Friday, July 26, 2019

பல்லையும் சொல்லையும் இழந்துவிடுமோ நம் பல்கலைக் கழகங்கள்!


புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவானது கற்போரைப் பற்றிய புரிதல் சிறிதுமின்றித் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவ ரைக் கற்கும் இயந்திரங்களாகக் கருதியிருப்பதுதான் இந்தக் கொள்கையில் வெளிப்படுகிறது. வீட்டு மொழியே ஆங்கில மாகக் கொண்டவரது குழந்தைகளையே மையப்படுத்தி பரிந்துரைகளை அளித்ததுபோல் தோன்றுகிறது.
முன்பருவக் கல்வியில் விளையாட்டுகள் மூலமும், தாய்மொழியில் பாட்டுகள் மூலமும் கேட்கவும், உச்சரிக்கவும் சிறுவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். முறையான கல்வி ஆறாம் வயதிலேயே தொடங்குவதுதான் பெரும்பான்மையான நாடுகளில் நடைமுறை. மழலையர் கல்வி பற்றிய மிக விரிவான வழிகாட்டி நூலை மீனா சாமிநாதன் வெளியிட்டிருக்கிறார். அதன் தமிழ்ப் பதிப்பை எஸ்.சி.இ.ஆர்.டி. தயாரித்துள்ளது. அதைக் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் மூன்று அங்கன் வாடி மையங்களில் வெற்றிகரமாக மழலையர் கல்வி அளிக்கப்பட்ட வரலாறும் உண்டு. வரைவானது இத்தகைய முயற்சிகளை அறியாது ஆங்கில வழிக் கட்டணப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் முன்பருவக் கல்வி முறையைப் பரிந்துரைத்துள்ளது. குழந்தைமையை இழக்கச் செய்யும் முன் பருவக் கல்வி யுனிசெப்பின் பரிந்துரைகளுக்கு முரணானது. மூன்று வயதுக் குழந்தைக்குத் தாய்மொழி தவிர வேறு இரு மொழிகளையும் கற்பது எளிதல்ல. தன் விளையாட்டுத் தோழர்கள் மூலம் அவர்களது மொழிச் சொற்களைக் கேட்க வும், பேசவும் செய்வதை மொழி அறிந்ததாகக் கருதுவது தவறு.
முன்பருவக் கல்வி பற்றிய பரிந்துரைகள் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும். மகிழ்ச்சி பொங்கும் பருவமாகக் குழந்தைப் பருவம் விளங்கவேண்டும். ஒரு சிற்றூரில் உள்ள அங்கன்வாடி மையத்தையோ, ஒரு தொடக்கப் பள்ளியையோ அரை மணிநேரம் பார்வையிட்டிருந்தால் இத்தகைய முன் பருவக் கல்வியைப் பரிந்துரைத்திருக்காது.
170 ஆண்டுகளாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளிலும், பல லட்சம் பேருக்குப் பட்டங்கள் வழங்கி வந்த பெருமை மிக்க சென்னை, கொல்கத்தா, மும்பை பல்கலைக் கழகங்களுக்கு இனி இளங்கலை வகுப்புக்குக்கூடப் பாடத் திட்டம் வகுக்க முடியாது. வினாத்தாள் தயாரிக்கும் வேலையும் கிடையாது. புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு, அவற்றின் பல்லையும், சொல்லையும் பிடுங்கி தேசிய அமைப்புகளுக்கு அப்பணிகளை அளித்துள்ளது.
ஒரே' என்ற சொல்லைப் பிரதமர் மோடி உச்சரிக்கத் தொடங்கிய பின்னர், அதுவே நாட்டின் மந்திரமாகப் போயிற்று. ஒரு நாடு, ஒரே பாடத் திட்டம், ஒரே தேர்வு என்ற பரிந்துரை ஏற்புடையதல்ல. ஒரு நீட் தேர்வை முறையாக நடத்த முடியாத அரசு, நூற்றுக்கணக்கான தேர்வுகளை எவ்வாறு நடத்தும் என்று சிந்தியாது தெரிவிக்கப்பட்ட மோசமான பரிந்துரை. பல நாடுகளிலும் கற்பிக்கும் ஆசிரியரே மாணவரது தேர்ச்சியை நிர்ணயிப்பவராக இருக்கும்போது, பல கோடி மாணவரது தலைவிதியை ஒரே அமைப்பு உறுதி செய்யும் என்பது அறிவுக்கு அப்பாற்பட்டது. இது ஒன்றே கஸ்தூரிரங்கன் குழுவின் வரைவறிக்கையை முழுமையாக நிராகரிக்கப் போதுமானது.
- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை


நன்றி: "இந்து தமிழ் திசை'', 26.7.2019

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...