிலையில் மக்கள் குரலை ஏற்று தமிழ்நாடு அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டதற்காக, கட்சிகளை மறந்து பாராட்டலாம் - வரவேற்கலாம்.
முக்கிய அறிவிப்புகள்
முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிகக்குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும்
அனைத்துமாவட்டங்களிலும்விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.
வறட்சி காரணமாக விவசாயிகள் தங்கள் கடனை திரும்பச் செலுத்த இயலாது. எனவே, கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் ஆகியவற்றில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன் மத்தியகாலக் கடனாக மாற்றியமைக்க வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு மாற்றியமைப்பதற்கு தேவையான அன்னவாரி சான்றிதழ்கள் விரைந்து வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் 3,028 கோடி ரூபாய் பயிர்க் கடனாக இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் மத்தியகாலக் கடனாக மாற்றியமைக்கப்படும்.
பேரிடர் நிவாரண வரையறையின்படி பயிர் சேதங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டு 27.10.2015 அன்று அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி 33 சத வீதத்திற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசா யிகளுக்கு,நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.
நெல் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு, 5,465 ரூபாய்; நெல் தவிர, இதர நீர்ப் பாய்ச்சப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5,465 ரூபாய்; மானாவாரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய்; நீண்ட கால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7,287 ரூபாய்; முசுக்கட்டை பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பயிர் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையை பெற இயலும். அதற்கான பயிர் அறுவடை பரிசோதனை விரைந்து மேற்கொள்ளப்படும்.
பேரிடர் நிவாரண வரையறைப்படி, நிவாரணம் மட்டுமே பெற இயலும் என்பதால், பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் பயிர்க் காப்பீடு செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்கும் என்பதால், அரசுக்கு செலவு அதிகம் என்றாலும், இந்த திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் சராசரியாக பயிர்க் காப் பீட்டிற்கு அரசின் பங்களிப்பு பிரீமியம் தொகையாக 40 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மாநில அரசின் பங்காக 410 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது.
இதன்மூலம் நெல் சாகுபடி செய்த விவசாயிகள், முழு பயிரிழப்பு அதாவது 100 சதவீத பயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் மாவட்டத்தைப் பொறுத்து, ஏக்கர் ஒன்றுக்கு 21,500 முதல் 26,000 ரூபாய் வரை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற இயலும். டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை, இழப்பீட்டுத் தொகை 25,000 ரூபாய் ஆகும்.
டெல்டா மாவட்டங்களில் 80 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால், ஏக்கர் ஒன்றுக்கு 20,000 ரூபாய்; 60 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால், ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபாய்; 33 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால் ஏக்கர் ஒன்றுக்கு 8,250 ரூபாய் பெற இயலும்.
இதர மாவட்டங்களைப் பொறுத்தவரை 33 சதவீதத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகள் மகசூல் இழப்பிற்கு ஏற்றபடி இழப்பீடு பெற இயலும். இதே போன்று, மற்ற பயிர்கள் பயிரிட்டு பயிரிழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளும், அந்தந்த மாவட்டங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தொகையை இழப்பீடாக பெற இயலும். சோளப் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 20,000 ரூபாய் வரையிலும், பயறு வகைகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 12,000 ரூபாய் வரையிலும், கரும்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு 45,000 ரூபாய் வரையிலும், மஞ்சள் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50,000 ரூபாய் வரையிலும் பயிரிழப்புக்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகை பெற இயலும்.
வறட்சி காரணமாக வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாட்கள் பணி வரம்பு என்பது 150 நாட்களாக உயர்த்தப்படும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ஏரிகள் தூர் வாருதல், குளங்கள் சீரமைத்தல் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள், 3400 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புப்பெறுவர்.
வறட்சி காரணமாக ஏற்படும் கால்நடை தீவனப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை வாயிலாக பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென 78 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
வறட்சி காரணமாக கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கென 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வறட்சி காரணமாக வன உயிரினங்கள் பாதிக்கப் படாமல் இருக்க, அவற்றுக்குத் தேவையான தீவனம் மற்றும் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
பொதுப்பணித் துறை மூலமாக நிலத்தடி நீர்த்தேக்கும் அமைப்பு, நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்பு போன்ற நீராதாரங்கள் மேம்படுத்தும் பணிகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
கடந்த இரண்டு மாதங்களில் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் இந்த தற்கொலைகள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்பட்டிருந்தாலும், இறந்தவர்களின் குடும்ப நலன் கருதி அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்த அளவுக்கு இந்த உதவிகள் போதுமானதல்ல என்று அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் கூறியிருப்பதைக் குறை யாகக் கூற முடியாது. அதேநேரத்தில், ஒரு மாநில அரசு - தன் நிதிநிலையின் அடிப்படையில்தான் செயல்பட முடியும் என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி, போதுமான அழுத்தம் கொடுத்து, முழு அளவுக்கு நமது விவசாயிகளுக்கு உதவி புரிந்திட தேவையான நிதியைப் பெற்றிடவேண்டும்.
தமிழக நாடாளுமன்ற
உறுப்பினர்களின் கடமை
கட்சிகளுக்குஅப்பாற்பட்டமுறையில்கூடதமிழ் நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி 39 நாடாளு மன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர் களும்கூட, நாட்டைப் பிடித்து உலுக்கும் வறட்சியைக் கவனத்தில் கொண்டு, பிரதமரையும், மத்திய நிதியமைச்சரையும் சந்தித்து அழுத்தம் கொடுத்து நமக்குத் தேவையான நிதியைப் பெற்றிட வேண்டும்.
அனைத்துக் கட்சி குழுக்கள் தேவை!
நிவாரண உதவிகளையோ, மராமத்துப் பணி களையோ செய்யும்போது அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் செயல்படுத்தப்பட்டால் முறைகேடுகளும், பாரபட்சமும் தவிர்க்கப்பட்டு விடும்.
மரணமடைந்தோர் எண்ணிக்கை
விவசாயம் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சிக்கு ஆளாகியும், தற்கொலை செய்துகொண்டும் மரண மடைந்தோர் எண்ணிக்கை வெறும் 17 என்பது சரியானதாக இருக்க முடியாது. எண்ணிக்கை நிச்சயமாக இதைவிட அதிகம் என்பது உண்மையாகும். பாதிப்புக்கு ஆளான குடும்பங்கள் இந்த அறிவிப்பால் மேலும் துயரம் அடையக் கூடிய நிலைதான். அதனைச் சரியாகக் கணக்கிட்டு பாதிப்புக்கு ஆளான அனைத்துக் குடும்பங்களுக்கும் நிதி உதவி செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
மத்திய அரசிடமிருந்து அதிக நிதியுதவி தேவை
வறட்சி மாநிலமாக அறிவித்தது எப்படி சரியா னதோ, அதேபோல நிவாரணங்களும் சரியாக நடை பெறுவதுதான் அதைவிட சிறப்பாகும். முக்கியமாக மத்திய அரசின் நிதி உதவியை அதிகமான அளவில் பெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்படவேண்டும்.
இது மிக மிக முக்கியமும், அவசியமுமாகும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
11.1.2017